Language Selection

பி.இரயாகரன் 1996-2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லெனின் என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம். "தேசிய அரசு என்பது முதலாளித்துவத்தின் விதியும் பொது வழக்கும் ஆகும்" தே.இ.சு.உ.-லெனின்-


உண்மையில் தேசியம் என்பது முதலாளித்துவத்தின் கோரிக்கையே ஒழிய பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கை அல்ல. உலகில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நடைபெற்ற ஆயிரம் ஆயிரம் தேசிய விடுதலைப் போராட்டங்களை பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்கவில்லை. மாறாக தேசிய முதலாளித்துவப் பிரிவுகளால் தான் கோரப்பட்டன. இங்கு சர்வதேசிய வாதிகள் இந்த ஜனநாயகக் கோரிக்கையை அங்கீகரித்து ஆதரித்த அதேநேரம், அதை விமர்சித்து சர்வதேசியக் கண்ணோட்டத்திலும் முன்னெடுக்கின்றனர்.


தேசியம் ஏன் முதலாளித்துவ பிரிவுகளின் கோரிக்கையாக உள்ளது. நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவப் பொருளாதாரத்தை முன்னெடுக்கும் போதும், அரைக் காலனி அரை நிலப்பிரபுத்துவத்தில் அல்லது நலகாலனியில் இருந்து முதலாளித்துவத்தை கோரிய போதும், தரகு முதலாளிக்கு எதிராக தேசிய முதலாளித்துவத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் தான் தேசியம் மையப்படுகின்றது.


ஒரு முதலாளிப்பிரிவு தேசியத்தைக் கோரும் போது அதனுடன் கூடிய பல விடையங்கள் அதை ஒட்டி செயல்படுகின்றன, என்பதை மார்க்சிய வாதிகள் மறுப்பதில்லை. பொதுவில் அவைகளே இதன் மீதான உயிர் மூச்சாக இருக்கின்றது. காலனி, அரைக்காலனி, நவகாலனி நாடுகளில் கூட தேசிய முதலாளிகள் தமது சொந்தப் பொருளாதாரத்தை மையமாக வைத்தே தேசியத்தைக் கோருகின்றனர். ஆனால் பாட்டாளிகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளுர் தரகுப் பிரிவுக்கு எதிராக ஒரு வர்க்கப் போராட்டத்தை சர்வதேசியக் கண்ணோட்டத்தில் ஒரு நாட்டுக்குள்ளும் கோருகின்றனர். இது முதலாளித்துவ தேசியத்தை பகுதியளவில் உள்ளடக்குவதால் தான் இது புதிய ஜனநாயகப் புரட்சியாக உள்ளது. புதிய ஜனநாயகப் புரட்சி என்பது வர்க்கம் மற்றும், முதலாளித்துவ தேசியப் புரட்சியை சாரம்சத்தில் உள்ளடக்கி உள்ளது. அதாவது வர்க்க சக்திகள் தேசிய முதலாளித்துவத்துடன் இணைந்து ஒன்றிணைந்த புரட்சியை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் முன்னெடுக்கின்றனர். இது முதலாளித்துவ தேசியப் பொருளாதாரத்தை கோரும் அதே நேரம் வர்க்கப் போரை உள்ளடக்கி உள்ளது. இது சாரம்சத்தில் சர்வதேசியக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட போராட்டமாகும்.


காலனிகளைக் கைப்பற்றிய போது அந்தக் காலனித்துவக் காலத்தில் காலனிகள் ஒரே தேசமாக பெரும்பாலும் இருந்தது இல்லை. இந்த நாடுகளைக் கைப்பற்றிய நாடுகள் தமக்கு சார்பான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தியதன் தொடர்ச்சியாலும், உள்ளுர் பிரிவுகளின் வளர்ச்சியாலும் புதிய முதலாளித்துவப் பிரிவுகள் எழுச்சி பெற முயன்றன. இதனால் தம்மை தேசியமாக இனங்கண்டு கொள்ளுதல் உள்ளுர் சந்தையைக் கைப்பற்றவும் நடந்த முரண்பாட்டிலும் வர்க்கப் போராட்டத்தின் விளைவிலும் தேசியக் கோரிக்கை விழிப்புணர்ச்சிக்கு வந்தன. இங்கு தேசியக் கோரிக்கை என்பது தேசிய முதலாளிகளின் அடிப்படை நலன்களில் இருந்து தான் எழுச்சி பெற்றன.


தேசிய முதலாளித்துவப் பிரிவுகள் அடிமட்ட உழைக்கும் பிரிவுகள் முன, தனது சுரண்டல் மூலம் கூடுதல் லாபம் பெற முடியும் என்ற வாக்குறுதிகளில் தான், அவர்கள் தேசிய முதலாளித்துவ சிந்தனையின் அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுத்தனர். அது பாட்டாளி வர்க்கத் தலைமையில் அல்ல.


1917 சோவியத் புரட்சியின் பின் காலனி நாடுகளில் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் உருவாகிய போது, தேசியமாக உருவாகி வந்த தேசியத்தின் சுதந்திரத்திற்கான சுயநிர்ணயக் கோரிக்கையை கட்சி தனதாக்கியது. ஒரு பல்தேசிய நாட்டுக்குள் இருக்கும் ஒரு தேசம் தேசியமாக வளர்ந்து தன்னை அடையாளப்படுத்தி, தனது சந்தையை தனக்கு மட்டும் சுரண்டக் கோரும் தேசிய முதலாளித்துவக் கோரிக்கையான தேசியம் போன்றது தான். ஏகாதிபத்தியத்தில் காலனிகள் இருந்தன.
இக்காலனிகள் தம்மை தேசியமாக அடையாளப்படுத்தியதன் விளைவும், தேசிய முதலாளிகள் தமது நலன்களில் நின்று தமக்கான சுரண்டும் நாட்டைக் கோரினர். ஆனால் பாட்டாளிகள் விழிப்புற்ற போது தேசிய முதலாளிகளில் இருந்து வேறுபட்டு சுயநிர்ணயத்துக்கான கோரிக்கையின் அடிப்படையில் போராடினர். உலகப் புரட்சி சாத்தியமாகாவிட்டால் சொந்த நாட்டு வர்க்க தேசியப் புரட்சியை முன்னெடுக்கவும் பாதுகாக்கவும் கோரும் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை சர்வதேசியக் கண்ணோட்டத்தில் முன்னெடுத்தது.


