10012023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

'யாக்கோப் நக'ரும் யாக்கோப்பின் கல்லறையும்...

கரங்களின் வளர்ச்சியோடு, கிராமப்புற சமூதாய அமைப்பு வீழ்ச்சியடைந்து -அரசு தோன்றியது. தொழிலாளர்கள், விவசாயிகள், பூசாரிகள், கைவினைஞர்கள், அதிகாரிகள் போன்ற பல்வேறு மக்கட் பிரிவினர் இவ் அரசுக்குத் தலைமைதாங்கினர். பின்னர் இதுவே வர்க்கங்களாகவும் சாதிகளாகவும் நிலைபெற்றது. இம்மாற்றமானது பள்ளத்தாக்கு நாகரீகங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது.

 

 

கி.மு 3200 - 2700 வரையிலான காலத்தில் விவசாயம் ஈட்டிக்கொடுத்த உபரியில் இருந்து நகரத்துக்கான சொத்துகள் சேகரிக்கப்பட்டு, அனுபவிக்கப்பட்டன. இந்த உபரியின் அளவு குறைவடைய சிறிய பகுதியினரே அதை அனுபவிக்கத் தொடங்கினர். அதாவது விவசாயத்தில் இருந்து தம்மை முற்றுமுழுதாக விலக்கிக்கொண்டவர்கள், சுரண்டுபவர்களாக மாறி இவற்றை அனுபவித்தனர். ஏனையவர்கள் கொத்தடிமைகளாக்கப்பட, முரண்பாடுகளும் தவிர்க்கமுடியாத யுத்தங்களும் உருவாகின. உழவர்களும் - அடிமைகளும் நிலச் சொந்தக்காரராக இருந்தபோதும், இவர்களது உழைப்பும் அதனூடான உற்பத்தியும் வாடகை, வரி, குத்தகை ஊடாக நிலப்பிரபுக்களால் சுரண்டப்பட்டது. அரசன் எல்லா அதிகாரங்களைக் கொண்ட நடுநாயகனாக (சூரியனாக) கொண்டிருக்க, நிலப்பிரபுக்கள் ஆளும் வர்க்கத்தின் வழித்தோன்றலாக பல்வேறுபட்ட குலதெய்வ சமய அதிகாரங்களுடாக சூரியனைச் சுற்றுகின்ற பிற கிரகங்களின் கோட்பாட்டுடன் இவ்வரசு நிர்ணயிக்கப்பட்டது. நடுநாயகமான அரசன் தெய்வீகத் தன்மை கொண்டவனாக இருத்தி வைக்கப்பட்டான். பல அரசர்களின் இருப்பு பல மதக்கருத்துக்களைக் கொண்ட இருப்பாக இருந்தது. பல அரசுகள் கைப்பற்றப்பட்டு பேரரசுகள் உருவானபோது, ஆதிக்கத்தில் வரும் அரசன் சார்பான மதம் மெய்யான மதமாக எடுத்துரைக்பப்பட்டது.

 

சிறிய சிறிய மதக் கலாச்சாரத்துக்குரிய மக்கள் குழுக்களைக் கைப்பற்றி பேரரசு தோன்றிய போதும், இக்குழுக்களுக்கிடையினான முரண்பாட்டுக்கான மதச்சார்பான தீர்வு கடினமானதாவே இருந்தது. ஒர் பேரரசுக்குரிய உத்தியோகபூர்வமான மதம் அதன் வளர்ச்சிப்போக்கில் பேரரசுக்குரிய அரசனது அதிகாரத்துக்கு இணையான அதிகாரப் போட்டியாக மாறியது. அரசன் வீழ்த்தப்படுவதும், புதிய அரசன் தோன்றுவதும் சாதாரண நிகழ்வாக இருந்ததால், நிலையான இறையரசுக்கான நம்பிக்கைக்கு வெளியே மதநிறுவன அரசை தோற்றுவித்தது.

 

இம்மத அரசு அழியாத ஒரு நிலையான அரசாக, நேரடியாக விண்ணுலகத்துக்கான அதிகார அரசாக தோன்றியது. இவ்வரசு ஒரு காலத்தில் எந்தச்சிரமமுமின்றி தனது மதத்தத்துவத்தினூடாக புதிய நகரங்களை உருவாக்கியது. முஸ்லீம்களுக்கு - 'மெக்கா'வும், இந்துக்களுக்கு - 'கங்கை, யமுனை'யும், புத்தர்களுக்கு - 'Bodh Gaya - Lhasa' வும், எகிப்தியருக்கு 'Karnak - Laxo' கிரெக்கருக்கு 'Delfi' , வடதுருவ மக்களுக்கு 'Nidaro sdomen -vedstena - Odensa, போன்றவைகளும் தோற்றுவிக்கப்பட்டது போல கிறீஸ்தவம் ரோமையும், யாக்கோப் நகரத்தையும் உருவாக்கியது.

