09302022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

கோயா மக்கள் மத்தியில் புதிய உணர்வுகள்

கோயா மக்களின் மீதிருந்த பல்வேறு வகையான கொடுமையான சுரண்டல்களைப் பற்றி கட்சி பொறுமையாக விளக்கியது. எதிரிகளுக்கு எதிராக எவ்வாறு போரிட வேண்டுமென்று விவரித்தது. அப்போராட்டங்களின்மூலம் எல்லாவகைச் சுரண்டல்களிலிருந்தும் எவ்வாறு விடுதலை பெற முடியுமென்று கட்சி விளக்கியது. கட்சியின் அரசியல் நோக்கங்களையும், தெலுங்கானா இயக்கத்தைப் பற்றியும் அவர்களுக்குக் கட்சி சொல்லிக் கொடுத்தது. காடுகளில் படைகள் சேகரிக்கப்பட்டவுடன், ஊழல் நிறைந்த காட்டு அதிகாரிகளும், வியாபாரிகளும், நிலப்பிரபுக்களும் காட்டுப் பகுதியை விட்டு ஓடினர்.


இதன்மூலம் கட்சியினிடத்திலும், படைகளினிடத்திலும் கோயா மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது. சங்கத்தைப் பற்றிய உணர்வு அவர்களிடம் வளர்ந்தது. தங்களுடைய அடிமைத்தளைகளை உடைத்தெறிய அவர்கள் உறுதிபூண்டனர். "முட்டா' பெரியவர்களிடமும் கூட ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டது. அவர்கள் எல்லாவகையான சுரண்டல்களையும் நிறுத்தினர். கோயா மக்களோடு சேர்ந்து கொண்டு அவர்கள் படைகளுக்கு உதவ முன்வந்தனர்.


இந்தப் புதிய உணர்வுடன் கோயா மக்கள் போராட்டத்தில் சேர்ந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் முன்னேற்றத்தினால் மக்களுடைய எதிரிகள் காட்டுப்பகுதியிலிருந்து ஓடிவிட்டனர். காட்டுப் பகுதிகளிலிருந்த எல்லாக் கிராமங்களிலும் கிராம ராஜ்யம் நிறுவப்பட்டது. நூற்றுக்கணக்கான கோயா மக்கள் கிராமப் படைகளிலும், கமிட்டிகளிலும் முறையான கொரில்லாப் படைகளிலும் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். கோயா பெண்களும் கூட இந்த இயக்கத்தில் முக்கிய இடம் பெற்றனர். கோயா ஆண்களும் பெண்களும் கட்சி அமைப்பாளர்களாகவும், படைத் தளபதிகளாகவும் உயர்த்தப்பட்டனர்.


இவ்வாறாக காட்டுப்பகுதி முழுவதிலும் இயக்கத்தில் ஒரு பேரெழுச்சி காணப்பட்டது. கிராமப் படேல்கள், பட்வாரிகள், ஊழல் நிறைந்த காட்டு அதிகாரிகள் ஆகிய எல்லோரும் காட்டுப் பகுதி கிராமங்களிலிருந்து ஓடிவிட்டனர். காட்டுக் குத்தகைக்காரர்களிடமிருந்தும் காட்டு அதிகாரிகளிடமிருந்தும் சரியான கூலியை மக்களால் பெற முடிந்தது. சில சமயங்களில் இந்தக் கோரிக்கைகளைப் பெற அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தினர். வியாபாரிகள் தங்கள் வணிகச் சரக்குகளை, கட்சியால் குறிக்கப்பட்ட விலைகளுக்கு விற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.


காட்டுப்பகுதிகளில் தங்கியிருந்த நிலப்பிரபுக்களின் நிலங்களை கோயா மக்கள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். அவர்களுடைய கால்நடைகளும், விவசாயக் கருவிகளும் கூட விநியோகிக்கப்பட்டன. காட்டு எல்லைப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த நிலப்பிரபுக்களின் நிலங்களும் கால்நடைகளும் கூட கோயா மக்களிடையே விநியோகிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் தானியங்களில் வரம்புக்கு மேற்பட்டவை பெரிய அளவில் மக்களிடையே விநியோகிக்கப்பட்டது.