இன்று இலங்கையில் இலங்கைப் புரட்சி என்பது பின் தள்ளப்பட்டு உள்ள நிலையில் தமிழீழ மக்கள் தமது சொந்தப் புரட்சியை முன்னெடுப்பது அவசியமாகின்றது. நோர்வே சுவீடனில் இருந்து பிரிந்த போது என்ன நிலையோ அதே நிலைதான் காலனி நாடுகளில் பொதுவாக இருந்தது.


இரண்டாவது ஒரு தேசமாக ஒரு தேசம் தன்னை அடையாளப்படுத்திய நிலையில் நடக்கும் ஒரு ஆக்கிரமிப்பில் ஆக்கிரமிப்புக்கு எதிரான போரை பாட்டாளி வர்க்கம் கோருகின்றனர். இது அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடுகளுக்கும் நவகாலனி நாடுகளில் பெரும்பாலும் சாராம்சத்தில் வர்க்கப் போராகவும் அதே நேரம் தேசியப் போராகவும் உள்ளது. இந்த தேசிய உள்ளடக்கம் பாட்டாளிகளின் தலைமையில் முன்னெடுத்தாலும் தேசிய முதலாளித்துவத்தையும் உள்ளடக்கியதே.


இது சாரம்சத்தில் புதிய ஜனநாயகப் புரட்சியாக உள்ளது. இந்த புதிய ஜனநாயகப் புரட்சியின் உள்ளடக்கம் வர்க்கப் போரையும் தேசிய முதலாளிப் பிரிவையும் ஒன்றிணைக்கின்றது. இந் நாட்டில் நடக்கும் தேசியப் போர் சர்வதேசியக் கண்ணோட்டத்தைக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சியாக உள்ளது. முதலாம் உலக நாடுகளில் தேசியப் போர் இருக்க முடியாது. இருக்க முடியும் எனின் அது உலக நாடுகளைப் பங்கிடும் போராகவே இருக்கும்.


சர்வதேச வர்க்கப் போர் என்பது ஒவ்வொரு நாட்டின் வர்க்க மற்றும் தேசியப் போரின் ஒட்டுமொத்த வடிவமே. ஒவ்வோரு நாட்டில் நடக்கும் வர்க்கப் போராட்டம் பிரதான எதிரிக்கு எதிராக உள்நாட்டிலும், ஏகாதிபத்துpயத்துக்கு எதிராக நடக்கும் போது அது ஒரு தேசியமாக உள்ளதுடன் அது சர்வதேசியப் போராகவும் உள்ளது. இது தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்த போராக உள்ளது.


பல்தேசிய நாடுகளிலும் உள் நாட்டுத் தேசியப் போரிலும் இவைகளை சாராம்சத்தில் உள்ளடக்கமாகக் கொண்டது. அதேநேரம் இவை புதிய ஜனநாயகப் புரட்சியாக உள்ளது.


எனவே தேசியப் போர் அனைத்தும் தேசிய முதலாளித்துவப் போராக உள்ளது. இங்கு பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் காலனி மற்றும் அரைக் காலனி மற்றும் நவகாலனி நாடுகளில் புதிய ஜனநாயகப் புரட்சி வடிவத்தின் ஊடாக தேசிய முதலாளித்துவத்தை அங்கீகரித்து அதற்கு தலைமை கொடுப்பதன் மூலம் அதைச் சர்வதேசிய போராக வழிநடத்த முனைகிறது.


ஒரு நாடு தனக்காக ஒரு அரசைக் கொண்டுள்ள போது அங்கு ஒருக்காலும் பாட்டாளிகள் சுயநிர்ணயத்தைக் (தேசியத்தைக்) கோரும் அடிப்படை எழுவதில்லை. ஏன் எனின் அங்கு வர்க்கப் போர்தான் நடத்தப்படுகின்றன. ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் போது சர்வதேசிய போராக இருக்கின்றது. இங்கு தேசியத்தை முன்வைப்பின் அங்கு முதலாளிததுவப் பிரிவே முன்வைக்கின்றது. இங்கு இந்த ஜனநாயகக் கோரிக்கையை ஆதரித்து, அங்கீகரித்து பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்கின்றனர். அதாவது பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்ட போது அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கோரி அதை அங்கீகரித்துப் போராடுவது வேறு ஆனால் வாக்களிப்பில் பங்கு கொள்ளாமல் விடுவது வேறு. இது தான் தேசியத்திலும், ஏகாதிபத்தியத்திற்குள் எப்படி உலகம் உள்ளதோ அது போல்தான் ஒரு பல்தேசிய நாட்டுக்குள்ளும் ஒவ்வோரு தேசியமும் உள்ளன. ஒரே ஒரு வேறுபாடு ஏகாதிபத்தியத்திற்குள் உள்ள நாட்டு அரசுகள் போல் அரசு வடிவம் மட்டும் இருப்பதில்லை. இதைக் கோரி சுயநிர்ணயக் கோட்பாட்டில் பாட்டாளி வர்க்கம் போராடுகின்றது. ஏகாதிபத்தியத்திற்குள் உள்ள நாட்டு அரசுகள் போல் அரசைக் கோரிப் போராடுவது பாட்டாளிகளின் கோரிக்கை அல்ல. அது தேசிய முதலாளிகளினதும் அதன் தோல்வியில் தரகு முதலாளிகளுக்கு எதிரான கோரிக்கையாக உள்ளது.


ஆனால் பாட்டாளிகள் சர்வதேச உலக நோக்கில் சுயநிர்ணயத்தின் அடிப்படையில் தான் அரசைக் கோருகின்றனர். இது சர்வதேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டது. தேசியத்துக்கும், சர்வதேசியத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு உற்பத்தி முறையில் கொண்டது. அதன் மீது கட்டமைக்கப்பட்ட அரசு வடிவம் வேறுபாடு கொண்டது. எந்த உற்பத்தி எந்த அரசு என்பதில் தேசியக் கோரிக்கைக்கும், சர்வதேசியத்தின் கோரிக்கைக்கும் இடையில் தெளிவாக வேறுபாடு உண்டு. இதன் அடிப்படையில் தான் தேசிய முதலாளித்துவக் கோரிக்கை என்பதை நாம் தெளிவாக்க முடியும்.