 

உல்லாசப்பயணத்தின் தொடக்கம் பண்டைய காலத்தில் பபிலோனும் ஜெருசலேமுமாக இருந்தது. பின்னர் ரோமும், யாக்கோப் நகரமும் இதன் நோன்புக்கான இணைப்பிலிருந்தது. யாக்கோப் நகரம் நான்கு பிரதேச மக்களை இணைத்து உருவாக்கப்பட்ட போதிலும், இது அராபிய பாரம்பரிய மக்களைக் கொண்ட இணைப்பாகும். கி.பி 40 வருடத்தில் யூதர்களின் முதலாவது மத அரசனாக இருந்த யோசெப்பின் மகனும், இயேசுவின் சகோதரனுமான யாக்கோப்பின் கல்லறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இன்று ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வந்துபோகிற, கிட்டத்தட்ட 150 மைல்களைக் கொண்ட யாத்திரை ஸ்தலமாக இது இருக்கிறது. கடைசி காலத்தில் யாக்கோப் சுகயீனமுற்று இருந்ததாகவும், மருத்துவத்துக்காக ஸ்பானியாவில் வந்து தங்கியிருந்ததாகவும், ஸ்பானியாவிலுள்ள 'கலிசியா' குடாவில் தம் நண்பனுடன் படகில் தங்கியிருந்து மருத்துவம் செய்ததாகவும், இதன்பின் அவர் எங்கே புதைக்கப்பட்டடார் என்பது எவருக்கும் தெரியாமல் இருந்ததாகவும் கிறீஸ்தவம் சொன்னது.

 

'சவுல்' என்ற யூத இயற்பெயரைக் கொண்ட பவுல், தனது இறுதி அரைவாசி வாழ்க்கைக் காலத்தை ரோமப் பிரசையாகக் கழித்திருந்தார். ரோமப் பிரஜையாக உரிமையைப் பெற்றுக்கொண்ட இவர் சவுல் என்ற தனது பெயரை கிரேக்க மொழியில் பவுலாக மாற்றி வாழ்ந்தார். இயேசு யூதரின் அரசன் என்ற குற்றத்துக்காக சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதாக கூறப்படும் காலத்துக்கு 7 ஆண்டுகளுக்குப் பின்னர், இதே ரோமர்களின் பேரரசில் - இயேசுவின் சகோதரனும் யூதனுமாகிய யாக்கோப் எப்படி மத அரசனாக அதுவும் ஜெருசலேம் மத அரசனாக சிம்மாசனம் ஏற்றப்பட்டார்? யாக்கோப்புக்கும் - பவுலுக்கும் ஏற்பட்ட முரண்பாட்டுக்குப் பின்னர் , பவுல் ஜெருசலேமுக்குள் நுழைந்தபோது யூதச்சட்டப்படி கைது செய்யப்பட்டார். இருப்பினும் இவர் ரோமப்பிரசையாக இருந்ததால் ரோமிடம் கையளிக்கப்பட்டார். இங்கே யாக்கோப் யூத கிறிஸ்தவ மதத்துக்குரியவராகவும், பவுல் யூதர் அல்லாதவருக்குமான கிறிஸ்தவ பாரம்பரியத்துக்குரியவராக (இயேசு பாரம்பரியம்) முரண்பட்டிருந்தனர். இவை இரண்டும் 700களின் பின்னர் முற்றாக இணைந்துவிட்டன.

 

கி.பி 813ல் கார்ல் சக்கரவத்திக்கு ஒரு விடிவெள்ளி யாக்கோப்பின் கல்லறைக்கான பாதையைக் காட்டியதாகவும், (இது யேசு பிறந்தபோது அவ்விடத்தை விடிவெள்ளி காட்டியதாக கூறியது போல) , இதன் உதவியுடன் சக்கரவத்தி யாக்கோப்பின் கல்லறையை ஸ்பானியாவில் கணடறிந்ததாகவும், பின்னர் அக் கல்லறையின் மேல் ஒரு கோவிலைக் கட்டியதாகவும் கூறினர். இக்கோவிலே ஸ்பானியாவிலுள்ள 'சென். யாக்கொப் சந்தியோகு தேவாலயம்' ஆகும். இது யாக்கொப்பின் பிறந்தநாளான யூலை 25ல் கொண்டாடப்படுவதாகக் கூறுகின்றனர். யாக்கோப்பின் இக் கல்லறைக் கோவில் உலகில் முக்கிய வணக்கத்துக்குரிய ஒரு தலமாக இருந்துவருகிறது. சக்கரவர்த்திக்கு விடிவெள்ளி காட்டிய பாதை 'யாக்கோப்பின் வழி' என அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று யாக்கோப்பின் கல்லறை எருசலேமின் அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இயேசு காலத்தில் கலிலேயா...

 கலிலேயா, யூதேயா, சமாரியா ஆகிய இடங்கள் இரண்டாவது யூத யுத்தத்தின் (கி.பி-132) பின்னரே இப் பெயர்களைப் பெற்றிருந்தன. இவ் மூன்று பிரதேசங்களும் வௌ;வேறான தனித்தனி சமூகப் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட பிரதேசங்களாகக் காணப்பட்டன. யூதேயா மிக நெருக்கமான யூதக் குடியேற்றங்களைக் கொண்டதாக இருந்தது. இது ஜெருசலேமையும், தாவீது பெத்தலேகமையும் உள்ளீடாகக் கொண்டிருந்தது. கலிலேயாவுக்கும் யுதேயாவுக்கும் இடையில் சமாரியா இருந்தது. இது வெளியாட்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட, இவ்விரு நகருக்கு வெளியே திருமணம் செய்த சந்ததியினரைக் கொண்டதாக இருந்தது. இருப்பினும் இது ஜெருசலேமுக்குரிய போதனைக்குரிய பிரதேசமாகவே இருந்து வந்தது. இருந்தும் கூட ஜெருசலேம் கோவிலைக் கட்டுவதற்கான உதவிசெய்யும் உரிமை சமாரியருக்கு சட்டபூர்வமாக மறுக்கப்பட்டிருந்தது.

