"தேசியம் ஒரு கற்பிதம் " (கவனிக்க - மாயை என்று நாம் சொல்லவில்லை. கற்பிதம் என்றுதான் சொல்கிறோம்) தேசியப் போராட்டம் தான் தேசத்தை உருவாக்கிகுகிறதே யொழிய, எற்கனவே "இயற்கையாகவே" உருப்பெற்ற தேசம் தேசியப் போராட்டத்தை உருவாக்குவதில்லை." என்ற மார்க்சிய விரோத, தேசிய விடுதலைக்கு எதிரான கருத்து முதல் வாதக் கோட்பாட்டை பார்ப்போம். "கற்பிதம் மாயை இல்லை" என்று கூறியபடி "கற்பிதம் என்று தான் கூறுகின்றோம்" எனக் கூறுவதில் என்ன விளக்கம் தான் மிஞ்சியுள்ளது? 'கற்பிதம்" என்றால் என்ன என்று அவர்களால் விளங்க முடியவில்லை.
"தேசியம் ஒரு கற்பிதம்" என்பதை பென் ஆண்டர்சன் முன் வைத்த கோட்பாட்டை தமிழிற்கு கொண்டு வந்த இந்த மார்க்சிய விரோதி அ.மார்க்ஸ், "கற்பிதத்தை மாயை என்று சொல்லவில்லை" எனக் கூறி "கற்பிதம்" என்று கூறுவதாகக் கூறும் இவர்களின் கற்பிதம் மீதான விளக்கம் இதைத் தாண்டி செல்ல முடியாத கோட்பாட்டு முடக்கத்துக்குள் சிக்கி விடுகின்றது என்பதை ஏற்க வேண்டும்.
நாம் கற்பிதம் என்பதற்கு தமிழ் அகராதியில் என்ன விளக்கம் கொடுத்துள்ளது எனப் பார்ப்போம். ந.சி.கந்தையா எழுதிய செந்தமிழ் அகராதியில் கற்பிதம் என்பது பொய் என குறிப்பிட்டுள்ளது.
அ.மார்க்ஸின் "மாயை அல்ல" எனின், பொய் என எடுக்க வேண்டும். தேசியம் ஒரு பொய் அல்ல மாயை இதைவிட வேறு அர்த்தம் கிடையாது. வேறு அர்த்தம் உண்டு எனின் அ.மார்க்ஸ் தனது திரிபுக்கு எற்ப எற்ற ஒரு தமிழ் அகராதி தானே எழுத வேண்டும். பின்னரே இந்தப்புத்தகத்தை எழுதியிருக்க வேண்டும். இதே முன்னுரையில் "தேசியம் ஒரு கற்பிதம்" என்பதை எஸ்.வி.ராஜதுரை "இந்து, இந்தி-இந்தியா" வில் ஏற்றுள்ளதாக நிறப்பிரிகைக் குழு கூறுகின்றது. எஸ்.வி.ராஜதுரை என்ற மார்க்சிய விரோதி என்ன "இந்து இந்தி இந்தியா"வில் கூறுகின்றார் என கொஞ்சம் பார்ப்போம்.
"........ பெனடிக் அன்டர்ஸனின் மொழியில் சொல்வதென்றால் ஒரு வகையான "கற்பிதங்கள்" தான் தேசம் அல்லது தேச அரசு என கற்பிதம் செய்யது கொள்ளப்பட்ட ஒரு சமூகம் என்று அவர் கூறுகையில், அவ்வாறு செய்யப்படும் "கற்பிதம்" இவ்வுலகிற்கும், இவ்வுலகில் உள்ள மெய்நிலைகளுக்கும் தொடர்பற்ற ஒரு விசித்திரக் கற்பனை என்று கொள்வதில்லை. அது மெய் நிலைகளை ஆதாரமாகக் கொண்டும் புற நிலைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டும் அவற்றினூடாகவும் செய்து கொள்ளப்படும் "கற்பிதம்" என்று தான் கூறினார். ஆனால் மொழி, பண்பாடு, மரபாக வளர்ந்து வரும் நிலப்பரப்பு பற்றிய உணர்வு போன்ற கூறுகளுக்கு உள்ள வலிமையை அவர் ஆழமாகப் புரிந்து கொள்வில்லை." என எஸ்.வி ராசதுரை என்ற மார்சிய விரோதி கூறுகின்றார்.
