02022023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

மக்கள் போராட்டங்களின்தடுக்கவியலாப் பேரெழுச்சி

கொமரய்யாவின் கொலைக்குப் பின்னர், தெலுங்கானா மக்கள் ஒரு மாபெரும் போராட்டத்தில் கிளர்ந்தெழுந்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நிகழ்ந்தன. ஒரு கிராமத்து மக்கள் மற்றொரு கிராமத்திற்கு ஊர்வலமாகச் செல்வர்; கிராம சங்கத்தை அங்கு அமைப்பர். பின் ஊர்வலம், அடுத்த கிராமத்திற்குத் தொடரும். ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு, மக்களின் வெற்றிகரமான பீடு நடையாகும் அது.

ஒவ்வொருவரும் தடிகளோ இதர கிராமக் கருவிகளோ ஆயுதமாகக் கொண்டு சென்றனர். ஒவ்வொரு கிராமமும் "ஜமீந்தாரி அமைப்பு ஒழிக!'' "மிராசுதாரர்களின் கொடுமைகள் ஒழிக!'' "போலீசு கொடூரங்கள் ஒழிக!'' "புரட்சி ஓங்குக!'' என்ற போராட்ட முழக்கங்களை எதிரொலித்தது. இப்போராட்ட முழக்கங்களின் எதிரொலிகளால் மக்கள் விரோதிகள் எங்கும் பீதியடைந்து, இம்முழக்கங்களை கேட்ட மாத்திரத்திலேயே தங்கள் வீடுகளுக்குள் ஓடி ஒளிந்தனர். இப்பொழுது இலட்சக்கணக்கான மக்கள், மிராசுதாரர் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கு கொள்ள முன்வந்தனர். பெண்கள் ஆயிரக்கணக்கில் இவ்வியக்கத்தில் கலந்து கொண்டனர்.


இச்சமயத்தின் போது பலாத்காரமாகவோ, கொடுத்த கடனுக்காகவோ மக்களிடமிருந்து மிராசுதாரர்கள் பிடுங்கிக் கொண்ட நிலங்களைப் பற்றிய பிரச்சினைகள் பல இடங்களிலிருந்து தீர்ப்புக்கு வந்தன. கட்சியும், ஆந்திர மகாசபையும் இயக்கத்தை தீவிரப்படுத்தவும் உயர்ந்த மட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இப்பிரச்சினைகளைக் கையிலெடுத்தனர். இதனால் இயக்கம் ஒரு புதிய உயர்ந்த கட்டத்தினை அடைந்தது. ஒவ்வொரு இடத்திலும், குறிப்பாக ஹுசூர் நகர், சூரியபேட்டா மற்றும் ஜனகோன் தாலுக்காகளில் மிராசுதாரர்களால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இம்மாதிரி நிலங்களை மீட்டெடுத்துக் கொள்ள மக்கள் தைரியமாக முன் வந்தனர்.


இவ்வித நிலங்களை மீட்டெடுத்துக் கொள்வதற்கான இயக்கத்தில் தர்மாபுரம் மற்றும் பெத்தவோலு மக்களின் போராட்டங்கள், இன்னும் பெரும் போராட்டங்களுக்காக அனைத்து தெலுங்கானா மக்களையும் உணர்வூட்டுவதில் மிகப் பெரிய பங்காற்றின. தர்மாபுரம் கிராமத்தில் மிராசுதாரர் புஷ்கூர் ராகவராவ், லம்பாடி விவசாயிகளால் உழப்பட்டு வந்த சுமார் 25 ஏக்கர் நிலத்தை பலாத்காரமாக ஆக்கிரமிக்க அவனது குண்டர்களை அனுப்பினான். ஆந்திர மகாசபையின் தலைமையில் லம்பாடி உழவர்கள் தங்கள் நிலத்தினைப் பாதுகாக்கத் தங்களைத் தயார் செய்து கொண்டனர். தடிகளாலும், தொன்று தொட்டு இருந்து வரும் இதர கிராம ஆயுதங்களாலும் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டு நிலத்தை நோக்கி வீறுநடை போட்டனர். மிராசுதாரரின் குண்டர்களை விரட்டியடித்தனர். இந்நிலத்தினைச் சுற்றிச் செங்கொடிகளை ஊன்றினர். அங்கு ஏழைகளின் நிலத்தைப் பாதுகாக்கும் காவலனாகியது, செங்கொடி!


பெத்தவோலு கிராம மக்கள், மிகவும் கொடிய மிராசுதாரரான தாரகமல்ல சீதாராமச்சந்திரராவின் கொடூரங்களை எதிர்த்து கிளர்ச்சி செய்து கொண்டிருந்தனர். இச்சமயம் இக்கிளர்ச்சி தீவிரமாக்கப்பட்டது. நிலத்தை அளந்து ஏற்றுக் கொள்ளும் ஒப்பந்தமின்றி எந்த வரிகளையும் செலுத்த மக்கள் மறுத்துவிட்டனர். இம்மிராசுதாரருக்குச் சொந்தமான 600 ஏக்கர் பன்சார் நிலங்களை அவர்கள் எடுத்துக் கொண்டனர். தங்களுக்குள் அதனைப் பங்கிட்டுக் கொண்டனர். இன்றும்கூட அவர்கள் அதனை அனுபவித்து வருகின்றனர்.


