ஒரு தேசம் வரலாற்று ரீதியானவை என்கின்ற போது அது திட்டுமிட்டு உருவானவை அல்ல. மாறாக அது பொருளாதார அமைப்பு மீது கட்டப்பட்வை. அதுபோல் ஏகாதிபத்தியம் ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் மீது கட்டப்பட்டவை தான்.


பஞ்சாப், காஷ்மீர், பாக்கிஸ்தான், கிழக்கு வங்காளம் என்பன தனியான தேசமாக இருப்பதால் தான் அவை தனியாகப் போராடியதும், தனிநாடக இருக்கவும், நீடிக்கவும் கோருகின்றன. யாரும் இந்த நாட்டின் பாரம்பரிய வரலாறு மீது திட்டமிட்டு தேசத்தைக் கோரவில்லை. மாறாக இவை தேசமாக இருப்பதால் ஒரு குறித்த மக்கள் கூட்டத்தின் வாழ்வில் தனதாக அடையாளப்படுத்தி தேசிய உற்பத்தி முறை மீது, தேசியத்தை அடையாளப்படுத்தி மக்கள் போராடுகின்றனர். இங்கு மக்கள் என்கின்ற போது மக்களின் இயல்பான பூர்சுவா சிந்தனையைத் தான் குறிப்பிடுகின்றேன்.


ஏதோ, யாரோ அடையாளப் படுத்தி விடுவதை யாரும் தூக்கிப் பிடிப்பதில்லை. மாறாக அது அதுவாகவே உள்ளது. பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை மார்க்ஸ் அடையாளப்படுத்தவில்லை மாறாக பாட்டாளி வர்க்கம் தான் ஒரு வர்க்கமாக, தான் போராடும் தகமை கொண்ட போராட்ட வரலாற்றை தாமாகவே உற்பத்தி முறை மீது வர்க்கப் போராட்டத்தின் ஊடே கொண்டு இருந்தனர். அது வரலாற்று பாரம்பரியத்தை தாமாகவே இருக்கும் பொருளாதாரக் கட்டமைப்பின் ஊடாக இனங்கண்டு போராடினர், போராடுகின்றனர். மார்க்ஸ் அதை ஒழுங்கு படுத்தி தொகுத்துக் கொடுத்ததற்கு, நிறுவியதற்கு அப்பால் மார்க்ஸ் வேறு எதையும் அதற்கு மேல் செய்யவில்லை.


இப்போது தான் தேசியம், தேச மக்கள் தமது தேச விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த போது தான் தேச விடுதலை கோட்பாடுகளை வகுக்கும் தேவை எழுந்தது. யாரும் திட்டமிட்ட தேசிய விடுதலைக் கோட்பாட்டை உருவாக்கி, தேச விடுதலைப் போராட்டத்தை உருவாக்கி தேசத்தை அடையாளப்படுத்தவில்லை. தேசம் தான் தேசிய விடுதலைப் போராட்டத்தை உருவாக்கியது. உற்பத்திமுறை தான் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தின. அது தான் தேசியவிடுதலை கோட்பாடுகளைக் கோரியது.


அ.மார்க்ஸ் வகுக்கும் "தேசிய கற்பிதம்" என்ற கோட்பாடு முன்பே, தேசமும் அதை ஒட்டிய தேசிய விடுதலைப் போராட்டங்களும் இருந்தன. யாரும் திட்டமிட்டு உருவாக்கவில்லை. ஒரு சமூகம் தான் முன்னேற எது தடையோ அதைத் தகர்த்த பாச்சல் தான் வர்க்கப் போராட்டங்கள். எனவே சமூகம் முன்கூட்டியே உருவாகி விடுகின்றது. தேசத்தை யாரும் "கற்பிதம்" செய்ய முடியாது. மாறாக மக்கள் தமது சொந்தப் போராட்டத்தின் ஊடாக இருக்கும் உற்பத்தி முறை மீதான தேசத்தின் மீது தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்துகின்றனர். மாறாக அ.மார்க்சின் கற்பனையில் உதிக்கும் கற்பிதங்கள் என்ற தேச விடுதலைப் போர் தேசத்தை உருவாக்குவதில்லை. அப்படிக் கூறுபவன் உண்மையில் இருக்கும் தேசத்தை மறுக்கிறான்.


