சுமார் ஒன்றரை வருடத்துக்கும் அதிகமான காலத்தை எடுத்து, 63 அமர்வுகளை நடாத்தி ஒவ்வொரு அமரும் பல மணி நேரம் நீடித்து, 11ஆயிரங்கள் பக்கங்களில் அறிக்கை எழுதிய பின்னர் வழங்கப்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான தீர்வுக் குழுவின் தீர்வு திட்டத்தை முறியடித்து மகிந்த வைத்த தீர்வு திட்டத்தைப் பற்றிய எனது விமர்சனத்தையே நான்; முன்வைத்துள்ளேன்.


சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர், 1988இல், இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுகளை, நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியைக் கோரும் ஒரு சிறு வேண்டுகோளுடன் வந்திருக்கிறது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு.

அரசமைப்புச் சட்டத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு, சட்டரீதியான அந்தஸ்தும் பெற்றுள்ள இந்த விடயங்களை(13 வது திருத்த சட்டம்) நடைமுறைப்படுத்துவதற்கு யாருடைய சிபார்சும் அவசியமானதல்ல. ஜனாதிபதியே தம்பாட்டில் அதைச் செய்யமுடியும். இதற்காக சுமார் 20 வருட காலம் இலங்கை அரசு காத்திருந்து உள்ளது. அதை மறுபடியும் சிபார்சு செய்வதற்கு இலங்கையின் பதின்நான்கு கட்சிகளுக்கு ஒன்றை வருடம் எடுத்துள்ளது.

சுமார் 20 வருடங்களாக புதைகுழிக்குள் தான் மூடிய தீர்வு திட்டத்தை, சில வாரத்துக்குள் அவசர அவசரமாக தோண்டி எடுத்து, அந்த செத்துப்போன தீர்வுத் திட்டத்தை காட்டி “இதோ இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கு தீர்வு வழங்கிவிட்டோம்” என்று வெளிநாட்டு ராஐதந்திரிகளை அழைத்து விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றது இலங்கை அரசு.

ஆனால் உண்மை என்ன என்பது இலங்கை மக்களுக்கும், உலகத்திற்கும் தெரியும்.

இக்குழுவில் உள்ள பதினான்கு கட்சிகளில் பன்னிரண்டு கட்சிகள் மகிந்தரின் அரசில் அமைச்சுப் பதவிகளுடன் ஒட்டிக்கொண்டு இருப்பவை. எனவே அவற்றினால் நியாயத்தை கதைக்க முடியாது. அதை விட முக்கிய பிரச்சனை என்னவென்றால் மகிந்தாவின் தீர்வை எதிர்க்கின்ற கட்சித் தலைவர்களின் உயிர்ப் பாதுகாப்பு, மகேஸ்வரனுக்கு நடந்தது போல “அம்பே” ஆகிவிடும். எனவே சிறுபான்மை இனங்களிற்கான நியாயமான தீர்வுக்காக மகிந்தாவின் கீழ் வேலைபார்க்கும் இவர்களால் ஒரு அளவுக்குத் தான் போராமுடியும். முழுமையான அரசியல் தீர்வுக்காக இறுதி வரை போராட இலங்கை அரசின் தயவில் தங்கியிருக்காதவர்களால் தான் முடியும். அவர்கள் இலங்கையிலும் இருக்கலாம்; வெளிநாடுகளில் உள்ளவர்களாகவும் இருக்கலாம்.

வடக்கில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக மாகாண ஆளுநரே ஆட்சி நிர்வாகத்தைத் தொடர்வார். அவருக்கு ஆலோசனை வழங்குவதற்கே ஓர் இடைக்கால ஆலோசனைக்குழு அமைக்கப்படுமாம். (மூன்று தழிழர், ஒரு முஸ்லீம், ஒரு சிங்களவர்) அதுவே, ஜனாதிபதியின் விருப்பை நிறைவு செய்யும் விதத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் ஒப்படைக்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அங்கு ஆளுநருக்கு வெறும் ஆலோசனைகளை மட்டும் வழங்கும் சபையை அமைக்க எண்ணும் ஜனாதிபதியும் அவரது அரசுப் பிரதிநிதிகளும், அந்த ஆலோசனைக்குழுவை இடைக்கால நிர்வாகமாகக் காட்ட எத்தனிக்கின்றமை ஆச்சரியமான விடயமில்லை. எசமான விசுவாசம் இது. ஆக, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் எதிர்பார்ப்பை சிரமேற்கொண்டு தாங்கி நிறைவு செய்திருக்கின்றது.

