Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐயோ அப்பாவிகளை கொன்று போட்டாங்கள் என்று புலிகள் ஓலமிடுகின்றனர். அவர்கள் அப்பாவிகள் அல்ல புலிகளே, எனவே கொன்றோம் என்று பேரினவாத அரசு திமிரெடுத்து கூச்சலிடுகின்றது. முல்லைத்தீவில் நடந்த குண்டுவீச்சில் கூட்டம் கூட்டமாக கொல்லபட்டவர்களையிட்டு,

யாருக்கும் உண்மையான மனித அக்கறை கிடையாது. மாறாக இக் கொலையை எப்படி அரசியல் வியாபாரம் செய்வது என்பதில் தான் அதிக அக்கறை கொண்டனர்.

தமிழ்மக்கள் மத்தியில் 'சிங்கள"வன் அப்பாவித் தமிழனை கொன்றுவிட்டான் என்று அரசியல் செய்யவும், சிங்கள மக்கள் மத்தியில் புலிகளை நாம் கொன்று விட்டோம் என்று காட்டி அரசியல் செய்யவும், இந்த அப்பாவிகளின் மரணங்கள் உதவுகின்றது. மறுபக்கத்தில் சர்வதேச சமூகத்தின் முன் இதை வைத்து எப்படி அரசியல் விபச்சாரம் செய்ய முடியுமா என்று ஆளுக்காள் முட்டி மோதுகின்றனர். இப்படி மரணமான பிணங்களை வைத்துக் கொண்டு, தாய்மையினை கருப்பையுடனேயே ஏலத்துக்கு விலைபேசி விற்கின்றனர்.

கொல்லப்பட்டவர்களை புலிகள் அல்ல என்று புலிகள் அறிவிக்க, பேரினவாதம் புலிகளின் பயிற்சி முகாம் என்கின்றனர். இப்படி அரசியல் சந்தைக்கு ஏற்ற அரசியல் விளக்கங்களையும், ஆதாரங்களையும் காட்டி அரசியல் விபச்சாரம் செய்கின்றனர்.

மரணமடைந்தவர்கள் ஏதுமறியாத அப்பாவிகள். அவர்கள் புலிகளாக இருந்தாலும் கூட அப்பாவிகளே. புலிகள் தமது சொந்தப் பிரதேசத்தில் வாயே திறக்க முடியாத ஒரு நிலையில், சமூகத்தை தமது பாசிச பிடிக்குள் வைத்துள்ளனர். இந்த நிலையில் அவர்களின் பிடியில் சிக்கியுள்ளவர்கள் அப்பாவிகளே. உண்மையில் அவை இராணுவ பயிற்சி முகாமாக இருந்தாலும் கூட கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகளே. புலிகளின் நிர்ப்பந்தம் எதுவுமின்றி எந்த பயிற்சியும், ஆட்சேர்ப்பும் இன்று நிகழ்வதில்லை. இப்படி கூட்டமாக படுகொலைக்குள் சிக்கிக் கொள்பவர்கள், தமது சொந்த சுயவிருப்பத்தின் அடிப்படையில் இணைந்தவர்கள் அல்ல. இது போன்ற மையங்களில் கூடிக்கொள்பவர்கள் சுயமாக கூடுபவர்களுமல்ல, அதேபோல் சுய ஆற்றலுமற்ற நடைப்பிணமாக புலிக்குக் கட்டுப்பட்டு வாழும் அப்பாவிகளே.

