னது படத்துடன் புலிகள் தன்னைத் தேடுவதாகவும், இதுவே தனது கடைசிப்பதிவாகக்கூட இருக்கலாம் என்றும் பொருள்பட சிறிரங்கன் தனது பதிவில் எழுதியிருந்தார். தனது குடும்பத்தினர் இதனை எதிர்கொண்டவிதம் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார்.(1)

இந்த மிரட்டல் இணயைத்தளமொன்றில் வெளியிடப்பட்டுள்ளது (2). இந்தத் தளத்தின் உள்ளடக்கம் “காட்டிக்கொடுக்கும்” எந்த அரசியலைப் பிரதிநிதித்துவம் செய்கின்றதென்பதை.

 

சிறீரங்கனுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்தும், பயமுறுத்தலுக்கு எதிராகவும் பலர் - அவரின் அரசியல் கருத்துகளுடனான தங்கள் உடன்பாடு/முரண்பாடுகளுடன் - அவரது பதிவிலும், தங்களது பதிவிலும் எழுதியிருந்தனர் (1),(3),(4).

 

சிறீரங்கனின் இந்தப் பயம் போலியானது, மலிந்த விளம்பரம், படம்காட்டல் என்ற வகையிலும் அவரது பதிவிலும், அவ்ர் பற்றிய மற்றையோரின் பதிவிலும் எழுதியிருந்தார்கள்.

 

சிறீரங்கன், ரயாகரன், ஷோபாசக்தி என்ற தனிமனிதர்கள் புனைபெயர்களில் ஒளிந்துகொண்டோ, பங்கறுக்குள் அல்லது அலரிமாளிகையில் மறைந்துகொண்டோ தங்கள் கருத்துகளை வெளியிடவில்லை. இவர்களைச் சுற்றி தமது உயிரைக் கொடுத்து காப்பாற்றக்கூடிய மெய்ப்பாதுகாவலர்கள் இல்லை. எதிரி பற்றித் தகவல் தரும் உளவாளிகள் இல்லை. இவர்கள் நினைத்திருந்தால் புனைபெயரிலோ, அநாமதேயமாகவோ தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதில் எந்தச் சிக்கலுமிருந்திருக்காது. அதைவிட எதையும் பேசாமல்/எழுதாமல் “எல்லோரையும்”போல வாழ்ந்து தங்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்க முடியும். தமது சொந்தப் பெயர்களில், சாதாரண தபால் வரக்கூடிய முகவரியில் வசித்துக்கொண்டு, அன்றாடம் வயிற்றுப்பிழைப்புக்குக் கூலித் தொழிலுக்குப் போய்வரும் இவர்களின் படத்தையும், முகவரியையும் வெளியிட்டு மிரட்டுவதும், பயமுறுத்துவதும்தான் வீரமோ?

 

இவர்களை பற்றி (என்னையும் உட்படுத்தி) ஷோபாசக்தியின் வரிகளில் சொல்வதென்றால்

(….) மிகச் சிறுபான்மையினரான மாற்றுக் கருத்தாளர்களான நாங்கள் உதிரிகளாகச் சிதறியிருக்கிறோம். எங்களிடம் உண்மையிலேயே ஓர் அரசியல் வேலைத்திட்டம் கிடையாது. எங்களிடையே புரட்சிகர அரசியற் தலைமையும் இல்லை. (….) (5)

இந்தத் தனிநபர்கள் மீதான மிரட்டல்/பயமுறுத்தலுக்குப் பின்னாலிருப்பதோ நிறுவனப்படுத்தப்பட்ட வன்முறை அரசியல். இதை புரிந்துகொள்வதும்/புரியாது விடுவதும்கூட அரசியல் தான்.

 

இவர்களோ, நானோ அல்லது பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்ட யாரென்றாலுமோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல. இவர்களுடனான கருத்து முரண்பாட்டை எந்தத் தயவும் காட்டாது அலசி ஆராய்ந்து எழுத முடியும் (6). எழுத்தில் எந்தளவு கடுமை காட்டப்பட்டாலும், ஆயுத கலாச்சாரத்தைவிட அது முன்னேற்றமானதே.

 

எந்த அதிகாரங்களுமற்ற ஒரு தனி மனிதர், தன் மீதான வன்முறை பற்றிப் பயப்படுதலைப் புரிந்துகொள்வதற்கு எந்த அரசியல் சார்போ/தத்துவமோ/ஆதாரங்களோ தேவையில்லை. கருத்தை கருத்தால் அல்லாது வன்முறையால் எதிர்கொள்வதைக் கண்டிப்பது/எதிர்ப்பது என்பது சமூக அக்கறை என்பது மட்டுமல்ல, மனிதநேயமும் கூட. இந்த அடிப்படையில் தாம் எழுதியவை குறித்து தங்கள் அரசியலோடு அவரவர் உரசிப் பார்க்கலாம்.

 

சிறீரங்கன் உணர்ச்சி வசப்படுபவர், அந்த ரீதியில்தான் இந்தப் பயமும் என்றும் எழுதியிருந்தார்கள். பயம் என்பதே ஒரு உணர்ச்சிதான். மரணபயம் குறித்து யாரும் உணர்ச்சிவசப்படாமல், நிதானமாகச் சிந்திப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இன்று இந்த வலைப்பதிவுகளில் எழுதும்/வாசிக்கும் ஈழத்தமிழர்களில் தொண்ணூறு வீதத்திற்கும் மேலானோர் ஈழத்திற்கு வெளியில்தான் இருக்கிறார்கள். இந்த வெளியேற்றத்திற்கு தங்கள் உயிர் மீதான ஆசை காரணமில்லை என்று யாரும் சொல்வார்களென்றால், அதன் நம்பகத்தன்மை குறித்து அவர்களே தங்களைக் கேட்டுக் கொள்ளலாம்.

