அண்மைக்காலமாக மார்க்சியத்துக்கு எதிரான போக்குகள் தீவிரமடைந்துள்ளது. சோவியத்திலும், சீனாவிலும் அப்பட்டமான முதலாளித்துவ முன்னெடுப்புகள் தொடங்கியதுடன் மார்க்சியம் மீது முன்பை விட அதிகமாக சேறு வீசப்படுகின்றது. இன்று ஈழப் போராட்டம் இராணுவ வாதத்திற்குள் சிக்கி உள்ள நிலையில், குறைந்த பட்ச ஜனநாயக இயக்கத்தைக் கூட விட்டு வைக்காத இன்றைய நிலையில், கடந்த கால சமூக அக்கறைக்குரியவர்கள் உதிரியாகவும், சிறு குழுக்களாகவும் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்தனர்.
பெயர்கின்றனர். இந்தப் புலப் பெயர்வின் நீடித்த சமூக அக்கறை, அவர்களின் பொருளாதார வசதியுடன் சிதையத் தொடங்கியது. முன்னைய சமூக அக்கறைக் குரியவர்கள் பலர் இளம் வயது இளைஞர்களாக இருந்ததுடன், உழைப்பில் ஈடுபடாது கவர்ச்சிகரமான இராணுவ செயற் தளத்தில் புகுந்தவர்கள், முதன் முதல் பணத்தை தமதாகக் கண்டது முதல் அவர்கள் சமூக அடிப்படையுடன் தமது நிலைக்கு ஏற்ப ஒரு புதிய கோட்பாட்டுத் தளத்தைத் தேடத் தொடங்கினர், தொடங்கி உள்ளனர்.
இதே நேரம் இந்தியாவில் உள்ள புரட்சிகரப் பிரிவுகளுடன் நெருங்கிய பல முன்னைய தொடர்புகளை முன்பு பேணியவர்கள், தமது சமூக அடிப்படை மாற்றத்துடன் புதிய கோட்பாட்டுத் தளத்தை தேடி அலைந்தனர்.
இந்தியாவில் எழுந்து வரும் சமூக நெருக்கடிகளும் அதனால் எழும் போராட்டங்கள் அடிப்படை மார்க்சிய வரையறைக்குள் எழுவது தவிர்க்க முடியாத போக்காக இருந்தது. இந்தியாவில் ஏகாதிபத்தியமும் உள்ளுர் ஆளும் தரகு நிலப்பிரபுத்துவப் பிரிவுகளும் மார்க்சியத்திற்கு எதிரான பல வண்ண வகை கோட்பாடுகள், மனித உரிமை அமைப்புகள், சமூக சேவை அமைப்புகள் ...... என பலவகைச் செயல் தளத்தை உருவாக்கி வறுமையில் வாழும் மக்களுக்குள்ளும், போராடும் மக்களுக்குள்ளும் அனுப்பி வைத்தன, வைக்கின்றன. இதில் கோட்பாட்டுத் தளத்தில் தன்னார்வக் குழுக்கள் மற்றம் மார்க்சியத்தின் பெயரில் பல வண்ண வகைக் கோட்டுபாடுகளை முன் தள்ளினர், தள்ளுகின்றனர். இதன் மூலம் முன்னணி சமூகப் புரட்சியாளர்களை வென்றெடுத்து சீர் அழித்தல், அல்லது குறைந்த பட்சம் மார்க்சியம் மீது ஐயசந்தேகத்தை எழுப்புவது, வர்க்கப் போராட்டத்திற்கு பதில் வேறு போராட்ட வடிவத்தை முன் தள்ளுவது என பல வகைக் கோட்பாட்டை முன்வைக்கின்றனர்.
இந்த வகையில் மார்க்சியத்திற்கு பதிலீடாக வர்க்கமற்ற போராட்ட அமைப்புகள், தனக்குள் சாதியடிப்படையைத் தக்கவைத்துக்கொண்ட தலித்திய அமைப்புகள், வர்க்கம் கடந்த பெண்ணிய அமைப்புகள், வர்க்க முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்க முன் தள்ளும் தேச விடுதலை அமைப்புகள் எனப் பலவகை உருவாக்கி வௌவேறு கோட்பாட்டு அடிப்படையை மார்க்சியத்துக்கு புறம்பாக முன்வைக்கப்படுகின்றது, முன்வைக்க முயல்கின்றனர்.