அப்பாவி மக்கள் மீதான குண்டு எப்படி வீழ்கின்றதோ, அப்படி அப்பாவி மக்களை தமது சொந்த குறுகிய தேவைக்கும் புலிகள் பயன்படுத்துகின்றனர். பேரினவாதம் தனது பாசிச நடத்தையை நியாயப்படுத்துகின்றது. புலிகளின் பயிற்சி பெறுபவர்களை கொல்லும் உரிமை தனக்கு உண்டு என்கின்றது. இங்கு பாசிச கொலைவெறி அரசை நாம் காண்கின்றோம். புலிகள் என்றால் எப்படியும் கொல்லலாம் என்ற வாதமும், எப்படியும் நியாயப்படுத்தலாம் என்ற பாசிச வக்கிரமும் அரங்கேறுகின்றது. இதே பேரினவாத அரசு மக்களை புலிகள் கட்டாயப்படுத்தித் தான் பயற்சிகளை வழங்குவதாக கூறிக் கொள்ளும் அதே தளத்தில், அவர்களை கொன்று போடுவதை மறுபுறத்தில் ஒருங்கே நியாயப்படுத்துகின்றது. கொல்லும் உரிமை பற்றியும், அதை நியாயப்படுத்தி தர்க்கிக்கும் அரசின் வாதங்களின் முன், அரசியல் ரீதியாக எதுவும் செய்யமுடியாத வகையில், புலிப்பாசிச அரசியல் அவலத்தைச் சந்திக்கின்றது. உண்மையில் இதற்கு பதிலடியாக அப்பாவி சிங்கள மக்களைக் கொன்று போடுவதையே மாற்றாக தேர்ந்தெடுக்கின்ற அரசியல் கொக்கரிப்பை புலிப்பினாமிகள் வெளியிடுகின்றனர்.

அரசு காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப படுகொலைகளை நியாயப்படுத்தும் வக்கிரம் இன்று அரங்கேறுகின்றது. இது புலிப்பாசிசத்தின் விளைவால், உலகளாவிய அங்கீகாரம் பெற்று நிற்பதை நாம் காண்கின்றோம். பேரினவாதம் திமிராக பதிலளிப்பதையும், புலிகளின் எதிர்வினையையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி விடுகின்ற தொடர்ச்சியான அரசியல் சூழலையும் நாம் காண்கின்றோம். அந்தளவுக்கு புலித்தேசிய பாசிச அரசியல் அம்பலமாகி தலைவிரிகோலமாகி நிற்கின்றது. பேரினவாதம் தன்னை இதற்குள் மூடிப்பாதுகாக்கின்றது.

மாறாக புலிகள் கொல்லப்பட்டவர்களை புலிகள் அல்ல என்று கூறி அரசியல் செய்ய முனைகின்றனரே ஒழிய, இந்த இளம் சிறுமிகளை இழந்த தாய்மை மீது ஒரு துளி தன்னும் மனித நோக்கில் அக்கறை கொண்டது கிடையாது. மனிதம் பற்றி புலியின் இழிவான சிறுமைத்தனமான அணுகுமுறை, தமிழ் மக்கள் மத்தியில் கூட புலிக்கு உண்மையான நேர்மையான அனுதாபம் எதுவும் கிடையாது. வெறுப்பும், கோபமும் கொண்ட மூடிமறைப்புடன் கூடிய சந்தர்ப்பவாத மக்கள் கூட்டமாகவே, தமிழ் மக்களின் இருப்பே மாறி நிற்கின்றது.

இந்த நிலையில் உலகுக்கு இப்பிணங்களைக் கொண்டு அரசியல் செய்யப் புறப்பட்டவர்கள் படுதோல்வியை அடைந்துள்ளனர். உலகெங்கும் இது புலிகள் மீதான தாக்குதல் செய்தியாகவே செய்தியாகியுள்ளது. இதை மறுத்து தலைகீழாக நின்று புலிகள் சாத்தியம் செய்ய முனைகின்றனர். ஆடு மேய்த்தவன் புலி என்று சும்மா கத்தி ஊரைக் ஏமாற்றி கூட்டியதும், பின் உண்மையில் புலி வரும் போது என்ன நடந்ததோ, அந்த ஆடு புலிக் கதை போல் இந்தப் புலியின் நிலைமை மாறிவிடுகின்றது.

