இப்படி உருவாகும் பன்னாட்டு தேசங்கடந்த நிறுவனங்கள் பல கோடி மக்களின் வருடாந்தர கூலிகளை மிஞ்சியதாக காணப்படுகின்றது. உதாரணமாக உலகில் மென்பொருள் உற்பத்தியில் மிகப் பெரிய நிறுவனமான  மைக்ரோசாப்ட் (Mடிஞிணூணிண்ணிஞூt) நிறுவனத்தின் மொத்தச் சொத்து 1999இல் 50,000 கோடி டாலராக இருந்தது. இது பிரேசில் நாட்டில் உள்ள மக்களனைவரும் வருடாந்தரம் உழைத்து உருவாக்கும் மொத்த தேசிய வருமானத்துக்குச் சமனாக இருந்தது.

 அதாவது இது பிரான்சு ஏகாதிபத்தியத்தின் மொத்த தேசிய வருமானத்தில் 40 சதவீதமாக இருந்தது. இதே போல் ஷெல் நிறுவனத்தின் 1990ஆம் ஆண்டுக்கான வருமானம் உலகில் 10 சதவீதமான மக்களின் வருமானத்துக்குச் சமனானதாக இருந்தது. இந்த பத்து சதவீதமான மக்களும் பாகிஸ்தான், சயேரே, உகாண்டா, நேபாளம், வங்காள தேசம், எத்தியோப்பியா, நைஜீரியா, கென்யா ஆகிய நாடுகளில் வாழும் அனைத்து மக்களையும் உள்ளடக்குகின்றது. மனிதன் தனது இயற்கை சார்ந்த வளங்களையும், தனது உழைப்பின் மீதான உரிமையை இழந்த போது, மிகப் பெரிய தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் தமதாக்கி சொந்தமாக்கி கொழுத்து வரும் வரலாற்றை இது எடுத்துக் காட்டுகின்றது. இவை எல்லாம் மார்க் என்ற  வியாபார அடையாளச் சின்னங்கள் மூலமே, சந்தையில் குதியாட்டம் போடுகின்றது. இங்கு மார்க் என்பது ஏகாதிபத்தியத்தின் அதிகாரச் சின்னமாக இருப்பதுடன், அவை மனித இனத்தின் மேல் பொறிக்கப்படும் போது, அவை அடிமைச் சின்னமாகக் காணப்படுகின்றது. இப்படி உருவான மனித அடிமைகள் தான், அடிமைச் சின்னம் பொறித்த மார்க் அடையாளங்களுடன் வீதிகளில், மானவெட்கம் இன்றி, அதையே பெருமையாகக் கருதும் அடிமைப் பண்பாட்டுடன் தான் பவனி வருகின்றனர்.


