"பா லியல் அரசியல்: மார்க்சியமும் அறிவியலும்"45 என்ற தலைப்பில் "உயிர்நிழலில்" யமுனா ராஜேந்திரன் என்பவர் தன்னைத் தான் மார்க்சியவாதி என்று கூறியபடி (இங்கு மார்க்சின் அடிப்படையான மார்க்சியக் கோட்பாட்டை என்றும் ஏற்றது கிடையாது. அத்துடன் அதற்கு எதிராகத் திட்டமிட்டு இயங்குபவர்.) எழுதிய கட்டுரை, மார்க்சியத் தலைவர்கள் மீது பாலியல் அவதூற்றைப் பொழிந்துள்ளது. அதைப் பார்ப்போம்.
"கார்ல் மார்க்ஸ் அன்று நிலவிய படித்த வர்க்க விக்டோரியன் பாலியல் மதிப்பீடுகளுக்கு ஆட்படுவதினின்று தன்னை விடுவித்துக் கொள்ள முடியாத சூழலின் கைதியாக இருந்தார்"45 என்று கண்டுபிடித்திருக்கின்றார்.
அ.மார்க்ஸ் என்பவர் மார்க்சியத்தை மறுக்க மார்க்சியத்தை ஹெகலியத்தின் தொடர்ச்சி அல்லது ஹெகலியத்தின் விடுபட முடியாமை என்று கூறி மார்க்சியத்தைப் புதைகுழிக்கு அனுப்ப இரவு பகலாகப் பாடுபட்டார், பாடுபடுகின்றார். இதைப் பின்னால் லெனினுக்கும் கூட விரிவாக்கினார். இதையே யமுனா ராஜேந்திரன் அதே பாணியில் கார்ல்மார்க்ஸ் மற்றும் பிற மார்க்சியத் தலைவர்களுக்குத் தனிமனித ஒழுக்கத்தின் மீது வைத்து முதலாளித்துவத்தின் தொடர்ச்சி என்கிறார். இந்த மாதிரி அவதூறுகளுக்குப் பின்னால் வர்க்கப் போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் என்பதே நனவான கனவாகும்.
இதில் வேடிக்கை என்னவெனில் ஒழுக்கம் என்ற ஒன்று இல்லை. பாலியல் தனிமனித விருப்புக்கு விமர்சனம் செய்ய முடியாது எனக்கூறும் யமுனா ராஜேந்திரன் தான் முரண்நிலையில் இதை விமர்சிக்கின்றார்.
மார்க்ஸ் தன் வேலைக்காரியுடன் தொடர்பு கொண்டார் என்பதற்கு வைக்கும் ஆதாரம் மார்க்ஸ் கல்லறையைப் பராமரிப்போர் வெளியிட்ட பிரசுரத்தைத் (சிறு நூல்) தான் அடிப்படையாக யமுனா ராஜேந்திரன் கொள்கிறார். இதைப் பொறுப்புடன் வரலாற்றை ஆராய்ந்து எழுதியதாக யமுனா ராஜேந்திரன் சிபாரிசு செய்கின்றார். வரலாற்று ஆய்வு என்றால் என்ன? இந்தச் சமுதாயத்தில் வரலாற்று ஆய்வுகளை எப்படிச் செய்ய முடியும்? என்ற கேள்விகள் தான், உண்மை மீதான அடிப்படையாகும்.
முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் வரலாறுகளை ஆய்வு செய்தது போல், இயற்கையின் வரலாற்றை விட்டு விட்டு, குறித்த தனிச் சொத்துரிமை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, மனித வரலாற்றை உருவாக்கியது போல், ஒரு தனிமனிதனின் வரலாற்றையும், அவர் எதற்காகப் போராடினாரோ அதன் மீதான நேர்மையான பக்கங்களை நிராகரித்தே, வரலாறு (அவதூறு) எழுதுகின்றார்.
மார்க்ஸ் உயிருடன் வாழ்ந்த போது இப்பிரச்சினைக்கு மார்க்ஸ் என்ன சொன்னார் என்ற வரலாற்றையும், அவரின் கருத்தையும் மறுத்த ஆய்வுகள் என்பது உள்நோக்கமும், சதித் தன்மையும் கொண்டவை.