உண்மை என்பதையும், நேர்மை என்பதையும் மறுத்து புலிகள் செய்யும் அரசியல், உண்மையையும் பொய்யாகிவிடுகின்றது. எது உண்மை எது பொய் என்பதே இன்று கேள்விக்குள்ளாகி விடுகின்றது. செய்திகளை திரித்து புரட்டுகின்ற புலிகளின் வக்கிரம், உண்மையைக் கூட நிறுவ முடியாத நிலைக்கு சென்றுவிடுகின்றது. நம்பகத்தன்மையே பலியாகிவிட்ட நிலையில், சந்தேகம் மட்டுமின்றி உண்மையானவை கூட தரம்தாழ்ந்து மழுங்கடிக்கப்பட்டுவிடுகின்ற அவல நிலைமை உருவாகிவிட்டது.

இந்த நிலையில் பேரினவாதப் படுகொலையை வியாபாரம் செய்யவே புலிகள் விரும்பினர். அதிக மரணங்களை விரும்பி, அதையே உண்மையாக விரும்பியவாறு பிரசுரித்தனர். அதிக மரணங்கள் உலகின் முன்னான விளம்பரத்துக்கு உதவும் என்று நம்பினர். புலிகளின் நிதர்சனம் டொட் கொம் கொல்லப்பட்டவர் எண்ணிக்கையைக் கூட, தனது கற்பனை திறனுக்கு ஏற்ப பிரசுரித்தது. மற்றைய புலிப்பினாமிகள் கூட, அதை பிரசுரிப்பதில் தயக்கத்துடன் கூடிய நம்பகத்தன்மையற்ற நிலையால் முழுமையாக பிரசுரிப்பதை தவிர்க்கின்றனர். இதை பல செய்தியில் நாம் அவதானிக்கலாம். புலிப் பினாமிகளே தமது செய்தியை நம்பமுடியாத நிலை உருவாகிவிட்டது. இந்த நிலையில் உலகம் எப்படி புலித் தகவலை நம்பும். முட்டாள் ரசிகர் கூட்டத்தைத் தவிர, யாரும் எதையும் நம்புவதில்லை. அடிக்கடி அனைத்தும் கண்முன்னாலேயே பொய்யாகிவிடுகின்றது. இப்படி அதிக மரணங்கள், அதிக பிரச்சாரத்துக்கு உதவும் என்ற வகையில் செய்திகளை திரித்து விடுகின்றனர். உலகம் பொய்மைக்குள் உண்மையை காணமறுக்கின்ற நிலை, புலிக்கு எதிராக ஒரு தலைப்பட்சமாக மாறுகின்றது.

 

இன்று பெருமளவில் புலிச்செய்திகள் புனைவுகளையும், கற்பனைகளையும் தாங்கி வெளிவருகின்றது. அத்துடன் சர்வதேச ரீதியான அமைப்புகளின் பெயரிலும் கூட, இவர்களே அறிக்கைகளையும், திரிபுகளையும் உருவாக்கி தாங்களாகவே வெளியிடுகின்றனர். தமிழ் பேசும் மக்களின் அடிமுட்டாள் தனத்தின் மீது சவாரி செய்யும் புலி செய்தி ஊடகங்கள், தமிழ் அல்லாத சர்வதேச ஊடகங்களில் அடக்கி வாசிக்கின்றனர். இளந்திரையன் பி.பி.சி தமிழ்சேவையில் கூட அடக்கி வாசிக்கின்றார். ஏகாதிபத்தியங்கள் கூட புலியின் பொய்யைப் புரிந்து எதிர்வினையாற்றுகின்றனர். ஏகாதிபத்திய செய்தி ஊடகங்கள் ஏகாதிபத்திய உலக ஒழுங்குக்கு உட்பட்ட வகையில், அனைத்தையும் புலிக்கு எதிராக புலியின் பாசிசத்தை பயன்படுத்தி மாற்றுகின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற வகையில் உலகம் தழுவியதாகச் சென்றுவிட்டது.