ஓரிரவுக்குள் தீர்வு காணப்படவேண்டும் என்று ஒரு காலத்திலும் யாராலும் கனவு காணப்படக் கூடிய விடயங்கள் எதுவுமே உலகத்தில் இல்லை. இலங்கையின் சிறுபான்மை இனங்களின் பிரச்சனையே ஐம்பது வருட பிரச்சனை என்று இருக்க (சந்திரகுமாரே கூறுகின்றார்), அதற்கான தீர்வுகளைக் காண பல தலைவர்கள் பல தடவைகள் முயற்சிகள் மேற்கொண்டு தோல்விகளை தழுவிய வரலாறுகளும் இருக்க செழியன் ஓரிரவுக்குள் முடிவு காண கனவு காண்கின்றார் என்று பொ. சந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

ஐம்பது வருட பிரச்சனைக்கு, ஐம்பது வருடமாக தீர்வு காணமுயற்சித்த ஒரு விடயத்திற்கு, ஐம்பது வருடத்தின் பின்னர் ஆவது ஒரு சரியான தீர்வு வேண்டும் என்று நியாயமான ஒரு கேள்வியை யாராவது கேட்டால், “ஓரிரவுக்குள் முடிவு காணமுடியாது” என்று சிங்களப் பேரினவாதத்தின் காலை நக்கும் ஒருவரால்தான் துணிந்து பதில் கூற முடியும்.

இந்த 13 வது திருத்த சட்டத்தின் படி பொலிஸ் நிர்வாகம், காணி என்பன நமது கைகளுக்கு வரும் என்று உண்மைக்குப் புறம்பாக ஒரு கதையை விட்டுள்ளார் இந்த சந்திரகுமார். அது உண்மையல்ல. பொலீஸ் நிர்வாகம், காணி நிர்வாகம் என்பன நமக்கு கிடைக்கவில்லை. குடியேற்றத்தை இந்த தீர்வுத்திட்டத்தால் தடுக்க முடியாது. இந்தியாவுக்கு தற்போது விற்கப்பட்டுள்ள காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையினால் நமது நிலத்தடி நிலம் கடல் கொண்டு உப்பு நீராகி பாலைவனமாவதை நாம் தெரிந்து கொண்டாலும் நம்மால் தடுக்க முடியாது. அப்படி ஒரு நிலை நமது தாய் மண்ணுக்கு ஏற்படும் போது ரொட்டி இல்லை சாப்பிடுவதற்கு எதிர்காலத்தில் நமது மக்களுக்கு ஒரு இலை கூட கிடைக்காது.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான தீர்வுக் குழுவின் சரத்து 4.2.ல் கூறப்பட்டதை பார்க்கலாம்.

- சட்டவாக்க குணாம்சத்திலும் பார்க்க நிருவாக ரீதியான தன்மைகளை எடுக்கக் கூடிய பரிகாரநடவடிக்கைகளை எடுப்பதற்கான பல கட்டங்கள் இருக்கின்றன. பின்வரும் நடவடிக்கைகளை அரசாங்கம் அக்கறையுடன் துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

(அ) வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரமல்ல, நாடு பூராவும் தமிழ் பேசும் மக்கள் பொலிஸ் நிலையங்களில் தங்கள் சொந்தமொழிகளில் தொடர்பாடல்களைச் செய்து அலுவல்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக போதுமான எண்ணிக்கையில் தமிழ் பொலிஸ் அதிகாரிகளை ஆட்திரட்டல் செய்ய வேண்டும்

(recruitment of Tamil speaking police officers in sufficient numbers to enable Tamil speaking members of the public, not only in the North and East, but in the country as a whole, to transact business in their own language in police stations)

ஆக இலங்கை முழுதும் பொலிஸ் நிலையங்களில் தமிழ் பொலிசார் இருப்பார்களே அன்றி பொலிஸ் நிர்வாகம் நமது ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. சிங்கள பேரினவாதத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். ஆனால் சந்திரகுமார் தனது கட்டுரையில் உண்மைக்குப் புறம்பாக கூறியுள்ளார்.

சந்திரகுமார் என்பவர் என்னைப் பற்றியும் உண்மைக்கு புறம்பான பல விடயங்களை திட்டமிட்டுப் பொய்யாக எழுதியுள்ளார். அவருடைய நோக்கம் இந்த தீர்வு திட்டம் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யுமா? இல்லையா என்பதை விவாதிப்பதற்கு பதிலாக அப்பட்டமான பொய்களைக் கூறி உண்மைக்கு புறம்பான வழியில் மக்களை திசைமாற்றிச் செல்வதே ஆகும். அவர் திட்டமிட்டு என்னைக் களங்கப்படுத்த வேண்டும் என்று எழுதிய விடயங்களுக்கு என்னிடம் பதில் உள்ளது. ஆனால் தற்சமயம் அதை தவிர்த்துக் கொள்ளுகின்றேன். தேவை ஏற்பட்டால் மக்களுடன் அதை பகிர்ந்து கொள்ள தயங்கமாட்டேன். ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை உள்ளது, எனது எழுத்துகளின் மூலமும், கனடாவிலான எனது கடந்த கால, நிகழ்கால, எதிர்கால அரசியல் நடவடிக்கைகளின் மூலமும் மக்கள் என்னுடைய நிலைப்பாடுகளை புரிந்துகொள்வார்கள் என்று.

