உண்மையில் அரசின் / போலீசின் அடக்குமுறைகள், அவதூறுப் பிரச்சாரங்களுக்கு ஒத்திசைவாக இருப்பது மாவோயிஸ்டுகளின் செயலுத்திகளும் நடைமுறையும்தானே தவிர, புதிய ஜனநாயகம் அமைப்பின் விமர்சனங்கள் அல்ல என்பது காரண காரியங்களைப் பகுத்தறிவு கொண்டு சற்று சிந்திக்கத் தெரிந்த அனைவரும் ஒப்புக் கொள்வர்.


"காவல் துறையினரே கூறுகின்றனர்: தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் பெரிய அளவில் வளர்ந்து விடவில்லை. எண்ணிக்கையில் சிலரே உள்ளனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் சுடுவதற்குப் பயன்படாத சாதாரண ஆயுதங்கள். — இப்படியெல்லாம் மதிப்பீடு செய்யும் இந்தக் காவல்துறை ஏன் இப்படி மாவோயிஸ்டுகளால் மிகப் பெரிய ஆபத்து என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். தேடப்படும் நக்சலைட்டுகளின் தலைக்கு லட்சக்கணக்கில் விலை வைத்து சட்ட விரோதமாக அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு, மக்களுக்காகப் போராடும் அர்ப்பணிப்பு உணர்வுள்ள அத்தோழர்களைக் கொடிய குற்றவாளிகளைப் போல படம் போட்டுக் காட்டி அவர்களைக் கோர முகத்துடன் சித்தரிப்பது ஏன்? (பெரிய குளத்தில்..., பக். 56)


நக்சல்பாரிகள் எப்படிப்பட்டவர்கள், எந்த நோக்கத்திற்காகவெல்லாம் போராடுபவர்கள்; எதற்காகவெல்லாம் குரல் கொடுப்பவர்கள்; என்னென்ன பிரச்சினைகளுக்காகவும், இலட்சியத்திற்காகவும் போராடி எவ்வாறெல்லாம் தியாகங்களைச் செய்வார்கள் என்று பட்டியலிட்டுவிட்டு அறிவொளி எழுதுகிறார், "இவர்களைத்தான் கொடூரமுகம் கொண்டவர்களாக கொடிய தீவிரவாதிகளாக சித்தரித்துக் காட்ட முயல்கின்றனர். பஞ்சமா பாதகர்களாக ஆளும் வர்க்க பாதந்தாங்கிகளான காக்கிச் சட்டை ரவுடிகள் ஆளும் வர்க்கங்களின் ஊதுகுழல்களாக சோரம்போன முதலாளித்துவச் செய்தி ஊடகங்கள் இதே பிம்பத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக மானவெட்கமின்றி போலீசின் கூற்றுக்களை அப்படியே வாந்தியெடுத்து தங்களின் எஜமான விசுவாசத்தைக் காட்டும் நாய்களாகச் செயல்படுகின்றனர்.''


"எதிரிகளான ஆளும் வர்க்க அயோக்கியர்களின் கொலைகார காவல்துறை அதிகாரிகள் அவர்களின் பாதந்தாங்கிகளான பத்திரிக்கைகள் ஆகியவற்றின் அவதூறுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.''


"அவற்றின் நோக்கம் புரட்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் நிலவும் சமூக அமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான்'' (பெரிய குளத்தில்..., பக்.6)
எதிரிகளின் மேற்கண்ட அவதூறுகளையும் நோக்கத்தையும் புரட்சியின் ஆதரவாளர்களாலேயே புரிந்து கொள்ள முடியும்! ஆனால், தமிழ்நாட்டில் ஆயுதப் போராட்டம் மூலம் புரட்சி நடத்தப் போவதாகக் கூறிக் கொண்டிருக்கும் ஒரு தலைமைக்கு இவற்றைப் புரிந்து கொள்வது மட்டும் முக்கியமானதா? போதுமானதா? மாவோயிஸ்டுகளின் செயலுத்தியும் செயல்பாடுகளும் எதிரிகளின் இந்த அவதூறுகளுக்கும் நோக்கத்துக்கும் ஒத்திசைவாக வசதி செய்து கொடுப்பதாக அமைந்திருக்கிறதா அல்லது அவற்றை முறியடிப்பதாக அமைந்திருக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?


பெரியகுளம் முருகமலை சம்பவம் பற்றி வெளியே என்னதான் விளக்கமும் விவாதமும் நீட்டி முழக்கினாலும், மாவோயிஸ்ட் கட்சிஉள்ளே தயாரித்துள்ள உட்கட்சி மீளாய்வு மேற்கண்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை உள்ளடக்கியிருக்கிறது.