 இதே போன்ற மற்றொரு மார்க் உற்பத்தியான புகையிலையை எடுத்தால், அதன் அழிவுக் கொள்கை உலகளவில் பிரமாண்டமானது. 1999இல் புகைத்தல் என்ற போதை உற்பத்தியில், மிகப் பெரிய நிறுவனமான பிலிப்மொரிஸ், உலகில் உள்ள மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் 17வது இடத்தில் இருந்தது. இதன் மொத்த முதலீடு 6,200 கோடி டாலராகும். இதில் ஒரு பகுதியைக் கொண்டு உலகில் உள்ள அனைவருக்குமான ஆரம்பக் கல்வி, அடிப்படை சுகாதார வசதி முதல் வாழ்வதற்கான இருப்பிடங்களைக் கூட அமைக்க முடியும். ஆனால் பிலிப்மொரிஸ் சிகரட்டைப் புகைப்பதால் ஏற்படும் புற்றுநோயாலும் (கான்சர்), புகைத்தல் சார்ந்த நோய்களாலும் மட்டும் அமெரிக்காவில் 2,800 கோடி டாலர் மருத்துவச் செலவு ஏற்படுகின்றது. புகைத்தலால் உலகில் 50 லட்சம் மக்கள் நேரடியாகக் கொல்லப்படும் நிலையில், புகையிலை உற்பத்திக்காக பல லட்சம் சதுர கிலோமீட்டர் நிலம் பயன்படுத்தப் படுகின்றது. ஏழைகளின் அடிப்படைத் தேவை சார்ந்த உற்பத்தியைத் தடுத்து நிறுத்தி, நிலங்களைப் பறித்தெடுத்தன் மூலம், கோடிக்கணக்கான மக்களின் பட்டினிச் சாவின் மேலும் இந்த வர்த்தகம் பூத்துக் குலுங்குகின்றது. பன்னாட்டு நிறுவனங்களின் கொழுப்பேறிய மனிதவிரோத வர்த்தகம் ஒன்றையொன்று சார்ந்தும், பயன்படுத்தியுமே உயிர் வாழ்கின்றன. புகைத்தல் மிகப் பெரிய மருத்துவக் காப்புறுதிகளையும், மிகப் பெரிய மருந்து உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களையும் உருவாக்குகின்றது. மனிதனுக்கு நோய்களை உருவாக்கி, மனித உழைப்பைப் பிடுங்கி பணம் கறக்கும் வித்தை, இந்த வர்த்தகத்தில் ஒரு அங்கமாகவே உள்ளது. இதுவே அரசுகளின் ஜனநாயகமாகவும், கொள்கையாகவும் உள்ளது. போதையை மனிதனின் உடலில் புகுத்தி பின், புகைத்தலுக்கு விசேட வரியை புகைப்பவனிடம் அறவிடுவதன் மூலம் அதை இராணுவத்துறையில் குவிக்கின்றனர். இப்படி பன்னாட்டு மூலதனம் ஒன்றையொன்று சார்ந்து, மனிதனுக்கு எதிராகவே அடிப்படையில் இயங்குகின்றது. இந்த மனிதவிரோதச் சந்தைக் கட்டமைப்பு, அற்பமான கவர்ச்சி சார்ந்து மார்க் ஊடாக குதிராட்டம் போடுகின்றது. புகைத்தல் தொடர்பாக மற்றொரு தனிக் கட்டுரை மூலம் அடுத்துவரும் நூல்களில் விரிவாகப் பார்ப்போம்.


 மனித இனத்துக்கு எதிராகவே மிகப்பிரமாண்டமான பன்னாட்டு நிறுவனங்களான இவை செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் பல கோடி மக்களின் வருடாந்தர கூலிகளின் மொத்தத் தொகைக்குச் சமமான, மிகப் பெரும் முதலீடுகளைக் கொண்டவை. 1995இல் உலகில் இயந்திரத் தொழில்துறையில் முன்னணியில் இருந்த 20 பன்னாட்டு நிறுவனத்தினதும் மொத்தச் சொத்து 1,58,970 கோடி டாலராக இருந்தது. முதல் ஐந்து பன்னாட்டு நிறுவனத்தின் சொத்து 65,230 கோடி டாலராக இருந்தது. 1995இல் உலகில் பொருட்களை விற்கும் மிகப் பெரிய பத்து நிறுவனங்களின் மொத்தச் சொத்து 29,856 கோடி ஈரோவாகும். 1995இல் உலகில் மிகப் பெரிய வங்கிகளின் 15இன் மொத்தச் சொத்து 6,37,290 கோடி டாலராகும். ஐரோப்பாவில் மிகப் பெரிய இயந்திரத் தொழிலைச் செய்த ஐந்து பன்னாட்டு நிறுவனங்களின் மொத்தச் சொத்து 52,200 கோடி ஈரோவாகும் இதில் தொழில் புரிந்தோர் எண்ணிக்கை 10.75 லட்சமாகும். ஐரோப்பாவில் மிகப் பெரிய அளவில் பொருட்களை விற்கும் ஐந்து நிறுவனத்தின் மொத்தச் சொத்து 20,000 கோடி ஈரோவாகும். இங்கு இந்த விற்பனையைச் செய்யும் தொழிலில் ஈடுபடுவோர் தொகை 10 லட்சமாகும்.