எஸ்.வி.ராஜதுரை கூறுகின்றார் மொழி, பண்பாடு, மரபான நிலப்பரப்பை பெனடிக் அன்டர்சன் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால் அது இயல்பில் "கற்பிதம்" என்ற கோட்பாடே தவறானதாக மாறிவிடுகின்றது. பின் எப்படி எஸ்.வி ராஜதுரை கற்பிதத்தை இப்படித்தான் கூறுகின்றார் என விளக்க முடியும். "....... "கற்பிதம்" இவ்வுலகிற்கும் இவ்வுலகில் உள்ள மெய் நிலைகளுக்கும் தொடர்பற்ற ஒரு அதாவது விசித்திர கற்பனை என்று கொள்வதில்லை." என்ற எஸ்.வி.ராஜதுரை எப்படி "மொழி, பண்பாடு, மரபாக வளர்ந்து வரும் நிலப்பரப்பு பற்றிய உணர்வு போன்ற கூறுகளுக்கு உள்ள வலிமையை அவர் (அவர் என்பது பெனடிக் அன்டர்சன்) ஆழமாகப் புரிந்து கொள்வில்லை. " எனக் கூறிய படி சொல்ல முடியும் என யாரும் அவரிடம் கேட்டுவிடக் கூடாது. ஏன்எனின் அது அவருக்கே தெரியாது. ஏன் எனின் மார்க்சியத்தை மறுத்துரைக்க யார்யார் மார்க்சியத்துக்கு எதிராக என்ன கூறுகிறார்களோ அதை எல்லாம் நியாயப்படுத்த நாம் எப்படி வேண்டுமானாலும் முரண்பாட்டுடன் விளக்கம் கொடுப்போம், வாசிப்பவன் குழம்ப வேண்டும். ஆனால் தெளிவு வரக் கூடாது. அதற்கு மாற்றி மாற்றி வித்தை காட்டுவோம் என்பது தான் இந்த மார்க்சிய விரோதிகளின் சித்தாந்தம். இது எப்படி அ.மார்க்ஸின் "தேசியம் ஒரு கற்பிதத்துக்கு" பலம் சேர்க்கும். எல்லாம் மார்க்சியத்தை மறுதலிக்கும் கோட்பாடு மட்டுமின்றி, தேசியத்தையும் மறுதலிக்கும் அடிப்படையுமாகும்.
இனி நாம் "கற்பிதம்" என்ற கோட்பாட்டின் பின் உள்ள வர்க்கக் கண்ணோட்டத்தை ஆராய்வோம். "தேசியம் ஒரு கற்பிதம்" என்று கூறும் ஒரு கோட்பாடு பொருள் முதல் வாதப் பார்வையை மறுத்து கருத்து முதல வாதப் பாதையை முன் தள்ளுவதாக உள்ளது.
அதாவது "தேசியம் ஒரு கற்பிதம்" எனின் இருக்கும் எல்லாத் தேசியத்தின் பின் ஒரு தேசம் உள்ளது. தேசியத்தின் பின் உள்ள தேசம் என்ற பொருள் மறுதலிக்கப்படுகின்றது. தேசம் முற்போக்காகவோ, பிற்போக்காகவோ இருந்தாலும் அங்கு தேசம் என்று ஒரு வரையறை உண்டு. தேசம் ஒடுக்கும் தேசமாக இருந்தாலும், ஒடுக்கப்படும் தேசமாக இருந்தாலும் அங்கு தேசம் என்ற வரையறை உண்டு. ஏகாதிபத்தியமாக இருந்தாலும், அதை எதிர்த்துப் போராடும் ஒரு தேசமாக இருந்தாலும் அங்கு தேசம் என்ற ஒரு வரையறை உண்டு. அது நிலத்தொடர், மொழி, பண்பாடு, ஒரு பொருளாதாரம் என்ற அடிப்படை வரையறை உள்ளவரை தேசியம் ஒரு கற்பிதம் என்பது பொருளை மறுக்கும் (இந்த நான்கையும்) கருத்து முதல்வாதமாகும.
