இனி நாம் ஸ்ராலின் வரையறுத்த பொதுவான பொருளாதாரம் என்பதைப் பார்ப்போம். ஒரு பொருளாதாரம் இன்றி தேசம் உருவாக முடியும் எனக் கூறுவது அடிப்படையில் கற்பனாவாதக் கருத்து முதல் வாதமாகும்.


ஒரு மனிதன் வாழ வேண்டும் என்றால் கூட அவனுக்கு பொருளாதார அடிப்படை அவசியம். இதை யார் இல்லையென்கின்றனர் எனின் சுரண்டும் வர்க்கமே. அது தான் மக்களைப் பட்டினியிட்டுக் கொல்கின்றனர். இதே வழியில் அ. மார்க்ஸ் தேசத்துக்கு பொருளாதாரம் தேவையில்லையெனக் கூறி ஏகாதிபத்தியத்துக்கு வாலையாட்டுகின்றார். ஒரு தேசிய இனம் தான் தனித்து ஒரு அரசாக இருக்க வேண்டுமெனின் கூட ஒரு பொருளாதார வாழ்வு அவசியம்.


இன்று உலகளவில் உலகமயமாதல் தேச எல்லைக்குள்ளான பொருளாதார அடிப்படையை மறுதலிக்கின்றது. இந்த உலகமயமாதல் தேசம் என்ற வரையறைக்கு தேவையான பொருளாதார அடிப்படையை சிதைப்பதன் மூலம் அத்தேசிய இருப்பை மறுக்கின்றது. இது பல்தேசிய அரசுக்குள் மேலும் மேலும் பொருளாதார சிதைவை சந்திக்கின்றது.


இன்று மார்க்சிய விரோதிகள் ஒரு தேசிய இனத்துக்கு பொருளாதார அடிப்படை தேவை இல்லை என்பது, உலகமயமாதலைக் கோரும் பன்னாட்டு நிறுவனத்தே உள்ளடக்கிய ஏகாதிபத்தியம் கோரும் அடிப்படையும் இயல்பாக இணைவது மூலம், அவர்கள் அரசியல் அடிப்படை என்ன என நாம் கூறத் தேவை இல்லை.


ஒரு தேசத்தின் பொருளாதார அடிப்படையைச் சிதைப்பதால் தான் உலகமயமாதல் தனது ஆதிக்கத்தை தொடங்குகின்றது. ஒரு நாட்டை சரணடையச் செய்ய நடத்தும் பொருளாதார முற்றுகை, சொந்தத் தேசியத்தை இழந்ததில் இருந்து சாத்தியமாகின்றது.


தேசியத்துக்கு ஒரு பொருளாதார அடிப்படை தேவை இல்லை. எனக் கூறும் அ.மார்க்ஸ், எஸ்.வி.இராஜதுரை போன்றோரும் அவர்களின் சீடர்களின் நோக்கமும், ஏகாதிபத்தியம் இன்று பன்னாட்டு நிறுவனங்கள் மூலம், தேசங் கடந்த நிறுவனங்கள் மூலம் எப்படி தேசியத்துக்கு ஒரு பொருளாதாரத் தேவை இல்லை என நடைமுறையில் மறுத்து தேசத்தை சிதைக்கின்றனரோ அதையே கோட்பாட்டளவில் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக மார்க்சிய விரோதக் குழுக்கள் செய்கின்றன. இவர்களை ஏகாதிபத்தியத்தின் கைக் கூலிகள் என ஏன் நாம் அழைக்க முடியாது.