இந்த திட்டமிட்ட என்ற கருத்தை அ.மார்க்ஸ் இன்னும் ஒரு இடத்தில் "இந்தக் கருத்தின் இன்னொரு வெளிப்பாடு சோசலிசக் கட்த்தில் தேசிய உணர்வு இருக்காது என்பதும், தேசியப் போராட்டங்கள் நியாயமற்றவை, ஒடுக்கப்பட வேண்டியவை என்கின்ற வாதமாகும். இது எத்தனை தூரம் பொய்யானது தவறானது என்பதற்கு இன்றைய ரஷ்சியா மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளின் வரலாறு நமக்கு சான்று பகர்கிறது. இதை எல்லாம் சொல்வதால் தேசிய இன உணர்வு உருவாக்கத்தில் மொழி, நில எல்லை, வரலாறு, பண்பாடு ஆகிவற்றிற்கும் பங்கே இல்லை என்பதல்ல. திட்டமிட்டு உருவாக்கப்படும் தேசிய உணர்வு என்பது இவற்றின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட முடியும்" என அ.மார்க்ஸ் கூறுகின்றார். அதாவது தேசிய உணர்வு திட்மிட்டு உருவாக்கப்பட்டவை படுபவை என்கிறார்


எந்த ஒரு உற்பத்தி முறை மீதான பொருளும் போராட்டம், அது எதில் இருந்து உருவாகின்றதோ அதில் மையமிடுகின்றது. தேசியம் என்பது அங்குள்ள தேசியப் பொருளாதாரத்தின் மீதும் அதாவது உற்பத்தி முறை மீதும், சுரண்டும் அடிப்படை மீதும் கட்டி அமைக்கப்படுகின்றது. பாட்டாளி வர்க்கப் போராட்டும் முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பின் மீது (உற்பத்தி முறைமீது) உருவான பாட்டாளி வர்க்கத்தால் கட்டமைக்கப்படுகின்றன.


தேசியம், பாட்டாளி வர்க்க உணர்வு என்பன யாரும் திட்டமிட்டு உருவாக்க முடியாது. அங்குள்ள சமூகப் பொருளாதார நிலமைகள் தான் அதை உருவாக்குகின்றன. அந்த உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்றன. உற்பத்தி முறை மீதான அரசு வடிவத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டம் தான் திட்டமிட்ட கோட்பாட்டை முன்வைத்து திட்டுமிட்ட போராட்டத்தை, திட்டமிட்ட உணர்வை தட்டி எழுப்பி முன்னெடுக்க முடியும். முதலில் பொருள் அதாவது உற்பத்தி முறை அடையாளப்படுத்தப் படுகின்றது. அதாவது பொருள் இன்றி திட்டமோ, கருத்தோ உருவாக முடியாது. முதலில் பொருள் பொருளாக பரிணமிக்கின்றது. இது சமூகத்தில் இருக்கும் சமூகப் பொருளாதார, வர்க்க முரண்பாடுகளுடன் அரங்கேறுகின்றது. அதன்பின்தான் போராட்டம் எழுகின்றது.


ஒரு முதலாளித்துவ அரசில் இப்படியான ஆட்சி முறை என யாரும் முன்கூட்டி திட்டம் போட்டு விட முடியாது. மாறாக முதலாளித்துவ உற்பத்தி முறை தான் அரசு வடிவ முறையைத் தீர்மானிக்கின்றது. அந்த உற்பத்தியில் ஏற்படும் வர்க்க முரண்பாடுதான் ஆட்சி முறையைத் தீர்மானிக்கின்றது.


இதுதான் சோசலிசத்துக்கும், எனவே முன்கூட்டி திட்டமிட்டு பொருள் இன்றி பொருளே உருவாக முடியாது. தேசம் இன்றி யாரும் முன்கூட்டி தேசியத்தை உருவாக்க முடியாது. இப்படிச் சொல்பவன் கருத்து முதல் வாதியாவான்.


தேசம் தான் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தின. தேசிய தேசிய விடுதலைப் போராட்டம் தேசத்தை உருவாக்குவது இல்லை. மாறாக அரசைத்தான் உருவாக்குகின்றன. பொருள் இன்றி இயக்கம் இருக்க முடியாது. இங்கு தேசம், ஒரு அரசு முன்கூட்டியே இருக்கவேண்டும் என்பது அல்ல. ஆனால் தேசமாகக் கூடிய நிலையை முன்கூட்டியே அடைந்து விடுகின்றது.


