"புரட்சிப் பாதையில் முன்னேறும் போது சில நேரங்களில் பின்னடைவுகள், தியாகங்கள் தவிர்க்க முடியாதவை! புரட்சியாளர்கள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்; பாடங்களைப் பயின்று ஒவ்வொரு தோல்வியையும் வெற்றியாக மாற்றுவார்கள். இது புத்தகப் புழுக்களுக்கு புரியாது!''
இந்த வாசகத்தின் கடைசி வரி நம்மை ஆத்திரத்தோடும், கேளியாகவும் சாடுவதற்காக எழுதப்பட்டது. என்றபோதும், இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சி சார்பாக எழுதப்பட்ட இந்த வாசகத்தை நேரான பொருளில் எடுத்துக் கொண்டு நாம் வரவேற்போம். ஏனென்றால், நாட்டிலேயே மிகப் பெரிய அளவில் அரசுப் படைகளின் எதிர்ப்புரட்சி பாசிச பயங்கரவாத ஒடுக்குமுறைகளை அக்கட்சி சந்தித்து வருகிறது. ஆயுதக் குழுக்களில் உள்ள கீழ்மட்ட அணிகள் மட்டுமல்ல, மாநில அளவிலான தலைமைக் குழுத் தோழர்கள் உட்பட பலரும் கூட கைது செய்யப்படும் போதெல்லாம் "போலீசுடனான மோதல்'' என்ற பெயரில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படுகின்றனர்.
வேறு எந்தவொரு அரசியல் இயக்கத்துக்கும் எதிராக இல்லாதவாறு, இரகசியக் கொலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு இ.க.க. (மாவோயிஸ்ட்) புரட்சியாளர்கள் வேட்டையாடப்படுகின்றனர். கடந்த மூன்றாண்டுகளில் ஆந்திராவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் புரட்சியாளர்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இ.க.க.(மாவோயிஸ்ட்)வின் ஆதரவாளர்கள் என்பதற்காகவே சத்திஸ்கரில் சால்வாஜூடும், ஆந்திராவில் கொலைக் குழுக்கள் ஆகியவற்றின் வேட்டை நாய்கள் பழங்குடி மக்கள் மீது பாய்ந்து குதறுகின்றன.
இவ்வளவையும் எதிர்கொண்ட போதும், எல்லா இழப்புகள், தியாகங்கள், பின்னடைவுகளைச் சந்தித்தபோதும், ஆயுதப் போராட்டத்தின் மீதும் புரட்சியின் மீதும் மாளாத பற்றுறுதி காட்டி வருகிறது, இ.க.க (மாவோயிஸ்ட்). ஆகவே, அதற்கு ஏற்படும் இழப்புகளும், பின்னடைவுகளும் இந்தியப் புரட்சிக்கு ஏற்படும் இழப்பும் பின்னடைவும்தான் என்பதில் சந்தேகமில்லை. இந்த அக்கறையோடுதான் "மக்கள் அடித்தளத்தைப் பெறாமலேயே ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கி விட்டதாகக் கூறுவது சிறுபிள்ளைத்தனம் என்பதை விளக்கத் தேவையில்லை'' என்று இ.க.க.(மாவோயிஸ்ட்)யின் செயலுத்தியை அரசியல் ரீதியாக நாம் விமர்சித்தோம். ஆனால் அவர்களோ, அதை "ஏளனத்துடன் எக்காளமிட்டு எழுதுவதாக''ப் புரிந்து கொள்கிறார்கள்.