05262022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

பனாமா கால்வாயின் எழுதப்படாத இரத்த வரலாறு

சி.ஐ.ஏ. யின் முன்னாள் போதைவஸ்து கடத்தல் கூட்டாளியும், பின்னாள் வில்லனுமான, பனாமா சர்வாதிகாரி நொரியேகாவை கைது செய்ய, 1989 கிறிஸ்துமஸ் தினத்தன்று சின்னஞ்சிறிய நாடான பனாமா மீது படையெடுத்த அமெரிக்க இராணுவ நடவடிக்கை, எதிர்கால போர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்திருந்தது. படையெடுப்பின் போது கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் பற்றியும், உண்மையான காரணங்கள் பற்றியும்;

 அமெரிக்கா அன்று உலகமக்களுக்கு பொய்களை விற்பது இலகுவாக இருந்தாலும்; அமெரிக்க படையெடுப்பின் உண்மையான காரணங்களை, நேரில் சென்று பார்த்த சில சுதந்திர ஊடகவியலாளரின் தளராத முயற்சியினால் "The Panama Deception" வீடியோ மூலம் உண்மைகளை உலகம் அறியக்கூடியதாக உள்ளது.

 

பனாமா எங்கே இருக்கின்றது? வட-தென் அமெரிக்க கண்டங்களை இணைக்கும் சிறிய நிலப்பரப்பு, ஒரு காலத்தில் கொலம்பியாவிற்கு சொந்தமாக இருந்து, பின்னர் கேந்திர முக்கியத்துவம் கருதி தனிநாடாக பிரிக்கப்பட்டது. அங்கே செயற்கையாக ஒரு கால்வாய் வெட்டுவதன் மூலம், பசுபிக் சமுத்திரத்தை அட்லாண்டிக் சமுத்திரத்துடன் இணைக்கும் குறுகிய கப்பல் போக்குவரத்து பாதையை அமைக்கும் நிர்மாணப்பணியை அமெரிக்க கம்பெனிகள் தொடங்கியதில் இருந்து, பனாமா மீதான அமெரிக்க ஆதிக்கம் ஆரம்பமாகியது.


அதிக வருவாய் தரும் பனாமா கால்வாய், பனாமா தேசத்தவருக்கு சொந்தமானதாக இருக்கவில்லை. அது அமெரிக்க இராணுவ மேலாண்மையின் கீழ் இருந்தது. ஒரு இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தொரியோஸ் வந்த பின்னர் தான், கால்வாயை 2000 ம் ஆண்டு பனாமாவுக்கு சொந்தமாக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டது. நிலச்சீர்திருத்தம், கறுப்பினத்தவர் முன்னேற்றம் போன்ற புரட்சிகர கொள்கைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த தொரியோஸ் சந்தேகத்திற்கிடமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர் தான், சி.ஐ.ஏ. உளவாளி ஜெனரல் நோரியேகா பதவிக்கு வந்தான்.


நீண்ட காலமாக நொரியேகாவுக்கும், சி.ஐ.ஏ. க்கும் இடையில் போதைவஸ்து கடத்தல் விடயத்தில் புரிந்துணர்வு உடன்பாடு இருந்தபோதும், பின்னர் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட வியாபார பிணக்குகளாலோ, அல்லது அதுவரை "ஆமாம் சாமி" யாக இருந்த நொரியேகா தன்னிச்சையாக நடக்க வெளிக்கிட்டதாலோ, உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்கா பகிரங்கமாக நொரியேகா மீது போதை வஸ்து கடத்தல் குற்றத்தை முன்வைத்து பிரச்சாரத்தை முடுக்கி விட்டது.