இந்த தேச வரையறை மாயையோ, பொய்யோ (கற்பிதமோ) , கற்பனையோ அல்ல. மாறாக இது தேசம் செறிந்த பொருளாதாரமாக உள்ளது. இது வெறும் மனிதர்களின் சிந்தனை அல்ல. மாறாக மனிதனின் வாழ்வு நிலையுடன் கூடிய அடிப்படை வர்க்க நோக்கம் கொண்ட, பொருள் செறிந்த அடிப்படை நோக்குடன் செயல்படுகின்றது.
நாம் முன்பு எடுத்துக் காட்டிய நிறப்பிரிகையின் மேற்கோளில் "தேசியப் போராட்டம் தான் தேசத்தை உருவாக்குகிறதே ஒழிய எற்கனவே "இயற்கையாக" உருப்பெற்ற தேசம் தேசியப் போராட்டத்தை உருவாக்குவதில்லை" என வாதிடும் அ.மார்க்ஸ் போன்றோர் கருத்தை முதன்மையாக ஏன் முன் தள்ளுகின்றார்.
முதலில் "இயற்கையானது அல்ல" எனக் கூறி தமது கருத்து முதல் வாதத்தை மறைக்க முனைகின்றார். அதாவது தேசம் என்ற பொருள் இன்றி தேசிய விடுதலைப் போர் நடக்க முடியும் என்கின்றார். இயற்கையானது அல்ல மாறாக செயற்கை ஆனது என்கின்றார். தேசம் என்பது செயற்கை ஆனது என்கின்றார். இதை ஆழமாகப் பார்க்காது மேலோட்டமாகப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றும். அதாவது சுரண்டும் பிரிவு உருவாக்கியதாக பொதுவில் கொள்ள முடியும்.
ஆனால் இது செயற்கையோ அல்லது இயற்கையோ தனியாகவோ இல்லை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து போய் உள்ளது. உலகில் இன்று உள்ள செயல்கள், பொருட்கள் என அனைத்தும் இயற்கையும், செயற்கையும் இணைந்து எப்படி உள்ளதோ அதுபோல் தான் தேசமும்.
மக்கள் கூட்டம் இயற்கையின் மீதான, தனது உயிர் வாழ்தலுக்கான பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மாறுதலே தேசமாக உருவாகின்றது. இது தன்னகத்தே இரண்டு பிரிவு மக்கள் கூட்டத்தை கொண்டு உள்ளதுடன் அதற்கிடையிலான முரண்பாட்டின் நிகழ்வுகளாக தேசம் ஒரு பொருளாதார வடிவமாக மக்களால் (இரண்டு பிரிவுகளாலும்) உருவாக்கப்பட்டது. ஆகவே தேசம் வெறுமனே இயற்கையோ வெறுமனே செயற்கையோ அல்ல. மாறாக மனிதனின் வாழ்தலுக்கான இயங்கியலுடன் இயற்கை, செயற்கையின் மிதான மனித செயற்பாட்டின் தொகுப்பே தேசமாகும்.
இனி தேசிய விடுதலைப் போராட்டம் தான் தேசத்தை உருவாக்குகிறது என்கிறார். அதாவது வர்க்கப் போராட்டம் தான் தொழிலாளர் வர்க்கத்தை உருவாக்கிறது என்கிறார். மொழிப் போராட்டம் தான் மொழியை உருவாக்கிறது என்கிறார். சொத்துடமையை வைத்திருக்கும் போராட்டம் தான் தனியார் சொத்தை உருவாக்கியது என்கின்றார். பெண் விடுதலைப் போராட்டம் தான் பெண்ணை உருவாக்குகிறது என்கின்றார். அடிமைக்கு எதிரான போராட்டம் தான் அடிமையை உருவாக்குகிறது என்கின்றார். சாதிப் போராட்டம் தான் சாதியை உருவாக்கிறது என்கின்றார். தேசிய விடுதலைப் போராட்டம் தான் தேசத்தை உருவாக்கிறது என்கின்றார்.
