09302022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

கர்நாடகா அனுபவமும் இதுதான்!

தமிழ்நாட்டில் எவ்வாறு மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள் திரும்பத் திரும்பக் கருச்சிதைவடைகின்றனவோ, அதுதான் கர்நாடகாவிலும் நிகழ்ந்துள்ளது. அங்கு இ.க.க.(மாவோயிஸ்ட்)இலிருந்து வெளியேறி தனி அமைப்பை நிறுவிக் கொண்டுள்ள தோழர்கள் அந்த அனுபவத்தைப் பின்வருமாறு தொகுத்துள்ளனர்.


"1987 முதல் 15 ஆண்டுகளாக கர்நாடகாவின் மிகவும் பின்தங்கிய பிதார் மற்றும் ரெய்ச்சூர் ஆகிய சமவெளி மாவட்டங்களில் ஆயுதந்தாங்கிய விவசாயிகளின் இயக்கத்தைக் கட்டியமைக்கும் வேலைகளில் கட்சி ஈடுபட்டது. குறிப்பிடத்தக்க முன்னேற்றமில்லாத காரணத்தால் பிதார் மாவட்ட வேலை 1995இல் கைவிடப்பட்டது. ஆனால், ரெய்ச்சூரின் கிராமப்புறத்தில் வேலைகள் தொடர்ந்தன. அங்கு உத்வேக மூட்டக்கூடிய பல போராட்டங்கள் தொடங்கப்பட்ட போதும், இறுதியில் எதிரியின் அடக்குமுறைகளை எதிர்கொண்டபோது இயக்கம் முன்னேற முடியவில்லை. பல தோழர்கள் மற்றும் மக்கள் தியாகங்களுக்குப் பிறகு இயக்கம் நெருக்கடிக்குள்ளானது.


"கிராமப்புற வேலை பாதகமான நிலைமைகளை சந்தித்ததாலும், மூலவுத்தி ரீதியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஆயுதப்போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டியதன் அவசியம் காரணமாகவும் ஐதராபாத்கர்நாடகா எல்லையிலிருந்து கிராமப்புற வேலைகளை மலநாடு பகுதிக்கு மாற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. ரெய்ச்சூர் பிதார் கிராமப்புற வேலையின் தோல்விக்கான காரணங்களை மீளாய்வு செய்வதிலும், மலநாடு பகுதியில் ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கான செயலுத்தியை வகுப்பதிலும் மாநிலக் கட்சிக்குள் பாரிய கருத்து வேறுபாடுகள் எழுந்தன.


"மலநாடு பகுதியில் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கான அவசியத் தேவைகள் குறித்து இடதுசாரி வறட்டுத்தனமான புரிதலை இ.க.க.(மாவோயிஸ்ட்)இன் மையக் குழுப் பொறுப்பாளர்களும் கர்நாடகா மாநிலக் குழுத் தலைமையும் கொண்டிருந்தனர். அங்கு ஆயுதப் போராட்டத்தைத் துவங்குவதற்கும் தயாரிப்புகளை முடிப்பதற்கும் ஒரு 18 மாதத் திட்டத்தைத் தயாரித்தார்கள். பிறகு அதை 12 மாதத் திட்டமாக மாற்றி, "கடந்தகால மீளாய்வை முடிப்பது, சமூக மற்றும் புவியியல் ஆய்வை நடத்துவது, குறைந்தது 125 கிராமங்களில் மக்கள் திரள் அமைப்புகளைக் கட்டுவது, குறைந்தது 50 முழுநேரப் புரட்சியாளர்களை சேர்ப்பது என்று முடிவு செய்தது. "பரபரப்பான செய்கைகள்' மூலம் போரைத் தொடங்கி, மக்கள் யுத்தத்தை வளர்த்தெடுத்து, புதிய கொரில்லா மண்டலங்களைக் கட்டியமைப்பதை நோக்கி நாம் முன்னேற வேண்டும் என்று தலைமையின் திட்டம் சொன்னது.


