இந்த அமைப்பைப் பாதுகாக்கும் சட்டதிட்டங்களும், அதைக் கையாளும் நீதிபதிகள் கூட பெரும் பணக்காரக் கும்பலே. 1997இல் புதிதாக நியமிக்கப்பட்ட 25 நீதிபதிகளின் சராசரியான தனிநபர் சொத்து, 18 லட்சம் டாலருக்கும் அதிகமாகும். அமெரிக்காவில் உள்ள நீதிபதிகளில் 34.1 சதவீதம் பேர் 10 லட்சம் டாலருக்கும் அதிகமான சொத்துடைய பணக்காரக் கும்பலே. பொதுச் சட்ட திட்டங்கள் பணக்கார நலன்களைத் தாண்டி, எதையும் மக்களுக்காக வழங்குவதில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

 

 இப்படி செல்வம் குவிவது என்பது தனிப்பட்ட நபர்களிடம் வரைமுறையின்றி வக்கரித்து வருகின்றது. உலகமயமாதல் இதையே தனது சொந்த ஆணையில் வைக்கின்றது. உலகை மிஞ்சும் பெரும் பணக்காரக் கும்பலை உருவாக்கி அதைப் பாதுகாக்க முனைகின்றது. இதை உருவாக்கிப் பாதுகாக்கும் அரசு தலைவர்கள் முதல், நாட்டை ஆளும் வர்க்கங்கள் பெரும் செல்வத்தின் சொந்தக்காரர்களாகவும் இருக்கின்றனர். இதற்குள் 100 கோடிக்கும் அதிகமான சொத்துடைய பிரிவுகளும் அடங்கும். ஆளும் பிரிவுகள் பணக்காரக் கும்பலாக இருப்பது, இன்றைய ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் இரத்தக் கொப்பளிப்பாகியுள்ளது. 2000ஆம் ஆண்டில் இத்தாலிய பிரதமர் சில்வியோ பலஸ்கோனி உலக பணக்காரக் கும்பலில் 29 இடத்தில் இருந்ததுடன் 1,030 கோடி டாலருக்குச் சொந்தக்காரனாக இருந்தான். இவன் 1997இல் 700 கோடி டாலருக்கு மட்டுமே சொந்தக்காரனாக இருந்தவன். இவனின் சொத்து 1998இல் 800 கோடி டாலராகியது. 2004இல் இவனின் சொத்து 1,000 கோடி டாலராகியது. 2005இல் 1200 கோடி டாலராகியுள்ளது. இவனே இத்தாலியின் மிகப் பெரிய பணக்காரனுமாவான்.


 இந்த உலகையே உலகமயமாக்கி சுரண்டிக் கொழுக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் கூட கோடீஸ்வரர்கள் அல்லது லட்சாதிபதிகள்தான். 2004இல் உலகை அடக்கியாளும் பிரதானமான ஏகாதிபத்தியத்தைச் சோந்த ஜி7 நாட்டு தலைவர்களின் தனிபட்ட சொத்துக்களின் விபரங்களைப் பார்ப்போம்.


இத்தாலிய பிரதமரின் சொத்து  1200 கோடி டாலர் (2005 இல்)
கனடா பிரதமரின் சொத்து                      22.5 கோடி டாலர்
அமெரிக்க ஜனாதிபதியின் சொத்து      1.5 கோடி டாலர்
பிரான்ஸ் ஜனாதிபதியின் சொத்து          90 லட்சம் டாலர்
பிரிட்டிஷ் பிரதமரின் சொத்து                  30 லட்சம் டாலர்
ஜப்பானிய பிரதமரின் சொத்து                 20 லட்சம் டாலர்
ஜெர்மனிய பிரதமரின் சொத்து               10 லட்சம் டாலர்


 இவர்கள் அனைவரும் உலகப் பணக்காரர் பட்டியலில் உள்ளவர்களே. உலகமயமாதலை பாதுகாக்கும் இந்தக் கும்பல், மக்களின் வாக்குரிமையில் அதிகாரத்துக்கு வருகின்றனர். இன்றைய ஜனநாயகம் என்பது பணக்காரக் கும்பலுக்கு மட்டுமானதே. பணக்காரர் மட்டும் அல்லது பணக்காரருக்கு சேவை செய்து பிழைக்கக் கூடியவர்கள் மட்டுமே இந்த ஜனநாயகம் மூலம் அதிகாரத்துக்கு வரமுடியும். மக்களால் தேர்ந்து எடுத்து அதிகாரத்துக்கு வந்ததாகக் கூறுபவர்களே தமக்குத்தாமே எடுத்துக் கொள்வது என்பது, ஒரு அடிப்படைச் சம்பளம் பெறும் தொழிலாளியை விட (அடிநிலைத் தொழிலாளி சராசரியாக 12000 ஈரோவையே வருடம் பெறுகின்றான்) பல மடங்காகும். இது 25 மடங்கு வரை செல்லுகின்றது. பிரதான ஏகாதிபத்தியங்களில் ஆளும் வர்க்கம் தாம், தமக்கே எடுத்துக் கொள்ளும் கொள்ளையின் அளவைப் பார்ப்போம்.


