இலங்கையில் இன்று ஒரு இடது சாரிக் கட்சி சரியான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்து தமிழ், சிங்கள,முஸ்லீம், மலையக மக்கள் பற்றிய சரியான நிலைப்பாட்டை முன்வைத்திருப்பின், ஒருக்காலும் இன்று நடக்கும் தேசிய இன முரண்பாடு ஏற்பட்டிருக்காது. மாறாக வர்க்கப் போராட்டம் நடந்திருக்கும். இதற்கு யாரும் வெளிச்சம் போட்டுக் காட்டத் தேவையில்லை. இனவாதச் சக்திகளின் சொந்த நலன்களைப் பாதுகாக்கவும், ஏகாதிபத்தியச் சுரண்பலை மூடிமறைத்துப் பாதுகாக்கவும் தேவைப்பட்டதே இலங்கை இன முரண்பாடு.


இலங்கை இன்று தனது சொந்தத் தேசியத்தை இழந்து ஏகாதிபத்தியத்தின் நேரடிக் காலனியாதிக்கமாக மாறி வருகின்றது. எந்தப் பொருளின் விலையை அதிகரிப்பது, எதை வெட்டுவது என எல்லாம் ஏகாதிபத்தியம் தீர்மானிக்கின்றது. ஏன் வரவு செலவைக் கூட அவர்கள் தான் தீர்மானிக்கின்றனர். இதை மூடி மறைக்க இருந்த தேசிய முரண்பாட்டை முன்னெடுத்து தேசிய இன முரண்பாட்டு உண்மையில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இருக்க முடியாத வகையில், இலங்கையில் உள்ள தரகு முதலாளித்துவக் கட்சிகள் திசை திருப்பி உள் முரண்பாட்டை மாற்றுகின்றன. தேசிய இன முரண்பாடு எழுவது கூட, வர்க்கப் போராட்டம் என்ன நிலையில் உள்ளது என்பதுடன் தொடர்புடையது. இருக்கும் சுரண்டல் அரசு இனி இருக்கும் நிலையில் ஆள முடியாது என்கின்ற நிலையில் தான் தேசிய இன முரண்பாட்டை முன் தள்ளுகின்றது. இருக்கும் சமூகப் பொருளாதார வர்க்கப் போராட்டத்தின் ஒரு விளைவாகத்தான் தேசியப் போராட்டம் எழுச்சி பெறுகின்றது. இருக்கும் தேசிய இனத்தின் சுரண்டலை, பண்பாட்டை, கலாச்சாரத்தை, எல்லையை என ஒரு தேசிய இனம் அனைத்தையும் கோரும் போது போராடுகின்றது. இது ஒரு குறுகிய வரையறுக்கப்பட்ட எல்லைக்கு உள்ளதால் ஒரு முதலாளித்துவ கோரிக்கையாக தேசியமாக உள்ளது. பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதியாக அனைத்தையும் கடந்து ஐக்கியத்தைக் கோருகின்றனர். ஐரோப்பாவில் புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழ்கின்றார்கள் எனின் அங்கு உள்ள தொளிலாளர்களின் ஆதரவில் தானே ஒழிய அங்கு உள்ள அரசுகளின் ஆதரவில் அல்ல. முதலாளிகள், சுரண்டுவோர்களின் நலன் குறுகிய எல்லையைக் கொண்டது. அது பண்பாட்டை மற்றவர்கள் மீது திணிக்கின்றது. தான் இழந்து போவதை அனுமதிப்பதில்லை. ஆனால் தொழிலாளர்கள் மற்றவர் பண்பாட்டை மதிக்கின்றனர். தவறுகளை விமர்சிக்கின்றனர். அதனுடாக ஒரு பொதுப்பண்பாட்டை அடையாளம் காண்கின்றனர்.


ஐரோப்பாவில் நடந்துவரும் மொழி, எல்லை, வரலாறு, பண்பாடுகளைக் கடந்த ஐக்கிய ஐரோப்பா இரண்டு வகையில் நடக்கின்றன. ஒன்று ஆதிக்கமுள்ள ஐரோப்பா சுரண்டல் பிரிவுகள் தமது நிலையில் நின்று மற்றவர்கள் மீது திணிக்கின்றன. இதை எதிர்த்து எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் போராடுகின்றனர். தமது தேசியத்தை இதன் மூலம் பாதுகாக்கக் கோருகின்றனர்.


மறுபுறம் ஐரோப்பிய தொழிலாளர்கள் சர்வதேசிய வாதியாக உள்ளனர். தமது எல்லையைக் கடந்து மற்றவர்களுடன் ஐக்கியத்தைக் கோருகின்றனர், போராடுகின்றனர்.