இந்த படுகொலையையும் கூட புலிகளாக காட்டி நியாயப்படுத்தப்பட்டது. இதை அரசு மட்டுமல்ல ஏகாதிபத்திய செய்தி ஊடகங்களும் கூட கூட்டாக செய்துள்ளது. இந்தப் படுகொலையை எடுத்தால், அவர்கள் புலிகளாக இருந்தாலும் கூட அவர்கள் அப்பாவிகளே. புலிகளின் 99 சதவீதம் பேர் புலிகளால் ஏமாற்றி அவர்களால் பின்னால் அணிதிரட்டப்பட்டுள்ள அப்பாவிகளே. புலிகளின் உண்மை முகம் அம்பலமாகும் போது, இதற்கு எதிராக மாறக் கூடியவர்கள். அந்த வகையில் சுயமான சிந்தனையற்ற வகையில் மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவிகளை கொல்லமுடியும் என்ற தர்க்கம், மனித இனத்துக்கே எதிரானது. புலிகளின் கட்டாயப் பயிற்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தக் கதிதான் என்று அரசு கூற முனைகின்றது. மக்கள் புலிகளின் நிர்ப்பந்தம் காரணமாக அதனுடன் நீடிக்கின்றனரே ஒழிய, சொந்த அரசியல் விருப்பத்தின்பால் அல்ல.

சுயமான சுயாதீனமான விருப்பார்ந்தமான நிலையில் அல்லாத, சுயசிந்தனையற்ற நிலையில், மக்களின் தேர்வு என்பது மறுதலிக்கப்பட்ட ஒரு நிலையில், ஒரு பாசிச இயக்கமாக புலிகள் இயக்கமே உள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு பயிற்சி என்று மக்களை கூட்டம் கூட்டமாக, பயிற்சி கூடங்களின் கட்டாய பயிற்சிக்கு உள்ளாக்கின்றனர். இந்தநிலையில் மொத்த தமிழ் மக்களையும் கொன்று போட்டுவிட்டு, அவர்களை புலிகளென்று சொல்லும் எல்லைக்குள் அரச பாசிசம் தலைவிரித்தாடுகின்றது. ஆயுதமேந்தா அப்பாவி மக்களை புலிகளின் கட்டாய பயிற்சி கூட்டங்களில் கொன்று போடுவதும், அதை நியாயப்படுத்துவதும் அதை அங்கீகரிப்பதும் வக்கிரமானது. மக்களை கட்டாய பயிற்சிக்குள்ளாக்கும் புலி பாசிசத்தை, படமாகக் கூட மலிவு பிரச்சாரத்துக்கு புலிகள் பிரசுரிக்கின்றனர். இந்த நிலையில் அவர்கள் யாராக இருந்தாலும், குறித்த அரங்கில் இருந்தவர்கள் கூட சுயமுடிவெடுக்க முடியாத புலிப் பாசித்துக்கு இரையான அப்பாவிகள் தான். அவர்கள் உண்மையில் அப்பாவிகள் தான். புலிகளின் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்துக்குள்ளாகிய ஒரு நிலையில், அங்கு கொண்டுவரப்பட்டவர்கள் தான். தமது மரணத்தின் பின்னணியைக் கூட சுயாதீனமாக சொல்லமுடிய மனித அவலத்தைக் நாம் காண்கின்றோம். இந்த நிலையில் பொறுக்கிகளும், இதை காட்டி பிழைப்போரும் தான் படுகொலைக்கு வண்ணம் வண்ணமாக விளக்கம் தருகின்றனர். இந்த நிலையில் பேரினவாதம் தனது பங்குக்கு அவற்றை புதைசேற்றில் ஆழப் புதைக்கின்றது.

தமிழ் மக்களை கூட்டம் கூட்டமாக புலிகளின் பெயரில் கொல்வதற்கு உரிமை உண்டு என்று கொக்கரிக்கின்றனர். தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையை அங்கீகரிக்க மறுத்துவிட்டு பேரினவாதமாக ஆட்டம் போடும் அரசு, புலிகளை கொல்லும் உரிமை தனக்கு உண்டு என்று பினாற்றுவது நிகழ்கின்றது. அதை செய்யும் உரிமையை ஏகாதிபத்திய கொள்ளைக்காரர்கள் அங்கீகரிப்பதாக புலிகளின் கூறுவதையும் நாம் காண்கின்றோம். இவர்கள் தான் உலக ஜனநாயகவாதிகள் என்ற வேறு தம்மைத்தாம் தம்பட்டமடிக்கின்றனர்.

