28.08.2008

அன்று

மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த

பதிவர் அனுராதா அவர்கள் மரணம் அடைந்தார்.

அவருடைய மறைவுக்கு அஞ்சலிகள்.

000

யார் இந்த அனுராதா…?

 

மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடுதரவயதுடையவர். உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது எஸ். எம். எஃப் - மருத்துவமனையில் டாக்டர் லட்சுமி நாராயணன் பரிசோதித்து வலதுபுறத்தில் மார்பு புற்றுநோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வலது மார்பை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட வேண்டும்! நோயின் பாதிப்புகள் அதிகமாகி சேன்சர் மூன்றாவது கட்டத்தில் இருப்பதால் அறுவை சிகிச்சை மட்டுமே இறுதி தீர்வானது என்று சொன்ன போது...

அதிர்ந்து... சக நிலைக்கு திரும்பிய போது; "ஒரு பெண்ணுக்குரிய உடல் உறுப்பை அதுவும் மார்பகத்தை இழப்பதற்கு எந்தப் பெண் சம்மதிப்பாள்?அப்புறம் வெளி உலகில் எப்படி நடமாடுவாள்? ஐயோ! இதென்ன சோதனை?" என்று தன் மனக்குமுறலை பதிவு செய்தவர்.

"என்ன நடந்தாலும் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொள்ளக் கூடாது" என்ற முடிவிலும், வேறு டாக்டரை சந்தித்து நோய்க்கு தீர்வு காண முயல்வோம் என்று அப்பல்லோ டாக்டர் ரமேஷ் சென்னாகட்டா சந்திக்கிறார். அவரும் அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்னும் போது அனுராதா விரக்தியடைகிறார். டாக்டர் ரமேஷ் சென்னாகட்டாவின் நோய்குறித்த விளக்கத்திற்கு பின், டாக்டர் ஹேமந்த் (சர்ஜன்) புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரை உடனடியாக சந்தித்து ஆலோசனை பெறும்படி வற்புறுத்துகிறார். அவர் ஆலோசனைப்படி அனுராதா டாக்டர் ஹேமந்த்தை சந்தித்த போது அவரும் மார்பகத்தை அறுவை செய்து எடுத்துவிடுவது நலம். நோயின் அறிகுறி தொடக்கமாக இருந்திருந்தால் மாத்திரைகள் மூலம் தீர்வுகள் கிடைத்திருக்கலாம். ஆனால் நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள்.

"கேன்சர் மூணாவது ஸ்டேஜ்" என்று மீண்டும் அறுவை சிகிச்சை மட்டுமே இறுதி தீர்வு என்று இத்தனை டாக்டர்கள் சொல்லியும் மறுக்கின்றார் அனுராதா. பெண்ணின் அடையாளத்தை தான் இழக்க தயாராக இல்லை என்றும், மெடிக்கல் மற்றும் கதிர் இயக்க மருத்துவத்திற்கு மட்டும் சம்மதிக்கின்றார். நோயாளியின் அனுமதி இன்றி அறுவை செய்ய சட்டத்திலும் அனுமதி இல்லை. எனவே அனுராதா விருப்பப்படி மருந்துக்கள் மூலம் நோயை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். டாக்டர்களுக்கு தெரியும் எதை எதை குணப்படுத்த முடியும்? முடியாதது? என்று. இருப்பினும் வருமானமும், பொழப்பும் நடந்தாக வேண்டுமே!