இனி ரஷ்சியப் புரட்சிக்குப் பின் சர்வதேசிய புரட்சி நடக்க முடியாது போன நிலையில் ருசியப் புரட்சி கூட மற்றைய நாட்டு அரசுகளுடன் சாராம்சத்தில் முதலாளித்துவக் கூறுகளை சர்வதேசிய ரீதியில் கொண்டு இருந்தது. ஏகாதிபத்தியத்துடன் நடக்கும் வர்த்தகங்கள் மற்றும் அனைத்துப் போரும் பாட்டாளி வர்க்க நிலையில் அல்ல முதலாளித்து சந்தைப் பொருளாதார அடிப்படையிலானதாகவே இருந்தது. இது உலகளவில் சோவியத்தை ஒரு முதலாளித்துவப் புள்ளியாக்கி இருந்தது. தனது தேசியத்தைப் பாதுகாக்கக் கோரியது.


சோவித்தின் உள் வர்க்கப் புரட்சியும் சர்வதேசிய அரசுகளுடன் ஒரு முதலாளித்துவ உறவும் நீடித்த தேசியப் புரட்சியாக இருந்த அதே நேரம் சர்வதேச ரீதியாக வர்க்கப் புரட்சியை நடத்தக் கோரியது.


சோவியத்தில் இரண்டு கூறுகள் உள்ளடக்கமாக இருந்த அதே நேரம் இது வர்க்கப் புரட்சியாகவும், தேசியப் புரட்சியாகவும் இருந்தன. இது தேசியப் புரட்சியாகவும் சர்வதேசியப் புரட்சியாகவும் இருந்தது.


இது மட்டும் தான் அன்றைய சர்வதேச யுத்த தந்திரமாக இருந்தது. இந்நிலையில் உள்ளுர் வர்க்கப் போராட்டம் முதலாளி வர்க்கத்தால் தோற்கடிக்கப்பட்டபோது, சர்வதேச முதலாளித்துவ உறவு அதை வேகப்படுத்தியது. அதாவது சோவியத் உள்வர்க்கப் புரட்சியும் சர்வதேசிய வர்க்கப் புரட்சியை உலகில் கொண்டிருக்கும் ஒரு சர்வதேச நிலையில் ஒருக்காலும் உள்ளுர் முதலாளித்துவ மீட்சி சாத்தியமில்லை ஏனெனில் உலகளாவிய வர்க்கப் புரட்சி அதை நசுக்கி விடும். சோவியத்தில் முதலாளித்தவ மீட்சி மிக வேகமாக வெற்றி பெற வர்க்கப் புரட்சி உலகில் வெற்றிபெற்று இல்லாதது ஒரு காரணம். சோவியத்தின் தேசியம் கூட முதலாளித்துவத்தின் வடிவமே ஒழிய பாட்டாளி வர்க்கத்தின் உடையது அல்ல. சோவியத்தினுள் வர்க்கப் போராட்டம், சர்வதேச ரீதியில் தேசிய முதலாளித்துவம் என்ற நிலையில் நீடித்தன. உலகளவில் வர்க்கப்புரட்சியைக் கோரியபடி சோவியத்தைப் பாதுகாக்க தேசியத்தை பாட்டாளிகள் கோரினாலும் அங்கு முதலாளித்துவக் கூறு உள்ளடக்கத்தில் உள்ளது. அது எப்போது சரியானது எனில, சர்வதேச ரீதியாக அது எந்நிலையில் எப்படி உள்ளது என்பதைப் பொறுத்ததே.


அடுத்து லெனின், ஸ்ராலினின் வரையறையை ஒருக்காலும் ஏற்கவில்லை என்ற கண்டு பிடிப்பு நகைப்புக்கு உரியது. ஸ்ராலினின் தேசிய இனக் கொள்கையை லெனின் தான் மிகச் சிறந்த ஆய்வு எனப் பாராட்டினார். ஸ்ராலினின் ஆய்வுகள் மாபெரும் மேதைக்கு உரியவை என கூறியவர் லெனினே ஒழிய அ.மார்க்ஸ் அல்ல.


லெனினும்- ஸ்ராலினும் பக்கம் பக்கமாக இயங்கியபோது ஒன்றின் தொடர்ச்சி ஒன்றாகவே லெனின்-ஸ்ராலின் இயங்கியவர்கள். லெனின் ஸ்ராலினின் வரையறையை மறுத்தோ, மீறியோ கருத்துக் கூறவில்லை. ஸ்ராலினின் வரையறை அடிப்படையில் நின்று தான் தேசிய இனக் கோரிக்கை பற்றிக் கருத்துக் கூறியவர்.
ஸ்ராலினின் வரையறையை லெனின் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவில்லை என லெனினைக் கூட பொய்யாக்கிய அ.மார்க்ஸ் எப்படி மார்க்சியத்துக்கு எதிராக விபச்சாரம் செய்ய தன்னை போல் அழைப்பதற்கு எதிராக லெனின் என்ன கூறுகின்றார் எனப் பார்ப்போம்.


"விற்பனை கண்ட உற்பத்தியின் முழு வெற்றிக்கு உள்நாட்டு மார்க்கட்டை பூர்சுவாக்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம் ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசாங்க ரீதியில் ஐக்கியப் படுத்தப்பட்ட நிலப்பிரபுக்கள் அதற்கு வேண்டும். அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக் கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும். இங்கேதான் தேசிய இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கிறது (அடிக்கோடு நாம்)" (லெனின்-- தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பக்கம் 9)


லெனின் தெளிவாக ஸ்ராலினின் நான்கு வரையறையை ஏற்பதுடன், ஸ்ராலின்-லெனின் ஒரு பொதுவழிiயைக் கொண்டு இருந்ததையும் அ.மார்க்சின் மார்க்சியத் திரிபை லெனின் புத்தகமே அம்பலப்படுத்துவதில் இருந்து அ.மார்க்சின் நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.