இவ்வியக்கத்தை நசுக்க, நிஜாம் மாநில அரசு தனது இராணுவத்தை அனுப்பியது. தலைவர்களுடன் நூற்றுக்கணக்கான கிராமக் கட்சி ஊழியர்களைக் கைது செய்யத் தொடங்கியது. கிராமங்களில் மிகப் பெரிய அளவில் இராணுவம் சோதனையிடத் தொடங்கியது. ஆனால் மக்கள், எதிரியின் தாக்குதலுக்கு முன்னே பின்வாங்க மறுத்தனர். இத்தாக்குதலை ஒன்று சேர்ந்து, கூட்டாகத் தடுக்கத் தொடங்கினர். 1946இல், சூரியபேட்டா தாலூகாவைச் சேர்ந்த பலேமுலா, பட்ட சூரியபேட்டை ஆகியவற்றிலும், ஹுசூர் நகர் தாலுகாவைச் சார்ந்த மல்லரெட்டிக்கூடத்திலும், ஜனகோன் தாலுகா தேவருபுலா விலும் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் தெலுங்கானா போராட்டத்தின் முன்னேற்றத்திற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு பங்கை வகித்தன.


இரவு முழுவதும் மக்கள் தங்கள் கிராமங்களைப் பாதுகாக்கத் துவங்கினர். கற்களையும் தடிகளையும் சேமித்துத் தங்கள் கூரையில் தயாராக வைத்தனர். ஒவ்வொரு மனிதனும் தடியால் அல்லது கவண்கல்லால் தன்னை ஆயுதபாணியாக்கிக் கொண்டான். பெண்கள் மிளகாய்த் தூளுடன் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டனர். ஒரு கிராமம் தாக்குதலுக்குள்ளானால், அதன் பாதுகாப்பிற்காக சுற்றுப்புற கிராம மக்கள் முன் வந்து, அரசு போலீசை எதிர்த்துக் கூட்டமாகச் சேர்ந்து போரிட்டனர். கட்சி மற்றும் ஆந்திர மகாசபை ஊழியர்களைப் பாதுகாக்க அவர்கள் மிகக் கடினமான பணிகளையும் மேற்கொண்டனர். மக்கள் நூற்றுக்கணக்கில் ஒன்று கூடி போலீசுக்கு எதிராகக் கூட்டாகப் போரிடத் தொடங்கினர். இதுவே எங்கும் காணப்படும் நிகழ்ச்சியாகியது.


இங்கு நாம் இவ்வியக்கத்தில் இதுவரை வெளிப்பட்டுள்ள சிறப்புத் தன்மைகளைக் கவனிக்க வேண்டும்.


*கொத்தடிமை, சட்ட விரோத வரிகள், கட்டாய லெவி வசூலிப்புகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம், ஜமீந்தாரி எதிர்ப்புப் போராட்டமாக வளர்ந்தது. பலாத்காரமாக நிலத்திலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டம், மிராசுதாரர்கள் பலாத்காரமாக ஆக்கிரமித்துக் கொண்ட நிலங்களை மீட்டெடுக்கும் போராட்டமாக வளர்ந்தது.


*மக்கள் இயக்கத்தின் முன்னேற்றத்தின் பயனாக கட்டாய லெவி வசூல் முற்றுப் புள்ளிக்கு வந்தது. அரசு அதிகாரிகள் கிராமங்களுக்கு வரவே பயந்தனர். கொத்தடிமை, சட்ட விரோத வரிகள் முற்றாக அழிந்தன. விவசாயிகளை வெளியேற்றுவது முற்றிலும் நின்று விட்டது.


*இதுவரை மிராசுதாரர்களின் குண்டர்களை எதிர்த்துக் கொண்டிருந்த மக்கள், இப்போது நிஜாம் அரசின் போலீசையும் இராணுவத்தையும் எதிர்க்க முற்பட்டனர்.
* சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நூற்றுக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட கிராமத்தைப் பாதுகாக்க ஒன்று கூட ஆரம்பித்தனர். போலீசையும் இராணுவத்தையும் எதிர்த்துக் கூட்டாகப் போரிடத் தொடங்கினர்.


*இப்போராட்ட இயக்கத்தில் புதிய உணர்வுடன் பெண்கள் பங்கு கொள்ள ஆரம்பித்தனர். ஆண்களுக்குப் பக்கபலமாக நின்று போராடத் தொடங்கினர். ஆண்கள் கவண் எடுத்துச் சுற்றினால் பெண்கள் அவர்களுக்கு கற்களை எடுத்துத் தந்தனர். ஆண்கள் தடிகளை எடுத்துப் போரிட்டால், பெண்கள் மிளகாய்த் தூள் வீசி போலீசுடன் போரிட்டனர்.


* இப்போது கிராமச் சங்கம் தன்முன் வரும் எல்லாப் பிரச்சினைகளையும் — கணவன் மனைவிக்குள் வரும் சச்சரவு முதற்கொண்டு —தீர்க்கத் தொடங்கியது. இதனுடன் மிராசுதாரர்கள், பட்டேல்கள், பட்வாரிகள் ஆகியோரின் சட்டவிரோத வரிகள் யாவும் ஒரு முடிவுக்கு வந்தன.


இங்கு நாம் மற்றொரு முக்கிய விசயத்தையும் கவனிக்க வேண்டும். தற்போது போலி கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து வரும் தெலுங்கானாவின் கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்த வீரதீரப் போராட்டங்களை அன்று எதிர்த்தனர். தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் என்று அவற்றைக் கண்டித்தனர். ஆனால் மக்களும் ஊழியர்களும் அவர்களது விமர்சனத்திற்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை. இயக்கம் முன்னேறி புதிய பகுதிகளுக்குப் பரவியது. அது ஓர் உயர்ந்த கட்டத்திற்குத் தாவியது. நில விநியோகத் திட்டம் முன்னேறியது. இக்கட்டத்தில்தான் மக்கள் தொண்டர் அமைப்புகள் எங்கும் நிறுவப்பட்டன.