அனுராதா தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்ததும், மாத்திரைகள் மட்டும் எடுத்து கொள்ள சம்மதித்தது குறித்து பதிவு போட்டதும் எனக்கு திக்கென்று இருந்தது. இவர் தவறாக முடிவு எடுத்திருக்கின்றார். இதன் பின் விளைவுகள் ஆபத்தானவை. என்ன செய்வது அவரிடம் பேசலாமா? டாக்டர்கள் நேரில் பேசியதையே ஏற்காத இவர் நான் சொல்லி கேட்கப் போகின்றாரா? தேவையில்லாமல் அந்தரங்க விஷயத்திற்கு ஆலோசனை தருவது அநாகரிகமல்லவா? இப்படி பல யோசனைகள்! இவர் பொதுவில் வைத்து தானே பேசுகிறார் நாமும் ஏதாவது செய்ததாகவே வேண்டுமே என்ற உந்துதல் இருந்தது. போதாக்குறைக்கு பின்னூட்ட அறிவுஜீவிகள், "ஆண்டவன் மேல் பாரத்தை போடுங்க" என்கின்ற ரேஞ்சில் இருந்தது.

சரி, பின்னூட்டம் செய்பவர்களின் அறிவுதனத்தை மெச்சுகின்றீர்களே! அனுராதாவுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு எனக்கு யோக்கியதை இருக்கின்றதா? என்று நீங்கள் நினைக்கலாம். இருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்.

000





பிரான்சில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ARTAC என்ற சமூக அமைப்பு இருக்கின்றது. இதன் கிளைகள் பிரான்ஸ் முழுவதும் உண்டு. இதற்கு முன்பு ARC என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது. தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ARC பெயரில் இயங்கிக் கொண்டிருந்த போது 1998- இல் அதன் உறுப்பினராக நான் இருந்திருக்கின்றேன். அதில் சேர்வதற்கு காரணம் என் அம்மாவின் மரணம். அம்மாவுக்கு மூளையில் புற்றுநோய் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு 1996 - இல் அக்டோபர் 28 - இல் மூளையில் அறுவை சிகிச்சை செய்து 9 -மாதங்கள் மட்டுமே உயிருடன் இருந்து 23.08.1997 - இல் காலமானார்.

000

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ட்ரிட்மெண்ட் எடுக்கும் காலகட்டங்களில் மிகவும் டென்ஷனாக இருப்பார்கள். மருத்துக்களின் வீரியம் அத்தகையது. அவை குடும்பத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. கணவனுக்கு கேன்சர் என்றால் மனைவி வேறு வாழ்க்கைத் தேடிக் கொள்வதும், மனைவிக்கு கேன்சர் என்றால் கணவன் ஓடுவதும் என நோயாளிகள் பிரான்சில் பிரச்சனைகளையும் எதிர்கொண்டார்கள். இருப்பினும் நம் பெண்களைவிட அய்ரோப்பிய பெண்கள் மனதளவில் தைரியமிக்கவர்களாவும், சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்களை தயார் செய்து கொள்வதிலும் தயக்கம் காட்டியதில்லை.

1998 - கணக்குக்குப்படி பிரான்ஸ் நாட்டில் மட்டும் 10- க்கு 4 - பேர்கள்
ஓடுபவர்களாக இருந்திருக்கிறார்கள். மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது மார்பகம் அறுவை சிகிச்சையில் நீக்கப்பட்ட பெண்களுடன் செக்ஸ் திருப்திகரமானதாக இல்லை என்ற காரணங்களுக்காக விலகிய ஆண்கள் அதிகம்.

உதாரணத்திற்கு கணவனால் கைவிடப்பட்ட மார்பகப் புற்றுநோய் பெண் ஒருவரை பற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அவர் பெயர் தொமீனிக் (Mme. Dominique) பிரென்ச் பெண்மணி. வயது 50- க்கு மேல் இருக்கும். 22 - வயதில் ஒரு மகள் மட்டும் உண்டு. தொமீனிக்கு மார்பில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட போது கேன்சர் மூன்றாவது கட்டத்தில் இருந்தது. மார்பை அறுவை சிகிச்சை செய்து நீக்குவதை தவீர வேறு வழியில்லை. நீக்காவிட்டால் ரத்தம் மூலம் உடல் முழுவதும் மற்ற இடங்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் என்ற எச்சரிக்கை டாக்டரிடமிருந்து! அதுவும் அறுவை சிகிச்சை 100 - வீதமும் வெற்றி அடைய முடியாது. தோல்வி என்றும் சொல்ல முடியாத இரண்டும் கெட்ட நிலைமை!