 

காட்டுப் பகுதிகளில் மக்கள் இயக்கம் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், யூனியன் பகுதியிலிருந்த ஆந்திர மக்கள் "எல்லா ஆந்திரர்களும் இணைந்து விசாலாந்திரத்தை (அகண்ட ஆந்திரத்தை) வெற்றி பெறச் செய்ய வேண்டும்'' என்ற முழக்கத்துடன் தெலுங்கானா இயக்கத்துக்கு உறுதுணையாக நின்றார்கள். காங்கிரசு அரசாங்கம் மிகவும் கொடிய அடக்குமுறைகளை ஆந்திர மக்களின் மீது திணித்து வந்தது. வீடுகளைக் கொள்ளையடிப்பது, சாதாரண மக்களைச் சித்திரவதைக்குள்ளாக்குவது, பெண்கள் மீது பாலியல் வன்முறையை ஏவுவது, ஆண்களையும் பெண்களையும் நிர்வாணமாக நடத்திச் செல்வது ஆகிய இந்தக் கொடுமையான அடக்கு முறைகள் யூனியன் பகுதியில் ஆந்திர மக்களின் இயக்கத்தை ஒடுக்குவதற்காகக் கையாளப்பட்டன.


மறுபுறத்தில், இரகசியமாகச் சமவெளிகளில் சிறுபடைகள் வேலை செய்து கொண்டிருந்தன. இந்த நேரத்தில் இராணுவம் முக்கியமாகச் சமவெளிகளிலேயே கவனம் செலுத்தி வந்தது. இயக்கத்தை அடக்குவதற்கு 5 அல்லது 6 சிறிய இராணுவப் பாசறைகளுக்குப் பாதுகாப்பாக ஒரு பெரிய இராணுவ முகாம் நிறுவப்பட்டது. இந்த அடக்குமுறைகளின் விளைவாக கிராமங்களில் மீண்டும் மக்களின் எதிரிகள் தலைதூக்கினர். இந்தச் சூழ்நிலைமைகளில் 3 அல்லது 4 உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் படையினர், வீடுகளிலோ அல்லது வயல்களிலோ பாதுகாப்பாக இருந்து கொண்டு மக்களிடையே வெகு இரகசியமாக வேலை செய்து வந்தனர்.


காங்கிரசு அரசாங்கத்தின் வர்க்கக் குணத்தை வெளிப்படுத்தியும் மக்களிடையில் இயக்கத்தின் வெற்றிகளைப் பாதுகாப்பதற்காக மக்களைப் போராடத் தூண்டியும் துண்டுப் பிரசுரங்களை அவர்கள் விநியோகித்தனர். மக்களிடையில் அரசியல் பிரச்சாரத்தை சிறு கூட்டங்களின்மூலமாக அவர்கள் நடத்தி வந்தனர். மக்களின் எதிரிகளுக்கு எதிரான செயல்களை அவர்கள் நடத்தி வந்தனர். இரவு நேரங்களில் இராணுவத்தின் மீது அவர்கள் திடீரென்று தாக்குதல் தொடுத்தனர். புதிய போர்த்தந்திரங்களின்மூலம் அவர்கள் கட்சிப் பாசறைகளைத் திரும்பவும் அமைத்தனர்.


இவ்வேலையின் முன்னேற்றத்தின் காரணமாக மக்களுடைய எதிரிகள் தங்களுடைய சொந்த கிராமங்களிலேயே திரும்பவும் தங்கியிருக்க முடியாது போயிற்று. அவர்கள் கட்டாயமாக இராணுவ முகாம்களில் தங்கும்படி நேர்ந்தது. அல்லது தங்களுடைய கிராமங்களில் தங்குவதற்கு மக்களுடன் சமாதானம் செய்து கொண்டு அவர்களுடைய அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. மக்களுடைய எதிரிகள் தங்களுடைய விவசாய வேலைகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு முடியவில்லை. சமவெளிகளில் இயக்கம் இன்னும் தணியவில்லை என்று காங்கிரசு அரசாங்கமே ஒத்துக் கொள்ள வேண்டி வந்தது.