 

கி.மு 100 முதல் கி.மு 67 ஆண்டுகள் வரையிலான சுமார் 37 வருடங்கள் கலிலேயாவும், யூதேயாவும் ரோம் சாம்ராட்சியத்தின் கீழ் இருந்தபோதிலும், இவை ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட பிரதேசமாக இருந்திருக்கவில்லை. இக்காலத்தில் கலிலேயாவிலும், யூதேயாவிலும் வசித்த யூத மக்களின் உறவு முறையிலான நெருக்கம் மட்டுமே இவ்விரு பிரதேசங்களுக்குமான ஓர் பிணைப்பாக இருந்தது. ரோமப் பேரரசின் கீழான புதிய பிரதேசங்கள், அவர்களின் சொந்த கலாசார வடிவங்களைக் கொண்ட புதிய நகர அமைப்புக்களை உருவாக்க முற்ப்பட்டபோது - இவ் யூதேயா, கலிலேயாவைப் (100 வருடங்களின் பிற்பட்ட காலமான யேசுவின் காலத்தில் ) தமது புதிய நகரத்தின் மைய அதிகாரத்தின் கீழ் இவைகளைக் கொண்டுவந்தனர். இதற்கான அதிகார மொழியாக கிரேக்கத்தை பிரகடனப்படுத்தினர்.

 

ரோமப் பேரரசின் அதிகார அரசியல் ஆணைப் பிரதேச ஒழுங்கமைப்புக்குள், இந்நகரங்கள் ஆளப்பட்ட போது, இதற்குள் வளர்ந்து வந்த யூதப் புதிய தலைமுறையினருக்கு இடையே கலாச்சார முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்தது. ஜேர்தான் நதிக்கரையில் இயேசுவுக்கு திருமுழுக்கு -ஞானஸ்நானம்- கொடுத்தவராகக் கருதப்படும் யோவான், யூதர்களின் ஒரு மத அரசனாகும். இவர் விவாகரத்துப் பெற்றிருந்த தனது சகோதரனின் மனைவியை திருமணம் செய்திருந்தார். இது ஒரு பெரிய விவகாரமாக அன்றிருந்தது. ஏனெனின் யூதர்களின் சட்டதிட்டங்கள் இதைத் துளியளவும் ஏற்றுக் கொள்ளவில்லை. ரோமர்களின் கலாசார சட்டதிட்டங்கள் இவருக்கு இசைவாகவே இருந்தது. யூத புதிய தலைமுறையினர் யோவானின் செயலுடன் உடன்பட்டு ஒத்துப்போனார்கள். ஆயினும் இச் செய்கையால் இவர் பிரசித்தி பெற்ற ஒரு மத அரசனாக மாறமுடியவில்லை. ரோமருக்கு இவரின் செய்கை தமது தமது கலாச்சார சட்டதிட்டங்களுக்கு இசைவாக இருந்ததால், யூதப்பழங்குடி சம்பிரதாயத்தின் மீது தமது கலாச்சாரம் படர்ந்து பழக்கப்படுவதை, ஒழுங்கமைக்கப்படுவதை விருப்புடன் வரவேற்றனர்.

 

ரோமப் பேரரசின் கீழிருந்த எல்ல பட்டிணங்களும்- நகரங்களும், அதன் மைய அரசுடன் இணைக்கப்பட்டிருக்கவில்லை. சில நகரங்களை அப்பிராந்திய மக்களின் செல்வாக்குப் பெற்ற மதத்தலைவர்களிடம் கடவுளின் பரிசாகக் கொடுத்து, அவர்களின் மூலமாகவே நிர்வகித்தனர். பொதுகாக பட்டிண - நகர நிர்வாகிகள் உயர் வர்க்கத்தினராகவே இருந்தனர். இவர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்திருந்தனர். சில நகரங்களில் ரோமர்கள் பரம்பரை விவசாயிகளாக வாழ்ந்து வந்ததால், இவர்கள் ஜனநாயக வழிப்பட்ட முதலீடுகளைக் கொண்டு, இந்நகரங்களை தமது பேரரசுடன் இணைக்கும் மாற்று வழிகளில் விருப்பங் கொண்டிருந்தனர். நகருக்குரிய ஆளுமை பேரரசுக்குரியதாகவும், கிராமப்புறங்களிலிருந்து கொள்வனவு செய்யும் ஒழுங்குமுறைக்கு உட்பட்டவையை இவர்களுக்கு அனுமதித்திருந்தனர். இருந்தும் நிர்வாக மற்றும் வாத்தக மொழியாக கிரேக்கமே அங்கீகாரத்தில் இருந்தது. உள்ளுர் பேச்சு மொழியாக அவரவர் சொந்தமொழிக்கு உரிமை வழங்கப்பட்டிருப்பினும், வர்த்தக கலாச்சார நிர்வாக மொழியாக கிரேக்க மொழி பல நூற்றாண்டுகாலமாக வழக்கில் இருந்தது.