உடனடியாக மார்பகத்தை எடுக்கச் சொல்லி தொமீனிக் கூறினார். சில வாரங்கள் மருத்துவனையில் இருந்து வீடு திரும்பிய பின் கணவனுடன் சில... சில... பிரச்சனைகள்! உன்னுடன் இருக்க பிடிக்கவில்லையென கணவன் போய்விட்டான். சில வாரங்களில் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பது தெரிந்தது. மகள் பல்கலைக்கழக மாணவி. காதலனுடன் இருக்கிறாள். வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அம்மாவை பார்க்க வரும் சூழல்.

தொமீனிக் ARC அமைப்பை தொடர்பு கொண்டார். வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்வதில் இருந்து, அவரே விருப்பப்பட்டால் மனச்சுமையை குறைக்க அவரின் கதைகளை சொல்லும் போது "ம்" போட்டுக் கொண்டு.... கக்கூஸ் கழுவி, சமையல் செய்து, வீடு சுத்தம் செய்து குழந்தையை பார்த்துக் கொள்வது போல் அக்கரையுடன் அமைப்பின் உறுப்பினர்கள் கவனித்துக் கொண்டனர்.

4 - வருடங்களுக்கு பிறகு இன்று தொமீனிக் மரணத்தில் இருந்து தப்பிவிட்டார். ஓடிப்போன கணவனை நினைத்து கவலைப்படவில்லை. வழக்கம் போல் வேலைக்கு போகிறார். கார் தனியாக ஓட்டுகிறார். மேலை நாட்டு உடைகளில் பேண்ட், டீ சர்ட் வடிவமைப்பில் மார்பகங்கள் எடுப்பாக தெரியும். அதற்காக தொமீனிக் "மாறாப்பு" போட்டுக் கொள்ளவில்லை. பஞ்சு பாடி போட்டுக் கொண்டார். நெஞ்சை நிமிர்த்தி நடக்கின்றார். கேன்சர் மேற் கொண்டு வராமல் இருப்பதற்காக முன் எச்சரிக்கையாக ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்ற டாக்டரின் ஆலோசனையை இன்றும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றார். சில மருந்துக்கள் மட்டும் தொடர்ந்து சாப்பிட வேண்டுமென்ற டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துக்கள் சாப்பிடுகிறார். இவர் தன்னம்பிக்கையால் மரணத்தை வென்று வரவில்லை. மரணத்தை தள்ளி வைத்திருக்கின்றார்.

000




( புகைப்படத்தில் இருப்பது கெவீன். அவன் அம்மாவின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது)

உயிருக்கு ஆபத்தான நோய்களில் இருந்து காப்பாற்ற தலையைத்தவிர வேறு எதை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று அறிவு பூர்வமாக சிந்திப்பவர்களுக்கு சிறந்த உதாரணம் கெவீனின் அம்மா. இரண்டு மகன்களும் ஒரு மகளும் அவளுக்கு உண்டு. நர்ஸ் உத்தியோகம். அன்பான கணவன் வசதியான குடும்பம். முதல் பையன் 7 - வயது, பள்ளியில் இருந்து வெளியே வரும் போது தன் அம்மாவைக் கண்டு சந்தோஷத்துடன் 'அம்மா' என்று கத்திக்கொண்டு ஓடிவர, எதிரே வேகமாக வந்த காரில் மோதி தன் அம்மாவின் கண்முன்னே துடிதுடித்து செத்துப்போனவன். அப்போது மூன்றாவது பிள்ளை வயிற்றில் 7 - மாதம் கர்ப்பம். அவள் எவ்வளவு கொடுமையை அனுபவித்திருப்பாள்?

