இந்திய அரசின் இராணுவம் எல்லைகளில் நுழைந்ததன் விளைவாக ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டைகளினதும், இயந்திர துப்பாக்கிகளினதும் பேரொலிகளைக் கேட்டவுடன், தெலுங்கானா மக்கள் முழுமையும் மாபெரும் போராட்டத்திற்குத் தயாராயினர். கடந்த 3 வருடங்களாக மக்களுக்கு மனிதத் தன்மையற்ற, இழிந்த, கொடிய செயல்களைச் செய்த ரஜாக்கர் குண்டர்களின் மையங்களைத் தாக்கினர். எல்லா இடத்திலிருந்தும் மக்கள் போராட்டத்திற்குக் கிளம்பினர். இலட்சக்கணக்கான மக்கள் ரஜாக்கர் குண்டர்களின் மீது பழிக்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காக முன்வந்தனர். ரஜாக்கர் குண்டர்களின் மையங்களை சுற்றி வளைத்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆயுதங்களை பறித்தனர். எதிர்த்தவர்களையெல்லாம் மக்கள் அழித்தனர். சரணடைந்தவர்களை மக்கள் மன்னித்தனர். ஆட்களை உயிருடன் கொளுத்துதல், கொல்லுதல் — இவை சுரண்டல் வர்க்கங்கள் மேற்கொண்ட போர்முறை; சரண்டைந்த எதிரிகளுக்கு மன்னிப்பை அளித்தல் — இவை சுரண்டப்பட்ட வர்க்கங்கள் மேற்கொண்ட போர்முறை.