தேசியம் என்பதும், சர்வதேசியம் என்பதும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது. ஆனால் தேசியம் மீது அதை அழித்து விட முனையும் வன்முறை ஆக்கிரமிப்பை சர்வதேசியம் பொறுத்துக் கொள்வதில்லை. அவர்கள் தனியாகவும், சர்வதேசிய வாதியாக நின்று அதற்காகப் போராடுகின்றனர்.


வியாட்நாம் மீதான யுத்தத்தின் போது, அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தின் போது அங்கு கம்யூனிஸ்டுக்கள் தேசிய வாதியாகவும், அதே நேரம் சர்வதேசிய வாதியாகவும் உலகத் தொழிலாளர்களுடன் இணைந்து உலகளவில் போராடினர். அதே நேரம் உலகத் தொழிலாளர் வர்க்கம் அவர்களுக்காகப் போராடினர்.


தேசியம் பாட்டாளி வர்க்கத்தினது அடிப்படைக் கோரிக்கை அல்ல. சிலவேளைகளில் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்கள் மீது திணித்து போராட முன் தள்ளுகின்றனர். இது மற்றைய தேசிய இனத் தொழிலாளர்கள் மீது தேசியத்தை பிரயோகிப்பது அல்ல. மாறாக அங்கு சர்வதேசிய நிலையைக் கைக்கொள்ளுகின்றனர்.


இலங்கையில் புலிகள், சிங்கள, முஸ்லீம் தொழிலாளர்கள் மீதும், ஒடுக்கப்பட்வர்கள் மீதும் அரசு அல்லாத பிரிவுகள் மீதும் நடத்தும் தாக்குதலை, ஒருக்காலும், புலியின் இடத்தில் பாட்டாளி வர்க்கம் இருப்பின் நடத்தாது. ஏன் எனில் தேசியம் என்பது பாட்டாளிகளின் கோரிக்கை அல்ல. அதனால் சக பாட்டாளிகளை நேசிக்கின்றது, ஐக்கியப்படுத்துகின்றது. ஆதரவைக் கோருகின்றது. மறுபுறம் புலிகளை முதலாளித்துவத் தேசியம தான் பாட்டாளிகளின் மீது தாக்குதலை நடத்துக் கோருகின்றது. ஏன் எனின் அதன் வர்க்கக் குணாம்சம் தான்.


புலிகள் இடத்தில் ஒரு பாட்டாளி வர்க்கம் இருப்பின் யுத்தம் இலங்கை அரசுக்கு எதிராக தமிழ் சிங்கள ஐக்கியத்தின் அடிப்படையில் கோரப்படும். ஏன்எனில் பாட்டாளிகளின் கோரிக்கை தேசியம் அல்ல. சர்வ தேசியமே. இங்கு சிங்களப் பாட்டாளியின் போராட்டம் தான் தமிழ் பாட்டாளியின் தேசியத்தை கைவிட வைத்து சர்வதேசியமாக போராட்டத்தை ஒன்று படுத்தும்.


இங்கு தமிழ் பாட்டாளிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் திணிக்கப்பட்டு இனவாதம் யுத்தத்தை எதிர்த்து போராட தேசியத்தை முன்னெடுக்கும் தமிழ் பாட்டாளிகள் சர்வதேசிய வாதியாக இருந்து சிங்களப் பாட்டாளிகளின் ஐக்கியத்தைக் கோரும். இங்கு தமிழ் பாட்டாளிகளின் தேசியத்தை முன்னெடுக்கும் போது முதலாளித்துவக் கோரிக்கையை தனது கையில் முன்னெடுத்து செல்வதன் மூலம் பாட்டாளிகளின் தலைமையில் முதலாளித்துவ தேசியத்தை உள்வாங்குகின்றது. இதன் மூலம் பாட்டாளியின் தலைமையை தேசிய முதலாளித்துவத்தின் மீது நிறுவி அதை சர்வதேசியப் போக்கில் நகர்த்துகின்றது. புலிகள் இடத்தில் இன்று தமிழ் பாட்டாளிகள் இருப்பின் அதுதான் நடக்கும். இதன் மூலம் தான் தமிழ், சிங்கள, முஸ்லீம், மலையக பாட்டாளிகள் இனவாதத்தில் இருந்து விடுவிக்கப் படுவதும், உண்மையான இலங்கைத் தேசியத்தைப் பாதுகாக்க போராட முடியும்.


இதை மறுதலிக்கும் சர்வதேசியமல்லாத இனவாதியான அ.மார்க்ஸ் தனது கருத்தில் "..... ஒரு அரை, நவ காலனியச் சூழலில் ஒரு பல்தேசிய இன நாட்டுக்குள் இன்று அகண்ட தேசியம் என்பது சாத்தியம் இல்லை." எனக் கூறி பெரு முதலாளிகள், அதிகார வர்க்கம், மதவாத சக்திகள், அகில இந்திய தேசியத்தால் மறுகின்றார். இருக்கும் நிலப்பிரபுத்துவ தரகு முதலாளித்துவ, மற்றும் அதிகார வர்க்கங்கள் இந்தியத் தேசத்தை பாதுகாக்க முனைவது என்பது ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்கவும், அNது நேரம் தனது பங்கை தக்க வைக்கவுமே ஒழிய வெளியில் அல்ல. இருக்கும் இந்திய தேசியம் என்பது சொந்த நலனைப் பாதுகாத்த படி ஏகாதிபத்திய நலனைப் பெறுவதுமே.