இது நடந்து 2 - வது வருடத்தில் கெவீனுக்கு வலது கையில் முழங்கைக்கும் கீழே சிறியதாக கட்டி போன்று இருக்க அவள் சந்தேகப்பட்டு தன் டாக்டரிடம் காட்ட கேன்சர். முழங்கை வரையில் கையை வெட்டி எடுத்துவிட்டால் உடல் முழுவதும் கேன்சர் பரவுவதை தடுத்து, இன்னும் சில காலம் மரணத்தை தடுக்கலாம் என்ற நிலை. ஓர் இரவு முழுவதும் அழுதாள்! அழுதுகொண்டே இருந்தாள்.

மறுநாள் டாக்டரிடம் தீர்மானமாக சொன்னாள்: "எனக்கு என் மகனின் உயிர் முக்கியம். அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்." வேலையை வேண்டாம் என்று எழுதி கொடுத்தாள். சில காலம் மட்டுமே இருக்கப்போகும் தன் மகனுக்காக வாழ தீர்மானித்தாள். கை எடுக்கப்பட்ட கெவீன் 9 - மாதங்கள் வரை இருந்தான். அவன் இறந்த போது அவனுடைய வெட்டப்பட்ட கையையும் சேர்த்து புதைத்தாள். (வெட்டப்பட்ட கைகள் ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக ஜஸ்பெட்டியில் வைக்கச் சொல்லி இருந்தார். தன் மகனின் கையாயிற்றே. தன் மகன் இறந்தால் உடன் வைக்க வேண்டும் என்பது அவளின் ஆசை)

000

இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம். இவர்கள் முயற்சி எடுத்தார்கள். ஏதாவது நல்லது நடக்காதா? முயற்சித்து பார்ப்போம் என்ற தன்னம்பிக்கை துணிவு இவர்களிடம் இருந்தது. ஊர் என்ன சொல்லும்? உலகம் என்ன சொல்லும்? என் அடையாளத்தை எப்படி இழப்பது என்று குழம்பிக் கொண்டிருக்கவில்லை. இப்படிப்பட்ட சம்பவங்கள் தான் பொது மக்களுக்கு நல்ல உதாரணங்களாக இருக்க முடியும். ஒரு சமூகத்தை ஆக்க சிந்தனைக்கு முன்னெடுத்துச் செல்லும்.

ஓடிப்போன கணவனுக்காக அழுதுக் கொண்டிருக்காமல் மார்பகம் இல்லாவிட்டால் அடுத்தவன் என்ன நினைப்பான் என்று எண்ணாமல் மார்பகத்தை அகற்றி இன்று உயிரோடு இருக்கும் தொமீனிக்கை பார்க்கும் போது அனுராதாவின் கணவர் மிக அன்பாகவே அவரை கவனித்திருக்கின்றார்.

அனுராதா உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தன் மனைவியை கவனித்துக் கொள்வதற்காக வேலையை வி. ஆர். எஸ் செய்து வேலையில் இருந்து நின்று தன் மனைவியை நன்கு கவனித்துக் கொண்டவர். அம்மாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக லட்சம் லட்சமாக அள்ளிக் கொடுத்த பாசமுள்ள மகன்.

இவர்களுக்காகவாவது வாழ்ந்து பார்க்க அறுவை சிகிச்சைக்கு முன் வந்திருக்க வேண்டும். அதை தவீர்த்து மாத்திரை மூலம் குணப்படுத்தி விட முடியும் என்ற அலட்சியமும், தன் பிடிவாத எண்ணமும், கர்பப்பையை நீக்கவும், கல்லீரல், மூளைக்கு கேன்சர் பரவவும் காரணமாகி அனுராதாவை சவக்குழிக்கு அனுப்பியுள்ளது.

ஒருமுறை "இளைய கொத்தனார்" என்ற பதிவர் அனுராதாவிடம்
"இவ்வளவு கஷ்டப்படும் பொழுது, முதலிலேயே மார்பக அறுவை சிகிச்சையே செஞ்சிருக்கலாமேன்னு தோணினது உண்டா? இப்பொழுது நடந்தவைகளை மாற்ற முடியும் என இருந்தால் உங்களின் முடிவு மாறுமா? என்று ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.