ஏன் ஐயா அ.மார்க்ஸ் அவர்களே உங்களால் காட்ட முடியுமா இந்த நான்கில் ஒன்று கூட இல்லாத தேசியத்தை? அதாவது மார்க்சியத்தை மறுத்து திரிக்க என இருக்கும் உங்களாலேயே உங்கள் திரிபு அகராதியில் காட்ட முடியாத நிலையில் மார்க்சியத்தை விஞ்ஞான பூர்வமாக பார்த்த, லெனின் எப்படி ஐயா காட்டுவார். கொஞ்சங் கூட அறிவின்றி லெனினுக்கு முத்திரை குத்தி, திரித்துக் கயிறு விடுவதை கொஞ்சம் நிறுத்துங்கள்.


அடுத்து கயிறு திரிப்பைப் பார்ப்போம். "மையப்படுத்துப்பட்ட உருக்குப் போன்ற பொதுவுடமைக் கட்சி ஒன்றின் தேவையோடு முரண்படுகின்ற பண்ட்கட்சி போன்றவற்றை எதிர் கொள்ள வேண்டிய சூழலில் பாட்டாளி வர்க்கக் புரட்சி ஒன்று வெற்றி பெற கூடிய நிலையில் அதனை இந்தப் "பிரிவினைக்" கோரிக்கை அழித்துவிடக் கூடாதே என்ற கவலையோடு இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன என்பதை மறந்து விடக் கூடாது. இதனை ஸ்தூலமான வரலாற்றுச் சூழலில் இருந்து பிரித்து என்றென்றைக்குமான கோட்பாட்டு மேற்கோள்களாக சுருக்குவது ஆபத்தானது. தேசிய இனப்பிரச்சனை குறித்த லெனினின் கருத்துக்கள் ரொம்பவும் நடைமுறை சார்ந்தது என்ற குற்றச் சாட்டு வைக்கப்படுவதுண்டு, கூர்ந்து கவனித்துப் பார்த்தால் நடைமுறை சார்ந்தது என்பதைக் காட்டிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தேசிய இனப் பிரச்சனையில் லெனின், வர்க்கப் பரட்சியின் நல்ல நோக்கிலேயே அணுகியுள்ளார்." என லெனினை அப்படியும் இப்படியும் கூறி லெனினையே இரண்டாகப் பார்க்கக் கோருகின்றார் அ.மார்க்ஸ்.


ஒருக்கால் நடைமுறை வாதி என்றும் அடுத்து வர்க்கப் புரட்சி நலன் வாதி எனக் கூறுவதன் மூலம் வாசகர்களை உலுப்பி எடுத்து வாசகர்களை குழப்பும் போது அதற்குள் தனது திரிபை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி விட முனைகின்றார் அ.மார்க்ஸ்.


பணட்கட்சியின் கோரிக்கையை லெனின் ஏன் எதிர்த்தார் என அ.மார்க்ஸ் கண்டு பிடித்து திரித்து கூறுகின்றார். "பாட்டாளி வர்க்கப் புரட்சி ஒன்று வெற்றி பெற கூடிய நிலையில்" தான் என்பது மிக மோசமானன மாபெரும் பொய்யும் திரிபுமாகும்.


பாட்டாளி வர்க்கப் புரட்சி ஒன்று நடக்க முடியாத நாடுகளில் பணட்கட்சியின் கோரிக்கை ஏற்கப்படலாம். அதாவது புரட்சி நடக்கும் என ஊகித்தால் மட்டும் தான் எதிர்க்க வேண்டும். அ.மார்க்ஸ் ஐயா அவர்களே ஏன் ஐயா உங்கள் கோட்பாடு இப்படி நழுவுகிறதே. இனி நாம் புரட்சி நடக்குமா என அதிஷ்டம் பார்த்துத் தான் நாம் கட்சிக் கொள்கைகளை வகுக்க வேண்டும். என்கின்றார் அ.மார்க்ஸ். அடுத்து புரட்சி நடக்காது எனின் நீ ஏன் சும்மாய் போராடுகின்றாய் என்று கேட்டு விடுவார் அ.மார்க்ஸ் ஐயா. வர்க்க சமரசம் தான் நன்மையானது என்கின்றார். அதாவது பின் நவீனத்துவ வழியில் சிறு போராட்டங்கள் ஊடாக சமரசம் காணக் கோருகின்றார்கள்.

 

மார்க்ஸ் இதைச் சொல்லும் போது இந்தியா புரட்சி சாத்தியம் இல்லை கணிப்பில் நின்றபடிதான் இதை முன்வைக்கின்றார். ஆகவே அ.மார்க்ஸ் இன் புரட்சி பற்றிய வாய் சவடால் எல்லாம் போலியானவை, ஏமாற்றம், மோசடித்தனமானவை என்பதை அவரே மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றார். பதிலாக ஏகாதிபத்திய வர்க்கக் கோட்பாட்டை முன்வைப்பதை ஏற்கின்றார்.


ஒரு கட்சியின் தேவையை ஏற்காதவர்களுக்கு புரட்சி நடக்க முடியாத நாடு என முன்கூட்டியே அதிஸ்டம் பார்த்து கட்சிக்குள் கட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என்கின்றார். தாம் உள்ளிருந்து புரட்சி நடக்க விடாது அரித்துத் தின்ன உரிமை வேண்டும் என்பதை ஏகாதிபத்திய ரொக்சிய அடிவருடித் தனத்தின் தொடர்ச்சிதான் இவை. கட்சிக்குள் ஏகாதிபத்தியங்கள் தமது உளவாளிகளை அனுப்புவது போல், திரிபு வாதிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கு அதே வேலையைச் செய்ய கட்சி இடம் விடவேண்டும் எனக் கோட்பாட்டு வடிவில் கோருகின்றார். இது நடந்து விட்டால் புரட்சியும் மண்ணாங் கட்டியும் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்கின்றார் அ.மார்க்ஸ். ஏனெனின் புரட்சி நடக்கக் கூடிய நாடு இல்லை அல்லவா நாங்கள் உள்ள கட்சி என்கின்றார்.


