சட்டம் நிபுணர்களதும் நீதவான்களதும் வழக்கறிஞர்களதும் காவற் துறையினரதும் கைகளில் பத்திரமாகவே உள்ளதால் கையும் மெய்யுமாக அகப்பட்ட கள்வனால் சட்ட நுணுக்கங்களின் இடைவெளிகளில் நுழைந்து தப்பி ஓட இயலுமாகிறது

பட்டப் பகலில் நடுத் தெருவிற் கொலை செய்தவன்
சட்ட நூலேணியிலேறி நழுவ முடிகிறது



குடிவெறியில் காரோட்டிய யம தூதனை
அளவோடு குடி என்று செல்லமாய்க் கண்டிக்க
நீதவானுக்கு முடிகிறது.

சட்டம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியவர்களின் வசம் இருக்கிறது.
அதை வைத்திருக்கிறவர்கள் இருக்கிறவர்களின் கையில் இருக்கிறார்கள்.

சட்டம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தும்
உரிய வேலையைச் செய்ய வில்லை என்றெண்ணி
ஒரு பெண்ணை பஸ் மோதிக் கொன்றதற்காகச்
சட்டந் தெரியாதவர்கள் பஸ்களை நொறுக்கி நீதி வழங்கினார்கள்.

அப்போது சட்டத்தைக் கவனமாக வைத்திருக்கிறவர்கள்
“மக்கள் சட்டத்தைத் தம் கையிலெடுப்பது தவறு”
என்று கண்டித்தார்கள்.

மக்கள் உண்மையிலேயே சட்டத்தைத் தம் கையில் எடுத்துக் கொள்வார்களேயானால், எவ்வளவு நன்றாக இருக்கும்.


-சி.சிவசேகரம் (இன்னொன்றைப்பற்றி)

இன்று கொழும்பில் இலங்கைத் தேசியத்தொலைக்காட்சி நிலையத்தில் சட்டத்துக்கு நீதி வழங்கிய தொலைக்காட்சித் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் உரத்த குரலில் தெரிவித்தாகவேண்டியவனாகிறேன்.


"அதுதான் பொலிசிடம் பாரம்குடுத்தாச்சுத்தானே, அவர்கள் பாத்துக்கொள்ளுவாங்க... இனியென்ன..." என்று ஒரு ரவுடி அமைச்சன் தன் ரவுடிப்பரிவாரங்களுடன் கெஞ்சியபோது, அந்த பாதாள உலகப் பரிவாரங்களையும் கொலைகாரர்களையும் இலங்கைக் காவல் துறையும் சிறப்புப் படையினரும் தொலைக்காட்சித் தொழிலாளர்களிடமிருந்து காப்பாற்றிப் பாதுகாத்து வெளியில் கொண்டுவந்தபோது "சட்டத்" தினதும் "சட்ட ஆட்சி" யினதும் போலி முகமூடிகள் "நீதிக்கு" முன்னால் கிழிந்து தொங்கியது.



இலங்கைத் தேசியத் தொலைக்காட்சி என்பது இலங்கை அரசினது தொலைக்காட்சி சேவையாகும். ( சிறீ லங்கா ஜாதிக ரூபவாகினி). அரசாங்கமாகப் பதவியிலிருக்கும் நபர்களின் செயற்பாடுகளுக்கும் திட்டங்களும் ஒத்து ஊதுவதே அதன் வேலை. இலங்கை வரலாறு முழுவதும். இன்றைக்கும். அதிலிருக்கின்ற செய்தியாசிரியர்கள் என்பவர்கள், அரசாங்கம் சொல்வதை சிங்களத்தில் செய்திக்காக எழுதிக்கொடுக்கும் வேலையை செய்து சம்பாதிப்பவர்கள். அதை தமிழில் மொழிபெயர்த்து ஓதுவதற்கு அங்கே தமிழ்ச்சேவை ஒன்றும் உள்ளது.


அண்மையில் ஆழிப்பேரலை நினைவுக்கூட்டமொன்றில் மெர்வின் சில்வா என்கிற, அரசாங்கத்தின் அமைச்சன் பேசிய பேச்சின் பகுதியொன்றை அரசாங்கத்தின் ஊதுகுழலான "ஜாதிக ரூபவாஹினி" ஒளிபரப்பவில்லை என்பதற்காக இந்த ரவுடி அமைச்சன் ரூபவாகினி நிலையத்துக்குள் நுழைந்து தனது பாதாள உலக அடியாளொருவனைக்கொண்டு செய்தியாசிரியர் ஒருவரைத் தாக்கி இழுத்துக்கொண்டு திரிந்திருக்கிறான்.

