09302022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

இந்தியாவைக் கிராம ராஜ்ஜியமாகவும், இராம ராஜ்ஜியமாகவும் மாற்றுவது தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் கனவாகவும், இலட்சியமாகவும் இருந்தது! இப்போது இந்த நாட்டை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இராம பக்தர்கள் ஆளுகிறார்கள். இவர்களும் முழுமையான இராம இராஜ்ஜியத்தை உருவாக்குவதற்குத்தான் பாடுபடுகிறார்கள். இராம இராஜ்ஜியத்தைப் படைப்பதற்கான சோதனைக் களமாக காந்தி பிறந்த குஜராத்தை இந்த இராம பக்தர்கள் மாற்றியிருக்கிறார்கள்.


காந்தி ஒரு தீவிர வைணவன். இந்து மதத்தின் ஒரு பிரிவெனக் கூறப்படும் வைணவத்தின் மூ­லமாகவே உலகைக் கண்டவர். ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இராம பக்தர்களோ, எல்லா இந்துமதப் பிரிவுகளையும் ஏற்பவர்கள். காந்தி காங்கிரசு கும்பலுக்கும், ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க. கும்பலுக்கும் இராம இராஜ்ஜியத்தை உருவாக்குவதில், அணுகுமுறையில் மட்டுமே வேறுபாடு உள்ளது. சாரம் ஒன்றுதான்.


குஜராத்தில் இருந்து இசுலாமியர்களைப் பூண்டோடு ஒழிக்கும் கொலைவெறியாட்டம் நடத்தியபோது "காந்தி பிறந்த மண்ணில் இப்படி ஒரு கொடூரமா!'' என்று பத்தாம் பசலிகள் பலர் அதிர்ச்சி காட்டினர். "காங்கிரசு இரவிலே செய்ததை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வினர் பகலிலேயே செய்கிறார்கள்'' என்று பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் கூறினார். ஆம். ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலின் அணுகுமுறை பகிரங்கமான பாசிச கொலைவெறி. காந்திய காங்கிரசின் அணுகுமுறையோ நயவஞ்சகம் துரோகம்.


"காந்தியைக் கொன்றவன் ஒரு இந்துமதவெறியன்; ஆகவே, காந்தி ஒரு மதச்சார்பற்றவராக இந்துமதவெறி எதிர்ப்பாளராக இருந்திருக்க வேண்டும்'' என்று போலி கம்யூனிஸ்டுகள் பரப்பும் கருத்தும் உண்மையல்ல. பாகிஸ்தான் உருவானதே மத அடிப்படையில் நாடு பிளவுண்டதற்கே காரணம் காந்திய காங்கிரசின் இந்துமதவாத அணுகுமுறைதான் காரணம் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. காந்தி அடிப்படையில் பார்ப்பன பனியா கும்பலின் பிரதிநிதியாகவே செயல்பட்டார் என்பதை அம்பேத்கர், பெரியார் போன்ற ச­மூக சிந்தனையாளர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டினர். இந்துமதவாதி காந்தியின் நயவஞ்சக துரோகமயமான அணுகுமுறை, இராம இராஜ்ஜியத்தை தாமதமாகக் கொண்டு வரும் எனப் பொறுமையை இழந்ததாலேதான் கோட்சேக்கள் ஆத்திரமுற்றனர்.


காந்திய காங்கிரசும் சரி, ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க. கும்பலும் சரி நாட்டுப்பற்று தேசபக்தியில் வெவ்வேறு அளவுகளில் இந்துமதவாத நஞ்சு கலந்தார்கள். அவர்கள் அன்றும் இன்றும் பேசியதெல்லாம் சுதேசி; செய்ததெல்லாம் விதேசி ஊழியம் அல்லது ஏகாதிபத்தியத் தொண்டு. ஒருபுறம் சுதேசி இயக்கம் என்கிற பெயரில் நாடகமாடிக் கொண்டே, மறுபுறம் தாராளமயம் தனியார்மயம் உலகமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கை மூ­லம் நாடு மறுகாலனியாக்கப்படுகிறது. காந்திய காங்கிரசால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த மறுகாலனியாக்கம் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலால் தீவிரமாக அமலாக்கப்படுகிறது. ஏகாதிபத்தியத்திற்கு ஊழியம் செய்யும் இவர்களது கொள்கையில் நாடே பஞ்சபூமியாகி கஞ்சித் தொட்டிகளும் பட்டினிச் சாவுகளும் நடப்பாகிவிட்டன.


நாட்டின் இன்றைய அவலநிலைக்கு, புதிய ஆட்சியாளர்களான ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பல் எந்த அளவுக்கு பங்காற்றுகிறது என்பதைக் கண்கூடாக நாம் பார்க்கிறோம். ஆனால் நமது மக்களை ஏமாற்றி, துரோகப் பாதையில் இட்டுச் சென்று, அவர்கள் வாழ்வை காந்திய காங்கிரசு நாசமாக்கியது ஒரு நூறாண்டுக்கும் மேலான வரலாறு. இன்றைய இளைய தலைமுறையினர் பலரது கவனத்துக்கு வராமலிருக்கும் இந்த உண்மையை இங்கே தொகுத்துத் தருகிறோம்!


"கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமின்றி கைராட்டை சுற்றிச் சுற்றி, உண்ணாவிரதப் போர் முறையின் மூ­லமே வெள்ளையனிடமிருந்து "விடுதலை' பெற்று விட்டோம். தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி திரும்பி காங்கிரசின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டவுடன் காங்கிரசின் தன்மையும் பார்வையும் மாறியது.'' நமது பாடசாலைப் புத்தகங்கள் போதிக்கின்ற இந்த விவரங்கள் சாரமற்று நீர்த்துப் போன பழங்கஞ்சிக்கு ஒப்பானது. எள்ளின் முனையளவும் உண்மையற்றவை. காங்கிரசின் பிறப்பே வேசித்தனமானது; மக்களின் முதுகிலே குத்திக் குத்திக் காயப்படுத்திய காந்தி காங்கிரசின் வரலாறோ துரோகமிக்கது.