 இப்படி மிகப் பிரமாண்டமான மூலதனத்தை அடிப்படையாக கொண்ட உற்பத்திகளைச் சார்ந்தே, இன்று நிலவும் இந்தச் சமூக அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சமூக அமைப்பில் சமூகத்தின் உழைப்பு, உழைப்பின் மீதான உரிமை, அதை பயன்படுத்தும் உரிமை என்று பலவற்றை சமூகத்துக்கு மூலதனம் மறுத்து விடுகின்றது. இது ஒரு வர்த்தக சமூக கட்டமைப்பாக, பணம் உள்ளவனின் தேவையைப் பூர்த்தி செய்வதாக உள்ளது. பணம் அற்றவனுக்கு எதிராக, உழைப்பை வழங்குபவனுக்கு எதிராக, மனித குலத்தின் தேவையை மறுத்தே, இந்தச் சமூக அமைப்பு இயங்குகின்றது. இந்த வர்த்தக அமைப்பு அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் என்பன பிரமாண்டமான ஏகாதிபத்திய நலனுக்கு உட்பட்ட, ஒரு உலகச் சந்தைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. உலகமயமாதலின் லாபங்களைப் பெறும் இந்த மூன்று பிரதானமான மையங்களில் வாழும் மக்கள், உலக சனத்தொகையில் 13.1யாக 2000ஆம் ஆண்டு காணப்பட்டனர். ஆனால், உலக வருமானத்தில் இந்தப் பிரதேசங்கள் 70.2 சதவீதத்தைப் பெற்றனர். இவர்கள் உலகளாவிய மொத்த வெளிநாட்டு முதலீட்டில் 78.8 சதவீதத்தைக் கட்டுப்படுத்தினர். உலகளாவிய முதலீட்டிலும், பங்குச் சந்தையிலும் 92 சதவீதத்தை இந்த நாடுகள் கைப்பற்றியிருந்தனர். உலகில் முதல் 500 பன்னாட்டு நிறுவனங்களில் 219 அமெரிக்காவின் உடையதாக இருந்தது. அதாவது இது 44 சதவீதமாகும். ஐரோப்பாவை எடுத்தால் முதல் 500இல் 146 பன்னாட்டு நிறுவனங்களை சொந்தமாகக் கொண்டிருந்தது. அதாவது இது 29 சதவீதம். இது போல் ஜப்பான் 77 பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டிருந்தது. அதாவது இது 15 சதவீதமாகும். உலகப் பங்குச் சந்தை முதலீட்டில் 50 சதவீதத்தை அமெரிக்கா கொண்டிருந்தது. அதேநேரம் ஐரோப்பா 28 சதவீகித்தையும், ஜப்பான் 13 சதவீதத்தையும் உலகளவில் கொண்டிருந்தது. உலக முதலீட்டில் அமெரிக்கா 14 சதவீதத்தையும், ஐரோப்பா 49 சதவீதத்தையும், ஜப்பான் 31 சதவீதத்தையும் கட்டுப்படுத்தியது. இப்படி உலகம் மீதான ஆதிக்கத்தை இந்த மூன்று பிரதான மையங்களும் கட்டுப்படுத்தின. அதேநேரம் தமக்கிடையிலான ஒரு ஏகாதிபத்திய மோதலையும், உள் முரண்பாடுகளைக் கொண்ட ஒரு மோதலை அடிப்படையாக கொண்டு, ஒரு வர்த்தக யுத்தத்தை அன்றாடம் ஒவ்வொரு கணமும் நடத்துகின்றனர்.


 இதில் இருந்து தப்பிப் பிழைக்கவும், தமது சொந்த அழிவுகளைத் தடுத்து நிறுத்தவும் இந்த உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளி வர்க்கம் மீதான சுரண்டலையே கடுமையாக்குகின்றனர். உழைப்பில் உழைப்பின் திறனை அதிகரிக்க வைப்பதுடன், உழைப்பின் காலத்தை அதிகரிக்க வைப்பதுடன், கூலியைக் குறைப்பதையும் (இது பணப் பெறுமதியை சிதைப்பதன் மூலமும், நுகரும் பொருளின் விலையை சந்தையில் அதிகரிக்க வைப்பதன் மூலமும், கூலியை குறைப்பதன் மூலமும்) அடுக்கடுக்காகச் செய்கின்றனர். உழைக்கும் வர்க்கத்தின் எண்ணிக்கையை உற்பத்தித் துறையில் குறைப்பதன் மூலம் இலாப வீதத்தை அதிகரிக்க வைப்பதுடன், தம்மைத் தாம் தக்க வைக்க முனைகின்றனர். இதில் மனிதக் கம்ப்யூட்டர்களைப் புகுத்துகின்றனர். மனிதன் செய்த ஒரு வேலையை ஒரு இயந்திரம் செய்யும் நிலைக்கு மாற்றப்படுகின்றது. தன்னியக்கி இயந்திரங்கள் இதன் ஒரு அங்கமாக உள்ளது. 1985இல் கம்ப்யூட்டரைக் கொண்டு இயக்கும் இயந்திர மனிதன் ஜப்பானில் 65,000மும், அமெரிக்காவில் 14,500ம், ஜெர்மனியில் 6,000மும், பிரிட்டனில் 2,500ம் உழைப்பில் பயன்படுத்தப்பட்டது. இப்படி மனித உழைப்பை அகற்றுவதன் மூலம், மனிதனைச் செயலற்ற பண்ணை மிருகங்களாக மாற்றி விடுகின்றனர்.