ஆனால் இன்று உலகமயமாதல் இந்திய தேசியத்தை பெயரளவில் வைத்தபடி தேசியத்தை அழிக்கின்றது. அரை, நவ காலனியச் சூழல் என்பது பல்தேசிய நாட்டின் ஒன்று பட்ட தேசிய நலனைப் பாதுகாக்க, ஆக்கிரமிப்புக்கு எதிரான, அரை, நவகாலனிக்கு எதிரான போராட்டத்தைக் கோருகின்றது. இது இந்தியாவில் சாத்தியமானது அங்கு உள்ள பல்தேசிய பாட்டாளி வர்க்கம் தம்மை தாம் சர்வதேசிய வாதிகளாக அடையாளப்படுத்தும் போது இந்திய தேசியம் சர்வதேசிய வழியில் முன்னுக்கு வர முடியும் வருகின்றது.


இதை மறுத்து தேசிய வாதமாக ஒவ்வொரு தேசிய இனம் போராடுவது எனின் அது ஏகாதிபத்திய நலனுக்கு சாதகமானது. இழந்து செல்லும் இந்தியாவும், அதன் தேசிய இனங்களின் தேசிய நலன்களை சூறையாடும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடாது உள்ள முரண்பாடு ஏகாதிபத்திய சூறையாடலை மூடி மறைக்கின்றது. சிலவேளை சொல்லலாம் தனித்தேசியஇனமாக ஏகாதிபத்தியத்துக்குனு எதிராக, போராட முடியும் என்று இது நகைப்புக்குரியது. ஏன் எனின் ஏகாதிபத்துpயத்துக்கு எதிரான உணர்வு சர்வதேசியமாகும். சர்வதேசியமான தனித்தனி தேசிய போராட்டம் ஏன் ஒன்று பட்டு முடியாது போய்விடுகின்றது.


இந்தியாவில் தனித் தனி தேசியம் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பாட்டாளிகள் போராடுவதா அல்லது ஒன்றிணைந்து போராடுவதா? ஏகாதிபத்தியத்தை பலவீனப்படுத்தும். நிச்சயமாக ஒன்றிணைந்தே ஒழிய பிளவு பட்டல்ல. அடுத்து ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சொந்த சுரண்டும் வர்க்கத்திற்கு எதிராகவும் போராட வேண்டிய இந்திய தேசிய இனத்துக்கிடையில் என்ன தடை உண்டு? ஒவ்வொரு தேசிய இனத்தையும் பிளவு படுத்தி வைத்திருக்கும் கட்சிகள், சுரண்டும் பிரிவுகள், இந்திய ஆளும் வர்க்கங்கள் தானே ஒழிய மக்களுக்கிடையில் தேசியங்கள் மீது பகைமை காட்டும் ஒரு நிலையில் இந்திய சமூகம் இல்லை. நீ தமிழன், நீ ஆந்திரக் காரன் எனக் கூறி மக்கள் பார்க்கின்றார்களா இல்லை. மாறாக நாம் இந்தியன் என மக்கள் எனப் பார்க்கின்றனர்.


ஆளும் வர்க்கம் ஒரு இனத்தின் மீதான குறித்த ஒடுக்கு முறையின் போது தான், நான் யார் என்ற கேள்வி முன்வைக்கின்றான்.


பொதுப்பண்பாக தேசிய இன முரண்பாடு இல்லை. மாறாக ஒரு குறித்த ஒரு பண்பாகவே தேசிய இன முரண்பாடு உண்டு. அது பிரதான முரண்பாடாக இனங்களுக்கிடையில் தேசிய இன முரண்பாடாக இல்லை. மாறாக பகுதி முரண்பாடாக தேசிய இன முரண்பாடு இந்தியாவில் உண்டு. சில பிரதேசம் தவிர இது தான் பொதுத் தன்மை.


ஆளும் வர்க்கம் எந்தளவு இன முரண்பாட்டை தனது ஆட்சியின் ஊடாக முன் தள்ளுகின்றதோ அதை ஒட்டி தேசிய இன முரண்பாடு பாச்சல் அடைகின்றது. வர்க்க முரண்பாடு சமுதாயத்தில் எந்தளவு கூர்மை அடைகின்றதோ அந்தளவுக்கு இன முரண்பாட்டை பல்தேசிய நாட்டில் முன் தள்ளுகின்றன. பாட்டாளி வர்க்கம் எந்தளவுக்கு தம்மைத் தாம் சர்வதேசிய வாதியாக அடையாளப்படுத்துகின்றதோ, அந்தளவுக்கு தேசிய இன முரண்பாடு பின் தள்ளப்படுகின்றது.