இதைக்கண்ட தொலைக்காட்சி நிலைய ஊழியர்கள் அந்த செய்தி ஆசிரியரைக் காப்பாற்றியதுடன் அங்குள்ள அறையொனில் இந்த அமைச்சனைச் சிறை வைத்து முற்றுகையிட்டு நின்றிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் அனைவரினதும் முற்றுகையில் சிக்கிய இந்த அதிகார ரவுடிக்கு படிப்படியாக நிலமையின் தீவிரம் புரியவாரம்பித்திருக்கவேண்டும். ஜனாதிபதி தொடக்கம் அனைத்து அதிகார வர்க்கக் கூட்டாளிகளையும் உதவிக்கு அழைத்திருக்கிறது.

அதிகாரமும் ஆயுதங்களும் இல்லாத வெறும் ஊழியர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பின் முன்னால் இவையெல்லாம் உதவிக்கு வர முடியவில்லை.

கடைசியில் தனது பாதாள உலக அடியாட்களை அழைத்திருக்கிறது, வந்த "அடியாட்களும்" பயந்து ஓடிவிட்டார்கள்.

அறையொன்றில் குளிரூட்டியும் சேதப்படுத்தப்பட்ட நிலையில் வேர்க்க வேர்க்க நின்று மீசையில் மண்ணொட்டாத கதைகளை உளறிக்கொண்டிருந்த இந்த மெர்வின் சில்வா அமைச்சனுக்கும் அவனது பாதாள உலகக் கொலைகாரனுக்கும் சட்டத்தைக்காக்கும் பொலிஸ் படையும், சிறப்பு இராணுவமும் "பாதுகாப்பினை" நல்ல பொறுப்புணர்வோடும் மிகுந்த அக்கறையோடும் வழங்கிக்கொண்டிருந்த அவலத்தை இலங்கையே நேரடி ஒளிபரப்பில் வெற்றுக்கண்களால் பார்த்துக்கொண்டிருந்தது.


இயலாத கட்டத்தில் மன்னிப்பைக்கூட அதிகார எள்ளலோடு இந்த அமைச்சன் கேட்க முயன்றபோது. ஊழியர்கள் சிவப்பு மைய்யால் இவனுக்கு அடித்தார்கள். மூத்திரத்தாலும் அடித்ததாக செய்திகள் கிடைக்கின்றன. அத்தோடு காயப்படுமடியும் அடித்தார்கள் பாருங்கள். அத்தோடு அதிகார வர்க்கம் ஆடிப்போனது. தலையில் ஐந்து தையல் போடும்படியான காயம். ரத்தம் ஒழுக ஒழுக காருக்குள் பயந்து பயந்து இந்த அதிகாரக் குறியீடு குனிந்த தலை நிமிராமல் தஞ்சம் கோரியது கண்கொள்ளாக்காட்சி.


---1----

ஜனநாயகம் செத்து நாளாச்சு, ரவுடிகளினதும் துப்பாக்கிகளினது அதிகாரம் ஓங்கியாச்சு. மக்கள் கையில் இனி என்ன இருக்கு, எதுவும் செய்ய முடியாது என்ற சோர்வின் கோட்பாடுகளை மக்கள் தமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றே அதிகாரத்தின் அராஜகங்களை ஊடகங்கள் காட்டுகின்றன. நிறுவனங்கள் ஓதுகின்றன.

சோர்வின் கோட்பாடுகளுக்கு அறிவுஜீவிகள் மயங்கும் தத்துவப்பின்னணியை வழங்கவென நவீனப்பின்னியப் பின்னல்கள் ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன் பின்னப்படலாகிற்று.

வெறுங்கை ஊழியர்கள் ஒன்றுபட்டு மூத்திரத்தால் அடித்தபோது சோர்வின் கோட்பாடுகள் சோம்பல் முறித்ததை மக்கள் உணர்ந்திருக்கக்கூடும்.

ஒரு ரவுடி அமைச்சன் ரதம் ஒழுக ஒழுக பயந்தோடியபோது பாராளுமன்ற ஜனனாயகத்தின் பாதாள உலகப் பூச்சாண்டி கலைவதற்கான கால ரேகைகளை மக்கள் கண்டிருக்கக்கூடும்.

இந்தச்சம்பவம் நாளைக்கு மறக்கப்பட்டுவிடலாம். இந்தச்சம்பவத்தின் பெறுபேறுகள் எல்லாவற்றையும் இதே அதிகாரவர்க்கம் நாளைக்குக் கொன்று புதைத்து விடலாம். ஆனால் சோர்வின் கோட்பாடுகளை நாளயண்டைக்கு இவர்கள் ஓதத்தொடங்கும்போது இந்தச்சம்பவம் ஒரு கூரிய நினைவாக, வெறுங்கையின் சக்திக்கு எடுத்துக்காட்டாக நிற்கப்போகிறது. அதுவொன்றே போதுமானது.