யார் என்று தன்னை இனம் காட்டிக் கொள்ளத் திராணியற்ற கோழைகளான சந்திரகுமார் போன்ற போலி முகமூடிகளையும் மக்கள் நிச்சயம் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள் என்று நான் திடமாக நம்புகின்றேன்.

புலிகள் என்னை யாழ்ப்பாணத்தில் வைத்து கொல்வதற்கு எடுத்துக் கொண்ட தொடர் முயற்சியின் காரணமாகவே நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பது ஏலவே பெரும்பாலான கரித்துண்டு, மற்றும் தேனீ வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். சந்திரகுமார் பொய்யாக கூறியது போல என்னை அவர் சந்து பொந்துகளில் தேடி இருக்க முடியாது. அச்சமயம் அவர் என் மீது அன்பு கொண்டு தேடி இருந்தால் கூட புலிகளின் சிறைக் கூடங்களில், அல்லது ‘அவர்களது’ புதைகுழிகளில் சென்று எனது பிரேதத்தை தேடி இருக்கவேண்டும்.

தமிழ் மக்கள் தம் பிள்ளைகளின் பசியை போக்க ஒரு பாண் துண்டாவது கிடைத்தால் போதும் என்று நினைக்கின்றனர் என்று சந்திரகுமார் கூறுகின்றார். அதற்கு அரசியல் தீர்வு தேவையே கிடையாது. அரசாங்க அதிபரே பாண் துண்டை போடமுடியும். இன்னம் தேவையானால் சந்திரகுமார் போன்றவர்களை நாடினால் எலும்புத் துண்டையும் தமிழர்கள் சுவைக்கலாம்.

இந்த தீர்வுத்திட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லீம், சிங்கள மக்களுக்கும் கூட எந்த பாதுகாப்பும், தீர்வும் இல்லை. அப்போ அவர்களுக்கு பாண் துண்டு போடுவது யார்? அவர்களுடைய குழந்தைகள், கணவன்மார்கள், பெண்கள் பள்ளிவாசல்களுக்கும், வயலுக்கும் சென்று வீடு திரும்புவதை உத்தரவாதப்படுத்துவது யார்?

இந்த பதின் மூன்றாவது திருத்த சட்டம் வடக்கு, கிழக்கின் முதல்வர்களுக்கோ, மந்திரிகளுக்கோ, அவர்களின் மனைவி, மக்களுக்குமே பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத நிலையில் இந்த தீர்வு வடக்கு கிழக்கு மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும், அவர்களுடைய வாழ்க்கை வழமைக்கு திரும்பும் என்று கரடி விடுகின்றார் சந்திரகுமார்.

நடுநிலைமை என்ற ஒரு விடயமே உலகத்தில் இல்லை. இந்த பொது அறிவும் இந்த சந்திரகுமாருக்கு கிடையாது. சரி எது? பிழை எது? என்று இரண்டு விடயங்கள் மட்டுமே உலகத்தில் உள்ளன.

அத்தோடு இன்னும் ஒரு மிக மோசமான செயல்பாட்டை குறிப்பிட்டு இந்த கட்டுரையை முடித்துக் கொள்ளுகின்றேன்.

புலிகளின் மீது யாராவது விமர்சனம் செய்தால் “இவன் தமிழ் தேசியத்துக்கு எதிரானவன்” என்று தமது ஊடகங்களின் மூலம் பொய்பிரச்சாரம் செய்வது புலிகளின் வழக்கம். அது போல இலங்கை அரசின் மீதும், அவர்களின் காலை நக்குபவர்கள் மீதான விமர்சனத்தை யாராவது வைத்தால் “இவர்கள் புலிகளின் பினாமிகள்” என்று கதைவிடுவது சந்திரகுமார்களின் பாணி. எல்லா வேடிக்கைகளையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

துப்பாக்கிகளையும், அரச அதிகாரத்தையும், நாற்காலிகளையும், முகமூடிகளை வைத்தும், பாண்துண்டையும், கறல் பிடித்த பேணியில் புளித்த பாலை கொடுத்தும் உலகத்தில் உள்ள எந்த மக்களையும் அதிக நாட்கள் ஏமாற்ற முடியாது.

 

செழியன்  - நன்றி இணையம் கரித்துண்டு