தேசிய இன முரண்பாட்டை எந்தளவுக்கு பண்பியல் பாச்சலை எடுக்கின்றது என்பது, பாட்டாளி வர்க்கம் எந் நிலையில் உள்ளது என்பதுடன் தொடர்புடையதாகும். ஒடுக்கப்பட்ட தேசிய இனப் பாட்டாளிகள் ஆளும் வர்க்கத்தால் முன் தள்ளப்படும் தேசிய இன ஒடுக்கு முறையை எதிர்த்து ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளிகள் உடன் ஐக்கியப்பட்டு போராடாத நிலை ஏற்படும் போது ஒடுக்கும் தேசிய இன பூர்சுவா வர்க்கக் கோரிக்கையை முன் வைத்து, சொந்த சுரண்டலை மறைக்க எதிர் தேசிய இனத்துக்கு எதிராக (அரசை மட்டும் இன்றி மொத்த மக்களையும் இனங்காட்டி) போராட்டமாக தேசிய இனப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.


சோவியத் யூனியனில் தேசிய இன முரண்பாட்டை முன் தள்ளிய போதெல்லாம், அங்கிருந்த தேசிய இனப் பாட்டாளிகள் சர்வதேசிய வாதியாக அடையாளப் படுத்தி, தேசிய இன முரண்பாட்டை பின் தள்ள வைத்து ஆளும் வர்க்கத்தை அதன் கோட்பாட்டுத் தளத்தை நொருக்கினர்.


வியட்நாம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய போது வியட்நாம் பாட்டாளிகள் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடி தமது நாட்டை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க போராடிய அதே நேரம், வியட்நாம் பாட்டாளிகள் அமெரிக்க, பிரன்ஸ் ..... நாட்டுப் பாட்டாளிகளுடன் கைகோர்த்து அமெரிக்க நாட்டிலும் மற்றைய நாடுகளிலும் வியட்நாம் மக்களுக்கு சார்பாக போராட்டம் வெடித்தது.


சர்வதேசிய பார்வை மட்டும் தான் தேசியத்தை மீட்கும். தேசியம் ஒருக்காலும் சர்வதேசியமாகி விடாது. சர்வதேசியம் மட்டும் தான் தேசியத்தை ஜனநாயகக் கோரிக்கையைக் கண்டு போராடுகின்றது. தேசியம் எப்போதும் சர்வதேசியத்தை நட்பாகக் கருதாது எதிரியாகவும் பார்க்கிறது.


அதாவது சர்வதேசிய தொழிலாளர் போராட்டம் தான் தேசிய தோழிலாளர் போராட்டத்தை நடத்தும். ஒரு தேசிய தொழிலாளர் போராட்டம் ஒருக்காலும் சர்வதேசிய தொழிலாளர் போராட்டத்தை நடத்தாது.


தமிழ் நாடு தனக்கான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து தேசிய விடுதலையை எடுப்பின் அது முதலாளித்துவக் கோரிக்கையாகவே இருக்கும். இங்கு ஏகாதிபத்தியத்தை, தரகு முதலாளித்துவத்தை, ஆனால் வர்க்கத்தை எதிர்த்து போராட்டமாகக் கோரின், ஏன் அதை மாற்ற தேசிய இனத்துப் பாட்டாளி உடன் இணைந்து நடத்த முடியாது. நடத்த முடியாது எனக் கூறின் அதன் பின் மறைந்துள்ளது முதலாளித்துவ நலனே. அப்படி நடத்த முடியும் எனின் தனிநாட்டுக் கோரிக்கை என்பது தவறானதாகிவிடுகின்றது.


மறுபுறத்தில் ஆளும் வர்க்கம் ஒரு தேசிய இனத்தை அழித்தொழிக்கும் வகையில் தீவிர, அழித்தொழிப்பை தொடங்கிய நிலையில் கூட பல்தேசிய பாட்டாளி வர்க்கப் போராட்டமே ஒரே தீர்வு. ஒரே ஒரு நிலையில் மற்றைய தேசிய இனப் பாட்டாளிகள் தேசிய வாதத்துக்குப் பலியாகிப் போன நிலையில் மட்டும், தற்காப்புக் கருதி தனிநாட்டுக் கோரிக்கையை சுயநிர்ணயக் கோட்பாட்டில் நின்று முன்னெடுக்கும் அதே நேரம், தேசிய வாதத்துக்குப் பலியாகிப் போன மற்றைய இன பாட்டாளிகளை விழிப்புற வைக்கவும் போராடுகின்றது அதாவது இங்கு முதலாளித்துவ தேசியத்தை முறியடித்து அதனிடத்தில் பாட்டாளி வர்க்கத் தலைமையை பெறுவதன் மூலம் மீளவும் சர்வதேசிய நிலைக்கு நகர முடியும்.