சட்டமும் பொலிசும் ராணுவமும் யாரைக்காப்பாற்றும் , பாராளுமன்றம் யாருக்குப் பல்லாக்குத்தூக்கும் என்பதை "பயங்கரவாத" மாயைகளைத் தாண்டி சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. (தமிழ் மக்களுக்கு உணர்த்தும் தேவை இல்லை என்பதால்). சின்னஞ்சிறிய ஒளிப்பொட்டைப்போன்றதொரு சந்தப்பம்.

இலங்கையின் இந்த சம்பவம் உலகெங்கும் இதனை ஒளிப்படங்களாக, நிகழ்படங்களாகக் காட்டும்.

----2----

இந்தக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோதெல்லாம் மனதுக்குள் ஒரே ஒரு கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது.

ஊழியர்கள் ஒன்றுபட்டு வன்முறை வழியாக நீதி வழங்கிய நேர இடைவெளிகளில் அங்கிருந்த தமிழ் ஊழியர்கள் என்ன செய்திருப்பார்கள்?

மெர்வின் சில்வாவைக் கொலை செய்ய முயன்றதால்தான் இந்த பயங்கரவாதிகள் சுடப்பட்டார்கள் என்று அரசாங்கப்பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல சொல்லுமளவுக்கு ஏதேனும் நேர்ந்துவிடலாம் என்று பயந்திருப்பார்களா?

பயந்து கமராக்களில் படாமல் ஒளிந்திருப்பார்களா?

இதே சம்பவம் சிரச தொலைக்காட்சி நிலையத்தில் நடந்திருந்தால் எதிர்வினைகள் எவ்வாறு இருந்திருக்கும்?

----3----

ஆனாலும், சிங்கள மக்கள் சிங்கள அதிகாரத்தை எதிர்த்து வன்முறையை தூக்கும்போது, இன்னுமொருமுறை தமிழ்த்தலைமைகள் சிங்கள அதிகார வர்க்கத்தினை காப்பாற்றாமலிருக்கட்டும்.

அப்படியான சிங்கள மக்களின் போரட்டங்கள் தங்களுக்ககவும் தான் ஏதோ ஒரு வழியில் நடக்கிறது என்பதை "சிங்கள வெறியர்களை" கண்மூடித்தனமாக எதிர்முனையில் வைப்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்.

----4----

இதற்கு முன் இந்த மேர்வின் சில்வாவினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் மக்களும் அஹிம்சை வழியில், சனனாயக வழியில் எவ்வளவோ போராடிப்பார்த்தனர். இந்த ரவுடியின் கார்களில் ஒன்றின் கண்ணாடியைக்கூட அசைக்க முடியவில்லை.


அடி உதவுற மாதிரி அஹிம்சை உதவப்போவதில்லை.

----5----

இந்த வலைப்பதிவை எழுதி முடித்தபின் எனது ஊடகத்துறை நண்பர்கள் இருவரைத் தொடர்புகொண்டேன். அதில் ஒருவர் ரூபவாஹினியில் பணியாற்றுபவர்.

அவர்கள் சொன்ன தகவல்களின் படி,

தமிழ் ஊழியர்களும் சேர்ந்தே போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். பின்வாங்கவில்லை.

செய்தி வாசிப்பாளர்களை முன்னால் வந்து பங்குகொள்ள மற்றவர்கள் விடவில்லை. காரணம், அவர்களது முகங்கள் மிகவும் பழக்கப்பட்டவையாதலால் அதனை இவன் பார்த்துவைத்து பிறகு ஏதாவது பழிவாங்கி விடுவான் என்ற அச்சம்.

அத்தோடு பெனாசிர் கொலை விவகாரம் உலக ஊடகங்களின் தலைப்புக்களைப் பிடித்துவிட்டதால் இந்த அருமையான சம்பவம் உலகத்தின் கண்களுக்குப்பட்டுவிடாமல் போய்விடக்கூடும் என்று ஒரு நண்பர் கவலைப்பட்டார்.

---7---

இவளவு பெரிய பாதாள உலகத்தலைவன், அமைச்சன் இப்பிடி பீயாகிட்டானே என்று இரவு உணவுக்குப்போய் வந்த வழியில் சந்தித்த பலரும் சொல்லிக்கொண்டார்கள்.

நன்றி மு.மயூரன்