 மிகப் பிரம்மாண்டமான பன்னாட்டு நிறுவனங்கள் மனித இனத்துக்கு எதிராகவே திட்டவட்டமான குறிக்கோளுடன் இயங்குகின்றன. உலகின் செல்வம் அனைத்தையும் தனக்குச் சொந்தமாக்கும் நனவுபூர்வமான கனவுடன், மூலதனம் தனது லாப வேட்கையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது. இவை அனைத்தையும் இவ் ஏகாதிபத்தியத்தில் உள்ள மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. சின்டிகெட்டுகள், கார்ட்டல்களாக செயல்பட்ட தேசங்கடந்த தொழில் நிறுவனங்கள், 1960இல் இருந்து பிரமாண்டமாக வளர்ச்சியடையத் தொடங்கின. 1982இல் உலகில் மிகப் பெரிய 200 பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த விற்பனை 3,04,600 கோடி டாலராக இருந்தது. இது உலகின் மொத்த உள்நாட்டு மதிப்பில் மூன்றில் ஒன்றாகும். இதில் 166 நிறுவனங்கள் முக்கியமான 5 ஏகாதிபத்தியங்களுக்குச் சொந்தமாக இருந்தன. 1996இல் உலகின் மிகப் பெரிய 200 பன்னாட்டு நிறுவனங்கள் தமது சொந்த அடையாளத்துடன் நடத்திய வர்த்தகம், உலக வர்த்தகத்தில் 25 சதவீதத்துக்கு மேலானதாக இருந்தது. இந்த வர்த்தகம் உலகின் பிரதான ஏகாதிபத்தியம் மற்றும் மிகப் பெரிய இரு நாடுகளைத் தவிர்த்த, மற்றைய நாடுகளின் மொத்த வர்த்தகத்தை விடவும் அதிகமானதாகும். அதாவது மொத்தம் உள்ள 191 நாடுகளில் 182 நாடுகளின் மொத்த வர்த்தகத்தை விட, இந்த 200 பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்தின் அளவு அதிகமாகும். இந்த ஒன்பது நாடும் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், கனடா, பிரேசில் மற்றும் சீனாவாகும். இது தவிர்ந்த 182 நாடுகள் இணைந்து மொத்த உற்பத்தி மற்றும் வர்த்தகம் 6,90,000 கோடி (6.9 டிரில்லியன்) டாலராகும். அதே நேரம் 200 பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் 7,10,000 கோடி (7.1 டிரில்லியன்) டாலராகும். நாடுகளையும், அதில் உள்ள மக்களின் உழைப்பையும் மிஞ்சிய, 200 நிறுவனங்களின் வர்த்தகமே உலகின் அதிகாரத்தின் சின்னமாக மாறியது. இந்த 200 பன்னாட்டு நிறுவனங்களின் உலகளாவிய மொத்த உற்பத்தி மற்றும் வர்த்தகத்தின் பங்கு 1982இல் 24.2 சதவீதமாக இருந்தது. இது 1992இல் 26.8 சதவீதமாகியது. 1995இல் 28.3 சதவீதமாக அதிகரித்தது. 2003இல் 37,000 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் உலகளவில் 1,70,000 கிளைகளுடன் இயங்கின. உலகமே ஒரு சில நிறுவனங்களின் பொருளாதார ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருந்தது.