"ஊத்தங்கரை சம்பவத்தைப் போலவே தற்போதும் பயிற்சி முகாம் நடத்தும் சமயத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், ஏன் மீண்டும் இத்தகைய தவறுகள் நிகழுகின்றன என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை மக்கள் அடித்தளம் நமக்கு பலவீனமாக இருப்பதால் இந்தச் சம்பவம் நடந்திருக்குமோ என நினைப்பவர்களும் உண்டு.''


"அப்பகுதியில் அரசியல் நோக்கங்களுக்காகவோ அல்லது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காகவோ வெளிப்படையாகவோ அல்லது தலைமறைவாகவோ நமது கண்ணோட்டப் பகுதியில் மக்களை அணிதிரட்டி நாம் இன்னும் எந்தப் போராட்டத்தையோ அல்லது பிரச்சார இயக்கத்தையோ செய்யவில்லை. மாறாக, ரகசியமாக ஆயுதப் போராட்டத்திற்கான ஆதரவாளர்களையும் இளைஞர்களையும், கட்சிக் கருக்குழுக்களையும் அணிதிரட்டி வருகிறோம்.'' ங்ஆதாரம்: இ.க.க.(மாவோயிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு தயாரித்த பெரிய குளம் மீளாய்வு அறிக்கைசி.


மாவோயிஸ்ட் கட்சியின் மேற்கண்ட மீளாய்வு அறிக்கையே தன்னளவில் போதுமானது. "அந்தப் பகுதியில் அரசியல் நோக்கங்களுக்காகவோ அல்லது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காகவோ வெளிப்படையாகவோ அல்லது தலைமறைவாகவோ தமது கண்ணோட்டப் பகுதியில் மக்களை அணிதிரட்டி தாம் இன்னும் எந்தப் போராட்டத்தையோ அல்லது பிரச்சார இயக்கத்தையோ செய்யவில்லை.'' மாறாக இரகசியமாக ஆயுதப் போராட்டத்திற்கான ஆதரவாளர்களையும், இளைஞர்களையும் கட்சிக் கருக்குழுக்களையும் அணிதிரட்டி வருகிறார்கள். அந்த நிலையிலேயே அந்தப் பகுதியில் ஆட்களையும், ஆயுதங்களைச் சேர்ப்பதிலும், ஆயுதப் பயிற்சி எடுப்பதிலும் ஈடுபட்டார்கள் என்பதை மாவோயிஸ்டுகளே ஒப்புக் கொள்கிறார்கள்.


மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு முன்பே ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுவதுதான் மாவோயிஸ்ட் கட்சியின் செயலுத்தியாகவும் செயல்பாடாகவும் இருந்திருக்கிறது. இவ்வாறு அரசியல் நோக்கங்களுக்காகவோ அல்லது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காகவோ வெளிப்படையாகவோ அல்லது தலைமறைவாகவோ அந்த பகுதியில் மக்களை அணிதிரட்டி, எந்தப் போராட்டத்தையோ அல்லது பிரச்சார இயக்கத்தையோ செய்யாது, இரகசியமாக ஆயுதங்களையும், ஆட்களையும் சேர்த்து ஆயுதப் பயிற்சியில் ஈடுபடும் ஒரு இயக்கத்தின் மீது தீவிரவாத முத்திரை குத்தி, அவதூறுப் பிரச்சாரங்களைச் செய்து அரசு பயங்கரவாத அடக்குமுறைகளை ஏவிவிடுவது ஆளும் வர்க்கங்களுக்கும் அரசுபோலீசுக்கும் வசதியாகவும் வாய்ப்பாகவும் அமைகிறது.


"மாவோயிஸ்ட் தீவிரவாதப் பிரச்சினை என்பது தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்களால் எழுப்பப்படும் சட்டம்ஒழுங்குப் பிரச்சினை; அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினை அல்ல; இது அரசுபோலீசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான பிரச்சினையே தவிர மக்கள் பிரச்சினை அல்ல'' என்று பொய்ப் பிரச்சாரம் செய்வதற்கும் இது ஏதுவாக இருக்கிறது. இதனால், உண்மை அறியாத பொது மக்களிலேயே சிலர் போலீசுக்கு உதவியாகச் செயல்படுவதும் நடந்து விடுகிறது. (முன்பு தர்மபுரி ஊத்தங்கரையிலும், தற்போது பெரியகுளம்முருகமலையிலும் இவ்வாறு நடந்ததாக மாவோயிஸ்டுகளே ஒப்புக் கொள்கிறார்கள்.)


