நேரு அரசாங்கத்தின் பெரிய இராணுவ நடவடிக்கைகள் இருந்த போதிலும், நவீன ஆயுதங்கள் அவர்களிடம் இருந்தாலும், ஒட்டு மொத்தக் கொலைகள் நடைபெற்ற போதிலும், மக்கள் மீதான பயங்கரமான நடவடிக்கை இருந்தபோதிலும் தெலுங்கானா இயக்கம் பீடு நடையுடன் முன்னேறியது.


நேரு அரசாங்கம், இராணுவத்தின்மூலம் எதைச் சாதிப்பதில் தோல்வி அடைந்ததோ, அதை, அந்த வெறுக்கத்தக்க அரசாங்கத்திற்காக பழைய, புதிய திரிபுவாதிகள் வெட்கமில்லாமல் முடித்துத் தந்தனர்.


நிஜாம் அரசின் எல்லைக்குள் இந்திய யூனியனின் இராணுவம் நுழைந்த பிறகு தெலுங்கானா இயக்கம் இரத்தத்தில்மூழ்கத் தொடங்கியது. தெலுங்கானா இயக்கத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்ற கேள்வி நிகழ்ச்சி நிரலுக்கு வந்தது.


அப்போது கட்சித் தலைவராக இருந்த பி.டி. ரணதிவே (பின்னர் நவீன திரிபுவாத சி.பி.எம். கட்சியின் தலைவர்) மக்கள் யுத்த வழியை எதிர்த்தார். ஒரே சமயத்தில் நாடு முழுமையும் ஆயுதக் கிளர்ச்சியை உடனடியாக உண்டாக்கும் திட்டத்தை அவர் பரப்பினார். இவ்வாறாகத் தெலுங்கானா இயக்கத்தைத் தன்னுடைய பிரச்சாரத்தால் சரியான பாதையிலிருந்து மாறச் செய்ய முயன்றார்; ஆனால் தோல்வியுற்றார். அந்தச் சமயத்திலிருந்து மாகாணக் கட்சித் தலைமை, மக்கள் யுத்தக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து போராட்டத்தை நடத்த முடிவு செய்தது. (தற்சமயம் இந்தத் தலைவர்களில் சிலர் பி.டி. ரணதிவேயுடன் சேர்ந்து கொண்டு மக்கள்யுத்தக் கோட்பாடுகளை எதிர்க்கிறார்கள்).


நிஜாம் அரசில் இந்திய யூனியனின் இராணுவம் நுழைந்தவுடன், நிஜாம் எதிர்ப்பு உணர்ச்சியுடன் இயக்கத்தில் சேர்ந்திருந்த பணக்கார விவசாயிகளும், சிறிய நிலப்பிரபுக்களும் இயக்கத்தைக் கைவிட்டு அரசாங்கத்திடம் தாங்களாகவே சரணடைந்தனர். ஏற்கனவே இந்த வளர்ச்சியை நாம் பார்த்தோம்.