இந்த கருத்து முதல்வாதக் கோட்பாடுதான் கார்ல் மார்க்ஸால் அடிப்படையில் மறுதலிக்கப்பட்டு பொருளை அடிப்படையாகக் கொண்ட சிந்தனையை உலகுக்கு வழங்கினார். அதாவது பொருள் இன்றி சிந்தனையோ, போராட்டமே, ....... எதுவுமே இருக்க முடியாது. எல்லாவற்றிலும் பொருள் அடிப்படையானது. அதன்பின் தான் சிந்தனை.
ஆனால் அ.மார்க்ஸ் -ரவிக்குமார் உட்பட இந்த கருத்து முதல் வாதிகள் சிந்தனையை முதல் வைத்து அதில் பொருளைத் தேடுகின்றனர். பின் தாம் மார்க்சிய வாதிகள் எனக் கூறிக் கொள்ளவும் விரும்புகின்றனர். அதுவும் மார்க்சின் பெயரினால் கார்ல் மார்க்சின் பெயரிலும், மார்க்சிய சிந்தனையின் பெயரிலும்.
தேசம் ஒன்று உள்ளபோது தான் தேசிய விடுதலைப் போராட்டம் நடக்க முடியும். இந்த தேச விடுதலைப் போர் ஒடுக்கப்படும் தேசத்தை முன்னோக்கி தள்ளுவதன் மூலம், ஒரு தனியான சுயமான அரசாக மாற முனைகிறது.
எல்லாத் தேசமும் தத்தமது தேச விடுதலைப் போருக்கு ஊடாக தமக்கான அரசு ஒன்றை உருவாக்கியுள்ளன, உருவாக்க முனைகின்றது. ஆகவே இங்கு தேச விடுதலைப் போர் என்பது தன்னை மேலும் பலப்படுத்தும்படி அரசை உருவாக்கும் அல்லது பாதுகாக்கும் முயற்சியின் விளைவே ஒழிய வேறெந்த வடிவமும் கிடையாது. தேசவிடுதலைப் போர் என்பது அரசை உருவாக்கும் போராகும்.
ஒரு தேசம் என்பது தேச விடுதலைப் போருக்கு ஊடாக ஒரு அரசை உருவாக்க அல்லது பாதுகாக்க முனையும் போக்கை மக்களின் "கற்பிதம்" என்று கூறுபவன் அடிப்படையில் தேச விடுதலையை மறுக்கும் நோக்கோடு அதன் பொருள் செறிந்த பார்வையை மறுதலிக்கின்றான். இதன் மூலம் ஏகாதிபத்திய நோக்கை நிறைவு செய்கின்றான்.
இலங்கையை எடுத்தால் சிங்களப் பெருந்தேசியம் ஒடுக்கும் அரசாகவும், தமிழ் தேசியம் ஒடுக்கப்படும் தேசியமாகவும் தனக்கான தேசத்தில் நின்று தேசிய விடுதலைப் போர் ஊடாக அரசைக் கோரியும் நடக்கும் போராட்டத்தில் இரண்டு பக்கத் தேசியமும் கற்பிதங்கள் அல்ல. சிங்கள தேசிய மக்களும், தமிழ் தேசிய மக்களும் தமக்கிடையில் வளங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், அல்லது பிரித்துக் கொள்ளவும் செய்யும் போர் தான் இங்கு தேசியமாக உள்ளது. சிங்கள இனவாத அரசாக இருந்தபடி தமிழ் சிங்கள மக்களை ஒட்டு மொத்தமாக சுரண்ட முயலும் போது, தமிழ் பிரிவு தனக்கான கோரிக்கையினை கோரத் தொடங்கிய போது தேசவிடுதலையும் ஆரம்பமாகின்றது.
