Language Selection

பி.இரயாகரன் 1996-2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஏகாதிபத்தியம், மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கிடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியம் என்பது, பரஸ்பர சந்தையை மையமாக வைத்து இரண்டு சுரண்டும் வர்க்கமும் யுத்தத்தை முன் தள்ளுகின்றன. இந்த முதலாளித்துவ நாடுகள் உலகை தமது காலனியாகவோ, நவகாலனியாகவோ அரைக்காலனியாகவோ நேரடியாகவோ மறைமுகமாகவோ வைத்துள்ளன.

 இந்த நாடுகளின் சுரண்டல் பிரிவுகள் இக்காலனித்துவத்தில் நடத்தும் சுரண்டலுக்கும், ஈவிரக்கமற்ற சூறையாடும் நிலைக்கும் நெருக்கடி இல்லாதவரை இவர்களுக்கு இடையில் யுத்தம் ஒருக்காலும் ஏற்படாது. இவர்கள் தமது சந்தையின் தளத்தை எப்போது இழக்கத்தொடங்குகின்றனரோ அப்போது சுரண்டல் பிரிவுக்கு இடையில் மோதல் தொடங்குகின்றது. இம் மோதலின் உச்சத்தில் யுத்தங்களை தமது நாட்டுக்கு இடையில் அல்லது வௌவேறு நாடுகளின் கூலிப்படைகள் மூலம் அல்லது கைக் கூலிப்படைகள் மூலம் யுத்தத்தை நடத்தினர். நடத்துகின்றனர்.


இங்கு தேசியம் அடிப்படையில் பிரகடனம் செய்வதன் நோக்கம் தமது சுரண்டலை மறைப்பதற்காகவும், யுத்தங்கள் மூலம் மீள சந்தையைப் பகிர்ந்து கொள்ளுவதற்குமேயாகும்.


இத்தேசியம் எப்போதும் திட்டவட்டமாக பிற்போக்கானது. இவ்யுத்தத்தில் ஈடுபடும் இரு முதலாளித்துவ நாடுகளின் சுரண்டல் பிரிவும் எழுப்பும் தேசியத்தை எதிர்த்து பாட்டாளிகள் தமது வர்க்கப் போரை சொந்த நாட்டுக்குள் பிரகடனம் செய்ய வேண்டும்.


ஆக்கிரமிப்பு என்பது பரஸ்பரம் சந்தைக்கானதாக உள்ளதால், இவ்யுத்தத்தை நடத்தும் இரு பிரிவு சுரண்டல் ஆதிக்க வாதிகளும் முழுக்க முழுக்க ஈடுபடுவதால், பாட்டாளி வர்க்கம் அதை எதிர்த்து வர்க்கப் போரைப் பிரகடனம் செய்ய வேண்டும்.


சொந்த நாட்டில் பாட்டாளி வர்க்கம் வர்க்கப்போரை பிரகடனம் செய்தபடி, மற்றைய நாட்டுப் பாட்டாளியைக் கொல்லாதே எனக் கோரியும், யுத்தத்தை நிறுத்தக் கோரியும் முதலாளித்துவ நாட்டுப் பாட்டாளிகள் பரஸ்பரம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.


முதலாளித்துவ நாட்டுக்கு இடையேயான யுத்தத்திற்கும், மூன்றாம் உலக நாட்டு மீதான ஆக்கிரமிப்புக்கும் எதிரான யுத்தத்தில் பாட்டாளிகளின் கடமை மிகத்திட்ட வட்டமாக வேறு பட்டவை. முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவப் பிரிவே யுத்தத்தை நடத்துவதால் சொந்த நாட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சியை நடத்த கோருகிறது பாட்டாளி வர்க்கம். மூன்றாம் உலகநாடு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் போது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் பாட்டாளி வர்க்கம் சர்வதேசியக் கண்ணோட்டத்தில் தேசியப் போரைக் கோர வேண்டும் அது சராம்சத்தில் வர்க்கப் போராகவே இருக்கும்.. இங்கு முதலாளித்துவ நாட்டுப் பாட்டாளி வர்க்கம் முன்றாம் உலகத் தேசியப் போரை ஆதரித்தும், சொந்த நாட்டு சுரண்டும் வர்க்கத்தின் நோக்கத்தை எதிர்த்தும் போராட வேண்டும்.