மார்க்ஸ் உலகுக்கு வழங்கிய தனது பெயரிலான மார்க்சியம், அவரின் ஆய்வு நேர்மையூடாகத் தான் ஒரு கம்யூனிஸ்டாக வாழ்ந்து உருவாக்கியவர். அந்த வாழ்க்கைப் போராட்டத்தில் வறுமைக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளான மார்க்ஸ், இந்த முதலாளித்துவ அமைப்புக்குச் சரணடைய மறுத்த போராட்டத்தில் இருந்த நேர்மையில், அவரின் விமர்சனங்கள், மறுப்புக்கள் முக்கியத்துவமுடையவை.
அதேபோல் சம்பந்தப்பட்ட ஹெலன் டெமூத்தின் (வேலைக்காரி) என்பரின் அபிப்பிராயம் என்ன? அவளுடைய மகனின் அபிப்பிராயம் என்னவாக இருந்தது? என்ற கேள்விகள் பற்றியெல்லாம் ஆய்வுக்கு அக்கறையில்லை.
மார்க்ஸ் மனைவியின் அபிப்பிராயம் பற்றியும், மார்க்சின் குழந்தைகளின் அபிப்பிராயம் பற்றியும், ஆய்வுக்கு அக்கறையில்லை. சம்பந்தப்பட்டவரின் அபிப்பிராயத்திற்குப் புறம்பாக ஆய்வுகள் எப்படி, எங்கிருந்து உருவாக முடியும்? இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாது கைவிட்டு, சேறுவீசல் என்பது உண்மையில் உள்நோக்கம் கொண்ட சதித் தன்மையானவை.
அவரின் எதிரிகளான கத்தோலிக்க ஒழுக்க அறிவுஜீவிகள் முதல் முதலாளித்துவ எடுபிடி எழுத்தாளர்கள் வரை அன்றே ஏன் இப்பிரச்சினையைப் பற்றி விவாதிக்க முடியவில்லை. வரைமுறையின்றி கட்டற்ற வகையில் மார்க்சுக்கு எதிராக அள்ளிவீசிய அவதூறுகளின்போது, சேறுவீசல்களின் போது இது ஏன் முன்னிலைக்கு வரவில்லை?
இன்று ஏன் கம்யூனிச எதிரிகளால் முன் வைக்கப்படுகின்றது. 100 வருடங்கள் கழிந்த பின் ஆதாரமற்ற அவதூறுகளின் பின்னால் உள்ளது, மார்க்சியம் மீதான எதிர்க்கண்ணோட்டம் மட்டுமே. ஏங்கெல்ஸ் அக்குழந்தையின் தந்தை மார்க்ஸ் எனக் குறிப்பிட்டார் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் காட்ட முடியாது. மேலும் வரலாற்றில் அவர் எங்கு? எப்போது? சொல்லியுள்ளார் என்பதையும் ஆதாரமாகக் காட்ட முடியாது, ஏங்கெல்ஸை சாட்சிக்கு இழுத்து அவர் பெயரில் அவதூறுகள் மட்டுமே பொழிகின்றனர். மார்க்ஸ் கல்லறையில் வேலைக்காரியின் (ஹெலன் டெமூத்) உடலைப் புதைப்பது நியாயமானது. ஏனெனில் மார்க்ஸின் ஆய்வுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் அப்போது இருந்த சமுதாயம் எந்தளவுக்குப் பங்களித்ததோ, அதைவிட தனிமனித உழைப்பை இலகுபடுத்துவதில் அவரின் குடும்ப அங்கத்தவர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவமுடையது. இந்த வகையில் அந்தக் குடும்பத்தின் வேலைக்காரியாக வாழ்ந்த போதும், குடும்ப அங்கத்தவராகவே வாழ்ந்த அந்தப் பெண் ஹெலன் டெமூத்தின் உடல் கல்லறையில் புதைப்பது நியாயமானதும் சரியானதும் ஆகும். இதை பாலியலுடன் பொருத்துவது சாதாரண நிலப்பிரபுத்துவ ஒழுக்கத்தின் கண்ணோட்டமாகும்.