மக்கள் சுரண்டப்படும் நிலையில் தனக்கான பங்கை கோரும் போர் எப்போதும் சுரண்டல் வர்க்கத்திடமே எழுகின்றது இதனால் தான் தேசியம் என்பது முதலாளித்துவக் கோரிக்கை என்கின்றோம்.
வௌவேறு இனப்பிரிவுகளின் ஆதிக்கச் சுரண்டல் பிரிவுகள் மோதும் போது, யுத்தமும் அதன் போக்கும் ஒட்டு மொத்த சமூகம் முன் திணிக்கப்படும் போது யுத்தம் பரந்து பட்ட மக்கள் முன் நகர்த்தப்படுகிறது. இப்போதும் கூட இந்தத் தேசியம் முதலாளித்துவக் கூறாகவே இருக்கின்றது.
இந்தத் தேசிய யுத்தம் பாட்டாளி வர்க்கத் தலைமையில் எப்போது மாறுகின்றது எனப் பார்ப்போம்.
ஒன்றுக்கு மேற்பட்ட இந்தத் தேசியத்துக்குள் சுரண்டல் உள்ளதால் இரண்டு பக்கத்திலும் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்படும் மக்களும் இருக்கின்றனர். இவர்களைச் சுரண்டுவதில் எந்தத் தேசியம் என்பது தொடர்பான முரண்பாடு பொதுவில் இருப்பதில்லை.
எங்கெல்சு இது தொடர்பாக 'அனைத்து நாட்டுத் தொழிலாளர்களும் ஒரேவிதமான நலன்களையும், ஒரேவிதமான எதிரியையும் கொண்டுள்ளனர். மேலும் ஒரேவிதமான போராட்டத்தையே அவர்கள் நடத்த வேண்டியுள்ளது" என்றார்.
ஆனால் இந்த ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய சுரண்டும் வர்க்கத்திற்கு இடையில் போட்டி எழும் போது தனது இனத்திடம் தான் மட்டும் சுரண்டும் ஆதிக்கத்தைக் கோரத் தொடங்குகின்றது. இந்த இரண்டுக்கு மேற்பட்ட சுரண்டல் பிரிவுக்குள் எப்போது முரண்பாடு ஏற்படுகின்றது ?. உள்நாட்டுச் சந்தையை அந்நிய நாடு கட்டுப்படுத்தும் போது, கைப்பற்றும் போது, அதை எதிர்த்துப் போராட சுரண்டும் வர்க்கம் தயாரற்ற நிலையில் சமரசம் செய்து கொள்ளும் போது, உள்நாட்டு சுரண்டும் வர்க்கத்திற்குள் சந்தைப் போட்டி அதிகரிக்கின்றது. பல் தேசிய நாட்டில் வௌவேறு இன மக்கள் கூட்டத்தின் சுரண்டல் பிரிவுக்குள் மோதல் தொடர்கிறது.
இன மோதலாக மாற்றப்பட்ட சந்தையை கைப்பற்றிக் கொள்ளும், அதிகாரம் கொண்ட இனப்பிரிவு தவிர்க்க முடியாது. ஏகாதிபத்திய சுரண்டல் உள்ளவரை அதனுடன் சமரசம் செய்து கொள்ளவும், மூடி மறைக்கவும் இனவாதத்திற்கு மேலும் மேலும் எண்ணை வார்த்து தீ வைக்கின்றனர்.
பாட்டாளி வர்க்கத் தலைமை சுரண்டலுக்கு எதிரான போரை எப்போதும் ஐக்கியத்துடன் கோருகின்றது. அது எந்தத் தேசிய சுரண்டும் பிரிவு என இனம் பிரிப்பது இல்லை. இந்தக் கோரிக்கையை சரியாக முன்னெடுத்து, இனப்பிரிவைத் தாண்டி ஐக்கியப்பட்ட சுரண்டலுக்கு எதிரான போர் உருவாகின், அங்கு ஏகாதிபத்திய சுரண்டும் வர்க்கம் இனப்பிளவை இனத்திற்கிடையில் ஏற்படுத்த முடியாது போய்விடுகின்றது.
