1921ஆம் ஆண்டு வைசிராயாக வந்த ரீடிங்கைச் சந்தித்து காந்தி வாழ்த்துக் கூறியபோது, "காங்கிரசு இயக்கம் வன்முறையைக் கையாளாதவரை ஆங்கிலேய அரசாங்கம் காங்கிரசின் விவகாரங்களில் தலையிடாது'' என்று உறுதி மொழியளித்தான். காந்தியும் அவ்வாறே நடந்து கொள்வதாக உறுதியளித்தார். இப்படித்தான் காங்கிரசும் காந்தியும் ஒத்துழையாமை நாடகத்தை நடத்தினர். மக்களின் முதுகிலே குத்தும் பச்சைத் துரோகம் என்பதன்றி வேறென்னவென்று இதைக் கூறுவது?


சாத்வீகப் போர் என்றால் என்ன? கோகலே கூறுகிறார்: "இந்தப் போர் வலுச்சண்டையைச் சாத்வீக ஆயுதங்களால் எதிர்க்கும் முறையாகும். சாத்வீகப் போர்வீரன் தன் ஆயுதங்களை மனதில் தரித்தவன். பிறர் கொடுமையை ஒழிக்க இந்த வீரன் தன்னைத்தானே துன்பத்திற்குள்ளாக்கிக் கொள்கிறான். மனிதனின் மிருகத்தனத்தை இவன் தன் ஆத்ம சக்தியால் வெல்ல எத்தனிக்கிறான். இதில் நம்பிக்கை வைத்தவன் தன்னுள் உள்ள தெய்வாம்சத்தை உபயோகத்துக்குக் கொணர்ந்து, கஷ்டங்களைச் சகித்து, நிஷ்டூரங்களைப் பயனறச் செய்கிறான். தெய்வ நம்பிக்கையை ஆயுதமாக ஏந்தி அநியாயத்தை வெல்ல சாத்வீகப் போர்வீரன் களிப்புடன் சமரில் ஈடுபடுகிறான்.''


காந்தியும் காங்கிரசும் ஏகாதிபத்தியவாதிகளை சாத்வீக முறையில் எதிர்ப்பதாக வேடங்கட்டி ஆடிய நாடகத்தைக் கண்டு மக்கள் மயங்கிவிடவில்லை. சாத்வீக முறையின் கட்டுத்திட்டங்களை உடைத்தெறிந்துவிட்டு நேரடியாக ஆயுதத்தாங்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வங்கத்தில் மித்னாபூர் விவசாயிகள் நிலப்பிரபுக்களின் எஸ்டேட்டுகளைச் சூறையாடினர்; அன்றைய சென்னை ராஜதானியில் இருந்த குண்டூர் விவசாயிகள் 1922ல் நிலப்பிரபுக்களுக்கெதிராக வரிகொடா இயக்கத்தைத் தொடங்கினர்.