Language Selection

பி.இரயாகரன் 1996-2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அடுத்து ஸ்ராலினின் வரையறையான பொதுவான மொழி என்ற விடையத்தைப் பார்ப்போம். ஒரு மொழி இன்றி ஒரு தேசம் இருக்க முடியுமா? அப்படி ஒரு தேசத்தையும் காட்ட முடியுமா? ஒரு தேசம் இருக்க வேண்டின் நிச்சயம் ஒரு மொழி இருக்க வேண்டும். மொழி தேவையில்லை என கோரின் ஒரு தேசிய இனப் போராட்டத்தை மறுப்பதேயாகும்.


ஸ்ராலினின் வரையறை ஆகக் குறைந்ததைக் கோருகின்றதே ஒழிய அதற்கு மேற்பட்டதை மறுதலிக்கவில்லை. பல்தேசிய நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழி உள்ளதுடன், அது தேசியப்போரை முன்னெடுப்பதைக் காண்கிறோம். சீனா, வியடநாம், சோவியத் என நீண்ட பல நாடுகள் உதாரணமாக உள்ளதல்லவா. ஸ்டாலின் இதை மறுதலிக்கவில்லையல்லவா அப்படியிருக்க ஸ்டாலின் பெயரால் ஒரு திரிபு தேவை தானா அ.மார்க்ஸ் ரவிக்குமார் கும்பலுக்கு. ஆனால் அ.மார்க்ஸ், எஸ்.வி. இராஜதுரை, மற்றம் அவர்களின் சீடர்கள் எப்போதும் ஆகக் குறைந்ததை விடுத்து, கூடுதல் விடையத்தையே கூறுவதாக எடுத்து வைத்து தமது மார்க்சிய எதிர்ப்பை பிரகடனம் செய்கின்றனர். ஆனால் ஒரு தேசிய இனம் இருக்க வேண்டின் ஆகக் குறைந்த அடிப்படை இருக்க வேண்டும் என்ற ஸ்ராலினின் நாலு வரையறையையும் கோருவது, எப்போதும் தேசிய இனம் மீதான ஒரு சரியான அடிப்படையாகும்.


ஒரு பொது மொழி இல்லாத தேசியம் இருக்கும் எனக் கூறுவது கற்பனையானது. ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பேசும் மக்கள் ஒரு பொதுவான தேசியத்தைக் கோரின் அதை ஸ்ராலினின் வரையறை என்றும் மறுத்தது இல்லை. வியட்னாம் புரட்சி, சீனப்புரட்சி என்பன ஒள்றுக்கு மேற்பட்ட மொழியை உள்ளடக்கிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, உள்ளுர் தரகு, நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான வர்க்க தேசியப் புரட்சியே.


அ.மார்க்ஸின் "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற நூலில் "பதினோரு தனித்தனி இனக் குழுக்கள் இணைந்து உருவாக்கி உள்ள பொது மொழி எனச் சொல்வதற்கு ஒன்றுமில்லாத நாகர்களை ஒரு தேசிய இனம் இல்லை என மறுப்பவர்களாகவும் அவர்களது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் நியாயமற்றது எனச் சொல்பவர்களாகவும் ஆவோம்." என ஸ்ராலினின் வரையறையான பொது மொழியை மறுக்க எடுத்துக் காட்டுகின்றனர். இதே போல் "இந்து இந்தி இந்தியா" எஸ்.வி.இராஜதுரை குறிப்பிடுகின்றார்.


இவர்கள் உண்மையில் ஸ்ராலினின் வரையறையைப் புரிந்து கொள்ள அடாப்பிடியாக மறுத்து திரிக்கின்றனரே ஒழிய ஸ்ராலினின் கோட்பாடு இதற்கு எதிரானது இல்லை.


ஸ்ராலினின் வரையறை ஒரு தேசம் உருவாக வேண்டின் ஆகக் குறைந்த அடிப்படையைக் கோருவதாகும். இந்த நான்குக்கு மேற்பட்ட எந்த கூறும் சரி, தேசத்தின் மீது செயல்படுவதை மறுப்பதில்லையே. வியட்நாம் புரட்சி, சீனப்புரட்சி தனது வர்க்கப் போராட்டத்தை தேசியத்துடன் நடத்திய போது, இந்த நான்கு எல்லையை அடிப்படையாகக் கொண்ட மேலாதிக்கத்தை உள்ளடக்கி நடத்தின. அதற்கு குறைவான அதாவது அந்த நான்கு வரையறைக்கு குறைவான ஒரு நாடு, தேச விடுதலைப் போராட்டம் உலகில் நடக்க முடியாது. அப்படி நடக்க முடியும் எனக் கருதுவது கருத்து முதல்வாதமாகும்.


நாகர் தேசிய இனம் ஒரு நிலப்பரப்பில், ஒன்றுக்கு மேற்பட்ட பண்பாட்டில், ஒன்றுக்கு மேற்பட்ட மொழியில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொருளாதார வாழ்வில் உருவான போதும் இப்போராட்டம் ஆகக் குறைந்த நிபந்தனை கொண்டிருந்தது. இது தான் ஸ்ராலினின் வரையறை.


உதாரணமாக ஒரு வர்க்கப் புரட்சி நடக்க வேண்டின், ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி, வர்க்கப் போர் , ..... என்பன இருக்க வேண்டும் என அடிப்படையைக் கோரின் அது சாதிப் போராட்டத்தை விட்டுவிட்டதாக கூறமுடியாது அல்லவா. அதுபோல் சாதிப்போராட்டம், பெண்விடுதலைப் போராட்டம், தேசிய விடுதலைப் போராட்டம் வர்க்கப்போராட்டமாகி விடுமா என்ன ?. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வாரு நிபந்தனை உண்டல்லவா?


ஒரு பொருளுக்கு அது அதுவாக இருக்க வேண்டின் குறைந்த பட்ச நிபந்தனை அவசியம். மேலதிகம் அப்பொருள் ஏன் அடிப்படையில் மாறுவதில்லை. ஆனால் ஆகக் குறைந்தது அவசியம். அதுபோல் ஒரு தேசியம் தேசமாக மாற ஆகக் குறைந்த அடிப்படை தேவை. இதை மறுப்பது அல்லது இல்லை என்பது கருத்து முதல்லாத முதலாளித்துவ வாதமாகும். அத்துடன் தேசத்தை மறுப்பதுமாகும்.


ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு உணவு, நீர், காற்று என்பன அவசியம். அதை மறுப்பது கருத்து முதல்வாதம். இதைமீறி உடை, தங்குமிடவசதி, ..... இருப்பின் அடிப்படை இல்லாது போய்விடுமா திரிபுவாத மார்க்கிய வாத விரோதிகளே.


நாகர்களின் போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்காவிடின் அத்தேசியம் கூட சிதைந்து பாசிசமாக மாறுவது தவிர்க்க முடியாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏன் எனில் மொழிக்கு இடையில், கலாச்சாரத்துக்கு இடையில், நிலப்பரப்புக்கு இடையில், பொருளாதாரத்திற்கு இடையில், உள்ள சுரண்டும் வர்க்க முரண்பாடு பாசிசத்தின் முன்நிபந்தனையாகும். எதிர்தரப்பை பாட்டாளி வர்க்கம் மட்டும் அங்கீகரித்தபடி, சுரண்டப்படும் வர்க்க முரண்பாட்டை இனம் காட்டி அதற்குப் பதில், என்ற அடித்தளத்தில் ஒரு முற்போக்கு தேசியத்தை சர்வதேசிய அடிப்படையில் முன்னெடுக்க முடியும்.