"மலநாடு பகுதி ஒப்பீடு ரீதியில் வளர்ச்சியடைந்ததும், எதிரிகள் பலம் வாய்ந்தவர்களாகவும் இருப்பதாலும், வரம்புக்குட்பட்ட அடித்தளம் மற்றும் அளவிலும் தரத்திலும் பலவீனமானதாகக் கட்சி இருப்பதாலும் மக்களைத் திரட்டுவதிலும் கட்சியைக் கட்டுவதிலும் அவசரத்தனம் காட்டக்கூடாது; தலைமையின் திட்டம் நடைமுறை சாத்தியமற்றதாக இருக்கிறது என்று கர்நாடக மாநிலக் குழு சிறுபான்மை வாதிட்டது; மையக்குழுப் பொறுப்பாளர்களே தலைமையின் திட்டத்தை ஆதரித்ததால் தானும் ஏற்றது. ஆனால் பரபரப்பான செயல்களில் ஈடுபடுவதை கட்சிக்குள் பலரும் எதிர்த்ததையடுத்து, அதை விலக்கிக் கொண்டு, 12 மாதங்களில் ஆயுதக் குழுக்களைக் கட்டி ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.


"2002 மேயில் தேசிய பூங்கா திட்டத்துக்கு எதிரான போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியது. ஆங்காங்கு பல மக்கள் திரள் போராட்டங்கள் வெடித்தன. ஆனால், 2002 டிசம்பர் வெடிவிபத்து நிகழ்வு, தேசிய பூங்கா பகுதியில் ஆயுதக் குழு நடமாட்டத்தை முதன்முறையாக அம்பலப்படுத்தி விட்டது. எதிரி அதைப் பயன்படுத்திக் கொண்டு ஆயுதக்குழுவுக்கு எதிராக பொய் பிரச்சாரத்தையும் தேடுதல் வேட்டையையும் தொடங்கி விட்டான். அதன்பிறகு, மக்கள் திரளை அமைப்பாக்குவதாலோ, கட்சியைக் கட்டுவதாலோ, ஆயுதக் குழுக்களைக் கட்டுவதாலோ முன்னேற்றம் காண முடியவில்லை. எதிரிகளுக்கு எதிராகக் குறிப்பிடத்தக்க போராட்டங்கள் எதிலும் மக்களை ஈடுபடுத்த முடியவில்லை.


"இந்த நிகழ்ச்சிப் போக்கில் நமது தோழர்களில் ஆறு பேர் எதிரியின் ஒடுக்குமுறையில் தியாகிகளானார்கள். மனரீதியில் தயாரில்லாததாலும் நோய்வாய்ப்பட்டதாலும் பல தோழர்கள் சொந்த வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். ஒருபுறம் ஆள்சேர்ப்பதும் குறைந்தது; நகர்ப்புற இயக்கமும் தேக்கநிலையை அடைந்ததால் அங்கிருந்து தோழர்களை அனுப்ப முடியாமற் போனது. இவ்வாறு இழப்புகளை ஈடுகட்டும் வகையில் ஆயுதக் குழுக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க முடியாமற் போனது.


""நம்முடையதைப் போன்ற நாடுகளில் தொடக்கத்திலிருந்தே ஆயுதப் போராட்ட வடிவம் முதன்மையானதாக இருக்கிறது' என்பதை எந்திரப்பூர்வமாகவும், வறட்டுத்தனமாகவும் தலைமை வலியுறுத்துகிறது. ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவதில் அவசியமான தயாரிப்புகள் செய்யாமல், அவசரத்தனம் காட்டுகிறது. ஆயுதப் போராட்டம் தொடங்குவதை ஒரு கௌரவப் பிரச்சினையாகக் கருதுகிறது. தளப் பிரதேசத்தை நிறுவுவதற்கு தேசியசர்வதேசிய நிலைமைகள் சாதகமாக இருக்க வேண்டும் என்று கூறுவதை "கட்டக் கோட்பாடு' என்றும் வலது சந்தர்ப்பவாதம் என்றும் முத்திரைக் குத்தி ஒதுக்குகிறது.''


— இவ்வாறு தமது நடைமுறையையும் இ.க.க.(மாவோயிஸ்ட்) கட்சித் தலைமையுடனான அரசியல் சித்தாந்த போராட்ட அனுபவத்தையும் கர்நாடகா தோழர்கள் தொகுக்கிறார்கள்.