01272023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

நீறாய்ப் போக விலங்குகள் இராச்சியம்!

ரத்தம் விற்பனைக்கு!
தமிழ் இரத்தம்
சிங்கள இரத்தம்
ஓதி
வெட்டப்பட்ட முசுலீம் இரத்தம்!

துரோகி இரத்தம்
தியாகி இரத்தம்
மக்கள் இரத்தம்
மாவீரர் இரத்தம்
மாமனிதர் ஆன இரத்தம்!

 

குழந்தை இரத்தம்
கருவறையில் குடியிருக்கும்
உருத்தெரியா உயிரின் இரத்தம்!

கொத்தாகக் கொன்றொழித்த
கெப்பிற்றிக் கொல்லாவ இரத்தம்!

 

அல்லை வங்காலை
பிணத்தின்னிப் பேய்கள்
குதறிக் களித்த இரத்தம்!

காட்சிக்கு வைத்து
விலை நிர்ணயிக்க
போட்டா போட்டி!

 

விற்பனை முகவர்கள்
தேசங்கள் சென்று
மூடிய அறைகளுக்குள்
பேசிக் கொள்கிறார்கள்!

 

சந்தை விலை நிர்ணயத்தில்
ஏகாதிபத்திய எஐமானர்களுக்கு
இணக்கம் வராவிடில்
விலை வீழ்ச்சிக்காய்
இரத்த உற்பத்தியை
இன்னும் பெருக்குக!

 

வெட்டிச்சரித்து குத்திக்குதறி
காட்சிக்கு வைத்த
ஆவேச விளம்பரங்கள்
போதாது போதாது!

 

சிரசுகள் சரிய செந்நீர் சொரியும்
காட்சிச்சாலைகள் தேசமெங்கும்
திறக்கப்படட்டும்!.
தேவாலயங்கள் பள்ளிவாசல்கள்
விதிவிலக்காமென யாரெவர் சொன்னார்!
தமிழன் சிங்களன் முஸ்லீம்
பேதங்கள் தெரியா
பிரேதங்கள் புரளுக!
நானா நீயா நடக்கட்டும் போட்டி!

 

விழி வழி தேங்கிய மனவெதுப்புகள் உடைப்பெடுத்து
சுனாமியும் தோற்றுப்போகும் பேரலையாய்
ஆட்சி கொண்டோரை ஒருநாள்
அள்ளிச்செல்லும்!

 

அது எதுவென நீவிர் அறியும் நாழியில்
வாழ்வின் ஒளி மீளும் தெருக்களில்
நீறாய்ப் மண்ணாய் நீர்த்துப்போகும் விலங்குகள் இராச்சியம்

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்