ஒரு மேசையை எடுத்தால் மேசைதான் மேசை உற்பத்திக்கான செயலை நகர்த்துகின்றது. செயல் மேசையாகி விடாது. முதல் பொருள் யதார்த்தத்தில் மனிதனில் பதியும் போது தான் செயல் அதிலிருந்து பிறக்கின்றது. ஒரு சோசலிச நாடாக இருக்க முடியும் என்ற உற்பத்தி முறை மீதான அரசும் அதன் மீதான வர்க்கப் போராட்மும் தான் சோசலிச போராட்டத்தை நடத்துகின்றன.


உலகில் தேசம் உருவாகமுன் தேசிய விடுதலைப் போராட்டத்தை எடுத்து தேசத்தை யாரும் உருவாக்க முடியாது. அப்படி நடக்கவும் இல்லை. மாறாக முதலில் தேசம் (ஸ்ராலின் வரையறையில்) உருவாகின போது, உருவாகின்ற போது தேசிய விடுதலைப் போராட்டம் நடக்கின்றன. எனவே எப்போதும் பொருள் முதன்மையானது.


சோசலிச நாடுகளில் தேசிய உணர்வு இருக்காது என்பது அடிப்படையில் தவறானது. இது மார்க்சியத்தின் மீதான இயங்கியலை மறுப்பதாகும். கம்யூனிச சமூகத்தில் மட்டும் தான் தேசிய உணர்வு இருக்க முடியாது. எப்படி முதலாளித்துவத்திற்கு முன் தேசிய உணர்வு இல்லையோ அதுபோல் தேசிய உணர்வு கம்யூனிச சமூகத்தில் இருக்க முடியாது. முதலாளித்துவத்திற்கு முன் இருந்த உணர்வுக்குப் பதில் கம்யூனிச சமூகத்தில் மனிதர்களை மனிதர்களாக மற்றவனை பிளந்து பார்ப்பது இல்லை. எல்லா முரண்பாடுகளும் இடைவெளிகளும். உலகளவில் கடக்கப்பட வேண்டும்.


சோசலிச சமூகத்தில் எப்படி தேசிய உணர்வு உள்ளது எனப் பார்ப்போம். ஒன்று சோசலிச நாடு மீதான ஏகாதிபத்தியத்தின் ஒடுக்கு முறைக்கு எதிரான தேசிய உணர்வு இருக்கும். இந்தத் தேசியம் அவர்கள் மீது ஏகாதிபத்தியமாக திணிக்கின்றது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு எதிரான இத் தேசியம் ஏகாதிபத்திய உழைக்கும் மக்களுக்கு எதிராக இருப்பது இல்லை. இங்கு சர்வதேசிய வாதியாக சோசலிச நாடு இருக்கின்றது. இங்கு ஒரு நிலையில் தேசியமாகவும் மறுநிலையில் சர்வதேசியமாகவும் காணப்படுகின்றது. இத்தேசியம் என்பது கூட முதலாளித்துவ அடிப்படையைக் கொண்டது. சொந்த வர்க்கத்தைப் பாதுகாக்க, சூறையாடுதலுக்கு எதிராக சொந்த நாடும், உலக பாட்டாளிகளுக்குமாக என்ற வரையறையில் இது ஒரு தேசியமாக உள்ளது. சர்வதேச உற்பத்தி பங்கீடுகளில் சோசலிச நாடு தனது உற்பத்தி என்ற ஏகாதிபத்திய சூறையாடலுக்கு எதிரான நிலையில் ஒரு தேசிய முதலாளியாக உள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் தனக்குச் சாதகமாக ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடுகின்றது. இது உழைக்கும் மக்களை எதிர்த்து அல்ல. அவர்களை சர்வதேசியமாக இனங்கண்டு அவர்களின் துணையுடன் சூறையாடுபவர்களை எதிர்த்து சர்வதேசியத்தில் போராடுகின்றது. ஆனால் மூன்றாம் உலக நாடுகளுடன் இரண்டு தேசிய முதலாளிகளுக்கு உள்ளது போன்று அல்லது உதவும் வகையில் போராட்டத்தைக் கைக் கொள்கின்றது. மூன்றாம் உலக நாடுகள் என்ன கொள்கையை சோசலிச நாடுகள் மீது கொண்டுள்ளது என்பதுடன், உள்நாட்டில் என்ன கொள்கை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கொண்டுள்ளது என்று பல விடையத்தைக் அடிப்படையாகக் கொண்டது.