1989 ம் ஆண்டு, பனாமா போலிஸ் சுட்டதில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் இறந்த சம்பவத்தை சாட்டாக வைத்து, அன்று ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ்(இன்றைய புஷ்ஷின் தந்தை), டிசம்பர் 20 பனாமா மீது படையெடுக்க உததரவிட்டார். மகன் புஷ் 16 அடி பாய்ந்தால், அப்பா புஷ் 8 அடி பாய்ந்திருக்க மாட்டாரா? சன நெரிசலான நகரப்பகுதிகளில் அமெரிக்கப் படையினர் கண்மூடித்தனமாக சுட்டனர். வீதிகளில் தாங்கிகள் எதிரே வந்த பொதுமக்களின் கார்களையும் ஏறி மிதித்து, நொறுக்கிய படி முன்னேறின. தரைப்படைகளின் வெறியாட்டம் போதாதென்று, விமானங்கள் மூலம் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. அப்போது கூட விமானங்கள் எதற்காக ஏழைகளின் சேரிகளை மட்டும் குறிபார்த்து குண்டு வீசின என்பது புஷ்ஷிற்கே வெளிச்சம்.


பனாமா படையெடுப்பின் போது முன்னர் ஒருபோதும் கண்டிராத புதிய வகை ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன. லேசர் குண்டுகள், அப்பாச்சி ஹெலிகப்டர்கள், ஸ்டெல்த் விமானங்கள், என்று அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தயாரித்த புதிய தலைமுறை ஆயுதங்களை பரிசோதித்துப் பார்க்கும் இடமாக பனாமா இருந்தது. எதற்காக தாக்கப்படுகிறோம் என்று கூட அறிந்திருக்காத அப்பாவி பனாமியர்கள் பரிசோதனைச்சாலை எலிகளாக மடிந்தனர். ஆயிரத்துக்கு மேலான பொது மக்கள், அமெரிக்காவின் மூன்று நாள் இராணுவ சாகசத்திற்கு பலியானார்கள். ஆள்பலத்தில் மிகச்சிறிய பனாமிய இராணுவம் முடிந்த அளவு அமெரிக்க படைகளை எதிர்த்து போரிட்டாலும், ஓரிரு நாட்களிலேயே சரணடைந்தது.


எலியைப் பிடிக்க வீட்டைக் கொளுத்திய கதையாக, ஆயிரம் பேரை கொன்று, நொரியேகா என்ற தனிமனிதனை கைது செய்து, அமெரிக்க சிறையில் அடைத்த பின்னரும், பனாமா வழமைக்கு திரும்பவில்லை. அமெரிக்க படைகள் நாடு முழுவதும் வேட்டையாடி, இடதுசாரி அரசியல்வாதிகள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பிற சந்தேகநபர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து தடுத்து வைத்தன. அவ்வாறு சென்றவர்கள் எந்த வித குற்றச்சாட்டும் இன்றி மாதக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டனர். பலர் இரகசிய புதைகுழிகளில் கொன்று புதைக்கப்பட்டனர்.


பனாமா முழுவதையும் தமது இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த அமெரிக்க படைகள் எந்த ஒரு ஊடகவியலாளரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அமெரிக்க ஊடகங்களோ, அமெரிக்க அரசாங்கம் விற்ற பொய்களை மட்டுமே வாங்கி பிரசுரித்துக் கொண்டிருந்தன. எத்தனை பனாமிய மக்கள் இறந்தனர் என்பது இதுவரை யாருக்குமே தெரியாமல் இருக்கையில், படையெடுப்பின் போது இறந்த இருபது அமெரிக்க வீரர்களுக்காக மட்டும் கவலைப்பட்டு வருத்தம் தெரிவித்தார்கள். கடுமையான தணிக்கையை அமுல்படுத்திய அமெரிக்க அரசாங்கம், தனது படைகள் பொதுமக்களை கொல்லவில்லை என்று முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைத்தது.


பனாமா படையெடுப்பின் உண்மையான காரணம் என்ன? இதற்கான விடை அமெரிக்க அரச ஆவணங்களில் உறங்கிக் கிடக்கலாம். ஆயினும் பனாமா கால்வாய் தற்போதும் அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் தொடர்ந்து இருப்பதும், அப்போது பரிசோதிக்கப்பட்ட புதிய தலைமுறை ஆயுதங்கள், சில வருடங்களின் பின்னர் ஆப்கானிஸ்தான், ஈராக் மக்களையும் கொல்வதற்கு "வெற்றிகரமாக" பயன்படுத்தப்பட்டன என்பது மட்டும் உண்மை.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்