 

ரோமப் பேரரசுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கான வர்த்தகப் போக்குவரத்துப் பாதைகளை, பேரரசின் இராணுவம் திறம்பட செப்பனிட்டது. கட்டுப்பாடற்ற திறந்த வர்த்தகத்துக்கான பாதைகளாக இவைகள் கட்டியமைக்கப்பட்டன. கிரேக்கரும், பொனிக்கரும் கி.மு பல நூற்றாண்டு காலமாக இப்பிரதேசங்களில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். யூதர்களும் தமது சிறு நகரங்களிலிருந்து கி.மு 500 ஆண்டுகளில் இருந்து சிறு வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். சாம்ராட்சியமானது மத்திய சமுத்திரத்தையும், கருப்புக் கால்வாயையும் சூழ்ந்திருந்தது. இஸ்பானியாவின் தெற்குப் பகுதியான குரோடாபாவில் யூதக் குடியேற்றமானது கி.மு பல நூற்றாண்டு காலமாக இருந்து வந்திருக்கின்றது. பொனிக்கரின் தலைமை வர்த்தக நகரங்களாக Tyrus மற்றும் Sidon கலிலேயாவுக்கு பக்கமாக இருந்தது. பொருட்களின் வணிகம் கிழக்கிலிருந்து இருந்து மிகவேகமாக ஒட்டக முதுகுகளில் ஏற்றப்பட்டு Sephoris ஐயும் ஊடறுத்து, மத்திய சமுத்திரம் வரை பரந்திருந்தது. கப்பல் வழியான வணிகம் நாம் அறிந்த நகரங்களான அலஸ்சாண்டிரியா, அந்தியோக்கியா, குரிந், கர்த்தாக்கோ, கத்தக்கொணியா நகரங்களுக்கு இடையான வர்த்தகமாக இருந்தது. குறிப்பாக கருவாடு, விதை பயிர்களுடன் மத்திய கிழக்கில் பழரசங்களும்- வைன் - கொள்வனவு செய்யப்பட்டன. இந்த வர்த்தகத்தில் பெரிய பணக்காரர்களாக யூதர்களும், கிரேக்கர்களும், பொனிக்கரும் இலாபமீட்டினர்.

 

அலெஸ்சாண்டிரியாவில் ஒரு இலட்சம் யூதர்கள் கிறிஸ்து பிறந்ததாக கூறப்படும் காலத்துக்கு முன்பே, பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இங்கே ஒரு தனியான கல்வி நிலையமும் இருந்தது. ஆனால் தொடர்புகளுக்கான மொழியாக கிரேக்க மொழியே பாவனையில் இருந்தது. இங்கிருந்தவர்களே பழைய யூத விவிலியங்களை கிரேக்க மொழியில் மொழிபெயர்த்தனர். இவர்கள் தமது இளைய தலைமுறையினருக்கு, தமது யூத மதத்தையும், கலாச்சாரத்தையும் இதனூடாவே போதித்தனர்.

 

(பி.குறிப்பு)கிரேக்கத்தில் அரிஸ்டாட்டில் மற்றும் பிளாட்டொவின் எஜமானர்களுக்குத் துணைபோகும் வரட்டுஅறிவியல் சாதனைகளில் கிரேக்க அறிவியல் அஸ்தமானமாகுவதற்கு முன்பு இந்த அலேஸ்சாண்டியாவில் பொற்காலம் தோன்றியது. அரிஸ்டாடிலின் மாணவரான அலெஸ்சாண்டரின் பரவலான ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட பதிய சந்தையினூடாக இவ் அறிவியல் புத்துணர்ச்சி பெற்றிருந்தது. அலெஸ்சான்டிரியாவில் பித்தொலமிஸ் காலத்திய அருங்காட்சியகம் பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கே மிகப் பெரிய நூல் நிலையமும், ஆய்வுகூடமும் இதில் அடங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ் ஆய்வு கூடத்தில் ரட்டொஸ்தினிஸ் பூமி பூகோள வடிவமானதென்றும், அதன் சுற்றளவும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. கிப்பொச்சரஸ் விண்மீன்களின் பிறப்பு இறப்புக்களைக் கண்டுபிடித்திருந்தார். இங்கு யூக்லீட் கண்டுபிடித்திருந்த வடிவியல் கணித உண்மைகள் அவருக்குப் பின் 23 நூற்றாண்டு காலமாக மாறாமல் இருந்தன. இங்கு பூமி சூரியனைச் சுற்றி வருவது நிரூபிக்கப்பட்டிருந்தது. எல்லாச் செடி கொடிகளும், விலங்குகளும் இனவாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இவைகள் 1500 வருடங்களுக்குப் பின்னர்தான் கண்டுபிடிக்கப்பட்டன. கி.பி 370ல் அலெஸ்சாண்டிரியாவின் ஆர்ச் பிசப்பான சிரிலின் தலைமையில் கிறிஸ்தவ மதபீடம் இந்த நூலகத்தையம், ஆய்வு கூடத்தையும் சூறையாடி, எல்லாப் புத்தகங்களையும் தீயிட்டுக் கொழுத்தியது. நூலகத்தின் தலைவரும், பெண் விஞ்ஞானியுமான கிப்பாட்டியா பயங்கரமான சித்திரவதைக்குப் பின்னர் உயிருடன் கொளுத்தப்பட்டார். சிரில் மதத்தலைவராக உயர்த்தப்பட்டார். இங்கு நிச்சயமாக உண்மையான யூதவரலாற்றும் எரிந்து சாம்பலாகி இருக்கும்.