உயிர் வாழ ஆசைப்படுதல் ஒன்றும் தவறான விடயமில்லை. அதை தமக்கு மட்டும் உறுதிப்படுத்திக்கொண்டு, அடுத்தவருக்கு மறுதலிப்பதுதான் இங்கு கண்டிப்புக்கும்/எதிர்ப்புக்கும் உரியது.

சிறீரங்கனின் பயம் ஒருவேளை மிகைப்படுத்தலோ/தேவையற்றதோ என்று கேட்டால், இல்லையென்று சொல்வதற்குரிய நிகழ்வுகளைக் கொண்டது எமது கடந்தகால அனுபவங்கள். கனடாவில் தேடகம் நூல்நிலையம் எரிக்கப்பட்டது, பிரான்ஸில் சபாலிங்கம் கொல்லப்பட்டது, நோர்வேயில் ஈபிஆர்எல்எவ் உறுப்பினர் மாணவர்களிடையே உரையாற்றும்போது மோசமாகத் தாக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டது, ஈழமுரசு ஆசிரியர் கஜனும், புலிகளின் சர்வதேச நிதிப்பொறுப்பாளர் நாதனும் பிரான்ஸில் கொல்லப்பட்டது என்று வெளிநாடுகளில் ஈழத்தமிழர் மீதான அரசியல் வன்முறைகளைப் பட்டியலிடலாம்.

 

இந்தப் போக்கை சிறீரங்கனின் பயம் குறித்து ஒட்டி/வெட்டி கருத்துச் சொன்ன யாரும் மறுக்கவில்லை.

 

ஈழத்திலும், அதற்கு வெளியிலும் கடைப்பிடிக்கப்படும் அரசியல் என்பது கருத்துகளுக்கு, தனிமனிதர்களுக்கு எதிரான வன்முறையைக் கொண்டுள்ளது. இந்த அரசியல் போக்கில் மாற்றம் வராதவரைக்கும் இது குறித்த பயத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது. அவரவர் கொண்டுள்ள அரசியல் பற்றுதல்களின் அடிப்படையில் இந்தப் பயத்தைக் கேலி செய்வதோ, நிராகரிப்பதோ, வன்னிக்குக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்வதோ நிலமையில் மாற்றம் கொண்டுவந்துவிடப் போவதில்லை.

 

வயிற்றுப்பசிக்கு பத்திரிகை விற்றவன், அவன் விற்ற பத்திரிகையை ஏற்றுக்கொள்ளாதவர்களால் வீதியில் தெருநாயைப்போல சுட்டுக் கொல்லப்படுகிறான். பிடிக்காத கருத்தை எழுதிய செய்தியாளர் சுட்டுக் கொல்லப்படுகிறார். பிடிக்காத விடயம் கதைத்தவர் காணாமற் போகிறார். பத்திரிகைக் காரியாலயத்திற்கு குண்டு வீசப்படுகிறது. வன்முறைக்குப் பலியானவர்கள் கூட அவர் நம்பிய அரசியலுக்காக துரோகியாக/மாமனிதராக ஆக்கப்படுகிறார்கள். முரண்பாடான கருத்தை எதிர்கொள்கின்ற விதம் இன்றுவரை இப்படியாகத்தான் இருக்கின்றது.

 

சிறீரங்கன் என்ற தனிநபருடன் குறித்த விடயத்தை ஆரம்பித்து முடித்துவிடாமல், இத்தகைய போக்குகள் பற்றித் தொடர்ந்து கதைக்கப்பட வேண்டும்.

 

சிறீரங்கன் என்ற வலைப்பதிவர் மீதான மிரட்டல்/பயமுறுத்தல் என்பது வெறுமனே வன்முறை சார்ந்ததல்ல. தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினையுமல்ல. அதன் பின்னால் அரசியல் உள்ளது.

வன்முறைகளை பொலிசில் முறையிடலாம். வன்முறை அரசியலை - அது ஈழப்போராட்டத்தின் ஒரு பகுதியாயிருக்கையில் - எதிர்க்க வேண்டியது விடுதலையை விரும்பும் ஒவ்வொருவரினதும் பொறுப்புத்தான்.

இந்தப் பதிவை சிறீரங்கன் என்ற வலைப் பதிவர் பற்றியது என்று குறுக்கிவிடாமல், அவரின் விடயத்தை முன்வைத்து பேசப்பட வேண்டிய விடயம் இந்த நச்சுச் சூழலை மாற்றுவதைப் பற்றியதாக இருப்பதே ஆரோக்கியமானது.

 

கருத்து முரண்பாடுகள் இன்றுவரை வன்முறையாலேயே எதிர்கொள்ளப்பட்டுள்ளன. அதனைத் திரும்பக் கருத்தால் சந்திப்பதாக மாற்றியமைப்பதன் மூலம்தான் நாம் விடுதலை, சுதந்திரம், உரிமை பற்றிச் பேச முடியும்.

 

இப் பதிவில் குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பான இணைய இணைப்புகள்:
1. http://srisagajan.blogspot.com/2006/05/blog-post_29.html
2. http://www.eddappar.com/content/view/57/26/
3. http://rozavasanth.blogspot.com/2006/05/blog-post_114897579659155829.html
4. http://wandererwaves.blogspot.com/2006/05/blog-post.html
5. http://sathiyak.blogspot.com/2006/05/blog-post_31.html
6. http://pooraayam.blogspot.com/2006/05/blog-post_31.html