சோவியத் புரட்சியின் போது, பின்னும் உலகு எங்கும் சர்வதேசிய வாதிகள் தேசியத்துக்குள் சீரழிந்து சிதைந்த போது சோவியத் பாட்டாளிகள் சோவியத் புரட்சியை மட்டும் நடத்தவும், அதேநேரம் அதை பாதுகாத்து போராடவும் செய்தனர். அவர்கள் சர்வதேசிய வாதியாக நின்ற படி தேசியத்தை பாதுகாக்க யுத்தத்தை நடத்தினர். அதேநேரம் தொழிலாளர் வர்க்கத்தை சர்வதேசியமாக மீளத் தட்டி எழுப்பினர். பாட்டாளி வர்க்கத் தலைமைகளை மீளக் கட்டி எழுப்பியதன் மூலம் சோவியத் மீது தாக்குதல் நடத்திய நாடுகள் மீது அந்த நாட்டுப் பாட்டாளிகளே போர் பிரகடனம் செய்தனர். இதன் மூலம் சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு சர்வதேசிய வாதியாக நின்று போராடினர். இது தான் ஒரு பல்தேசிய நாட்டின் நிலை இது அரக்காலனிய, நவகாலனிய என்பது அல்ல பிரச்சனை.


அரைக்காலணனிய, நவகாவனிய, முதலாளித்துவ நாடுகளுக்கு இடையில் உள்ள வேறுபாடு வௌவேறு பொருளாதார, அமைப்பு மீதான சுரண்டல் என்ற அச்சுக்கு மேல் உள்ள வௌவேறு பற்களும், வடிவங்களுமே ஒழிய வேறு ஒன்று அல்ல.


உலகளாவிய பாட்டளிவர்க்க யுத்ததந்திரம் பொது அடிப்படையை கொண்டவை. ஆனால் நாட்டுக்கு நாடு, பொருளாதாரத்துக்கு பொருளாதாரம், அரசு வடிவத்துக்கு வடிவம் குறிப்பாக வேறுபடுகின்றன. தேசியம், சர்வதேசியம் என்பன கையாளப்படும் வடிவம் பொதுவானவை. ஆனால் நாட்டுக்கு நாடு வேறுபடும் சிறப்பு இயல்புகள் தான் வேறுபாடான பாதையை முன்தள்ளுகின்றன.


அடுத்து அ.மார்க்ஸ் கூறுவதைப் பார்ப்போம் "லெனினுக்குப் பிந்திய காலங்களில் பாசிசமும் கூடத் தேசிய இன உணர்வைப் பயன்படுத்த முடியும். எனப் பார்ப்போம். எனவே தேசிய இன உணர்வு, சனநாயக உணர்வு போன்றவற்றை ஒரு குறிப்பிடப்பட்டவர்க்கத்தின் உணர்வாகப். பார்த்தால் பொருளில்லை என்பது புரிகிறது. ....... பாசிசம் தோன்றிய வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் போது அது ஏகபோக முதலாளியத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதல்ல என்பது தெரிகிறது. பல சந்தர்ப்பங்களில் ஏகபோக முதலாளியம் தொடக்கத்தில் பாசிசத்துடன் ஒத்துப் போகவில்லை என்பதையும் ஏகபோக முதலாளியம் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள எல்லா நாடுகளிலும் பாசிச நாசிச வடிவங்களையே எடுத்ததில்லை. என்பதையும் லக்லால், புவுலன்ட்சாஸ் போன்றோர் சுட்டிக் காட்டுவது குறிப்பிடத் தக்கது." என தேசியத்தை வர்க்கமற்றதாகக் காட்ட முனைகின்றார்.


லெனின் காலத்தின் பின் எனக் குறிப்பிடுவது லெனினின் பெயரால் லெனினின் தேசிய சுயநிர்ணய உணர்வுக் கோட்பாட்டை, அதன் அடிப்படையில் தேசியத்துக்கு உள்ள வர்க்க குணாம்சத்தை மறுதலிக்கவே ஒழிய வேறொன்றும் அல்ல. சோவித் புரட்சியின் பின் உலகளவில் தேசிய முதலாளிகள் தேசியப் போராட்டத்தை முன்னெடுத்த முற்போக்கு பாத்திரத்தை இழந்து போனது என்பது, ஏதோ வர்க்கமின்றி இழந்தது அல்ல. உலகளவில் பாட்டாளி வர்க்கம் தான் போராடவும், அதிகாரத்தைக் கைப்பற்றி ஆளமுடியும் என்பது நிறுவியதன் மூலம், உலகளவில் இரண்டு ஆளும் வர்க்கப் பிரிவுகள் தான் இருக்க முடியும் என்பதை இந்த ஏகாதிபத்துpய சகாப்பத்தில் காட்டி உள்ளது. ஒன்று ஏகாதிபத்தியமும், அதன் எடுபிடிகளும், மற்றது பாட்டாளி வர்க்கம் மட்டுமே.