மாவோவின் மருத்துவர் மாவோவின் ஒழுக்கத்தைக் கேள்வி எழுப்புவதால், அது யமுனா ராஜேந்திரன் போன்ற கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்களுக்குத் தீனியாகி விடுகின்றது. மாவோ வாழ்ந்த காலத்தில் அவரின் வாழ்க்கை எப்படியிருந்தது? எதிரிகள் ஏன் அவர் ஒழுக்கத்தின் மீது கேள்வி எழுப்பவில்லை. கலாச்சாரப் புரட்சி இரு வர்க்கங்களுக்கிடையில் பெரும் மோதலாக உள்நாட்டு யுத்தமாக எழுந்த போது இவைகள் ஏன் முன்னுக்கு வரவில்லை?
எப்போதும் முதலாளித்துவப் பிரிவுகள் மார்க்சியத்துடன் கோட்பாட்டு ரீதியில் மோத முடியாதபோது, தனிமனித அவதூறுகளில் இறங்குவது வழக்கம். இப்படி ஒரு நிலை உள்ள போது ஏன் அவைகளை அன்றே முன் வைக்கவில்லை? இப்படியெல்லாம் ஒவ்வொன்றாக ஒழுங்காக ஆராய்ந்து பார்க்காமல் ஒருவர் அதிலும் நெருங்கியவர் சொன்னார் என்றால் அதை ஆதாரமாகக் கொண்டு, வலதுசாரி முதலாளித்துவ எழுத்தாளர்கள் வம்பு பண்ணுவதில் களம் கண்டு கொள்கின்றனர். ஆய்வு, கேள்வி, சந்தேகங்கள் என்பனவற்றுக்குப் பதிலாக யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் தமது வர்க்க விசுவாசத்துடன் கம்யூனிசத்தை எதிர்த்து, அவர்கள் கடவுள் அல்ல மனிதர்களே என்று கூறியபடி அவதூறுகளை மெய்யாக்கத் தலைகீழாக நிற்கின்றனர்.
மார்க்சியத்தின் தலைவர்கள் என்றும் கடவுள் ஆனவர்கள் அல்ல. ஏனெனில் நடைமுறையில் காலாகாலமாக இருந்து வந்த முதலாளித்துவச் சமுதாயத்தை அதன் வேரில் இருந்தே ஆட்டியவர்கள் என்பதால், சமுதாயத்தின் தனிச்சொத்துரிமை அதிகாரம் சார்ந்த பொதுக் கருத்து அவர்களைக் கடவுளாக்கி விடாது. நடைமுறையில் யார் யாரெல்லாம் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு போராட விரும்புகின்றனரோ, அவர்களெல்லாம் மார்க்சியத்தைப் பாதுகாப்பவராக, அதை நடைமுறைப்படுத்துபவராக உள்ளனர். அவர்கள் அத்தலைவர்கள் மீது தனிமனித ஆதாரமற்ற அவதூறுகளையும் மறுத்துப் போராடுகின்றனர். கடவுளாக அல்ல. புரட்சியின் தலைவர்களாக, நடைமுறைக்கு வழிகாட்டுபவர்களாகக் கொண்டு போராடுகின்றனர்.
இந்த இடத்தில் அவர்களின் கல்லறையைப் பாதுகாப்பவர்கள், அவர்களின் நெருங்கிய குடும்பத்தினர், அவர்களுக்கு உதவியவர்கள், அவர்களுடன் களத்தில் நின்றவர்கள் வெளியிடும் கருத்துக்கள் எப்போதும் சரியானதாக இருக்க வேண்டியதில்லை. கருத்தைக் கூறுபவர்கள் எந்த அளவுக்கு கருத்தைப் புரிந்து நடைமுறைப்படுத்துகின்றனர் என்பதே முக்கியமானதும், அடிப்படையானதுமாகும். அதாவது சொல்லும் விடயத்தையொட்டி அத்தலைவர்களின் கோட்பாட்டை எப்படி அமுல்படுத்துகின்றனர்? அதையொட்டி எப்படி வாழ்கின்றனர்? என்பது தனிமனித நேர்மைக்கும், அவர்களின் கருத்துக்கும் உள்ள நேர்மையின் அளவு கோலாகின்றது. பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் நின்று, அந்த வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்காகப் போராடவும், பாதுகாக்கவும், புரட்சியைச் செய்யவும், தொடர்ந்து வர்க்கப் புரட்சியைத் தொடரவும், பாதுகாக்கவும் தயாரற்ற எந்த மனிதனின் ஆய்வுகளும், முதலாளித்துவத்தின் எச்சங்கள் தான். இது யமுனா ராஜேந்திரனுக்கு விதிவிலக்கின்றி பொருந்தும்.
