ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நாடு தனது தேசம் கடந்த சுரண்டலை நடத்தவும், அதே நேரம் தனது செல்வாக்கு மணடலங்களை (தனது சுரண்டலைப் பாதுகாக்க) நிறுவவும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றன
ஏகாதிபத்தியமில்லாத ஆக்கிரமிப்பு நாட்டின் பின், ஏகாதிபத்திய மறைமுகத் தலையீடும் இன்றி இவ் ஆக்கிரமிப்புக்கள் இன்றைய ஏகாதிபத்திய சகாப்தத்தில் சாத்தியமில்லை. இன்றைய நிலையில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நாடு அந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட முனைகிறது. காலனி அரைக்காலனி அல்லது நவகாலனித்துவ நோக்கத்தை கொண்ட ஆக்கரமிப்பு நாட்டின் சுரண்டும் வர்க்க கதவுகளை உடைத்தெறியப் போராடுவது அவசியமாகிறது.
இந்நிலையில் மூன்றாம் உலக நாடுகளில் தேசிய முதலாளித்துவப் பிரிவு தனது சுரண்டலைப் பாதுகாக்க முனைந்து போராட முனைகிறது. இப்பிரிவு சொந்தப்பலத்தில் நிற்கும் தகுதியை ஏகாதிபத்திய சகாப்தத்தில் இழந்து விடுவதால், அவர்கள் இயல்பில் ஆக்கிரமிப்பாளனிடம் சரணடைந்து சேவை செய்வதன் மூலம், தனது நலனைக் குறைந்த பட்சம் பாதுகாக்க தீவிரமாக முனைகிறது.
மறுபுறம் ஆக்கிரமிப்புக்கு எதிராக பரந்து பட்ட மக்கள் தமது தேசத்தைப் பாதுகாக்க தேசியவிடுதலைப் போரை பிரகடனம் செய்கின்றன. இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் தகுதியை பாட்டாளி வர்க்கம் கொண்டிருப்பதால், ஆக்கிரமிப்பாளனுக்கு எதிரான போராட்டம் உள்ளுர் தரகுப் பிரிவை எதிர்த்தும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நடத்தப்படுவதால் அத்தேச விடுதலைப் போர் வர்க்கப் போராக இயல்பில் கொண்டுள்ளது. இது சர்வதேச அடிப்படையைக் கொண்டதுமாகும்.
இவ்வர்க்கப் போரோ, தேசிய விடுதலைப் போரோ ஒன்றில் இருந்து ஒன்று விலகிவிடுவதில்லை. தேச விடுதலைப் போரும், வர்க்கப் போரும் ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக, தனது எதிரியை ஏகாதிபத்தியமாகவும், அதற்கு சேவை செய்யும் தரகுப்பிரிவையும், நிலப்பிரபுத்துவத்தையும் ஒன்றாக இனங்காண்கிறது. இது அடிப்படையில் புதிய ஜனநாயகப் புரட்சியாக உள்ளதுடன், அது உள்ளடக்கத்தில் வர்க்கப் போராட்டத்தையும், தேசிய விடுதலைப் போரையும் உள்ளடக்கி, சர்வதேசிய கண்ணோட்டத்தில் வேறு பிரிக்க முடியாத வகையில் உள்ளது.
தேசிய முதலாளித்துவப் பிரிவு தவிர்க்க முடியாது இதனுடன் இணைந்தோ அல்லது கூட்டு அமைத்தோ போராட நிர்ப்பந்திப்பதன் மூலம் இத் தேச விடுதலைப் போர் தெளிவான வர்க்கப்போராகவும் எதிரியை சரியாக அடையாளம் காண்கின்றது.