தேசிய முதலாளித்துவத்தால் முன்னெடுக்க முனையும் தனது கனவு கொத்தளங்களை சுயாதீனமாக ஏகாதிபத்திய யுகத்தில் வைத்திருக்க முன்னெடுக்க முடியாத ஏகாதிபத்திய சகாப்தம், சோவியத் புரட்சியின் பின் தீர்க்கமாகியுள்ளது. அது அல்லது இது என்பதைத் தீர்மானிக்க தேசிய முதலாளிகளுக்கு சவால் விட்டது. சோவியத் புரட்சி இது அல்லது அது என்பதால் தேசிய முதலாளித்தவப் பிரிவின் தெரிவு தான் பாசிசமா அல்லது இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்றது.
ஒரு சனநாயகப் போராட்டம் எனின் பாட்டாளிகளுடனும், பாசிசப் போராட்டம் எனின் தரகு முதலாளிகளுடனும் இணைவது தேசிய முதலாளிகள் முன் உள்ள ஒன்றாக உள்ளது.


உலகளவில் நடைபெறும் தேசிய இனப் போராட்டங்கள் இந்த இரண்டில் ஒன்றை தெரிய வேண்டிய ஒரு நிலைக்கு உள்ளாகின்றனர். ஈழம், பஞ்சாப், காஸ்மீர், செர்பியா ........ மற்றும் அனைத்துப் போராட்டமும் இதில் ஒன்றை உடனடியாகவோ அல்லது சிறிது காலத்திலேயோ வந்தடைவதன் மூலம் அதன் சனநாயகத் தன்மை அல்லது பாசிசத்தை வெளிப்படுத்துகின்றன.


பாசிசம் என்பது நிச்சயமாக தேசியத்தில் தான் உருவாக வேண்டும் என்றல்ல. பாசிசம் என்பது உற்பத்தி முறை மீதான அரசு வடிவமையும் அந்த உற்பத்தி முறை மீதான வர்க்கப் போராட்டத்தினைப் பொறுத்து ஆளும் வர்க்கம் தெரிவு செய்யும் ஆட்சி முறையுமே ஒழிய வேறு ஒன்றும் அல்ல.


இருக்கும் உற்பத்தி முறை நடக்கும் வர்க்கப் போராட்டத்தை இனியும் இருக்கும் அமைப்பால் தடுக்க முடியாது போகின்ற போது பாசிசம், பின் நாசிசம் என முன்வைக்கும் ஆட்சி முறை பண்பியல் ரீதியில் வேறுபட்ட ஆளும் வர்க்கங்களின் வௌவேறு வடிவங்களே. இவை இருக்கும் உற்பத்தி முறையையும் அரசு வடிவத்தையும் மட்டும் மீறுவது இல்லை.


இந்த வடிவத்தின் தெரிவுக்கு தேசியம் கூட பயன்பட முடியுமே ஒழிய நிபந்தனை அல்ல. தேசியப் போராட்டம் ஆனால் வர்க்கக் கனவை நிறைவு செய்ய உற்பத்தி முறை மீதான அரசு வடிவைப் பாதுகாக்க வர்க்கப் போராட்டத்தின் மீது ஆளும் வர்க்கம் தேசிய இனத்தைப் பிளந்து ஆளும் ஆட்சி முறையே தேசியமாக உள்ளது. இது மக்களுக்கான சனநாயகப் போராட்டமாக அல்லது இல்லாது இருக்க தேசிய இனப் போராட்டம் வௌவேறு வடிவங்களைத் தெரிவு செய்கின்றன. ஆனால் அடிப்படை உள்ளடக்கம் மட்டும் எப்போதும் ஒன்றாகவே உள்ளது.


பாசிசத்தை முதலாம் உலக நாடுகளில் ஏகபோக முதலாளிகள் ஆதரிப்பது இல்லை என்ற அ.மார்க்சின் கண்டு பிடிப்பு ஏகாதிபத்திய சகாப்தத்தில் நகைப்புக்கு உரியது. பாசிசம் ஆளும் வர்க்கத்தை மீறி வர முடியும் என்பது கண்கட்டி வித்தையே. பாசிசம் இருக்கும் உற்பத்தி முறை மீதான அரசு வடிவமே. அதன் மீதான வர்க்கப் போராட்டத்தின் மீது ஆளும் வர்க்கம் தெரிவு செய்யும் ஆட்சி முறையே ஒழிய, அந்தரத்தில் இருந்து மிதப்பதில்லை. பாசிசத்தை சிலவேளை ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் ஏற்காமல் இருக்கலாம். அதாவது ஆளும் வர்க்கங்களுக்குள் உள்ள முரண்பாட்டினை வைத்து பாசிசத்துக்கும், தேசியத்துக்கும் வர்க்கமில்லை என காட்ட முனையும் அ.மார்க்ஸ் என்ன இந்தியாவில் நித்திரையா கொள்கிறார்.


