காங்கிரசு ரஜாக்கர் குண்டர்களின் உதவியுடன் யூனியன் இராணுவம் கிராமங்களின் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதலை தொடுக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் படை உறுப்பினர்களையும், கட்சியின் மற்ற உறுப்பினர்களையும் கைது செய்வதற்காக, கொரில்லாக் குழுக்களின் மறைவிடங்களைத் தேட மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டது. இவர்கள் மக்களை சித்திரவதை செய்தனர். இந்தச் சூழ்நிலையில் மக்களும், படைகளும் சாதாரண ஆயுதங்களை வைத்துக் கொண்டே தடுத்தனர். அவர்கள் தீவிரமாகப் போரிட்டனர். சில வீரர்கள் போராட்டத்தில் வீழ்ந்தனர். ஆனால் இந்த இழப்புக்களினால் மக்களுடைய எதிர்ப்பு பலவீனமடையவில்லை. இராணுவம் வரும் பாதைகளில் மறைந்திருந்து திடீரெனத் தாக்கி பல வெற்றிகளைப் பெற்றனர்.