 

ரோமப் பேரரசின் கிழக்கு - தெற்குப் பகுதிகள் பெரும் பழத்தோட்டங்களைக் கொண்டதாக இருந்தது. எகிப்தில் இருந்து கோதுமையும், விதைகள், பழங்கள் என்பனவும் ஏற்றுமதி செய்யப்பட்டன. குறிப்பாக அத்திப்பழம், ஒலிவம்பழம் போன்றவை குறிப்பாக கிழக்கிலிருந்து ஏற்றுமதியாகின. அத்திப்பழமும், திராட்சைப்பழமும் பழரசம் செய்யப் பயன்படுத்தப்பட்டன. அத்திப்பழமும் திராட்சைப்பழமுமே பழரசத்துக்கான மூலப்பொருளாக அன்று இருந்தது. இக்காலத்தில் சீனி கண்டுபிடிக்கப் படவில்லை. இக்காலத்தில் இனிப்பான பழரசத்தைத் தயாரிப்பதற்கு, அவர்கள் தேனையே பயன்படுத்தினர். ஆனால் தேன் அன்று ஒரு வரையறுக்கப்பட்ட பண்டமாகவே இருந்தது. கரும்பும், வாழைமரமும் முதன் முதலாக இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்டது. கொலம்பஸினதும், வாஸ்கொடகாமாவினதும் பயணங்களின் பின்னரே இது இங்கே அறிமுகமானது. இதனால் இவர்கள் இனிப்பானதும்,போதை கூடியதுமான பழரசங்களை உருவாக்கினர். இவை அன்று ஏற்றுமதியில் தங்கமாக இருந்தது. இவை ரோமுக்கு ஏற்றுமதியாகின. இக்காலத்தில் ரோமப் பேரரசு முழுவதும், ரோம இராணுவத்தினர் முந்திரிகை நடுகையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

மத்திய சமுத்திரம் பெரிய மீன் வருவாயைக் கொடுக்கும் இடமாக இருந்தது. இங்கு கருவாடு செய்யப்பட்டு ரோம் இராட்சியம் முழுவதும் அனுப்பப்பட்டது. கலிலேயாவின் வாழ்வின் உயிர்நாடியாக பழத்தோட்டம் இருந்தது. இதற்கு இது நல்ல சூரியப்படுகை இடமாகவும், தகுந்த தகவெப்பம் கொண்ட பிரதேசமாவும் காணப்பட்டதே இதன் சிறப்பம்சமாகும். கலிலேயா சிறிதளவு கோதுமையையும் கொண்டிருந்தது. வடக்குப்பக்க மலைப்பிரதேசம் ஒரு நல்ல மக்கள் வாழ் நிலமாகவும், செல்வமாக நல்ல குடிதண்ணீரையும் கொண்ட வளமான இயற்கையாக இருந்தது. நிலத்துடனான இம் மக்களின் பிணைப்பு, விதைப்பயிர் செய்கையுடனும், மீன்பிடியுடனும் கலந்து நகரின் சந்தை மையத்துடனும் சூழவுள்ள குக்கிராமங்களாக இணைந்திருந்தது.

 

தொல்பொருள் ஆய்வுகளின் படி, கலிலேயா ஒரு சிறந்த வர்த்தக சந்தை இணையமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வாங்கும் விற்கும் பெரும் சந்தைப்பிரதேசம் ஆகையால் கட்டிடக்கலைகளும், அபிவிருத்தி கொண்ட இடமாகவும் காணப்பட்டது. கடந்த இருபது வருட தொல்பொருள் ஆய்வுகளின் படி, கலிலேயா தனக்கான சொந்தப் பொருளாதாரத்தைக் கொண்ட நகரமாக, செல்வந்த இடமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

கலிலேயாவின் இச்சிறப்புத் தன்மையால், பல புதிய நகர அமைப்புக்கள் இங்கு இலகுவானது. இதற்கு அடிப்படையாக நல்ல குடிதண்ணீரும், கழிவு நீர் கால்வாய் அமைப்புக்களும் இவற்றைத் துரிதமாகச் சாத்தியமாக்கியது. கிரேக்கத்தில் அமைப்புப்பெற்ற புதிய நகரில் ஒன்றான செப்கொரிஸ் (Sephoris) குறிப்பிடத்தக்கது. இங்கே அப்பலோக் கோவிலும், அக்கடமியும், விளையாட்டு -களியாட்ட இடங்களும், பெரிய கொட்டகைகளும் இவ் நகரத்தில் காணப்பட்டன. இங்கே 20.000 குடிமக்கள் வாழ்ந்தனர். இந்நகரம் இயேசு வாழ்ந்ததாகக் கூறப்படும் நசரேத்திலிருந்து ஏழு மைல் தொலைவில் அமைந்திருந்தது. செப்கொரிஸ் வாங்கும் விற்கும் சந்தைப்பிரதேசமாக இருந்ததால், இங்கே தத்துவவாதிகளும், புத்ததுறவிகளும் நிறைந்து விவாதிக்கும் இடமாவும் இருந்தது. இக்காலத்து சந்தைவடிவமானது ஆண், பெண் வேறுபாடின்றி கூவி விற்கும் நடைமுறையைக் கொண்டதாகவும், புதிய அன்றாட செய்திகள் கூட கூவல் மூலமே மக்களுக்கு பரிமாறப்பட்டது. இம்மக்களுக்கு கிரேக்கமொழி ஒரு பிரச்சினையாக இருந்திருக்கவில்லை. ஏனெனில் கி.மு 340களில் அலெஸ்சாண்டரின் சாம்ராட்சியத்தில் இந்தியா சூழ்ந்த பகுதிகள் கூட இவ்விணைப்பில் இருந்தது. அலெஸ்சாண்டர் உள்ளுர் கலாச்சாரத்தில் கடும் போக்கைக் கொண்டிராமல் கிரேக்கத்தை கொண்டுவருவதில் கவனமாக இருந்தார். இதனால் தான் அலெஸ்சாண்டர் இறந்ததும், செல்வம் சரிந்து மூழ்கியது.

