ஒரு பாட்டாளி வர்க்க நாட்டை எதிர்த்து நடத்தும் ஆக்கிரமிப்புப் போரைப் பார்ப்போம். இங்கு பாட்டாளி வர்க்கம் அரசு உள்ளதால் சுரண்டல் என்பதை ஒழித்துக் கட்டும் ஆட்சியாக நீடிக்கும் வரை, உலகைப் பங்கிட்டு கொள்ளும் யுத்தமோ, மற்றைய நாட்டைச் சுரண்டுவதோ தேவையற்றதாகி விடுகிறது.
இதனால் பாட்டாளி வர்க்க அரசு உள்ள நாடுகள் யுத்தத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுக்கும் அதே நேரம், யுத்தத்தை நடத்தும் பிரிவுகளின் சுரண்டும் கனவுகளை அம்பலப் படுத்துகின்றது. ஏன்எனின் அனைத்தும் யுத்தங்களின் பின்னும் ஒரு வர்க்க நலன் உண்டு.
இந்த பாட்டாளி வர்க்க அரசை இல்லாது ஒழிப்பதன் மூலம் அந்த அரசின் கீழ் உள்ள மக்களை சுரண்ட விரும்பும் பிரிவு, யுத்தத்தைப் பிரகடனம் செய்கிறது. இந்த யுத்தம் அடிப்படையில் சுரண்டல் பிரிவுகளின் கொள்ளை அடிப்புக்கான கனவுகளே.
இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து ஆக்கிரமிப்பு நாட்டுப் பாட்டாளிகள் போராடுவது மட்டுமன்றி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நாட்டு பாட்டாளிகளுடன் ஐக்கியப்பட்ட அறைகூவலையும், சொந்த நாட்டு சுரண்டல் பிரிவுக்கு எதிரான பாட்டாளி வர்க்க நாடுகளின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். அத்துடன் தனது நாட்டில் வர்க்கப் போரை நடத்த வேண்டும்.
இங்கு பாட்டாளி வர்க்க நாடு தனது சொந்த நாட்டு வர்க்கப் போரை பாதுகாக்க சொந்த தேசியப் போரைக் கோருகிறது. இது சர்வதேசிய எல்லையைத் தாண்டியது அல்ல.
மார்க்சிய விரோதிகளும், மார்க்சிய திரிபு வாதிகளும் அடிக்கடி 2ம் உலக யுத்தத்தின் போது சோவியத் பாசிசத்தை எதிர்த்ததை விடுத்து முன்னாள் மன்னர்கள், பழம் பெரிய போராட்ட வீரர்களின் பெயராலும், பாட்டாளி வர்க்க தலைவர்களின் பெயராலும் சோவியத்தைப் பாதுகாக்க தேசிய போருக்கு அறை கூவல் இட்டதை சுட்டிக்காட்டி, தேசியம் வர்க்கத்தைக் கடந்து, எங்கோ இருந்து வெளிவருவதாகவும், தேசியம் என்றென்றும் மனதில் குடிகொண்டுள்ளதாக, என பல விதமாக, கற்பனையில் உதிப்பதை எல்லாம் கூறிவருகின்றனர்.
சோவியத் பாசிசத்துக்கு எதிராக விடுத்த அறைகூவல் என்பது வர்க்கத்தைக் கடந்த தேசிய மல்ல. மாறாக சோவியத்துக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்த வர்க்க மோதலை தற்காலிகமாக மட்டுப்படுத்தி பாசிசத்துக்கு எதிரான பரந்து பட்ட மக்களின் ஐக்கியத்தை கட்சியின் தலைமையில் கோரியது.
சோவியத்தின் சோசலிச காலகட்டம் நீடித்த எல்லாக் காலமும், சோவியத்தில் இரண்டு வர்க்கங்கள் இருந்தன. பாட்டாளி வர்க்கம் அல்லாத பிரிவை பாசிசத்துக்கு எதிராக அணி திரட்டுவதற்கு அதன் பிரதி நிதிகளின் பெயரால் அறைகூவலிடுவது அவசியமாகின்றது மட்டும் இன்றி சரியானதுமாகும்.