மறுபக்கத்தில் தமது புலிப் பாசிசத்தை மூடிமறைக்க கொல்லப்பட்டவர்களை அப்பாவிகளாக காட்டி, தம்மை அப்பாவிகளாக நிலைநாட்ட முனைகின்றனர். தமது அடாவடித்தனமான பாசிச செயற்பாட்டுடன் கூடிய மக்கள் விரோத நடத்தையை, அப்பாவி மனித பிணங்களால் மூடிமறைத்து நியாயப்படுத்துகின்றனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்த இடத்தை பற்றி முன்னுக்கு பின் முரணாக திரித்து கருத்துரைக்கின்றனர். குறித்த வயது மாணவர்கள் பாடசாலை நேரத்துக்கு முன்னம் (தாக்குதல் நடந்த காலை 6.30 முதல் 700 மணிவரை) ஏன் அங்கு கூடியிருந்தனர். அதுவும் கிளிநொச்சிக்கு அதிக தூரம் கொண்ட முல்லைத்தீவில் ஏப்படி கூட முடிந்தது. மறைக்க, மறுக்க முடியாத வகையில் பல விடையத்தை அவர்களின் பிரச்சார எல்லைக்குள் கேள்விக்குள்ளாகின்றது. அரசு இது பயிற்சி முகாம் தான், அதற்கு தம்மிடம் படங்கள் உள்ளதாக வேறு ஆதாரத்தை எடுத்துவைக்க முனைகின்றது. புலிகள் பாணிப் பிரச்சாரத்தை அரசு இலகுவாக அவர்கள் பாணியிலேயே முறியடித்துவிடுகின்றது.

பயிற்சி முகாம் என்றால் இராணுவ கட்டமைப்பும், மருத்துவ பயிற்சி என்றால் மருத்துவ கட்டமைப்பு ஆதாரமாக காட்டவேண்டும். இல்லை நிரந்தரமாக தங்கிவாழும் ஒரு அனாதை முகாமென்றால் அதற்கு ஆதாரம் வாழ்விடம் சார்ந்து காட்டவேண்டும். இப்படி அவர்களின் வாத எல்லைக்குள்ளேயே பல கேள்விகள் உண்டு.

மக்களுக்கு பயிற்சி என்ற பெயரில் நடக்கும் கட்டாய பயிற்சியின் போது, இது போன்ற அவலங்கள் ஏன் நடக்க முடியாது.? மருத்துவ முதலுதவி பயிற்சி என்றாலும, அதுவும் பாடசாலை அல்லாத தளத்தில் புலிகளின் இராணுவ எல்லைக்குள் தான் நடக்கின்றது. சிவில் சமூகத்தையும், இராணுவக் கட்டமைப்பையும் தனித்துவமாக இயங்க அனுமதியாத புலியின் இராணுவ அரசியல், பாரதூரமான மனித படுகொலைகளை கூட அம்பலப்படுத்த முடியாத நிலையை உருவாக்கிவிடுகின்றது. மனிதத்துவத்தை ஏறிமிதித்த நிலையில், பேரினவாத அரசை அம்பலப்படுத்த திறனற்று போகின்றனர் புலிகள். தமது அரசியல் நோக்கத்தையும் நடத்தையையும் மூடிமறைத்து, தம்மை அப்பாவிகளாக சித்தரிக்கும் புலி அரசியல் ஐந்து காசுக்கு கூட பெறுமதியற்று அம்பலமாகின்றது. இதன் மூலம் பேரினவாதம் நடத்தும் தமிழ் இனப்படுகொலைகளை கூட உலகமே நியாயப்படுத்தி விடுகின்றது. நாம் மரணங்களைக் கண்டு எவ்வளவுதான் மனம்வருந்தி கோபம் கொண்டாலும், அந்த மனிதவிரோத கோரத்தை அம்பலப்படுத்தி போராட முடியாத அளவுக்கு, புலிகள் பாசிசம் சமூகத்துக்கு முன் தடைக்கல்லாகி அதையும் தடுத்து நிற்கின்றது. இதை மாற்றுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழிகிடையாது.

பி.இரயாகரன்
15.08.2006