                                            பிரதமர்                                          மந்திரிகள்
பிரிட்டன்                         2,60,000 ஈரோ                           1,90,000 ஈரோ
அமெரிக்கா                    2,11,800 ஈரோ                           1,83,200 ஈரோ
பெல்ஜியம்                     1,80,000 ஈரோ                           1,50,000 ஈரோ
ஜெர்மனி                         1,74,884 ஈரோ                           1,39,944 ஈரோ
பிரான்ஸ்                         1,22,000 ஈரோ                              91,500 ஈரோ
இத்தாலி                          1,05,500 ஈரோ                              80,500 ஈரோ


 சட்டபூர்வமாக அவர்கள் கூறும் ஜனநாயகத்தின் ஊடாக சம்பளமாக பெறுவது இவை. ஆனால் இதை விட பற்பல சலுகைகள், மானியங்கள், வசதிகள் என பலவற்றைத் தாமே தமக்கு எடுத்துக் கொள்கின்றனர். இதை எடுத்துக் கொள்வதையே தமது ஜனநாயகம் என்கின்றனர். இவர்கள் தான் ஒரு தொழிலாளியின் சம்பளம் அதிகம் என்று கூறுவது மட்டுமின்றி, அவர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கான உரிமையை, மக்கள் தமது வாக்கு மூலம் தமக்குத் தந்துள்ளதாகக் கூறும் வக்கிரம் தான் இன்றைய ஜனநாயகமாக உள்ளது.


 2003இல் அமெரிக்கா செனட் சபைக்கு தேர்ந்தெடுத்த 100 பேரில் குறைந்தபட்சம் 40 பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். சிலர் பல பத்து கோடிகளுக்குச் சொந்தக்காரர்கள். இந்த 40 பேரில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 22 பேரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 18 பேரும் கோடீஸ்வரராக இருந்தனர். அமெரிக்க ஜனநாயகம் என்பது இரண்டு கோடீஸ்வரக் கும்பலுக்கு இடையிலான போட்டியே ஒழிய வேறு ஒன்றுமல்ல. உலகை எப்படி அடக்கியாள்வது என்பதும் இதற்கு உட்பட்டதே. அதிகுறைந்த சொத்துடைய 40வது கோடீஸ்வரரின் சொத்து 11.1 கோடி டாலராகும். இரண்டாவது பெரிய பணக்கார செனட்டரான ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக இருந்த ஜோன் கெரியின் சொத்து 16.4 முதல் 21.1 கோடி டாலராகும். இவருக்கு 75 பரஸ்பர நிதி நிறுவனங்களும், அவர் மனைவிக்கு (ஏஞுடிணத் ஞிணிட்ணீச்ணதூ) இரண்டு பரஸ்பர நிதி நிறுவனங்களும் சொந்தமாக இருந்தன. இவை எல்லாம் அவர் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ளவையே. கணக்கில் காட்டப்படாத நிதிகள் முதல் விதிவிலக்குகள் கூட உண்டு. இதைவிட அமெரிக்காவின் செனட்டர்களின் வருமானம் பற்றிய தகவல் தெரிவிக்கும் சட்டமூலத்தை தெளிவில்லாத வகையில் தமக்குத்தாமே ஓட்டையாகவே தயாரித்துள்ளனர். இதன் மூலம் சொத்துக்களை முழுமையாகக் காட்டுவதில்லை. உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவி தனது சொத்தை 3.52 லட்சம் என குறைந்தளவிலும் கூடியளவு 38 லட்சம் என்றே அறிக்கை செய்திருந்தார். ஆனால் பல இடங்களில் கணவர் பற்றி உரையாற்றிய போது, அதற்குக் கட்டணமாகப் பெற்றதே 90 லட்சம் டாலர். வாழும் வரலாறு என்ற தனது நூலுக்கு மட்டும் 80 லட்சம் டாலரைப் பெற்று இருந்தார். இருந்த போதும் இவர் செனட்டருக்கான கோடீஸ்வரர் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆண்டு ஊதியம் மட்டும் 1.55 லட்சம் டாலராகும். இங்கு தலைமையில் இருப்பவர்களுக்கு சம்பளம் 1.72 லட்சம் டாலராகும். செனட்டைக் கடந்து பாராளுமன்றத்தில் உள்ள 435 பேரில் பலர் கோடீஸ்வரர்கள். அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் முதல் பல சொத்துக்களின் அதிபதிகளாகவும் பங்காளியாகவும் உள்ளனர்.


   இதே போன்று 2004இல் உலகின் ஆட்சி பீடங்களில் இருந்த அரசர்கள் மற்றும் கௌரவ அரச பரம்பரையைச் சேர்ந்த சிலரின் சொத்து விபரங்களைப் பார்ப்போம்.


சவுதி மன்னன்                                2500 கோடி டாலர்
ஐக்கிய எமிரட் மன்னன்            2000 கோடி டாலர்
பு×ண்டி (புரூனே) மன்னன்         1430 கோடி டாலர்
துபாய் மன்னன்                              1000 கோடி டாலர்
லிசெஸ்தெயின் மன்னன்            220 கோடி டாலர்
தாய்லாந்து பிரதமர்                        140 கோடி டாலர்
பிரிட்டிஷ் மகாராணி                        66 கோடி டாலர்
நெதர்லாந்து மன்னர்                        26 கோடி டாலர்
பாலஸ்தீனத்தின் ஜனாதிபதியாக இருந்த அராபத்          20 கோடி டாலர்