ஆளும் வர்க்கத்தின் முரண்பட்ட பிரிவுகள் இருக்கும் உற்பத்தி முறை மீதான அரசு வடிவத்தையும் அதன் மீதான வர்க்கப் போராட்டத்தைப் பொறுத்து ஆட்சி முறையில் வௌவேறு வடிவங்களை, பிரேரணைகளை முரண்பட்டபடி முன்வைக்கின்றன. இந்தியாவில் இருக்கும் உற்பத்தி முறையை அதன் மீதான அரசு வடிவத்தை எதிர்த்த வர்க்கப் போராட்டத்தை கட்டுப்படுத்தி காங்கிரஸ், பாரதீக ஜனதா போன்ற அனைத்துக் கட்சியும் முரண்பட்டபடி முன்வைக்கும் ஆட்சி முறையைக் கொண்டு, பாரதீக ஜனதா முன்வைக்கும் இந்து பாசிசத்தை தரகு முதலாளிகள் ஏற்கவில்லை எனக் கூறுவது அபத்தம் நிறைந்தது. பாசிசம், தேசியம் என்பன ஆளும் வர்க்க உற்பத்தி முறை மீதான வர்க்கப் போராட்டத்தை தடுக்க முன்வைக்கும் வடிவங்களே. இங்கு இவை ஆளும் வர்க்கத்தின் உற்பத்தி முறை மீதான வர்க்கப் போராட்டத்தின் மீது தனது வர்க்கக் கண்ணோட்டத்துடன் இதை கட்டி அமைக்கின்றன.


"நான்கு இறுக்கமான பண்புகளோடு வளர்ந்து வரும் முதலாளியக் கட்டத்தோடு தேசியத்தை இணைத்துப் பார்க்கும் ஸ்ராலினிய வரையறை இன்றைக்கும் பொருந்தாது. தேசிய முதலாளிகள், தமிழ் தேசிய முதலாளிகள் என்றெல்லாம் பெரும் முதலாளிகள் யாரையும் அடையாளம் காட்ட முடியாது." என நிறப்பிரிகை முன்வைக்கும் வாதம் இந்தியாவில் இவர்கள் உயிருடன் யதார்த்தமாக இருக்கின்றார்களா என்பதை கேள்விக்குள்ளாக்கி விடுகின்றது.


இந்தியா உலக மயமாதலுக்குள் முற்று முழுதாக சென்று சிறு உற்பத்திகளைக் கூட இழந்து விட்டதா? ஏகாதிபத்தியங்களால் இன்று பாரிய உலகமயமாதலைக் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ள நிலையில், இன்னமும் தேசிய முதலாளிகள் உள்ளதுடன், அரசுக்கு எதிராக பாரிய போராட்டங்களை வன்முறையுடன் நடத்துகின்றனர்.


பின் தங்கிய இந்தியாவில் சிறு கைத்தொழில் மூலம் விரிவுபடுத்தப்பட்ட பெரிய உற்பத்திகள் வரை தேசிய உற்பத்தி நிறையவே நீண்டு உள்ளன. அதாவது அண்மையில் ஏகாதிபத்தியத்தால் சிறுவர் உழைப்பதை தடைசெய்யக் கோரும் மகாநாடுகள் கூட இந்தியாவிலும், மற்றை நாடுகளிலும் உள்ளுர் தேசிய உற்பத்தி மீதான தடையைக் கொண்டதாகவும், அதன் மூலம் அதை விழுங்கி விடச் செய்யும் ஒருபக்க முயற்சியின் விளைவே இவைகள்.


அமெரிக்கா அடிக்கடி இந்திய உற்பத்திகளைத் தடைசெய்யப் போவதாக மிரட்டுவது இந்தித் தேசிய உற்பத்திகளையே. நாளாந்த வாழ்வில் சிறு உற்பத்துp முதல் பெரிய உற்பத்திவரை நீண்டு கிடக்கும் இந்தியாவில் தமிழ் முதலாளிகள் இல்லை என்பது நகைப்புக்குரியது. இந்தப் பிரிவு அழிக்கப்படுகின்றது விழுங்கப்படுகின்றது. சரணடைந்தவர்களும், தோற்றவர்களும், புதியவர்களும் அதைக்கொண்டு மீண்டும் மீண்டும் தமது சுரண்டல் கனவுடன் மேல வருவதும், தோற்றுப்போவதும் நிகழ்வாக உள்ளது.


