இங்ஙனம் கிஞ்சித்தும் விஞ்ஞானக் கண்ணோட்டம் இல்லையெனில் நடைமுறையில் காங்கிரசின் நோக்கு என்ன? ஐயமின்றி அஞ்ஞானப் பார்வைதான்!
மதச்சார்பின்மை என மூ­ச்சுக்கு முன்னூறு தடவை கொட்டி முழக்கும் காங்கிரசின் எல்லாக் கிளர்ச்சிகளிலும் பிரச்சாரத்திலும் அன்றும் இன்றும் அஞ்ஞான இந்துமத போதனையே பிரபலமாக இருந்து வந்துள்ளது. "தீவிரவாதிகள்' எனப் பட்டம் சூட்டப்பெற்ற திலகர், அரவிந்த கோஷ் முதல் பண்டாரக் கவிஞன் பாரதிவரை இவர்கள் உயர்த்திப் பிடித்த தேசியம் இந்து தேசியமே.

தேசிய இயக்கத்தின் ஒரே பிரதிநதி நானே என தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட காங்கிரசின் "ஒப்புயர்வில்லா' தலைவன் காந்தி தான் ஒரு "சநாதன இந்து'' (ஒருவித தீவிரவாத, அதிநம்பிக்கை கொண்ட இந்து) எனப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
"நான் என்னை ஒரு சநாதன இந்து என்று சொல்லிக் கொள்கிறேன். ஏனெனில்


1.வேதங்களையும், உபநிடதங்களையும், புராணங்களையும் இந்து சாத்திரங்கள் எனப்படுகிறவை அனைத்தையும், அவதாரங்களையும், மறுபிறவியையும் நான் நம்புகிறேன்.


2.என் கருத்துப்படி வேதப் பொருளில் தற்போது பொதுவான பக்குவமற்ற பொருளில் அல்லாமல், நான் வருணாசிரம தருமத்தை நம்புகிறேன்.


3.மக்கள் நம்பும் பொருளில் அல்லாமல், இன்னும் விரிவான பொருளில் நான் பசுவைப் பாதுகாப்பதை நம்புகிறேன்.


4.விக்கிரக ஆராதனையை நான் நம்பாமல் இல்லை.'' (காந்தி, "யங் இண்டியா'வில், அக்.12, 1921)


இதுமட்டுமின்றி, இந்து முசுலீம் ஒற்றுமைக்காக வேண்டுகோள் விடுக்கும் போதும், இரு பிரிவினருக்கும் வேண்டுகோள் விடும் தேசியத் தலைவராக அல்லாமல் ஒரு இந்துத் தலைவராகவே நடந்து கொண்டார். இந்துக்களோடு தன்னையும் இணைத்துக் கொண்டு, இந்துக்களை "நாம்'' என்றும், முசுலீம்களை "அவர்கள்'' என்றும் வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார்.


"முசல்மான்களின் உள்ளங்களை நாம் வெல்ல வேண்டுமானால், ஆத்ம சுத்திக்காக நாம் தவம் இயற்றச் செல்ல வேண்டும்'' (காந்தி, "யங் இண்டியா'வில், செப்1924)


காந்தியின் தலைமையில் மட்டுமா காங்கிரசு இந்துமதப் பிரச்சாரம் செய்தது? ஏன், இன்றும்கூட ஆர்.எஸ்.எஸ். இந்துமதவெறியர்களோடு கைகோர்த்து காங்கிரசு இந்துமதப் பிரச்சாரத்தை ஊக்கப்படுத்தியே வருகிறது. நேரு, கௌல், தர், ஹக்சர், சக்சேனா போன்ற காசுமீரிப் பார்ப்பனர்களும், திரிபாதி, தீக்சித், சர்மா, திரிவேதி, சதுர்வேதி, மிஸ்ரா, பாண்டே போன்ற வட இந்தியப் பார்ப்பனர்களும், பார்த்தசாரதி, நரசிம்மராவ், வெங்கட்ராமன், குண்டுராவ், சேஷன், மணிசங்கர அய்யர் போன்ற தென்னிந்தியப் பார்ப்பனக் கும்பலும் இந்திரா ராஜீவைச் சுற்றி அதிகாரக் கோட்டைகளாக இருப்பதிலிருந்தே காங்கிரசின் தன்மையை நன்கு புரிந்து கொள்ளலாம்.


இந்துமதப் பண்டாரம் விவேகானந்தன் பிறந்த நாளையொட்டி இளைஞர் ஆண்டாகக் கொண்டாடுவது, கங்கையைப் புனித நதி என அறிவித்தது, இந்திரா ராஜீவின் மரணச் சடங்குகளை இந்துமத முறையில் நடத்தியது இவையாவும் எதைக் குறிக்கின்றன? நிச்சயமாக இந்து தர்மத்தையும், இந்து கலாச்சாரத்தையும் நடைமுறைப்படுத்தும் "இந்து தேசிய காங்கிரசு' என்பதைத்தான்!