மது முற்போக்குவாதிகளும்  மார்க்சியர்களும் இப்படியொரு சம்பவத்தை மறந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இது 1918 யூலை 17இல் இடம்பெற்ற சம்பவம். ஆன்று சோவியத்  யூனியனில் உள்ள எக்காரெறின்பெரி என்னும் நகரில் உள்ள ஒரு  வீட்டில் இரவு வேளையில், பதினொருபேர் லெனினது உத்தரவின்  பேரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொடுங்கோலனாக கருதப்பட்ட  சார்மன்னன் இரண்டாம் நிக்களஸ், அவரது மனைவி  அலெக்சாந்திரா, பிள்ளைகளான அலெக்சேய்தாத்யானா, ஓல்கா, அனஸ்தாசியா, மரியர் அவர்களது வீட்டுப் பணியாளர்களான ஒரு  மருத்துவர், ஒரு சமையற்காரர், ஒரு வேலைக்காரன், ஒரு தாதி, ஆகியோரே அவ்வாறு கொல்லப்பட்டவர்கள்.  இதன்போது சாரின்  வீட்டு நாயும் கொல்லப்பட்டது.

 

இந்த சம்பவத்தை அடிப்படையாகக்  கொண்டு இரண்டாம் நிக்ளஸ் என்று ஒரு திரைப்படமும்  இருக்கிறது. அமெரிக்கத் தயாரிப்பான அந்த திரைப்படம் சார்  மன்னனுக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக விளையாட்டுத்தனமானவர்களாக சித்தரிக்கப்படும்  அவனது, அழகான பெண் பிள்ளைகளுக்காக பார்க்கும் எவரும்  கண்ணீர் சிந்துவர். மார்க்சியர்கள் குறிப்பாக ரஸ்ய போல்ஷவிக்  அமைப்பினர் மிகக் கொடுரமானவர்கள், ஈவிரக்கமற்றவர்கள்  என்பதாக ஒரு பார்வையாளர் புரிந்துகொள்ள வேண்டும்  என்பதுதான் அந்த திரைப்பட இயக்குனரின் அரசியலும் கூட. 

 

ஆனால் இந்த சம்பவம் ஒரு வரலாற்று பின்புலத்தில் வைத்து  புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகவே இருந்தது. அந்த  நேரத்தில் ரஸ்ய அரசியல் சூழலில் முக்கிய விடயமாக  உரையாடப்பட்ட மேற்படி கொலைகள் ஒரு புரட்சிகர அரசியல்,  ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின்  பின்னனியிலேயே மார்க்சியர்களால் விளக்கப்பட்டது. உண்மையில்  மனித உரிமை, ஜனநாயகம் என்ற சொல்கொண்டு மேற்படி  சம்பவத்தை நாம் அளவிட்டால் லெனின் ஒரு மோசமான  கொலைகாரராகத்தான் தெரிவார்.

 

ஆனால் ஒரு போராட்டச் சூழலில்  அதுவும் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையில் ஜனநாயகம், மனித உரிமை என்ற சொற்களின் அர்த்தம் வேறு. சாதாரணமான  சூழலில் உரையாடப்படும் இவ்வாறான சொற்கள் வழியான  அரசியலை ஓர் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட சூழலில்  பயன்படுத்த முயன்றால் அது தவறான அரசியல் விளைவுகளையே ஏற்படுத்தும். நமது சூழலில் உள்ள சிலருக்கு இன்றும் விளங்காமல்  இருக்கும் விடயமும் இதுதான். மனிதநேயம் பற்றி மாவோ  கூறியிருப்பதையும் இந்த இடத்தில் நினைவு கொள்கின்றேன்.  “மனித நேயம் பற்றி மக்கள் என்னதான் பேசிக் கொண்டாலும்  வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும் சமூதாயத்தில் உண்மையில்  அதை நடைமுறையில் கடைப்பிடிப்பது யாராலும் இயலாத  காரியம்” (வர்க்கம் என்ற இடத்தில் நமது இனத்துவ அடையாளத்தை குறித்துக் கொள்ளுங்கள்) இந்தக் கூற்றை  அடிப்படையாகக் கொண்டு மாவோவை ஈவிரக்கமற்றவர்,  கொலைகளை ஆதரிப்பவர் என்று சொல்லிவிட முடியுமா?

 

மார்க்ஸ் முன்னிறுத்திய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்தின்  நீட்சிதான் லெனின், மாவோ போன்றவர்களின் அனுகுமுறையும்  கருத்துக்களும். பாட்டாளிகள் புரட்சியின்போது எதிரிகளான  முதலாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது என்பதன்  உள்ளடக்கம்தான் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம். உண்மையில் மனிதநேய நோக்கில் எதிரியான சாருக்கு பதிலாக சாரின் மனைவி பிள்ளைகள் மீதான கொலை வேதனைக்குரிய ஒன்றுதான். ஆனால் ஓர் அரசியல் பின்புலத்தில் அதற்கான வலுவான நியாயமுண்டு. 

 

எல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது. என்னைப் பொருத்தவரையில் லெனின் செய்தது சரி நான்  அதனுடன் முழுமையாக உடன்படுகின்றேன். அதற்காக  எல்லாவற்றுக்கும் வன்முறைதான் ஒரேயொரு தீர்வு என நான்  விவாதிக்க வரவில்லை வன்முறையற்ற அரசியல் செயற்பாடுகளுடாவும் சாதிக்கக் கூடிய பல விடயங்கள்  இருக்கின்றன. ஆனால் நான் இங்கு முன்னிறுத்தும் வாதமோ  ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் போது இடம்பெறும்  சில சம்பவங்களுக்கு தத்துவார்த்த விளக்கம் சொல்ல முற்படும்போதும் நமது புலமைச் செருக்கை விடுதலைப் போராட்டத்துடன் உரசிப்பார்க்கும் போதுமே நாம் தவறுகளை  நோக்கி பயணிக்கின்றோம். நாம் ஒடுக்கப்பட்ட மக்களின்  நலன்களின் அக்கறை கொள்வோமாயின் ஒடுக்கப்பட்ட  மக்களுக்கான போராட்டத்தை ஈவிரக்கமற்ற முறையில் ஆதரிப்பதை தவிர வேறு ஒன்றையும் எம்மால் பெரிதாக செய்துவிட முடியுமென நான் நம்பவில்லை.

 

கடந்த பத்துவருடங்களாக சில நிலைமைகளை அவதானித்து வந்தவன் என்ற வகையில் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் பிழை பிடிப்பதில் தமது பண்டிததனங்களை செலவிட்ட எந்தவொரு மாற்றுக் கருத்தாளரும் தமிழ் மக்களின் விடுதலைப் பாதையில் எதையும் சாதித்ததாக நான் கருதவில்லை. சில அரை வேக்காட்டு  கூட்டத்தினரை உருவாக்கியதும் எதிரிகளுக்கு இடைவெளிகளை இனங்காட்டியதையும் தவிர. ஏதாவது சாதிக்கப்பட்டிருந்தால் தயவு  செய்து சொல்லுங்கள் என்னை நான் திருத்திக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

- யதீந்திரா