பெரியாரின் பெயரில் அவரின் வாரிசாக ஆட்சியாளர்களின் கால்களில் விழுந்து நக்கித் திரியும் தி.க.வீரமணி (கி. வீரமணி), பெரியார் பெயரில் கூறுவது எப்படித் தவறாக, உள்நோக்கம் கொண்டதாக உள்ளதோ அதுபோல, அம்பேத்கார் பெயரில் அவரின் வாரிசாகத் திரிவோர் எப்படி மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றனரோ அதுபோல, லெனின் பெயரில் உலகில் முதலாளித்துவக் கம்யூனிசக் கட்சிகள் எப்படி உள்நோக்கத்தில் லெனினை விதந்துரைக்கின்றனரோ அதுபோல, சோவியத் ய+னியனில் குருசேவ் ஸ்டாலினையும், லெனினையும் எப்படி உள்நோக்கத்துடன் விளக்கினாரோ அதுபோல, சீனாவில் மாவோவைத் திரித்துக் கூறி முதலாளித்துவத்தை உருவாக்கிப் பாதுகாக்கின்றனரோ அதுபோல, இவைகள் எல்லாவற்றையும் யமுனா ராஜேந்திரன் போல் ஆதாரப்படுத்தினால் எஞ்சுவது அவதூறுகள் தான்.
மார்க்சின் கல்லறையைப் பாதுகாப்போருக்கும், வர்க்கப் போராட்டத்திற்கும் உள்ள நடைமுறை கோட்பாட்டு உறவு என்ன? மாவோவின் மருத்துவர் வர்க்கப் போராட்டத்தில் எங்கு நிற்கின்றார்? என்பதிலிருந்துதான் அவர்களின் கருத்துக்கள் ஆராயப்பட வேண்டும்.
ஸ்டாலின் மகள், கஸ்ரோவின் மகள் ஏகாதிபத்தியப் பண்பாட்டுக் கலாச்சாரத்தில் போய் சரணடைந்தபடி கூறும் கருத்துக்களை ஆதாரப்படுத்தினால், வர்க்கப் போராட்டத்தில் நீங்கள் திட்டவட்டமான பாட்டாளி வர்க்க எதிரிகள்தான்.
மாவோ பற்றிய அவதூறுக்கு, மருத்துவரின் நூல் மற்றும் பி.பி.சி. (டீ.டீ.ஊ.) பேட்டியை அடிப்படையாகக் கொண்டு எழுதியதாக ஒப்புக் கொள்ளுகின்றார் யமுனா ராஜேந்திரன். பி.பி.சி. (டீ.டீ.ஊ.) போன்ற ஏகாதிபத்தியச் செய்தி ஊடகங்கள் வரலாற்றையே திரித்து வெளியிடுபவை. பி.பி.சி. உலகமயமாதலைத் தீவிரப்படுத்த, உலக ஆக்கிரப்புகளில் வெளியிடும் கருத்துகள் அனைத்தும், மார்க்சிய எதிர்ப்பிலான ஆதாரங்களால் நிறைந்து போயுள்ளது. அப்பேர்ப்பட்ட ஏகாதிபத்திய ஊடகங்கள் மாவோ பற்றிய சரியான தகவல்களைத் தரமுடியுமா? இதுவரை தந்ததுண்டா?