இன்று இந்தியாவில் இப்படிப் பல மொழியில் பலர் உள்ள நிலையில், தமிழில் ரவிக்குமார் -அந்தோனிசாமி மார்க்சை குருவாகக் கொண்ட நிறப்பிரிகை குழு, எஸ், வி இராஜதுரையைக் கொண்ட குழு எனப் பலவாக பல உள்ளது. இதில் அ.மார்க்ஸ் - ரவிக்குமார் போன்றவர்கள் மிகத் தீவிரமாக மார்க்சியத்துக்கு எதிரான கோட்பாட்டுத் தளத்தை உருவாக்குவதில் இயங்குகின்றனர். ஒரு புரட்சிகர நக்சல்பாரி இயக்கத்துக்கு இருக்கக் கூடிய மக்கள் ஆதரவுடன் கூடிய ஒரு அமைப்பு வடிவங்கள் இந்தியாவில் உள்ளன. அவர்களால் ஒரு பெரிய நிதியைச் செலவழித்து தமது அரசியல் கருத்து தளத்தை விரிவு படுத்த முடியாத புரட்சிகர நிலை உள்ள போது, அ. மார்க்ஸ் போன்றோர் மிகப் பெரிய நிதி ஆதரவுடன் தொடர் வெளியீடுகளை தனிநபர்களாக வெளியிடும் மர்மத்தை காலம் தான் அம்பலப்படுத்தும்.
இவர்களின் ஐரோப்பிய பயணங்கள், ஏகாதிபத்திய கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்கள் என்பன உடனுக்குடன் இவர்களிடம் கிடைப்பதும், அதை அடிப்படையாகக் கொண்டு தமிழ் வெளியீடுகளை வெளியிடும் செயலின் மர்மமும், அதன் நிதிப்பலமும் மர்மமாகவே உள்ளன.
இங்கு (பிரான்ஸ்) கம்யூனியச எதிர்ப்பு கோட்பாடு தொலைக்காட்சியில் காட்டப்படவுடன் அல்லது வெளிவந்தவுடன், அதை சிறிது காலத்தில் அ.மார்க்ஸ் சார்ந்த கும்பல் தமிழில் எழுத்து வடிவம் கொடுக்கின்றனர். எதிர்காலத்தில் சர்வதேசமயமாகி உள்ள தொலைக்காட்சியில் இவர்கள் தோன்றி தமிழில் மார்க்சிய எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ய நீண்ட காலம் செல்லாது என்பதை நாம் முன்கூட்டியே கூறிவைக்க விரும்புகின்றோம்.
ஈழத்து முன்னாள் முன்னணி சமூக அக்கறைக்குரியவர்கள், தமது சமூக அடிப்படையில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, தேடிய கோட்பாட்டு அடிப்படையை அ.மார்க்ஸ்சும் அவரது கும்பலும் இவர்களுக்கு வழங்கினர். இவர்கள் அ.மார்க்ஸ்-ரவிக்குமாரின் கோட்பாட்டை பல தளத்தில் முன்னெடுத்து "மனிதம்", உயிர்ப்பு, "சரிநிகர்" என பல தளத்தில் தமது சிலந்தி வலை விரித்து செயற்படத் தொடங்கி உள்ளனர்.
இதைவிட ஜெர்மனி, நோர்வே போன்ற நாடுகளில் தமது தன்னார்வக் குழுக்குள் பலரை இணைத்து பெரும் நிதித் தளத்துடன் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் அனுப்பி எடுக்கின்றனர். ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பில் ஈடுபட்ட பலர் இந்த சிலந்தி வலையில் சிக்கி உள்ளதுடன், மேலும் பலர் இதில் சிக்கிவிடும் நிலையில் உள்ளனர். மறுபுறம் மார்க்சியத்திற்கு எதிரான கோடுபாட்டுத் தளத்தை ஏதோ ஒரு வகையில் பெறுகின்றனர். இன்னுமொரு பிரிவினர் ரொக்சியக் கோட்பாடுகளுக்குள் சென்று வர்க்கப் போராட்டத்திற்கு எதிராக, தீவிரமாக வர்க்கப் போராட்டத்தை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இலங்கையில் கொழும்பு தப்பி வந்த பலர் இன்று ஏகாதிபத்திய நிதித்தளத்துக்குள் விழுந்து தாளம் போடத்தொடங்கியுள்ளனர். இன்று மார்க்சிய விரோத மற்றும் மார்க்சியத்தை திரித்தும், புதிய கோடுபாடுகளை முன்தள்ளுவதை எதிர்த்தும் இந்த சிறிய பிரசுரத்தை எழுதுகின்றோம்.
இது அவர்கள் முன்வைக்கும் சில எல்லா வண்ண மார்க்சிய விரோதக் கோட்பாட்டையும் எடுத்து கேள்விக்கு உள்ளாக்கின்றது. குறிப்பாக குரு அ. மார்க்ஸின் கோட்பாட்டையும், மற்றவர்களின் கோட்பாட்டுத் திரிபுகளையும், கேள்விக்கு உள்ளாக்கி அம்பலமாக்கும் வகையில் இச்சிறு பிரசுரம் முயல்கிறது.
முதலில் அந்தோனிசாமி மார்க்ஸ் -ரவிக்குமார் உட்பட நிறப்பிரிகை குழு சார்பாக வெளியிட்ட "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற புத்தகத்தில் உள்ள மார்க்சிய விரோதக் கோட்பாட்டை இப்பிரசுரம் கேள்விக்கு உள்ளாக்கி அம்பலப்படுத்துகின்றது.