 

ரோமப் பேரரசின் காலத்தில், கலிலேயாவில் இயேசுவின் காலம் மூன்றாம் தலைமுறையாக இருந்தது. ஜோசேப் கூட அவரது ஆயுட்காலம் முழுவதும் ரோமப்பேரரசின் ஆட்சிக்காலத்தின் கீழேயே கழித்திருந்தார். ஆனால் ஜோசேப்பின் தகப்பனாரான யாக்கோப்பின் இளமைக்காலம் ரோமப் பேரரசின் கீழேயே இருந்தது. (கி.மு 63) . இவர்களின் இடப் பெயர்வுகளால் கிரேக்கம் அறிதல் மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் இவர்களுக்கு இருந்ததில் ஆச்சரியமில்லை. யூதர்கள் இடம்பெயர்ந்த வெளிநாட்டவர்களாக வாழ்ந்ததால், யூதேயா - கலிலேயா நகரத்து மக்களின் இவ் வெளி உறவுகளுக்கு இடையிலான கலாச்சார இணைவுகள் இவர்களுக்கு மிகவிரைவாக கிரேக்கத்தை உள்வாங்கிக் கொள்வதை விரைவுபடுத்தும் காரணிகளாக அமைந்தது. கலாச்சார வேறுபாட்டின் முரண்பாடுகளும், பலமத இணைவுக்கான (கூட்டுத்தலைமை ) முரண்பாடுகளும் தோற்றுவிக்கும் புதிய சிக்கலுக்கான ஒரு பொதுவான தீர்வாக கிரேக்கமொழி, மக்களிடம் காணப்பட்டதில் ஆச்சரியமில்லை. மதங்களின் கூட்டுத்தலைமை அதிகாரத்தின் கீழ், இத்தலைமுறை முரண்பாட்டுக்கான தீர்வாகவும், எதிர்காலத்தில் தம் மதத்தலைமையை நிலையாகத் தக்கவைக்கும் நிழல் யுத்தத்தில் யூதர்களும் பங்கேற்பது தவிர்க்கமுடியாத யதார்த்தமாவே இருந்தது. கிரேக்க ரோம சிந்தனைகளில் இருந்தும், ஏனைய மதக் கருத்துக்களில் இருந்தும் நடைமுறைப் பிரச்சனைக்கான தீர்வுகளைத் தேடுவதும், புதிய சமுதாயமாக மாறுவதும் யூதசிந்தனைக்கும் அவசியமானதாகவே இருந்தது. இங்கே உடனடிச் சமூகச் சீர்திருத்தம் ஒழுக்கத்தில் முனைப்புப் பெறுவதைக் காணலாம். யோவானின் கருத்துப்படி, சமாரியப் பெண்கள் யூதர்கள் அல்ல என்று உரைப்பதும், இயேசுவின் குரலாக 'பாவம் செய்யாதவன் கல்லெறியட்டும்' என்று ஓங்கி ஒலிப்பதும் நல்ல எடுத்துக்காட்டு.

 

லாசருவின் சகோதரிகளான (மார்த்தாவும், பெத்தானியா மரியாளும்) பெத்தானியா மரியாள் அவர்களின் கலாச்சாரத்தில் இருந்து வேறுபட்டபோது, அதை ஆதரித்த இயேசு மார்த்தாவிடம் அவளுக்கு உதவும்படியும், அவள் நல்ல பகுதியையே தேர்ந்தெடுத்ததாகக் கூறுவதும் பைபிளில் பார்க்கமுடியும். ரோம கிரேக்க கலாச்சாரத்தை உள்வாங்கும் இச்சமூகம் ஆண் -பெண்களுக்கு இடையிலான குறைந்த பட்ச சமத்துவத்தை -கிரேக்க ரோம அதிகாரங்கள் அங்கீகரிப்பதைப்போல - அங்கீகரிக்கக் கோரி துடித்தெழுந்த நாடியழுத்தமே இயேசு என்ற பாத்திரமாகும்.

 

அடிமை நிறுவன மூலதனம்

 

இயேசு பிறந்த காலத்தில் Augustus என்ற மன்னனின் ஆட்சி நடந்தது. (கி.மு 27 இல் இருந்த கி.பி 14 வரை) இம்மன்னரின் ஆட்சிக்காலத்தில் சமாதானம் என்ற முழக்கம் வலுவாக ஓங்கி ஒலித்தது. கிரேக்க - ரோம சாம்ராட்சியம் கிட்டத்தட்ட கி.பி 180ஆண்டு வரை தமது பொருளாதார அரசியலை கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. குறிப்பாக தமது ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் தமது இராணுவத்தினரை பொதுமைப்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவருவதும், மையப்படுத்தப்பட்ட நிர்வாக ஒழுங்குக்குள் கட்டியமைப்பதும் அவசியமானதாக இருந்தது. இதனால் அவர்கள் சமாதானம் என்ற கோசத்தை முன்வைக்க வேண்டியிருந்தது. இதனூடாக சட்டம், நல்ல வியாபாரத்துக்கான வசதிகள், கண்டுபிடிப்புக்கள், நல்ல வீதிகள் கொண்ட போக்குவரத்து, நகரத் தொடர்புகள், குறிப்பாக நல்ல குடிதண்ணீர் வசதி, கழிவுநீர் கால்வாய்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்றவற்றை செய்வதற்கு அவர்களுக்கு அமைதி தேவைப்பட்டது. இவ் அமைதியின் ஊடாகவே அடிமைகளைக் கொண்டு இவற்றைத் திறம்பட நிறைவேற்றலாம் என நம்பினர். இதற்கு சான்றாக இம்மன்னன் காலத்திலேயே நல்ல குடிநீர் கிடைத்ததை உலகம் அறியும்.

