09302022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

பாசறைகளை அழித்தல்

நிஜாம் அரசின் போலீசும், இராணுவமும், ஆயுதந்தரித்த ரஜாக்கர் குண்டர்களும் மக்களைக் கொல்வதற்காக கிராமங்களில் வெறித்தனமாக செயல்பட்டனர். கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் மக்கள் வீசியெறியப்பட்டனர். மக்கள் தங்களுடைய சவக்குழிகளைத் தாங்களாகவே தோண்டச் செய்யுமாறு பலாத்காரப்படுத்தப்பட்டனர். பின்னர், அதில் புதைக்கப்பட்டனர்.


மக்களும் படைகளும் இந்தக் கொடிய தாக்குதல்களை எதிர்க்கப் பரந்த அளவில் முன்வந்தனர். இராணுவமும் ரஜாக்கர்களும் உபயோகப்படுத்தும் வீதிகளையும் பாதைகளையும் அவர்கள் அழித்தனர். இதன் பின்னர், ரோந்து சுற்றுதலை அதிகரிக்க கிராமங்களில் இராணுவத்தின் பாசறைகள் அதிகரிக்கப்பட்டன. ஒவ்வொருமூன்று அல்லது நான்கு மைல்களுக்கு ஒரு இராணுவப் பாசறை அமைக்கப்பட்டது. இந்தப் பாசறைகள் தேஷ்முக், நிலப்பிரபுக்கள் ஆகியோர்களுடைய வீடுகளில் அமைக்கப்பட்டன.


எனவே கட்சியும், மக்களும் அந்த இராணுவப் பாசறைகளை அழிப்பதற்குத் திட்டங்களைத் தீட்டினர். கொரில்லாப் படைகளுடன் சேர்ந்து போராட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் முன்வந்தனர். தேஷ்முக், ஜமீன்தார் ஆகியோருடைய வீடுகளைச் சூறையாடுவது தீவிரப்படுத்தப்பட்டது. இந்தச் சிறந்த இயக்கத்தின் இலக்கு, கிராமங்களில் எதிரிகளின் பாசறைகள் இருக்க முடியாமல் செய்வதேயாகும். இந்த இயக்கத்தில் ஜமீன்தார்கள் மற்றும், நிலப்பிரபுக்களின் பல வீடுகள் அழிக்கப்பட்டன. இதனால் போலீசும், ரஜாக்கர் குண்டர்களும் சரியான இடங்கள் கிடைக்காததால் கிராமங்களிலுள்ள தங்கள் பாசறைகளைக் கலைத்துவிட்டு தாலுகா மையங்களில் பாசறைகளை அமைத்துக் கொண்டனர்.


இராணுவத்தின் சூறையாடுதல் வளர்வதைத் தடுக்க, இராணுவப் பாசறைகளை சூறையாடுவதற்கு கட்சியானது திட்டம் தயாரித்தது. தாலுகா மையங்களிலிருந்த பாசறைகளை ஒழிக்க ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பல வெற்றிகள் கிடைத்தன. ஆயுதங்கள் பல கிடைக்கப் பெற்றன. மக்களின் இந்த சூறையாடலினால் எதிரிகள் பயந்து போய், சிறிய பாசறைகளைக் கலைக்கும்படி நேரிட்டது. இராணுவத்தினரால் நூற்றுக்கணக்கான பாசறைகள் அமைக்கப்பட்டன. இம்மாதிரியான பெரிய பாசறைகள் இருந்தாலும் கொரில்லாக் குழுக்களும், மக்களும் தொடுத்த தாக்குதல்களினால் அவர்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழவேண்டியிருந்தது. அச்சம் கொண்ட இராணுவத்தினர் தமது உணர்வுகளைத் தக்க வைத்துக் கொள்ள இரவு முழுவதும் இலக்கின்றி சுடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.