 இந்த ஆக்கிரமிப்பு வரலாறு மூலதனத்தின் வரலாறாக இருக்கும் அதேநேரம், மனித இனத்தின் இரத்தத்தை உறிஞ்சிய வரலாறாக எதிர்தளத்தில் உள்ளது. 1986இல் உலகளாவிய 866 பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தித் துறையில் 76 சதவீதத்தை கட்டுப்படுத்தின. பன்னாட்டு நிறுவனங்களுக்குள்ளேயான சர்வதேச வர்த்தகத்தில் 30 சதவீதத்தைக் கட்டுப்படுத்தின. வர்த்தகத்தைக் கூட தமக்கிடையில் நடத்தும் ஒரு வர்த்தகச் சூதாட்டமாக பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தின. இதன் மூலம் ஒன்றையொன்று விழுங்குவதும், தமக்கு இடையில் இணைவதும் அரங்கேறுகின்றது. 1989இல் உலகம் தழுவிய தேசங் கடந்த நிறுவனங்களில், இணைப்புள்ளவைகளின் விற்பனை 44,00,000 கோடி டாலராகியது. உலக ஏற்றுமதியில் இது 25,00,000 கோடி டாலராக மாறியது. வர்த்தக அராஜகத்தை உருவாக்கி, அதை உலகளவில் ஒரு சில நிறுவனங்கள் கட்டுப்படுத்தின.


 இதன் மூலம் உலக மக்களைக் கொள்ளையடித்து கொழுப்பேறியது. 1993இல் உலகில் முதல் 500 மிகப் பெரிய தேசங்கடந்த நிறுவனங்கள் உலகின் உற்பத்தியில் 25 சதவீதத்தை கட்டுப்படுத்திய அதேநேரம்,  இங்கு வேலை செய்தோர் உலகளவில் வேலை செய்வோரில் 0.5 சதவீதமாகவே இருந்தது. 300 தேசங்கடந்த நிறுவனங்களின் சொத்து, உலக வளத்தில் 25 சதவீதமாக இருந்தது. உலகின் நிதி மூலதனத்தை கட்டுப்படுத்திய மிகப் பெரிய 50 நிதி நிறுவனங்கள், உலக நிதி மூலதனத்தில் 60 சதவீதத்தைக் கட்டுப்படுத்தின. இதன் பெறுமதி 20,00,000 கோடி டாலராகும். 1999இல் மிகப்பெரிய 100 பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த வர்த்தகம் 5,83,890 கோடி ஈரோவாக மாறியது. இது 1995இல் முன்னணி 200 பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த வர்த்தகத்துக்குச் சமமானதாக அதிகரித்தது. இங்கு மொத்தமாக தொழில் புரிந்தோர் எண்ணிக்கை வெறுமனே 1.9 கோடி பேர் மட்டுமே. முதல் 10 பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகம் 1,55,300 கோடி ஈரோவாகும். இதில் மொத்தமாக தொழில் புரிந்தோர் 32 லட்சம் பேராவார். முதல் 20 நிறுவனத்தின் வர்த்தகம் 2,49,600 கோடி ஈரோவாக இருந்தது. இங்கு மொத்தமாக தொழில் புரிந்தோர் 50 லட்சம் பேராவர்.


