அன்பார்ந்த உழைக்கும் மக்களே,


உலகப் பணக்காரன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், சென்னை நகரில் காய்கறிக்கடை தொடங்குவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது. ஒரேயொரு முதலாளி கோடிக்கணக்கில் கொள்ளை இலாபம் அடிப்பதற்காகப் பல இலட்சம் சிறு வணிகர்கள், தொழிலாளர்கள் விவசாயிகளுடைய தொழிலை நாசமாக்கி, அவர்களைப் பட்டினி போட்டுக் கொல்ல அரசாங்கம் தெரிந்தே அனுமதி வழங்கியிருக்கிறது.


கிரிமினல் ஃபோர்ஜரி வேலைகள், திருட்டு, லஞ்ச ஊழல் ஆகியவற்றின் மூலமாகவே குறுகிய காலத்தில் உலகப் பணக்காரனாகி விட்ட அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் நிறுவனம், சென்னையில் 14 இடங்களில் காய்கனி அங்காடிகளைத் திறந்திருக்கிறது. சென்னை நகரில் மொத்தம் 100 இடங்களில் தனது கடைகளை விரிவுபடுத்த இருக்கிறது.


சென்னை மாநகரத்திற்கும் அதன் சுற்றுவட்டாரங்களுக்கும் தேவையான காய்கனிகளை விநியோகித்து வரும் கோயம்பேடு வணிக வளாகத்தின் விற்பனை இப்பொழுதே 40% வீழ்ச்சி அடைந்து விட்டதாகக் குமுறுகிறார்கள் வியாபாரிகள். கோயம்பேட்டுக்கு வரும் சில்லறை வணிகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அவர்கள் வாங்கும் சரக்கின் அளவு குறைந்துவிட்டது. வெளியூர் லாரிகளின் வரத்து குறைந்து விட்டது. தொழிலாளிகளுக்கு வேலை குறைந்து வருமானமும் குறைந்து விட்டது. கோயம்பேட்டை நம்பி வாழும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.


2500 காய், கனி, பூக்கடை வியாபாரிகள், சுமார் 20,000 தொழிலாளர்கள், அன்றாடம் அதிகாலை 2 மணி முதல் ஆட்டோக்களிலும், வேன்களிலும், இரு சக்கர வண்டிகளிலும் வந்து காய்கனிகளைக் கொள்முதல் செய்யும் பல்லாயிரக்கணக்கான மளிகைக் கடைக்காரர்கள், கோயம்பேட்டில் சரக்கு எடுத்து, தள்ளு வண்டியி லும் கூடையிலும் மைல் கணக்கில் சுமந்து தெருத் தெருவாய்க் கூவி விற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் உழைப்பாளிகள்...


திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஊட்டி, நீலகிரி, பொள்ளாச்சி, கம்பம், நெல்லை, தூத்துக்குடி, சேலம், தருமபுரி என்று தமிழகத்தின் பல்வேறு சந்தைகளில் காய்கனிகளைக் கொள்முதல் செய்யும் பல்லாயிரம் வணிகர்கள், அந்தச் சந்தைகளில் பணியாற்றும் பல இலட்சம் தொழிலாளர்கள், அந்தக் காய்கனிகளை எல்லாம் சென்னைக்குச் சுமந்துவரும் லாரிகள், வேன்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள்... அனைவருக்கும் மேலாக இந்தக் காய்கனிகளையும் பூக்களையும் விளைவிக்கும் பல இலட்சம் விவசாயிகள்... என்று கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை ஒரேயொரு கோடீசுவரக் கொள்ளையனின் இலாபவெறிக்குக் காவு கொடுத்திருக்கின்றன மத்திய மாநில அரசுகள்.


சென்னை நகரில் பாரம்பரியமாக காய்கனிச் சந்தைகள் உள்ள இடங்களில் எல்லாம் கடை தொடங்கியிருக்கிறது ரிலையன்ஸ். எல்லா இடங்களிலும் இந்தச் சந்தைகள் வெறிச்சோடி விட்டன. மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி சரக்கெடுத்து ஒரு நாளைக்கு 50100 சம்பாதித்த ஏழை வியாபாரிகளின் குடும்பங்கள் எல்லாம் அரைப்பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. ""இனிமேலும் தாங்க முடியாது. வேறெந்தத் தொழிலுக்கும் போகவும் முடியாது'' என்று பரிதாபகரமான நிலைக்குப் பல ஆயிரம் குடும்பங்கள் தள்ளப்பட்டு விட்டன.


ரிலையன்ஸ் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து காய்கனிகளை நேரடிக் கொள்முதல் செய்யத் தொடங்கிவிட்டதால் தங்களுடைய சந்தைக்கு காய்கனிகள் வருவதில்லை என்று மேட்டுப்பாளையம் வியாபாரிகள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கம்பம் பகுதியிலும் காய்கனிக் கொள்முதல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்களின் தேவைக்கே காய்கனி கிடைக்காது என்ற நிலைமை பல ஊர்களில் உருவாகி வருகிறது. சுனாமியைப் போலக் குறுகிய காலத்தில் மக்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரும் பேரழிவை உருவாக்கியிருக்கிறது ரிலையன்ஸ்.


""ஒரேயொரு ரிலையன்ஸ் நிறுவனம் இத்தனைக் கோடி மக்களின் வாழ்க்கையை அழித்து விடமுடியுமா?'' என்று நீங்கள் எண்ணலாம். ஒன்றல்ல இரண்டல்ல, 25,000 கோடி ரூபாய் முதலீடு போட்டு நாடெங்கும் சில்லறை விற்பனைக் கடைகளைத் தொடங்க இருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். சென்னை நகரில் மட்டும் 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்துக்கு ஒரு கடை வீதம் நூற் றுக்கணக்கான கடைகளைத் தொடங்கவும் திட்டமிட்டிருக்கிறது.


ஏற்கெனவே பான்டலூன் நிறுவனம் வடபழனியில் தொடங்கியிருக்கும் பிக் பஜார், ஆர்.பி.ஜி குழுமத்தின் ஸ்பென்சர் டெய்லி, ஜெர்மன் நிறுவனமான ஃபுட் வேர்ல்ட் போன்ற நிறுவனங்கள் சென்னை நகரின் பல இடங்களில் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறந்திருக்கின்றன.


சில்லறை வணிகத்தில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கும் அமெரிக்க வால்மார்ட் நிறுவனமும் ஏர்டெல் முதலாளி மிட்டலும் இணைந்து ஆகஸ்டு 15 முதல் சென்னை நகரில் கடை திறக்கப் போகிறார்களாம். உலகின் இரண்டாவது பெரிய சில்லறை விற்பனை நிறுவனமான "காரஃபோர்' உடன் கூட்டு சேரப் போகிறார் அம்பானி. ஆஸ்திரேலியாவின் உல்வொர்த் நிறுவனத்துடன் இணைந்து மளிகைக் கடை போடப் போகிறார், டாடா.


சென்னை நகரில் நாளொன்றுக்கு நடைபெறும் காய்கனி விற்பனையின் மொத்த மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய். இதை அப்படியே விழுங்கிவிடத் துடிக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். சில்லறை வணிகத்தில் உலகிலேயே நான்காம் இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆண்டொன்றுக்கு 12 இலட்சம் கோடி ரூபாய் புரளும் இந்தியாவின் சில்லறை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் 4 கோடிப் பேர். சுமார் 20 கோடிப் பேருக்குச் சோறு போடும் இந்தச் சில்லறை விற்பனைத் தொழில் முழுவதையும் விழுங்கி விடத் துடிக்கின்றன சில பன்னாட்டு நிறுவனங்கள்.