லெனினின் தேசிய இனப் பிரச்சனை நடைமுறை சார்ந்தது என்கின்றார். அதாவது ஒரு போதும் கோட்பாடே அல்ல என்கின்றார். இது ரஷ்சியாவிற்கு மட்டும் பொருந்தும் என்கின்றார்.


இதைவிட மோசமான தேசிய எதிர்ப்பாளரை நாம் பச்சை இனவாதியிடம் கூட காண முடியாது. லெனின் தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை நிராகரித்தால் உலகில் தேசங்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை நிராகரித்ததற்கு சமமாகும். இதைவிட இன, நிறவாதிகள் அ.மார்க்சைவிட ஒரளவு சலுகை வழங்கும் அளவுக்கு உள்ளனர். அ.மார்க்சின் தேசிய தாராளவாதக் கூப்பாடுகள் உண்மையில் தேசத்தின் சுயநிர்ணயத்தை மறுத்த உலக மயமாதலைப் பாதுகாக்கும் கோட்பாட்டின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டதே.

 

அதனால் தான் அ. மார்க்ஸ் "....... ஸ்மல், ஸ்டாகி போன்ற லெனின் எதிர்ப்பாளர்கள் அவரது சுயநிர்ணய உரிமை முழக்கத்தை "ரஷ்சியர் அல்லாத தேசங்களை ஏமாற்றி விரைவாக அவர்களது தேச உணர்வை அழிப்பதற்கான ரொம்பவும் தந்திரமான பிரச்சாரம்" என வசைபாடியுள்ளனர் என்பதும் கவனிக்கத் தக்கது." எனக் கூறுவதன் மூலம் ஸ்மல் ஸ்டாகியுடன் சேர்ந்து தானும் வசைபாடியுள்ளார். ஏன் எனின் அவர் வசைபாடினார் எனக் கூறிக் கொண்டு இது "கவனிக்கத்தக்கது" எனக் கூறும் போது அ.மார்க்ஸ் சேர்ந்தே வசைபாடுகின்றார்.


இப்படி கூறி சொல்லும் நரித்தனம் கைதேர்ந்த மோசடி பிழைப்புவாத அரசியல் வாதிகள் இடம் தான் உள்ளது. தேசத்துக்கு இடையில் உள்ள பிளவை ஜனநாயக பூர்வமாக காட்ட முனைவதை யார் எதிர்க்கின்றாரோ அவர்கள் முதலாளித்துவத்தினது அருவருடிகளே. இது தான் "வெள்ளைத் திமிர்" என்ற நூலில் அ.மார்க்ஸ் "ஒவ்வொரு ஐரோப்பியனும் இனவாதி" என முத்திரை குத்தி பிளவைக் கோருகின்றார். ஐக்கியப் பட்ட போராட்டத்துக்கு அழைப்பதற்குப் பதில், அந்த நாட்டில் வாழும் மற்ற நாட்டவர்களை ஐரோப்பியருடன் இணைய வேண்டாம் என்கின்றார். தலித் மக்கள் எனப் பிளந்து, அவர்களை மற்றப்பிரிவுகளுடன் இணைந்து போராட வேண்டாம் என்கின்றார். இதை மெருகூட்டி பின் நவீனத்துவத்தை முன் தள்ளுகின்றார்.


தேசங்களுக்கு இடையிலும் மக்களுக்கு இடையிலும் உள்ள பிளவை ஜனநாயக பூர்வமாக, விருப்ப பூர்வமாக கடக்கக் கோரும் எல்லா நடைமுறை மற்றும் கோட்பாட்டை எதிர்ப்பவர்கள் சர்வதேசியத்துக்கு எதிரானவர்கள். மாறாக தேசியம் என்ற பெயரில் உலக மயமாதலில் சரணடைகின்றனர்.


தம்மை உலகளவில் பாட்டாளிகளாக அடையாளப்படுத்தி ஐக்கியப்படுவதை எதிர்த்து "கவனிக்கத்தக்கது" என அ.மார்க்ஸ் அடையாளப் படுத்திக் கூறும்போது, எவ்வளவு வக்கிரமாக பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு எதிராக இருக்கின்றார் என்பது தெளிவாகின்றது.


அடுத்து அ.மார்க்சின் தேசியம் பற்றிய ஆய்வைப் பார்ப்போம். "....... ஒரு குறிப்பிட்ட நில எல்லை இல்லாமலேயே பண்பாட்டுச் சுயாட்சி உரிமையை கோரிய "பண்ட்" களை "நீங்கள் ஒரு தேசியம் இல்லை" என ஒதுக்குவதும் தேசம் என்பது தொடக்க கால முதலாளியமே என வற்புறுத்துவதன் மூலம் சோசலிச ரஷ்சியாவில் தேசிய இனக் கோரிக்கைக்கு உரிமை இல்லை என மறுப்பதும் போல்சுவிக்குகளுக்கு சாத்தியமாயிற்று." என அ.மார்க்ஸ் தாராள வாதத் தேசியம் எப்படி உண்மையில் உள்ள தேசியத்தை மறுக்கின்றது எனப் பார்ப்போம்.


"பண்ட்"களுக்கு ஒரு நிலத் தொடர் இல்லாமல் எப்படி ஒரு தேசமாக இருக்க முடியும் ஐயா அ.மார்க்ஸ் அவர்களே? நிலத் தொடர் இல்லாமல் எப்படி சுய நிர்ணயம் என்ற கோட்பாடு பொருந்தும் ஐயா? நிலத் தொடர் இல்லாத தமிழ் நாட்டு முஸ்லீம்கள், தமிழ் நாட்டு கன்னடர், கொழும்புத் தமிழர், கொழும்பு முஸ்லீம் எப்படி ஒரு தேசியத்தைக் கோரி தேசமாக இருக்க முடியம்? விளக்குங்கள் ஐயா? வார்த்தைகள் வேண்டாம் ஏழைகளைப் பார்த்து மனிதாபிமானமாகப் பேசிப் பேசி அவனுக்காக போராடாத மனிதன் போல், தேசியத் தாராளவாதம் பேசுவதில் என்ன அர்த்தம் தான் உண்டு. எல்லாம் பிழைப்புக்கான தொழில் ரீதியான மோசடியே.