இது யுத்த அறை கூவல் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் கட்சி வர்க்கப் போரை தணித்து பிரதான போராட்டமான பாசிசத்துக்கு எதிராக அறைகூவல் விடுத்தது.
எஸ்.வி.இராஜதுரையின் "ரஸ்சியப் புரட்சியின் இலக்கியச் சாட்சியம்" என்ற புத்தகத்தில் எஸ்.வி.இன் மார்க்சிய எதிர்ப்பை மீறியும், இலக்கியத்தில் பாசிசத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணியை பாட்டாளி அல்லாத எழுத்தாளர்களுடன் கொண்டு இருந்ததை வெளிக் கொண்டு வருவதை நாம் தெளிவாகக் காணமுடியும்.
சோவியத் அறைகூவல் பாட்டாளி வர்க்கத்தை பாதுகாக்க, ஒரு ஐக்கிய முன்னணியை பாசிசத்துக்கு எதிராக கோரிய அடிப்படையில் இருந்து தான் கோரியதே ஒழிய, மாறாக இதை மறுப்பவர்கள் ஒழிந்திருந்த வர்க்கத்தை கடந்த தேசியம் என காட்ட முனையும் மார்க்கிய விரோதிகளின் நோக்கம் தேசிய முதலாளித்துவத்தை நியாயப்படுத்தவதேயாகும்.
இனி 2ம் உலக யுத்தத்தின் போது மாறுகின்ற தேசிய வடிவங்களைப் பார்ப்போம். நாசிப்படை பல்வேறு நாடுகளைக் கைப்பற்றிய போது, அதை சோவியத் எதிர்த்ததுடன், போராடுபவர்களுக்கு ஆதரவும் வழங்கியது. அதே நேரம் சர்வதேச அளவில் பாசிசத்துக்கு எதிராக பகிரங்கமாக ஐக்கிய முன்னணியைக் கோரியது.
இதை பல்வேறு முதலாளித்துவ நாடுகள் நிராகரித்து எதிர்த்த போது, அந்த நாட்டு பாட்டாளிகளின் கடமை முதலாளிகளின் சுரண்டல், மற்றும் கம்யூனிச எதிர்ப்பை அம்பலப்படுத்தி சொந்தப்பாட்டாளி வர்க்க தலைமையில் பாசிசத்தை எதிர்த்தும், அதற்கு ஆதரவான பிரிவை எதிர்த்தும் போராடுவதன் மூலம் தனது தலைமையை பாசிசத்துக்கு எதிராக நிறுவுவதுமே அன்றைய சர்வதேசப் பணியாக இருந்தது.
பின்னர் சோவியத்துடன் இந்த நாடுகள் பாசிசத்துக்கு எதிராக, சொந்த பாட்டாளி வர்க்க நிர்ப்பந்தத்தால் ஐக்கிய முன்னணிக்கு வந்த போது, இந்தப் பாட்டாளி வர்க்கம் பாசிசத்துக்கு எதிராக, சொந்த முதலாளித்துவப் பிரிவுடன் வரையறுக்கப்பட்ட அளவில் ஐக்கியத்தைக் கொள்ள வேண்டி இருந்தது. இந்நிலையில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பல நாடுகளில் பாட்டாளி வர்க்கம் தனது தலைமையில் பாசிசத்துக்கு எதிராகப் போராடியது.
எனவே தேசியத்தை உயர்த்துவது உயர்த்தாதது என்பது பாட்டாளி வர்க்கம் என்ன நிலையில், என்ன பாத்திரத்தை கொண்டுள்ளது என்பதுடன் தொடர்புடையதாக உள்ளது. தேசியம் என்பது வர்க்கத்துக்கு வெளியில் ஒருக்காலும் உதிக்க முடியாது. அப்படி உள்ளது என்பவர்கள் உண்மையில் பொருளை முழுமையாக ஆராயாது ஏதோ ஒன்றைப் பிடித்து தொங்கி தமது மார்க்சிய விரோத நிலைக்கு பொருள் தேடுவதாகும்.