மாறாக சுரண்டும் பிரிவு வர்க்க ஐக்கியத்தைக் குலைத்து இன முரண்பாட்டை ஏற்படுத்தின், வர்க்க சக்திகளின் ஐக்கியப்பட்ட போராட்டம் பலவீனமடைகின்றது. இந்நிலையில் இன முரண்பாடு யுத்தமாக, மொத்த இன மக்களுக்கு இடையில் நகர்த்தப்படுகின்றது. இந்நிலையில் சுரண்டப்படும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் அத்தேசியப் போராட்டத்தை தனது தலைமையின் கீழ் சர்வதேசிய அடிப்படையில் சுயநிர்ணயநோக்கில் முன்னெடுப்பதன் மூலம், எதிர்த்தரப்பு பாட்டாளிகளை ஐக்கியப் பட்ட கோரிக்கையின் ஊடாக அணிதிரட்ட முனைகின்றது. ஒடுக்கும் இனப்பாட்டாளிகள் பிரிவினைக்கு ஆதரவான பிரச்சாரத்தின் ஊடாக ஒடுக்கும் இனத்தை ஐக்கியப்படுத்த முனைகின்றனர்.
எனவே தேசியப் போராட்டம் என்பது திட்ட வட்டமாக வர்க்கம் சார்ந்துள்ளது. இது வெறும் "கற்பிதங்கள்" அல்ல. மாறாக தனது வாழ்வியலுக்கும், தனது வர்க்கத்திற்குமான போராட்டமே ஒழிய தேசியம் கற்பிதங்கள் அல்ல. அது போல் பாட்டாளி வர்க்க கோரிக்கையும் அல்ல.
நாம் யுத்தங்களில் உள்ள வௌவேறு தேசியக் கோரிக்கைகைப் பற்றிப் பார்ப்போம்.
1. பல்தேசிய இன நாடுகளுக்குள் அரசு இன்றி இருக்கும் ஒரு தேசம் தனது அரசைக் கோரி நடக்கும் தேச விடுதலைப் போராட்டம்.
2. ஏகாதிபத்தியம் மற்றும் மூன்றாம் உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் போது நடக்கும் சொந்த தேசத்தைப் பாதுகாக்கும் யுத்தம்.
3. ஏகாதிபத்திய, மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கு இடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியமும்.
4. ஒரு பாட்டாளி வர்க்கத் தலைமையைக் கொண்ட ஒரு நாட்டில் இன்னும் ஒரு ஆக்கிரமிப்பு நாட்டுக்கும் இடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியமும்.
5. ஒரு நாட்டுக்குள் நடக்கும் உள் நாட்டு யுத்தமும் அதன் தேசியமும.
பொதுவாக இன்றைய யுத்தங்களை இந்த ஐந்துக்குள் உள்ளடக்க முடியும். இவ்வெல்லா யுத்தங்களிலும் வர்க்க நோக்கங்கள் தெளிவாக உள்ளதுடன், தேசியக் கோரிக்கையையும் வர்க்க நோக்கில் முன்வைக்கப்படுகிறது.
எனவே தேசியப் போராட்டம் வர்க்கத்தைக் கடந்து உள்ளதாகவோ, தேசியம் வெறும் கற்பிதம் என்பதோ அடிப்படையில் சுரண்டும் வர்க்கத்தை மூடிமறைக்கும் தௌளத்தெளிவான குறிக்கோளின் வெளிப்படையாகும்.
நாம் இனி யுத்தங்களின் வர்க்க அடிப்படையை அதன் தேசியக் கோரிக்கைகளை தனித்தனியாக ஆராய்வோம்.