உண்மையில் நிலத் தொடர் இல்லாத மக்கள் பிரிவை நீங்கள் தேசம் என்று கூறுவதன் மூலம், உண்மையில் அவனின் சரியான அடையாளப் படுத்துப்பட்ட போராட்டத்துக்குப் பதில், கண்ணை மூடி மோதி அழி எனக் கோருவதன் மூலம் தேசியத்துக்கு எதிராக உள்ளனர். அத்துடன் அந்த மக்களுக்கு எதிராக உள்ளனர்.


உலகளவில் ஒரு நாடு பலாத்காரமாக உருவாக்கப்பட முன் யூதர்களுக்க எதிரான ஒடுக்கு முறை இருந்த நிலையில் அவன் ஒரு தேசியத்தைக் கோரின் அவனின் பிரச்சனை எப்படி தீர்க்கப்படும். தேசிய இனமே இல்லாத இந்த சிதறி வாழ்ந்த யூதர்களுக்கு தீர்வு வாழும் நாட்டில் அந்த மக்களுடன் சேர்ந்து போராடுவதே ஒழிய, வெளியில் அல்ல. ஒரு தேசிய இனம் என தன்னை அடையாளப் படுத்தின், அது ஒரு தேசமாக இருக்க வேண்டும். அதாவது நிலத் தொடர், பண்பாடு, பொருளாதாரச் சந்தை, கலாச்சாரம் என இவைகளைக் கொண்ட ஒரு தேசம் இருக்க வேண்டும். ஆனால் அது ஒரு அரசாக இருக்கத் தேவையில்லை. இனங்களுக்குள் உள்ள பல்வேறு கூறுகளின் செயல்பாட்டில் தான் அரசின்தேவை தேவை இன்மை கருக் கொள்கின்றது.


அடுத்து சோவியத்தில் தேசிய சுயநிர்ணயம் மறுக்கப்பட்டது என்கின்றார். அதுவும் முதலாளித்துவம் எனக் கூறி அதனடிப்படையில் என்கின்றார். ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகார நாட்டில் சுரண்டலுக்கு எதிரான போர் தொடுக்கப்படுகின்றது. இது மதம், இனம், நிறம், மொழி, பண்பாடு, கலாச்சாரம், சாதி, பொருளாதாரம், நிலத்தொடர் கடந்து நடத்தப்படுகின்றது. இந்நிலையில் முதலாளித்துவ மீட்சி இவைகள் ஊடாக வெளிப்படுத்த முனைகிறது. இங்கு ஒவ்வொரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமை அதற்குள் புதிதாய் வேறு ஒன்றால் மாற்றீடு செய்யப்படுகிறது.


ஒரு பாட்டாளி வர்க்க அரசில் சுரண்டல் ஒழிக்கப்பட்டபின், ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கப்பட்ட நிலையில், இரு பாட்டாளி இனங்களுக்கிடையில் எப்படி அ.மார்க்ஸ் ஐயா முரண்பாடு எழும்? கூறுங்கள் உங்களுடைய கோட்பாட்டில்.


ஏதாவது ஒன்று ஒடுக்கப்படுமாயின் அல்லது பாதிக்கப்படுமாயின் (சுரண்டல் அல்லாத கூறுகளில்) அந்த பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவமாகவே இருக்கும். அங்கு பாட்டாளி வர்க்க ஆட்சி என்பது அல்ல முதலாளித்துவ ஆட்சியாகவே இருக்கும். ஆனால் பெயரில் கட்சி, கொடி, ஆட்சி பாட்டாளிவர்க்கத்தின் பெயரில் இருக்கும்.


பாட்டாளி வர்க்க அரசில் ஒரு கோரிக்கை மனிதப்பிளவை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்படின் நிச்சயமாக சுரண்டலை அடிப்படையாகக் கொண்டே எழுப்பப்படும். இது ஒரு முதலாளித்துவ அடிப்படையைக் கொண்டே இருக்கும். இதற்கு நாம் வெளிச்சம் பிடித்துக் காட்டத் தேவையில்லை.


அ.மார்க்ஸ் மேலும் தனது மார்க்சிய விரோத தாராள வாதக் கொள்கைக்கு "1904 இல் எழுதிய கட்டுரை ஒன்றில் ஸ்ராலின் "உயர் பண்பாட்டு பொது நீரோட்டத்தில் பிற்பட்ட தேசங்களையும் மக்களையும் இழுக்கும் போதே காகேசியர்களின் தேசிய இனப் பிரச்சனை தீரும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தில் வெளிப்படும் கெக்கலியத் தாக்கம் கவனத்துக்குரியது." என ஸ்ராலினை இரண்டாக்கும் அ.மார்க்சின் கருத்து ஏகாதிபத்தியக் கருத்தின் தாக்கத்தைக் கொண்டது மட்டுமின்றி சேறடிப்புமாகும். . மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஸ்டாலின் என அனைத்துப் பேருக்கும் பாதி n:கலியம் என வேறு மகுடம் இடுகின்றார்.


ஒரு உயரிய பண்பாட்டு, ஒரு உயரிய மனித விழுமியங்கள் ஒரு பிற்போக்கான பண்பாட்டை மனித விழுமியங்களை சிதைக்கின்றது. உயரிய பண்பாடும் பிற்போக்கான பண்பாட்டு உற்பத்தி முறையில் ஏற்படும் ஒவ்வொரு சிறு மாற்றத்திலும் பிரதிபலிக்கின்றது, ஐயா அ.மார்க்ஸ் அவர்களே. இதை மறுப்பவன் இதை பாதுகாக்க முனைவதன் தொடர்ச்சியே. ஏகாதிபத்தியமும் அதன் கைக் கூலிகளும் தான் உயரிய பண்பாட்டை மறுத்து பிளவை ஏற்படுத்தியும் தக்க வைக்கவும் முண்டு கொடுக்கின்றனர்.


