இனி நாம் இதையும் ஸ்ராலினின் வரையறையையும் பார்ப்போம். ஒரு தேசம் தேசமாக இருக்க வேண்டின் ஒரு நிலப்பரப்பு இருக்க வேண்டும். நிலப்பரப்பு இல்லாத ஒரு தேசத்தை காட்டவே முடியாது. நிலப்பரப்பு இல்லாத தேசிய விடுதலையையும் காட்ட முடியாது. அ..மார்க்ஸ் அவரின் சீடர்கள் முன்னைய ரஷ்சியாவில் யூதர் உடைய தேசியசுயநிர்ணயத்தை மறுத்ததாக அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றார்.

யூதர்கள் பற்றி கார்ல் காவுத்தஷ்சியும், ஒட்டோh பௌவரும் " நாகரீக உலகில் உள்ள யூதர்கள் ஒரு தேசிய இனமாக இருக்கவில்லை " என்று கூறியதை லெனின் ஏற்றுக் கொண்டு மேலும் அவர்களை லெனின் " அவர்கள் இன்னமும் ஒரு சாதியாகவே இருந்து வருகிறார்கள். " எனக் குறிப்பிட்டார். (அடிக்கோடு லெனின்.) - தே.பி.ப.கு-பக்-25)


ரஷ்சிய யூதர்களோ, மற்றைய மேற்கு நாடுகளில் உள்ள யூதர்களோ ஒரு தேசிய இனம் அல்ல. ஏன் எனில் அவர்களுக்கு தேசமாக அடையாளப்படுத்த இந்த நாடுகளில் ஒரு நிலப்பரப்பு கிடையாது. ஒரு நிலப்பரப்பு இல்லாத போது எப்படி ஒரு தேசம் இருக்க முடியும். இந்தியாவில் பரந்து வாழும் முஸ்லீம் மக்கள் (செறிவாக ஒரு நிலத் தொடரில் வாழ்பவர்களை விடுத்து உதாரணமாக காஸ்மீர் போன்றவை) ஒரு தேசிய இனம் அல்ல. ஏன்எனில் இவர்களுக்கு என்று ஒரு நிலத்தொடர் கிடையாது. அவர்களின் பிரச்சனை மதச் சிறுபான்மையினர் என்ற எல்லைக்குள் நின்று மதப்பெரும்பான்மைக்கு எதிரான போராட்டமாகவே இருக்கும். இது ஒரு தேசிய இனப்பிரச்சனை அல்ல. மதப்பிரச்சனையாக உள்ளது.


பெரும் பான்மை இந்து மதப்பிரிவு பல்வேறு மொழியை கடந்து, பல்வேறு பண்பாட்டைக் கடந்து, பல்வேறு பொருளாதார நிலையைக் கடந்து, பல்வேறு எல்லையைக் கடந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும், பெரும்பான்மை இந்து மத வெறி, சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீது வன்முறையைக் கையாள்கின்றது. இதற்கு எதிரான போர் என்பது சொந்த சொந்த மத உரிமைக்கான ஜனநாயகக் கோரிக்கைக்கும், மதத்திற்கு எதிரான போரிலும் தான் மையப்படுகிறதே ஒழிய இது தேசிய விடுதலைப் போராட்டமல்ல. இதை மறுப்பின் அடிப்படையில் சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலை மறைமுகமாக இந்து ஆதிக்க நிலையில் நின்று நியாயப்படுத்துவதாகும்.


ஆனால் இந்துப் பெரும்பான்மை இந்து வெறித் தாக்குதல் அடிப்படையில் உலக மயமாதலை மறைக்கவும், முஸ்லீம் சுரண்டும் பிரிவின் சொத்துரிமையைக் கைப்பற்றவும் என்ற வரையறைக்குள் தான் எழுகின்றது. இந்துப் பெரும்பான்மை மதவெறி ஏன் முஸ்லீம் மதச் சிறுபான்மை மீது தாக்குதல் நடத்துகின்றன என்பதையும், பெரும் சொத்துடமை வர்க்கமே இதை ஏன் நடத்துகின்றது என்பதை எஸ்.வி. இராஜதுரையின் "இந்து இந்தி இந்தியா" என்ற நூலில் ஒரளவு மார்க்சிய எதிர்ப்பை மீறி வெளிவந்துள்ளது அவதானிக்கத்தக்தது. இந்திய-பாக்கிஸ்தான் உடைவு அதற்கிடையில் சந்தைப் பகிர்வு எப்படி நடத்தப்பட்டது என பல தரவுகளை நாம் இந்நூலில் காண முடியும். இதைவிடுத்து முஸ்லீம் மக்களின் பிரிவினை தேச விடுதலைப் போராட்டமல்ல. இந்து மத வன்முறை என்பது ஏகாதிபத்தியத்துக்கு எதிரான உலக மயமாதலுக்கு எதிரான சர்வ தேசியமாக எழுவதற்குப்பதில் பாசிச மத தேசியமாக வெளிப்படுகின்றது. ஆகவே முஸ்லீம் மக்கள் சர்வ தேசியத்தைக் கோரும் ஒரே ஒரு பாதையில், மத உரிமைக்கான ஜனநாயகக் கோரிக்கை உள்ளடக்கிய மதத்துக்கு எதிரான போரை கோர வேண்டும்.
இதைவிடுத்து இது முஸ்லீம் தேசியக் கோரிக்கை எனக் கோரின் முஸ்லீம் மக்களை ஒடுக்கும் இந்து மத இந்திய தேசியத்துக்கு சேவை செய்வதாகும். ஏன் எனின் முஸ்லீம் இந்திய தேசியம் என்ற ஒன்று கிடையாது. ஏன்எனின் அது ஒரு அரசை இந்திய அளவில் அமைக்க முடியாது.


