1917இல் உலகையே குலுக்கிய மாபெரும் அக்டோபர் புரட்சியின் வீச்சு கீழ்த்திசை நாடுகளை வந்தடையும் வரை, காங்கிரசு முழுக்க முழுக்க ஏகாதிபத்தியங்களின் விசுவாச ஊழியனாகவே செயல்பட்டுள்ளது. முதல் உலகப் போரின் போது தான் ஒரு அடிமைச் சேவகன் என்பதைப் பிறந்த மேனியாக வெளிக்காட்டியது. காங்கிரசார் பிரிட்டிஷாரின் யுத்தக் கொள்கையை வெளிப்படையாகவே ஆதரித்தனர். "பேரரசின் விரைவான வெற்றிக்காக எல்லா வகையிலும் இந்திய மன்னர்களும் மக்களும் ஒத்துழைப்பார்கள்'' என ஜின்னா, லஜபதிராய் உட்பட அப்போது லண்டனிலிருந்த காங்கிரசுப் பிரதிநிதிக்குழு இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷ் அரசுச் செயலருக்குக் கடிதம் எழுதியது.


இதேநேரம் தென்னாப்பிரிக்காவிலிருந்து புதிதாக லண்டனுக்கு வந்த காந்தி ஹோட்டல் செசியில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்குக்கான பதிலில் தனது அடிவருடித்தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். லண்டனிலிருந்த இளம் இந்திய நண்பர்களை "அரசாங்க ரீதியாக'ச் சிந்தித்து "தங்கள் கடமையை ஆற்ற வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார். இது மட்டுமா? தன் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசுச் செயலருக்கு வலிந்து கடிதம் எழுதிய காந்தி, லண்டனில் இந்தியத் தொண்டர்கள் கொண்ட துயர் துடைப்பு (ஆம்புலன்ஸ்)ப் படை நிறுவி பிரிட்டிஷாருக்குச் சேவை செய்தார். இதற்காக கைசர்இஹிந்த் பட்டமும் தங்கப் பதக்கமும் பெற்றுக் கொண்டார். இதற்கு முன்னரே கூட தென்னாப்பிரிக்காவில் இருந்த போது "போயர் யுத்தத்தில்' பிரிட்டிஷாருக்குச் செய்த சேவைக்கு "போயர் யுத்தப் பதக்கத்தை' ஏகாதிபத்தியங்களிடம் பெற்றுக் கொண்டவர்தான் அவர்!


சுயராச்சியத்தை வென்றெடுக்க "காந்தி மகான்' கூறிய யோசனை "காலனி இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுங்கள்'' என்பதே. முதல் உலக யுத்தம் முடியும் வரை பிரிட்டிஷாரின் கௌரவ இராணுவ ஆள் சேர்ப்பு அதிகாரியாகச் செயல்பட்ட காந்தி "ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் இதோ ஒரு பொன்னான வாய்ப்பு; பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' எனத் துண்டுப் பிரசுரங்கள் ­மூலம் மக்களைக் கேட்டுக் கொண்டார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்கள் ஆயுதமேந்திய போதெல்லாம் ஆயுதங்களைக் கீழே போடச் செய்வதற்குத் தன் உயிரையே பணயம் வைத்த இந்த "உத்தமனின்' ஏகாதிபத்தியச் சேவையைக் குறைத்து மதிப்பிட முடியுமா என்ன?


இது மட்டுமின்றி 1914, 1915, 1916ஆம் ஆண்டுகளில் முறையே சென்னை, பம்பாய், உத்திரபிரதேசம் ஆகிய இடங்களில் நடைபெற்ற காங்கிரசு மாநாடுகளில் பிரிட்டிஷ் ஆளுநர்கள் சிறப்புக் கவனம் எடுத்துக் கொண்டு நேரடியாகப் பங்கு கொண்டு ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.


ஏகாதிபத்தியத்துக்கு நேரடிச் சேவை; அதன் ­மூலம் பிரச்சினைக்குத் தீர்வு இந்த வழியைத்தான் காங்கிரசு தன்னகத்தே கொண்டிருந்தது. இதுதானே அதன் இன்றைய கொள்கையும் கூட. ஆனால் ஒரு வித்தியாசம், இன்று பல்வேறு ஏகாதிபத்தியங்களுக்கும் சேவை செய்து பிரச்சினைக்குத் தீர்வு காண்கிறது. "ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண பல்வேறு வழிகள் உள்ளன. இதை காங்கிரசு தன்னகத்தே எடுத்துக் கொண்டது'' ராஜீவின் சென்னை காங்கிரசு நூற்றாண்டு விழாப் பேச்சின் சாரம் இதுவன்றி வேறென்னவாக இருக்க முடியும்?