சுரண்டல் அற்ற உயர்ந்த மனித மேம்பாடு மற்ற இனங்களை அதை நோக்கி இழுக்கின்றது. ரஷ்சியப் புரட்சி, 2ம் உலகயுத்தம், சீனப்புரட்சி, கலாச்சாரப் புரட்சி என்பன உலகப் புரட்சியின் ஒரு மயிர்க் கல்லாக உலமக்களின் விடுதலைக்கான நட்சத்திரங்களாக இருந்தன.


அடிமை உடமை சமுதாயத்தை ஒழித்த போது மற்றைய நாடு அந்தப் பண்பாட்டை தனதாக்கி அடிமை ஒழிப்பைக் கோரியது. நீ கறுப்பன் நான் வெள்ளை என்ற நிறவாதத்திற்கு எதிரான உயரிய பண்பாடு உலகில் இன்று எல்லா மக்களை அதற்குள் இழுக்கும் ஒரு பண்பாடாக உள்ளது. மதத்தைக் கடந்து, நிறத்தைக் கடந்து, ஆணைக் கடந்து, சாதியைக் கடந்து, எல்லையைக் கடந்து, இனத்தைக் கடந்து, மக்கள் ஒன்று இணைய விரும்பும் உயரிய பண்பாடு முற்போக்கானது. அது உலகில் நடந்தேயாகும். நாம் உலகளவில் எல்லாவற்றையும், எல்லா வேறுபாட்டையும் கடந்த ஒரு பண்பாட்டை வந்தடைவோம். இதை கெக்கலியத்தினது என முத்திரை குத்தி அ.மார்க்ஸ் எல்லாவற்றையும் கடந்த உயரிய பண்பாட்டை பின் நவீனத்துவ சாக்கடையால் நிராகரிக்கின்றார்.


அதன் மூலம் நிறவாதத்தைப் பேண, மதவாதத்தைப் பேண, இனவாதத்தைப் பேண, ஆணாதிக்க வாதத்தைப் பேண, சாதியைப் பேண விரும்பும் கோட்பாட்டின் உயரிய பண்பாட்டு எதிர்ப்பு அ.மார்க்சிடம் மையப்படுகின்றது.


இந்த உயரிய பண்பாட்டு எதிர்ப்பு இன்றைய உலக பிற்போக்கு யதார்த்தத்தின் பிரதிபிம்பத் தோற்றமாக உள்ளது. இதை பாதுகாக்க விரும்பும் அ.மார்க்சின் கோட்பாடு ஏகாதிபத்தியத்தால் கட்டமைக்கப் பட்டவையே. அ.மார்க்சின் சிந்தனை ஏகாதிபத்தியத்தின் தாக்கத்தைக் கொண்டதே ஒழிய உலக முன்னேற்றத்துக்குரியதுமல்ல மார்க்சியமுமல்ல.


அடுத்து உலக மயமாதல் என்ற ஏகாதிபத்தியத்தின் கோரிக்கையும், பாட்டாளி வர்க்க சர்வதேசிய கோரிக்கையும் நேர் எதிரானவை என்பதை நாம் மிகக் கவனமாக குறித்துக் கொள்ள வேண்டும். பாட்டாளி வர்க்கம் சர்வதேசிய வாதியாவதை திட்ட வட்டமாக ஏகாதிபத்தியம் எதிர்க்கிறது ஆனால் பொருளாதாரம் உலக மயமாதலை திட்டவட்டமாக ஏகாதிபத்தியம் அமுல்படுத்துகின்றது.
இதன் அடிப்படை வேறுபாடு உலக மயமாதல், சுரண்டலை மேலும் மேலும் கோருகின்றது. சர்வதேசிய வாதம் சுரண்டலை ஒழிக்கக் கோருகின்றது. சமுதாயத்தில் பிளவுகள் உயர் பண்பாட்டால் கடக்காமல் நீடிக்கும் வரை சுரண்டல் நீடிக்கும். இது அனைத்துத் துறையிலும் பொருந்தும். பிளவுகளைக் கடந்த ஒரு பொது உயர்பண்பாடுதான் மனித குலத்தின் ஐக்கியத்தை அமுல்படுத்தும்.


பல்வேறு சாதிகளுக்கு இடையில் உள்ள வேறுபட்ட பண்பாடு ஒரு உயர் பண்பாட்டில் கடக்கப்படும். போது தான் சாதி ஒழியும். இந்த உயர் பண்பாடு உற்பத்தி முறை மாற்றத்தில் தான் சாத்தியம். உயர் பண்பாடு அதைச் செய்யாது எனக் கூறின, உண்மையில் சமுதாயப் பிளவுகளில் ஆதாயம் தேடும் பிழைப்பு வாத மற்றும் சுரண்டிப் பிழைக்கும் பிரிவுகள் தான் இப்படிச் சொல்கின்றன. அ.மார்க்ஸ் என்ன விதிவிலக்கா? அதன் கோட்பாட்டைப் பாதுகாக்கும் இன்றைய மார்க்சிய எதிர் புரட்சிக் கதாநாயகர்கள் தான் இவர்களும் இவருடன் கூடிய அடிவருடிகளும் சீடர்களும் தான்.