தன்னை மார்க்சியத்தின் எதிரியாகக் காட்டுவதாகக் குறிப்பிட்டு மறுப்பதைப் பார்ப்போம். "மார்க்சுக்கும் மார்க்சிய அறிவியலுக்கும் தாம் மட்டும் உரிமை கொண்டாட நினைப்போர் மிகச் சாதாரணமாக மார்க்சிய எதிர்ப் பட்டியலில் என்னைத் தள்ள நினைக்கின்றார்கள்"45 என்று கூறி தப்ப நினைக்கின்றார். உலகளாவில் மார்க்சியம் மீதான ஒருமித்த பார்வை, ஒவ்வொரு விடயம் மீதும் ஒன்றாகவே இருக்கும். வேறுபட்ட பார்வைகள் என்று ஒரு பிரச்சினை மீது இருப்பதில்லை. அப்படி இருப்பின் அதில் ஒன்று மட்டுமே சரியானதாகும்.
மார்க்சியவாதி என்பவன் மார்க்ஸ் மார்க்சியத்தை நிறுவியவர் என்பதையும், லெனின் அதை நடைமுறைப்படுத்தி பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவியவர் என்பதையும், மாவோ புரட்சிக்குப் பிந்திய வர்க்கப் போராட்டத்திற்கு வழிகாட்டியவர் என்பதையும் ஏற்க மறுத்த யாரும் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள்தான். அவர்கள் மார்க்சியவாதிகள் அல்ல.
அத்துடன் வர்க்கப் போராட்டத்தை ஏற்று, அதை நடைமுறைப்படுத்தி, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கோரி புரட்சி செய்யாதவர்களும், கோரி அமுல்படுத்த மறுப்பவர்களும், புரட்சிக்குப் பின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் தொடர மறுக்கின்றவர்களும், ஏற்க மறுக்கின்றவர்களும் மார்க்சியவாதிகளே அல்ல.
இதை எதிர்த்து, மறுத்து எழுதி போராடும் பிரிவுகள் அனைவரும் மார்க்சியத்தின் எதிரிகளே. இதற்குள் கருத்து முரண்பாட்டிற்கு இடமேயில்லை. மார்க்சியம் மீது ஒட்டோ, வெட்டோ, சேர்ப்போ செய்யமுடியாது. மார்க்ஸ் பெயரில் மார்க்சியம் ஏன் அழைக்கப்படுகிறதோ, அதன் வழியில் மறுத்த எந்த எழுத்தும், கோட்பாடும், நடைமுறையும் மார்க்சியத்துக்கு எதிரானதுதான். இதில் விளக்கம் சொல்லிப் புகுந்து விடமுடியாது.
யமுனா ராஜேந்திரன் இந்த அவதூறு முதல் (இந்த அவதூறு மார்க்சிய ஆய்வு வழிமுறைக்குத் திட்டவட்டமாக எதிரானது.) அவரின் எழுத்துக்கள் அனைத்தும், மார்க்சின் பெயரில் உருவான அவரின் அடிப்படைக் கண்டுபிடிப்புக்களுக்கு எதிராக உள்ளதால், மார்க்சின் கண்டுபிடிப்பான மார்க்சியத்துக்கு எதிரானது அவ்வளவே. இதற்குப் பின்னால் விவாதம் கிடையாது. மார்க்சின் மார்க்சியத்தைக் கோட்பாட்டில், நடைமுறையில், போராட்டத்தில் பாதுகாப்பவர்கள் மட்டுமே மார்க்சியவாதிகளுமாவார்.
நா.கண்ணனைப் பாதுகாத்துக் கூறுவதைப் பார்ப்போம். "மனிதர்களைப் புனிதர்களாக்கி அதிகாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டாம் என்கிறார் நா.கண்ணன்"45 என்று யமுனா கண்ணனுக்காக வக்காலத்து வாங்குகிறார். மார்க்சியத் தலைவர்கள் யாரையும் புனிதராக்கி விட முடியாத சமூகப் பொருளாதார அமைப்பு நீடிக்கிறது. ஏனெனில் மார்க்சியத் தலைவர்களின் தத்துவங்கள், நடைமுறையில் வர்க்கம் உள்ள வரை வர்க்கப் போரையும் புரட்சியையும் கோருவதால், அதைப் புனிதமாக்குவது ஆபத்தானதாக இருக்கும் அதேநேரம், தனிச்சொத்துரிமை அமைப்பையே ஆட்டம் காணச் செய்வதுமாகும். இதனால் இருக்கும் பொது சமூகக் கண்ணோட்டம் திட்டவட்டமாக இதற்கு எதிரானது.