இலங்கையின் முஸ்லீம் மக்களின் பிரச்சனை இதில் இருந்து தெளிவாக வேறுபட்டுள்ளது. இலங்கையில் பல்வேறு பகுதியில் வாழும் முஸ்லீம் மக்கள் இந்தியாவின் நிலையில் உள்ளது போல் மதச்சிறுபான்மையினராக உள்ளனர். ஆனால் அவர்கள் செறிந்து வாழும் ஒரு நிலத் தொடரைக் கொண்டு உள்ள பகுதிகளில் உள்ள முஸ்லீம் மக்கள் காஸ்மீருக்கு ஒப்பான வகையில் சில பண்பில் வேறுபட்டுக் கொண்ட சிறுபான்மை தேசிய இனத்தவர்.


முஸலீம் என்ற அடையாளக் குறிப்பு பெரும்பான்மை பிரிவால் பெயரளவில் அடையாளப்படுத்தப் பட்டதே ஒழிய அது இனமல்ல என மறுக்க எடுக்கும் ஒரு எடுகோள் அல்ல. மலையக மக்கள் என அவர்களை மலையில் வாழ்வதால் அடையாளப்படுத்தியது போன்று, முஸ்லீம் மக்கள் என மதத்தால் அடையாளப்படுத்தப்பட்ட இனப்பிரிவுகளே. இவர்கள் வளரும் தேசிய இனமாக நாம் கண்டு கொள்ள வேண்டும்.


அதைவிடுத்து மதச்சிறுபான்மை எனவோ, மதத்துக்கு வக்காலத்து வாங்குவதோ என மறுதலிக்கும் எக்கோட்பாடும் ஆதிக்கவாதிகளின் கூற்றை கேள்விக்கு உள்ளாக்காத வரையறையே. இலங்கையில் வாழும் பெரும்பகுதி முஸ்லீம் மக்கள் தமக்கான ஒரு நிலத் தொடரை கொண்டு வாழும் ஒரு பிரிவாக நாம் அடையாளப்படுத்துவது ஒரு முக்கியமான விடையமாகும்.


உலகளவில் உள்ள யூத எதிர்ப்பு வாதம் அடிப்படையில் யூதர்களின் ஆதிக்கத்துக்கு எதிரானதாக உள்ளது. இந்தியாவில் பார்ப்பனர்கள் எல்லாத்துறையிலும் ஆதிக்கத்தை எப்படிக் கொண்டுள்ளனரோ, அதேபோன்று யூதர்கள் மேற்கு நாடுகளில் ஆதிக்கத்தை கொண்டு இருந்தனர், இருக்கின்றனர்.


இதற்கு எதிரான போராட்டம் திசைதிருப்பப்பட்டு பாசிசத் தேசியமாக மாறிய போது ஒட்டு மொத்த யூதர்களை கொன்று விடுதல் தொடங்குகின்றது. பாட்டாளி வர்க்கப் போராட்டம் எனின் ஆதிக்கத்தை தகர்த்து பரந்து பட்ட மக்களிடம் ஆதிக்கத்தைக் கொடுத்தல் என்றளவில் இருக்கும். பார்ப்பனியத்துக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் போர் அவர்களின் ஆதிக்கத்தை தகர்த்தல் என்ற அடிப்படையைக் கொண்டு உள்ளது. மாறாக இதை பாட்டாளி அல்லாத பிரிவு எடுப்பின் அது பாசிசமாக பார்ப்பனியப் பிரிவைக் கொன்றொழிப்பதில் (நாசிகளைப் போல்) முடியும்.


அடுத்து யூதர்களைப் போல் பார்ப்பனியமும் இந்தியாவில் ஒரு தேசியத்தைக் கோரின் (நாம் இங்கு சாதியைக் குறிப்பிடவில்லை மாறாக பொருளாதார ஆதிக்கத்தைறே குறிப்பிடுகின்றோம்) அ.மார்க்ஸ் உள்ளிட்ட குழு முண்டியடித்து அங்கீகரித்து அதை தேசியப் பிரகடனம் செய்யத் தயங்க மாட்டார்கள். அவர்களுக்கு என நிலத் தொடர் எதுவும் கிடையாது. ஆனால் தனித்துவமான பண்பாடு, மொழி, மதம், ........ என்பன உள்ளன. இது போல் யூதர்களுக்கு இருந்தது. ஒப்பீட்டளவில் இவர்கள் தனித்துவத்தைக் கோரின் அது மதத்தின் ஊடாக தமது பொருளாதார ஆதிக்கத்தை தக்க வைக்கவே ஒழிய வேறு ஒன்று மல்ல.


ஒரு தேசம் உருவாக வேண்டின் ஒரு நிலத்தொடர் அவசியம். நிலத்தொடர் இல்லாத அரசு இருக்கவே முடியாது. அப்படி இருப்பதாகக் கூறுவது கற்பனையான கருத்து முதல்வாதம் மட்டுமின்றி கற்பிதமானது. உண்மையான தேசங்களின் தேசியப் போராட்டத்தை, அதன் அடிப்படை குணாம்சத்தைக் குலைத்து சிதைத்து, அலைந்து போகும் கோட்பாட்டைக் கொடுத்து, அத்தேசியப் போராட்டத்தை அடிப்படையிலேயே அழித்து விடுவதாகும்.