 உலக உற்பத்தியில் முதல் நிலையில் உள்ள 200 தேசங் கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் 28.3 சதவீதமான உலக உற்பத்தியை கட்டுப்படுத்தும் அதேநேரம், இந்த நிறுவனங்கள் வெறும் 0.33 சதவீத உழைக்கும் மக்களுக்கே உலகில் வேலை வாய்ப்பை வழங்கின. 71.7 சதவீத உற்பத்தியைச் செய்யும் மற்றைய நிறுவனங்கள், உலக உழைக்கும் மக்களின் 99.67 சதவீதமான மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்றன. இன்றைய நிலையில், இதே போக்கில் உலகமயமாதல் சார்ந்து, தேசங்கடந்த நிறுவனங்கள் மூலதனத்தை விரிவாக்கிச் செல்லும் போக்கில், உலக உற்பத்தியை 100 சதவீதமாக கட்டுப்படுத்தும் போது, உலக உழைக்கும் மக்களின் 1.17 சதவீத மக்களுக்கே வேலை வாய்ப்பை வழங்குவர். அத்துடன் முன்னணி தேசங்கடந்த நிறுவனங்களிடையே ஏற்படும் அழிவு இந்த 1.17 சதவீத வேலை வாய்ப்பைக் கூட மேலும் குறைக்கும். 99 சதவீதமான உழைக்கும் ஆற்றல் உள்ள மற்றைய மக்களின், உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவையை எப்படி உலகமயமாதல் கையாளும்? கேவலமாகக் கையேந்தி வாழும் அடிமைப் பண்ணை மனித விலங்காக மனிதர்களை மாற்றி, படிப்படியாக பட்டினியில் கொல்லப்படுவதே நிகழும். உலகமயமாதலின் சுதந்திரமான, ஜனநாயகமான மூலதனத்திடம், இதற்கு மாற்றாக எந்தத் தீர்வும் கிடையாது. இந்த உலகமயமாதலை பாட்டாளி வர்க்கம் எதிர்த்துப் போராட வேண்டுமா? அல்லது உலகமயமாதலில் சிறு கூறுகளை முற்போக்காகக் காட்டி ஆதரிப்பதா? இங்கு இதை தெளிவுபடவே நமக்கு புள்ளிவிபரங்கள் எதைச் செய்ய வேண்டும் என்பதை நிர்வாணப்படுத்தி விடுகின்றன.


 இந்த உண்மை எதார்த்தமாகவே உலகில் காணப்படுகின்றது. உலகில் மிக வறுமையில் வாழும் 450 கோடி மக்களின் மொத்தப் பொருளாதாரச் செயற்பாடு 3,90,000 கோடி (3.9 டிரில்லியன்) டாலர் மட்டுமே. ஆனால் முதல் 200 பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதாரச் செயற்பாடு 7,10,000 கோடி (7.1 டிரில்லியன்) டாலராகும். இந்தப் பொருளாதாரச் செயல்பாட்டின் இடைவெளி தொடர்ச்சியாக அதிகரிக்கின்றது. மக்கள் எதுவுமற்ற ஒரு மந்தைக்குரிய அடிமை நிலையை அடையும் வரை, இது வளர்ச்சியுறுகின்றது. உலக மக்கள் தொகையில் அதிக வசதிபடைத்த 20 சதவீதம் மேட்டுக்குடி மக்களிடம், உலகச் செல்வ வளத்தில் 85 சதவீதம் குவிந்து காணப்படுகின்றது. மிகுதியுள்ள 80 சதவீதமான மக்கள் 15 சதவீதமான செல்வத்தையே அனுபவிக்கின்றனர். இது உலக ஜனநாயகத்தினதும், சுதந்திரத்தினதும் வெட்டுமுகம். விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசில பன்னாட்டு நிறுவனங்கள், உலகையே சொந்தமாக்குவது தான் உலகமயமாதலாகும். இதை நிறைவு செய்து உறுதி செய்ய உருவானதே உலகமயமாதல் சட்டதிட்டங்கள். இங்கு மக்கள் பற்றி எந்த விதமான சமூக அக்கறையும் உலகமயமாதலுக்கு கிடையாது.


 அதாவது விரல்விட்டு எண்ணக் கூடியவர்களின் நலன்களே இங்கு முதன்மையானது. இதுவே சுதந்திரம். இதுவே ஜனநாயகம். இவைகளை போற்றுவதே உலகமயமாதலின் விரிவுரையாகும். 1991 இல் உலகின் மிகப்பெரிய 10 பன்னாட்டு நிறுவனங்கள் இணைந்த மொத்த வர்த்தகத்தின் பெறுமானம், 100 சிறிய நாடுகள் இணைந்த உள்நாட்டு மொத்த தேசிய உற்பத்தியை விட அதிகமாக கொண்டிருந்தது. இவை நமக்குத் தெளிவாகவே உண்மைகளைப் போட்டு உடைக்கின்றன. 100 நாடுகளில் வாழும் மக்களின் ஜனநாயகம், சுதந்திரம் என அனைத்தும், எப்படி பன்னாட்டு நிறுவனங்களின் உரிமையாகிக் கிடக்கின்றது என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி விளக்கி நிற்கின்றது.