அனுராதா இவ்வாறாக பதில் சொல்லி இருந்தார்.

"நல்ல கேள்வி!
எனக்கு சரியான பதில் சொல்லத் தெரியவில்லை.
படும் துன்பங்களுக்கு இடையில் முதலிலேயே அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டிருக்கலாமோ என்று சில நேரம் தோன்றியது உண்டு.
ஆனால் நான் சந்தித்த மார்பகப் புற்றுநோயாளிகளில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அனைவருக்குமே ரேடியேசன் கொடுக்கப்பட்டுள்ளது. கீமோதைரபி கொடுக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் 'அறுவைசிகிச்சை செய்தும் இவர்களுக்கும் ரேடியேசன் மற்றும் கீமோ கொடுக்கப்படுகிறதே!நல்லவேளை. அறுவை சிகிச்சையிலிருந்து நான் தப்பித்தேன்.' என்று நினைப்பதும் உண்டு."

000

சில பதிவர்கள் அனுராதாவின் வலைதளத்தை மார்பகப்புற்றுநோய்க்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று தமிழ்மணம் என்ற திரட்டியில் கோரிக்கை வைத்திருக்கின்றனர். தமிழ்மணமும் மார்பகப்புற்றுநோய்க்கு 'விழிப்புணர்வு' கொடுக்கும் வகையில் அனுராதாவின் வலைதளத்தை முகப்பில் வைத்திருக்கின்றது.

"உணர்வுகளால் சிந்திக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவாக தெரிகின்றதே தவீர ஆக்கபூர்வமான சிந்தனைக்கு அனுராதாவின் வலைதளம் ஏற்றதல்ல" என்பது என்னுடைய கருத்து. விழிப்புணர்வு என்ற வார்த்தையை தவீர்த்து அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சிந்தனைகளாகத்தான் எனக்கு தோன்றுகின்றது.

எனக்குமட்டுமல்ல அனுராதாவே அவர் வலைத்தளத்தில் ஓர் பக்கத்தில் இவ்வாறாக சொல்கிறார்....

"புற்றுநோய் வந்துள்ள மார்பகத்தை
அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் -
என்று பல டாக்டர்கள் வலியுறுத்திய போது,
நான் உறுதியாக மறுத்துவிட்டேன்.
அதற்கான காரணங்களை
ஏற்கனவே விவரமாகச் சொல்லியிருக்கிறேன்.
அவையே எல்லோருக்கும் பொருந்தும் என்று
எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் இருக்கும்.
எனக்கு மார்பகம் அகற்றாமல் இருப்பது
தான் சரி என்று அப்போதுபட்டது."

--------- அனுராதாவின் இந்த வரிகளையும் கவனத்தில் நிறுத்துவது நல்லது.

யார் கண்டது?

தமிழ்நாட்டிலேயே மார்பு புற்றுநோய்கான அறுவை சிகிச்சை செய்து
நோயில் இருந்து மீண்டு தன் அனுபவங்களை வலைப்பதிவில் எழுதாமல் வீறுநடைப்போட்டுக் கொண்டிருக்கும் தன்னம்பிக்கை மிகுந்த பெண்களும் இருக்கலாம்.

000
அனுராதாவின் அனுபவத்தில் இருந்து......

"ஒரு மருத்துவரைப் பார்த்துவிட்டு வந்தபின்
அவருடைய அணுகுமுறை,
பதில் சொன்ன பாங்கு,
மருத்துவமனையின் செயல்பாடு -
ஆகியவகளைப் பற்றிய எண்ணங்கள்
ஒன்று சேர்ந்து ஒரு கருத்தை
எனக்குள் உருவாக்கிவிடும்.
பிற்காலத்தில் அந்த எண்ணங்கள்
தவறானவை என்றோ,
சரியானவை என்றோ
அனுபவம் தான் பாடம் கற்பிக்கும்"


--------------------------------------- அனுராதா

http://thamizachi.blogspot.com/2008/08/blog-post_30.html