 

இக்காலத்தில் கலாச்சார, நிர்வாக, வியாபார (நுகர்வு) மொழியாக கிரேக்கமொழி இருந்தது. புதிய பட்டணங்கள் வடிவமைக்கப்பட்டன. 30,000 மக்கள் பார்வையிடக் கூடிய நாடகக் கொட்டகை வடிவமைக்கப்பட்டது. மக்கள் குழுமமும் பிற இடங்களாக களியாட்ட மைதானங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற பலவற்றை வடிவமைத்திருந்தனர். இவற்றுள் சிலவற்றை பின்னர் திருச்சபை - முதலாவது பாப்பாண்டவர் பேதுருவானவரின் இடம் ஆகப் பயன்படுத்தப்பட்டது. இம்மன்னர் ஆட்சியின் போது செல்வம் செழிப்பாகக் குவிந்தது. களியாட்டமையங்கள் அதிக வருவாயைத் தந்தது. மக்கள் பெருவாரியாக குவியப்படும் மையங்கள் அமைக்கப்பட்டதால் இவர்களது அரசியல், நிர்வாகஅமைப்பு முறைக்கான பிரச்சாரங்கள் இலகுவாகின. பிளாட்டோவையும், அரிஸ்டாட்டிலையும் பெரிதாக ஆட்டிய -மரணம் யாரால் நிகழ்தப்படுகின்றது என்ற- கேள்வியும், அதற்கான அவர்களின் விந்தையான தத்துவ முடிபுகளும் - இதிலிருந்து உறுதியாக்கப்பட்ட கடவுளும் பரலோக -பூலோக இராட்சிய அமைப்பு விளக்கங்களும் மரணத்தை அளிக்கும் தகுதி விண்ணுலகத்தில் எப்படி கடவுளுக்கு உண்டோ அவ்வாறு மண்ணுலகத்தில் அவரின் நேரடி வாரிசாக ஒருசிலருக்கே இருந்தது. இருப்பினும் இம்மன்னனின் மரணத்தீர்வைக்கான அதிகாரம் அம்மக்களின் அதிகளவு முரண்பாடுகளுக்கு உள்ளாகாமல் இருந்தது. இதற்கு இம்மன்னனின் ஆட்சிக்காலத்தில் நகர வடிவமைப்பு முன்னேற்றங்கள் மன்னனுக்கும் மக்களுக்கும் முன்பிருந்த இடைவெளியைக் குறைத்திருந்தது. பைபிளில் உள்ள இயேசுவுக்கு பிலாத்து மரணத்தீர்வை அளித்த விதம், இம்மன்னனைப் போலவே பிலாத்துவும் மக்களின் விருப்புக்கு மதிப்பளித்து தீர்ப்பளித்ததாக ஒரு நம்பிக்கையை அவர்களால் ஏற்படுத்த முடிந்தது.

 

இயேசு காலத்தில் ரோமாபுரியின் நிதியானது - அடிமை நிறுவன மூலதனமாகவே இருந்தது. அப்பொழுது அடிமைகள் மிக மலிவாகவே வாங்கப்பட்டனர். கி.பி 100 வருடங்கள் வரை அடிமைகளை வாங்கும் வழக்கம் இருந்து வந்தது. ரோம் சாம்ராட்சியத்தைப் பொறுத்தவரை வடக்கு நீர்ப்பிரதேசமாகவும் மேற்கு அத்திலான்டிக் கடலாகவும் தெற்கு சகாராப் பாலைவனமாகவும் இருப்பதால் அடிமைகளை பயன்படுத்தாமல் இவர்களால் மூலதனத்தை திரட்டுவது அன்று முடியாத காரியமாக இருந்தது. தொழில் நுட்பத்தில் இவர்களுக்கு அதிகளவு விருப்பு இருந்திருக்கவில்லை. ஏனெனில் அடிமைகள் இவர்களுக்கு அவ்வளவு மலிவாகக் கிடைத்தனர். 200 ஆண்டுகளின் பின்னரே இது சாத்தியமானது. இயேசுவின் காலத்தில் ரோம் சாம்ராட்சியத்தில் சரி அரைவாசிப்பேர் அடிமைகளாக இருந்தனர். அடிமைகள் மிகவும் வறியவர்களாகவும் கைவேலையில் ஒருவர் அல்லது இருவராக இணைந்து வேலை செய்தனர். வீட்டு வேலைகள் சமையல் கழுவுதல் முதற்கொண்டு அடிமைகளே பயன்படுத்தப்பட்டனர். இதில் புதுமை என்னவென்றால் புதியஏற்பாட்டில் அடிமை என்ற வார்த்தையே பயன்படுத்தப்படவில்லை. ஆனால் 'நா காமா'வில் கண்டெடுக்கப்பட்ட மரணச்சுருள்களும், எழுத்துருவச்சுருள்களும் இதை மெய்ப்பிக்கின்றன. இக்காலத்தில் ஒர் அடிமையின் விலை ஆகக்கூடுதலாக 30 வெள்ளிக் காசாக இருந்தது. இது இயேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக யூதாஸ் பெற்ற காசுக்குச் சமமாகவும் இருக்கிறது