அதன்பிறகு மாவோயிஸ்டுகள் போய், "மாவோயிஸ்டுகள் யார்? அவர்களுடைய கொள்கை என்ன? ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்பதை மக்களுக்கு விளக்கிப் புரிய வைக்க வேண்டும்'' என்ற நிலை ஏற்படுகிறது. இதைத்தான் "இந்த நிலையில் இருக்கும் ஒரு அமைப்பு, ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கி விட்டதாகக் கூறுவது சிறுபிள்ளைத்தனம்'' என்று பு.ஜ. எழுதியிருந்தது.


இவ்வாறு அரசு / போலீசின் அவதூறுப் பிரச்சாரத்துக்குத்தாமே வாய்ப்பளித்து விட்டு, பிறகு மக்களுக்கு விளக்கமளிக்கும் இந்தச் செயலைப் பின்வருமாறு நியாயப்படுத்துகின்றனர். "பெரியகுளம் நிகழ்வை ஒட்டி அரசும் தொலைகாட்சிகளும், முதலாளியச் செய்தி ஊடகங்களும் மாவோயிஸ்டுகளை ஆயுதமோகம் கொண்ட இரத்தக் காட்டேரிகளைப் போலச் சித்தரிக்கும் ஒரு இழிவான பிரச்சாரத்தில் இறங்கியுள்ள இந்த வேளையில், அதற்குப் பதிலளிக்க வேண்டிய கடமையை நிறைவேற்றும் பொருட்டு வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையினைத்தான் புதிய ஜனநாயத்தினர் இப்படிக் குசும்புத்தனமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.'' (பெரிய குளத்தில் தெறித்த..., பக்.12)


தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் தமது செய்கையைக் கடமையாக நிறைவேற்றுவதாகவும், இந்தத் தவறைச் சுட்டிக் காட்டும் புதிய ஜனநாயகத்தின் பொறுப்பான விமர்சனத்தைக் "குசும்புத்தனம்'' என்றும் கிண்டலடிக்கிறார்கள், மாவோயிஸ்டுகள். அரசும் போலீசும் இவர்களுக்கு எதிராக அவதூறுகளும் பொய்ப் பிரச்சாரமும் செய்வதற்கு இவர்களே வாய்ப்பளிக்கிறார்கள் என்பதை எடுத்துச் சொன்னால், இவர்களோ புதிய ஜனநாயகத்துக்கு எதிரான அவதூறுகளும் பொய்ப் பிரச்சாரமும் செய்கிறார்கள். "மாவோயிஸ்டு இயக்கத்தின் மீது அரசின் ஒடுக்குமுறை ஏவப்படும்போது அரசு பயங்கரவாதத்துடன் சமப்படுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்களேயாயின் அது அரசின் ஒடுக்குமுறைக்கு ஒத்தூதும் ஈனத்தனமே ஆகும்'' என்கிறார்கள்.


அப்படி என்ன அரசு பயங்கரவாதத்துடன் மாவோயிஸ்டுகளை சமப்படுத்தும் பிரச்சாரத்தில் புதிய ஜனநாயகம் ஈடுபட்டு விட்டது? அப்படி என்ன அரசின் ஒடுக்குமுறைக்கு ஒத்தூதும் ஈனத்தனமான என்ன செயலில் புதிய ஜனநாயகம் ஈடுபட்டுவிட்டது? "மக்களை அரசியல் ரீதியில் அணிதிரட்டி, மக்கள் ஆதரவைப் பெறாத இ.க.க.


(மாவோயிஸ்டு)யினர், ஆயுதப் போராட்டம் தொடங்கி விட்டதாக எண்ணிக் கொண்டு அதற்காக ஆட்களையும் ஆயுதங்களையும் சேர்ப்பதிலும், ஆயுதப் பயிற்சியில் ஈடுபடும் சாகசவாதச் செயல்களிலும் இறங்கியது தவறு'' என்று விமர்சித்து விட்டோம். அதற்காக, பல ஆண்டுகளாகியும் ஆயுதப் போராட்டத்தை தொடங்காமல் அதைக் கண்காணாத தூரத்திற்குத் தள்ளி வைத்து விட்ட வலது சந்தர்ப்பவாதிகளெனத் தாங்கள் கருதும் புதிய ஜனநாயகம் அமைப்பினர், தங்களைப் பற்றி இவ்வாறெல்லாம் விமர்சிப்பதைத்தான் "அரசு பயங்கரவாதத்துடன் சமப்படுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபடுவது, அரசின் ஒடுக்குமுறைக்கு ஒத்தூதும் ஈனத்தனம்'' என்கிறார்கள், மாவோயிஸ்டுகள்.