இதையொட்டிய யமுனா ராஜேந்திரனின் அடுத்த மார்க்சிய எதிர்ப்பு எழுத்தைப் பார்ப்போம். "மாவோவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு கடவுள் ஆக்கியதால் தான் கலாச்சாரப் புரட்சியில் படுகொலைகள் நிகழ்ந்தன. ஸ்டாலின் கடவுளாகினார். ரஷ்ய, கிழக்கு ஐரோப்பிய மக்கள் அனுபவித்தனர்..."45 என்று யமுனா எழுதுகிறார். யமுனா ராஜேந்திரன் விரும்புவது போல் சீனா, ரஷ்யா, கிழக்கு ஐரோப்பா மக்கள் இன்று திறந்த ஆணாதிக்கச் சுரண்டல் நுகர்வுப் பண்பாட்டில், கலாச்சாரத்தில் எதை வென்று எடுத்தனர்? வறுமை, ஆணாதிக்கம், இனவாதம், பாசிசம், சுரண்டல் என மனித அவலத்தையே, மாவோவையும் ஸ்டாலினையும் தூற்றியதனால் விளைவாக்கினர். இதுவே யமுனா ராஜேந்திரனுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் கனவு. ஸ்டாலின், மாவோ காலத்தில் மக்கள் பெற்ற உரிமைகள், வசதிகள் என அனைத்து அடிப்படைத் தேவைகளும் இன்று கிடைத்த சுதந்திரத்தில் எங்கு போனது? சரி அன்று யாரெல்லாம் துன்பப்பட்டனர்? ஒடுக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தானே. பாட்டாளி வர்க்கத்தினுடைய எதிரிகளின் அவலங்களுக்காக யமுனா ராஜேந்திரன் அழும்போது, அந்த வர்க்க நோக்கம் தெளிவானது.
கலாச்சாரப் புரட்சி என்பது மார்க்சின் மார்க்சிய வர்க்கப் போராட்ட வழியில் நடத்தப்பட்டவை. இதையொட்டி மார்க்ஸ் "... புதிய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான, ஆட்சியில் இல்லாத வர்க்கங்களின் எதிர்ப்பு பின்னால் மேலும் கூடுதல் கடுமையானதாயும் ஆழம் மிக்கதாயும் வளர்கிறது." (நூல்திரட்டு - 1) என்ற ஆய்வுகளை ஒட்டியே புரட்சிக்குப் பிந்திய வர்க்கப் போராட்ட வடிவங்களில் இருந்து, கலாச்சாரப் புரட்சி நடத்தப்பட்டது. இதை எதிர்க்கின்ற பிரிவுகள் மார்க்சையும் அவர் உருவாக்கிய மார்க்சியத்தையும் மறுப்பதால், மார்க்சியத்தினதும் வர்க்கத்தினதும் விரோதியாகின்றனர்.
கலாச்சாரப் புரட்சி என்பது "அத்துமீற"லுக்காக நடத்தப்பட்டவைதான். நீடித்துக் கொண்டிருந்த சுரண்டல் வடிவங்கள், ஆணாதிக்க வடிவங்கள், மதப்பிற்போக்கு வடிவங்கள் என பலவற்றின் பண்பாடு - கலாச்சாரப் போக்குகள் மீதும், அது சார்ந்த அதிகாரப் பிரிவுகள் மீதும் நடத்தப்பட்ட மக்கள் போராட்டமாகும். இருந்த அரசியல் சட்ட வடிவத்துக்குப் பதில், புதிய புரட்சிகரப் பாய்ச்சலை உருவாக்கவும், அதற்கான புதிய அரசியல் சட்ட வடிவத்தை உருவாக்கவும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஒடுக்கும் வர்க்கத்துக்கு எதிராகப் பயன்படுத்தி கெட்டிப்படுத்தவும், நடத்தப்பட்ட மக்கள் புரட்சியாகும். இவை வன்முறை சார்ந்த, சாராத என்று இரு தளங்களிலும் நடத்தப்பட்டவை. இதற்கு எதிராகப் புலம்பி, ஏகாதிபத்தியம் மற்றும் ஒடுக்கும் வர்க்கத்தைப் பாதுகாக்கவும், சுரண்டலைத் தொடர உள்ள பாதைகளைப் பாதுகாக்கவும், வரலாற்றில் மக்களுக்கு எதிரான தொடர்ச்சிதான், எதிர்ப்புகளின் உள்ளடக்கமாகும்.