இந்தியாவில் தேசிய முதலாளிகள் உள்ளனர். ஆனால் அதிகாரம் இல்லை. தரகு முதலாளிகளுடன் முரண்பட்டு படியும், தேசம் கடந்த கம்பனிகளுடன் முரண்பட்டபடியும் இந்தப்பிரிவு நலிவடைந்து போய் உள்ளது. இன்று நலிவடைந்த பிரிவை ஒழித்துக் கட்டும் முயற்சியில் தேசங்கடந்து பன்னாட்டு நிறுவனங்கள் வலைப்பின்னலை வீசி எறீந்துள்ளது. இந்த தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் கூட முரண்பாட்டை சந்திக்கின்றனர். அந்தளவுக்கு இது தனது கொடூரத்தை விரிக்கின்றது.


தேசிய முதலாளிகள் இல்லை அல்லது இருக்கின்றனர் என்றே எடுப்போம் அப்படியாயின் ஏன் ஸ்ராலினின் வரையறை தவறானது. தேசிய முதலாளிகள் இல்லை அல்லது இருக்கிறது எனின் அங்கு தரகு முதலாளிகளே இருக்க வேண்டும். அப்படி ஆயின் இந்த தரகு முதலாளிக்கு எதிராக தேசிய முதலாளிகள் தமது நலனுக்காக ஏன் போராட முடியாது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்டிருந்து சோவியத்திலும், சீனாவிலும் ஒழித்துக்கட்டப்பட்டு மூலதனத்தின் பின் கூட, முதலாளித்துவ வர்க்கம் மேல் எழுந்து ஆட்சியைப் பிடித்துள்ளது. வர்க்கப் போராட்டம் நிகழ்ச்சி நிரலில் இருந்து கூட பிரதான முரண்பாடாக இதுவாக இருக்கும் போது சொத்துரிமை மீதான ஜனநாயக நாட்டில் ஒரு தேசிய முதலாளிகள் உருவாக்கம் பல பலவாக எழுவதும் ஒரு இயங்கியல். சொத்துரிமை வைத்துக் கொள்ளவும், சுரண்டல் உள்ள உரிமை ஜனநாயகமாக சுதந்திரமாக உள்ள போது, உலக மயமாதலுக்கு எதிரான தேசிய வாதம் எழுவதும், அதை முன்னெடுக்க தேசிய முதலாளித்துவப் பிரிவு முன்வருவதும் யதார்த்தமாக உள்ளது.


தேசியம் ஒரு கற்பிதம் என்ற நூலின் கல்யானி "சனநாயகத்தைச் சுயேட்சையாகப் பார்க்கலாம் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு" என்கின்றார். சனநாயகம் என்பது என்ன மனித இடைவெளிகளின் மீது தான் சனநாயகம் செயற்படுகிறது. இரண்டு மனிதர்களுக்கு உள்ள இடைவெளிதான் சனநாயகம் மற்றும் அழகியல். ஒப்பீட்டின் படிமங்களே சனநாயகம். சுயேட்சையான சனநாயகம் என்பது ஒன்று இருக்கவே முடியாது. மனித இடைவெளி அகன்றால் சனநாயகம் இல்லாது போய்விடுகின்றது. வர்க்க சமுதாயத்தில் தான் யாருக்கு சனநாயகம் என்ற கேள்வி எழுகின்றது.


வீதியில் நடக்கும் ஒர் ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டத்தின் நியாயமான கோரிக்கையை எந்த சனநாயகம் ஏற்றுக் கொள்ளும் என்ற கேள்வியைக் கேட்பது சிறந்தது.


ஒரு நாட்டின், ஒரு சமூகத்தின், ஒரு மனிதனின் சுதந்திரங்கள், செயற்பாடுகள் என அனைத்தையும் இருக்கும் சட்டம் தான் வகுக்கின்றது. சட்ட வரையறை மீறி சனநாயகம் இருப்பது இல்லை. சனநாயகம் என்பது உற்பத்தி முறையில் உருவாக்கப்படுகின்றது. இருக்கும் உற்பத்தி முறை மீது, அரசு வடிவத்தின் மீது நடக்கும் வர்க்கப் போராட்டத்துக்கு ஏற்ப உருவாக்கப்படும் ஆட்சி முறைக்கு இசைவானது தான் சட்டம். ஆகவே சட்டம் எப்போதும் ஒரு நிரந்தரமான வகைப்பட்டது அல்ல. மாறாக அவை மாறுகின்றன. சனநாயகம் என்பது மாறுகின்றது. ஆளும் ஆட்சி முறைக்கு ஏற்ப சட்டமும் மாறும் போது சனநாயகமும் மாறுகின்றது. சமுதாயத்தில் என்றும் சுயாட்சியான சனநாயகம் இருந்தது இல்லை, இருக்கப் போவதும் இல்லை. வர்க்கமற்ற சமுதாயத்தில் சனநாயகம் ஒழிந்து போகின்றது.