  

இக்காலத்தில் அடிமைகள் வீட்டுப்பிராணிகள் போலவே கருதப்பட்டனர். இந்த அடிமைக்கு எந்த உரிமையும் கிடையாது. இவனுக்கு எந்தப்பாதுகாப்பும் கிடையாது. இதைவிடவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் எவற்றுக்கும் இவனுக்குத் துளியளவும் உரிமைகிடையாது. தமது வளர்ப்பு மிருகங்களையும், தமது உடைமைகள் அனைத்தையும் (மனைவி பிள்ளைகள் ) தமது எஜமானர்களுக்கு எந்தநேரத்திலும் இழக்கவேண்டும். இவர்கள் எப்பொழுதும் எஜமானர்களின் ஆயுதமாகவே இருக்கவேண்டும். இவ் அடிமைகள் மனிதரல்ல: வெறும் சடப்பொருளே. ஒர் அடிமையால் தனிப்பட எதுவும் பேசமுடியாது. அவன் பேசுவதெல்லாம் அவன் உரிமையாளனின் வசனங்களே. இவைகள் மீறப்படும்போது, உரிமையாளனால் இவன் கொல்லப்படவோ அல்லது ஆண்டவனின் தண்டனைக்கு அவனைக் கையளிப்பதோ ஒரு சாதாரண வழக்கமாக இருந்தது.

 

ஒர் அடிமை தன் எஜமானனை ஏமாற்றவோ , அவனுக்கு பிழைவிடவோ அல்லது பாசாங்காக நடித்து வாழ்ந்தாலோ அதைத்தண்டிக்கும் நேரடி உரிமை எஜமானர்களுக்கு இருந்தது. இவர்களின் உடலின் பகுதிகளைச் சீவவோ, வெட்டி எறியவோ அவர்களுக்கு பூரண உரிமையிருந்தது. இதை யூத அடிமைகள் அறிந்திருந்தனர்.

 

பேரரசின் மூலதனத்தால் அடிமைகளுக்கும் எஜமானர்களுக்கும் இடையிலான உள்ளடக்கத்தில் மெல்ல மாற்றங்கள் ஏற்படத்தொடங்கியது. அடிமைகள் யதார்த்தமான இயற்கை நடைமுறையின் ஊடாக அனுபவரீதியான உயர்ந்த அறிவைப் பெற்றிருந்தனர். எஜமானர்களின் வீட்டுவேலைகளின் ஊடாகவும் கிரேக்க மொழியை எழுதவும் வாசிக்கவும் கூடிய அறிவைப்பெற்றிருந்தனர். சில மூலிகை, கைவைத்தியத்துறையிலும், வியாபார விடயங்களிலும் அதிக அறிவைப் பெற்றிருந்தனர். இது அவர்களின் தொழில் ரீதியிலான தேடல் அறிவாக இருந்தது. அதிகமான அடிமைகள் அனுபவத்திறன் வாய்ந்த நுணுக்கமான கட்டிடக்கலையில் நிபுணத்துவத்திறனுடன் வளர்ந்திருந்தனர்.

 

இவ்வாறு இயற்கையுடன் கூடிய அறிவாற்றலுடன் வளர்ந்த தொழிற்துறை அறிவியல் சார்ந்து வளர்ந்த அறிஞர்கள் அடிமையிலிந்து பிறப்பெடுத்ததும் அடிமைகளின் அறிவியல் சார்ந்த மனிதவலு கவனிப்புக்கும், பெறுமதிக்கும் உட்பட்டது. இதனால் சக்கரவர்த்திகள் அடிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை உருவாக்க வேண்டியிருந்தது. இதனால் இயேசு காலத்தில் Lex Petronia அடிமைகளை எஜமானர்கள் தமது வளர்ப்பு மிருகங்களுக்குத் தீனியாக எறிவதையும், தண்டிப்பதையும் தடுக்கும் சட்டத்தை முதன் முதலாகப்பெற்றனர். அடிமைகள் தண்டிக்கப்பட முன் நீதி விசாரணைகளின் முன்னால் நிறுத்தப்படவேண்டும் என்ற கட்டளை சக்கரவர்த்தியால் விடப்பட்டிருந்தது.

 

நீரோ மன்னன் காலத்தில் அடிமைகளின் மீது சுமத்தப்படும் குற்ற வழக்குகளுக்கு, எதிராக தமது தரப்பு உரிமைகளைச் சுட்டிக்காட்டவும் எஜமானர்களுக்கு எதிராக சக்கரவத்தியிடம் முறையிடவும் முடிந்தது.

 

கலிலேயாவின் நான்கு வித வகுப்பினர்

 

கலிலேயா நகரை எடுத்துக் கொண்டால், அங்கே வாழ்ந்த எல்லோரும் அவ் நகர அமைப்புக்கு உரியவராகக் கணிக்கப்படுவதில்லை. அங்கீகரிக்கப்பட் நகரப்பிரசைகளே நகருக்குள் வரமுடியும். கிட்டத்தட்ட இன்றைய இலங்கை ரூபா 15,000 த்தை சொத்தாகக் கொண்டிருந்தவர்களே அன்று நகருக்கு உரியவர்களாகக் கருதப்பட்டனர். இந்த நகர அமைப்பில் பதிவுக்குரிய வகுப்பினராக சிலரே கணிக்கப்பட்டனர்.

 

தொடரும்...

 

சுதேகு
190406


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்