இதைச் செழுமைப்படுத்தவே முன்வைப்பதைப் பார்ப்போம். "மார்க்சியத்துக்குள்ளேயே செழுமைப்படுத்தும் போக்கென்பது இன்று பலவகைத் தோற்றங்களைக் கொண்டுள்ளது. முதலாவது, மார்க்சியம் முன்வைத்த "தொழிலாளர் புரட்சியின் மையம்" என்ற அடிப்படையே இன்று தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது"45 என்கிறார். இதையொத்த நாத்திக சிந்தனைக்கு எதிராக அன்று கூறிய போது லெனின் "பதினெட்டாம் நூற்றாண்டின் பழைய நாத்திக இலக்கியம் பழமைப்பட்டுவிட்டது, விஞ்ஞானத்துக்கு ஒவ்வாததாகவும் சிறுபிள்ளைத் தனமானதாகவும் ஆகிவிட்டது என்றெல்லாம் காரணம் கூறப்படுகிறது. இத்தகைய போலியான விஞ்ஞானக் குதர்க்கத்தைக் காட்டிலும் மோசமானது எதுவும் இல்லை. பகட்டுப் புலமையை அல்லது மார்க்சியத்தைப் பற்றிய அறவே தவறான உணர்வை மூடிமறைக்கவே இந்தக் குதர்க்கம் பயன்படுகின்றது."44 இதுபோன்று, மார்க்சியம் மீதான குதர்க்கத்தில் இருந்துதான், மார்க்சியத் தலைவர்கள் மீது சேறு வீசப்படுகின்றது. மார்க்ஸ் தொழிலாளரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய, அவரின் பெயரில் உருவான மார்க்சியத்தின் அடிப்படையை, அதாவது தொழிலாளர் தலைமை என்பதை எந்தக் கோட்பாட்டாளனாவது மாற்றினால், அதை அவரின் (மார்க்ஸ் அல்ல) பெயரில் அழைப்பது அல்லவா நியாயம். இதை மறுத்து மார்க்சைத் திருத்தி அழைப்பது மோசடியல்லவா? இது அப்பட்டமான விபச்சாரமல்லவா? இதில் நேர்மை என்பது இருக்க முடியுமா? இல்லையே!
மார்க்சுக்கு ஒரு முகம் தான் அவரின் தத்துவம் போல் இருக்க முடியும். யமுனா ராஜேந்திரனைப் போல் பலமுகம், அதாவது இடது, வலது, அதற்குள்ளும் பல என இருக்க முடியாது. மார்க்சின் அடிப்படை வரையறையை மீறிய எழுத்துக்கள் விளக்கங்கள் அனைத்தும் மார்க்சியத்தின் பெயரில், மார்க்சின் பெயரில் முன்வைக்க முடியாது. அதை எழுதியவன் சொந்தம் கொண்டாடி தனது பெயரில், மார்க்சியத்தை எதிர்த்து எழுதிய வழியில் வைப்பது என்ற அறிவு நேர்மை கூட இல்லாத போக்கிரிகளாக இருக்கின்றனர். அதை நியாயப்படுத்தும் யமுனா ராஜேந்திரன் வர்க்கம் எந்தப் பக்கம் என்பதையும், அவரது நேர்மையீனத்தையும் துல்லியமாகக் காட்டுகின்றது. இப்போது எங்கள் முன் இருப்பது லெனின் சுட்டிக்காட்டிய பாதை மட்டும்தான். "மார்க்சியத்தின் அடிப்படைகளுக்காக மூர்த்தண்ணியமான, விடாப்பிடியான போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை, மறுபடியும் நிகழ்ச்சி நிரலுக்கு வந்தது."44 இதுவே எமது பணியுமாகும். மேலும் தொடர்ச்சியாக இதைத் தொடர்ந்து பார்ப்போம்.