அடுத்து அ.மார்க்ஸ் எடுத்து வைக்கும் அடியைப் பார்ப்போம். "வளர்ச்சியின் பிரச்சனையாக தேசியத்தை அணுகும் சிந்தனைகள் டாம் நாயர்கன், எக்னஸ்ட் கெல்னர் ஆகியோரின் கோட்பாடுகளை இதற்குள் அடக்க முயலலாம். தேசிய இனப் பிரச்சனை குறித்த மரபு வழிப்பட்ட மார்க்சிய அணுகல் முறையை மாபெரும் வரலாற்றுத் தோல்வி என ஒதுக்கும் நாயர்கங்களின், தேசிய அரசு தேசியம் போன்ற கருத்துக்கள் எல்லாம் விடுதலை என்ற கருத்தைப் போலவே கடந்த இரு நூற்றாண்டுகளாக பிரான்சு மற்றும் ஆங்கிலேயச் சமூகங்களில் இருந்து உலகின் பல பாகங்களுக்குப் பரவி வருவதாகப் பார்ப்பர். "அய்ரோப்பிய மையவிலகல் கொள்கை"யின் ஒரங்கமாய் இதனை ஒதுக்குவர். ப்ளாட் நவீனத்துவ, மற்றும் உலக முதலாளித்துவத்தின் விளைவான சமச்சீரற்ற வளர்ச்சித் தர்க்க விரோதமான ஒரு கண்ணோட்டத்தைப் பின் தங்கிய பகுதி மக்கட் சமூகங்களின் மத்தியில் ஏற்படுத்துகின்றது. நிறைவேற்றப்படாத எதிர்பார்ப்புகள், பொறாமை, ஆத்திரம், வெறுப்பு ஆகியவற்றை அம் மக்களின் உளவியலில் ஏற்படுகின்றது. இது பின் தங்கிய தேசங்களில் தேசியக் கருத்தியலாகவும், தேசிய இயக்கங்களாவும் வெளிப்படுகின்றது. பின் தங்கிய பகுதியில் உள்ள மேல் தட்டினரே இத்தகைய உணர்வுக்கு முதன் முதலில் ஆளாவதேடு அவர்களே தேசிய இயக்கங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர் என்பன நாய்ர்ரின் கருத்துகள் எனலாம். சமச்சீரற்ற வளர்ச்சி தேசிய உணர்வுக்கு காரணமாகும் என்பது சரிதான்." என அ.மார்க்ஸ் சரிபோடும் இப்பகுதி ஏகாதிபத்தியத் தேவையை எப்படிச் சரிபோடுகிறது எனப் பார்ப்போம்.


ஒரு தேசிய இனப் பிரச்சனை சமச்சீரற்ற வளர்ச்சியின் விளைவு என அ.மார்க்ஸ் கூறும் போது அது பொருளாதார வாழ்வு தொடர்பான பிரச்சனையாக மாறிவிடுகின்றது. அது சரி சமச்சீரற்ற பிரச்சனை தான் தேசிய இனப் பிரச்சனை என காட்டுவதன் மூலம், உண்மையில் தேசிய இனப் பிரச்சனையின் அடிப்படைக் கூறுகளை மறுக்கின்றனர். அதாவது ஏழை பணக்காரனைப் பார்த்து எரிச்சல் பொறாமை ஆத்திரம், வெறுப்பு ஏற்படுத்தும் பிரச்சனை தான் ஏழை பணக்காரன் மோதல் என்கின்றனர். எவ்வளவு மோசடியானது இவை. பணக்காரன் ஏழையைச் சுரண்டுவது தான் பிரச்சனையே ஒழிய பொறாமை, ஆத்திரம் போன்ற முதலாளித்துவ மனித அற்பத்தனங்கள் அல்ல அ.மார்க்ஸ் அவர்களே.


ஒரு தேசிய இனம் தனது தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏகாதிபத்திய சகாப்தத்தில் முன்னெடுக்கின்றது எனின், அங்கு ஒரு ஒடுக்கு முறை உள்ளது. அதாவது அத்தேசிய இனம் தான் சுயமாக முன்னேற முடியாத ஒரு தடையைச் சந்திக்கின்றது. அது பல்வேறு துறைகளில் மையமிட்டாலும், அவைகளின் குவிய மையம் தனது பொருளாதார அடிப்படையை பாதுகாப்பதில் அல்லது கோருவதில் உள்ளது. மேல் கட்டுமானத்தில் காணப்படும் பல்வேறு பிரிவுகளில் ஒன்று சேர்ந்த வெளிப்பாடாக, அதன் அடிக்கட்டுமான பொருளாதாரத்தில் சார்ந்துள்ளது. அதை அரசில் கோட்பாட்டின் மூலம, அடிக்கட்டுமானத்தை பாதுகாப்பதன் மூலம் அல்லது மாற்றக் கோருவதன் மூலம் மேல் கட்டுமானத்தின் அனைத்துத் துறைகளையும் வளர்த்து எடுக்கின்றன. அல்லது மாற்றுகின்றது.


எனவே தேசியம் என்பது சமச்சீரற்ற வளர்ச்சியில் எழுவதில்லை. தேசியம் என்பது இன்னும் ஒரு பிரிவில் சுரண்டலுக்கு உள்ளாக்குவதாலும், முன்னேற்றத்துக்கு தடைபோடுவதிலும் தான் ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசியம் எழுகின்றது. இவை இல்லாது இருப்பின் தேசியம் இருக்காது. உற்பத்தி முறை மீதான அரசு வடிவமும் அதன் வர்க்கப் போராட்டமும் தான் தேசிய ஆட்சியைக் கோருகின்றதே ஒழிய வேறல்ல.


மக்களின் நிறைவேற்றப்படாத எதிர்பார்ப்புகள் பொறாமை ஆத்திரம், வெறுப்புகளில் இருந்தே தேசியக் கோரிக்கை எழுகின்றது என்பது அடிப்படை பிரச்சனையில் அடிப்படையான பிரச்சனையை திசை திருப்புவதாகும். பின் தங்கியபகுதிகளில் மேல்பிரிவுகளில் இது மையமிடுகின்றது என்கின்ற போது, அந்தப் பகுதியின் சுரண்டும் நலன்களைப் பறிக்கப்படுவதில் இருந்து தான் தேசியக் கோரிக்கை எழுகின்றது. கீழ் பகுதியில் இவை மையமிடுவதில்லை. அதாவது மேல் பகுதி தனது சுரண்டும் அதிகாரத்தை இழக்கும் போது, தனது சுரண்டும் தகமையைக் குறைந்தது, பாதுகாக்க தேசியத்துக்குள் தக்க வைக்க எழுப்பும் கோசத்தில் தேசியம் எழுகின்றது. பறிக்கப்பட்ட, பறிக்கப்படும் சுரண்டும் நலன்களின் பாதிப்பினால் தான் பொறாமை, ஆத்திரம், வெறுப்புகளை மேல்மட்ட முதலாளித்துவப் பிரிவுகளில் ஏற்பட்டு தேசியத்தை உயர்த்துகின்றனர். இது மட்டும் தான் தனது சுரண்டும் கனவைத் தக்க வைக்க முடியும் எனவும் நம்புகின்றனர். இதை விட வேறு வழி முதலாளித்துவப் பிரிவுக்குக் கிடையாது.