அடுத்து ஒரு பல்தேசிய சோசலிச நாடுகளில் தேசிய இன முரண்பாடு என்பது வர்க்க முரண்பாடு நீடிக்கும் வரை நீடிக்கும், வர்க்கப் போராட்டத்தின் தளத்தில் தான் இதன் பலம் பலவீனம் தீர்மானிக்கப்படுகின்றது. பாட்டாளி வர்க்கம் எப்போது பலவீனப்படுகின்றதோ அப்போது தேசிய இன முரண்பாடு அரங்கிற்கு வரும்.

 
பாட்டாளி வர்க்கத்துக்கு பதில் முதலாளித்துவப் பிரிவு ஆட்சியில் அமர்ந்தால் அல்லது தேசிய இனங்களில் தேசிய முதலாளித்துவம் முன்நிலைக்கு வரின் தேசிய இன முரண்பாடு வெளிப்படும்.


ஒரு பாட்டாளி வர்க்க ஆட்சி உள்ளவரை மற்றைய நாட்டு இன முரண்பாடு முன்னணிக்கு வரும் வகையில, தேசிய இன ஒடுக்கு முறையாக இருக்க முடியாது. அப்படி ஒரு நிலை ஏற்படின் அது பாட்டாளி வர்க்க ஆட்சியாக இருக்க முடியாது. பாட்டாளி வர்க்க ஆட்சியில் உள் உள்ள முதலாளித்துவப் பிரிவுகளின் வெளிப்படுத்தும் வலது இடது சந்தர்ப்பவாத நிகழ்வுகள் ஏற்படின் கூட தேசிய இன முரண்பாடு ஏற்படும். இதைக் கட்சி திருத்திக் கொள்ளும் போது தேசிய இன முரண்பாடு பின் தள்ளப்படும். ஒரு பாட்டாளி வர்க்க ஆட்சியில் ஏற்படும் பாட்டாளி வர்க்க விலகல் மட்டுமே தேசிய இன முரண்பாட்டை அரசு ஏற்படுத்தும். மறுபுறம் தேசிய இனத்தில் உள்ள சுரண்டும் பிரிவுகள் மீள இழந்த அதிகாரத்தைக் கைப்பற்ற, மக்களிடம் சோசலிச சமூகத்தில் காணப்படும் பின் தங்கிய விட்டுப் போன பழைய எச்சங்கள் மீது நின்று தேசிய உணர்வை எழுப்ப முடியும்.


இங்கு வர்க்க அடிப்படையில் இனத்தைக் கண்டு கொண்டு உழைக்கும் மக்களின் ஐக்கியத்தை முன் வைப்பதன் மூலம், சுரண்டும் வர்க்க நலனை இனங் காட்டி போராடுவதன் மூலம் இதை ஒழித்துக் கட்டுவது, ஒரு வர்க்கப் போராட்ட அடிப்படையாகும். இன்னும் ஒரு புறத்தில் சோசலிச அரசு முதலாளித்துவ மீட்சி நடக்கும் போது ஒரு தேசிய இனம் சரியான பாட்டாளி வர்க்க நிலையை முன்வைத்துப் போராடும் போது தேசிய இன முரண்பாடு முன்நிலைக்கு வர முடியும். இது சர்வதேசிய நிலையில் நின்று போராடவும், முடியாத போது பிரிந்து செல்லவும் வாய்ப்பு உள்ளது. சோசலிச நாடுகளில் இந்த வகையில் தான் தேசிய இன முரண்பாடு வெடிக்கும்.


ரஷ்சிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளை அ.மார்க்ஸ் உதாரணம் காட்டுகின்றார். மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடான வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாத, அ.மார்க்ஸ் எப்படி ஒரு சோசலிச நாட்டை சோசலிச நாடு என்று எதைக் கொண்டு பகுத்தாய முடியும். 1950களின் இறுதியில் சோவியத்துகளிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் வர்க்கப் போராட்டத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கைவிட்டபின் அது ஒரு சோசலிச நாடே இல்லை. அப்படி இருக்க அங்கு அரங்கேறிய தேசிய இன முரண்பாடு முதலாளித்துவ நாடுகளுக்கு இடையிலானதாகவே இருந்தன. நாளை இது சீனாவிலும் நடக்கும்.