தமிழில் மொழிப் பெயர்ப்பாக ரொஸலின்ட் மைல்ஸ்சின் "உலக வரலாற்றில் பெண்கள்" என்ற முக்கியத்துவம் வாய்ந்த நூல் ஒன்று வெளிவந்துள்ளது. மனித வரலாற்றில் ஆதி மரபுகளை, பண்பாட்டுக் கலாச்சார எச்சங்களை, பழைய இலக்கிய மரபுகளில் இருந்தும், காலனித்துவக் குறிப்புகளில் இருந்தும் பல்வேறு விடயங்களையும் உலகளவில் தொகுத்து, அதை எடுத்துக் காட்டியுள்ளது. பெண் சார்ந்த, பெண்ணின் அதிகாரம் சார்ந்த பல்துறை வரலாற்று ஆதாரங்களை இந்த நூல் தனக்குள் திரட்டியுள்ளது. இந்த அடிப்படையில் மட்டும் சமூகத்தை மாற்றி அமைக்கப் போராடும் அனைவரும், இந்த நூலை நிச்சயமாகப் படித்து தெளிய வேண்டியது அவசியமாகும்.
வரலாற்றில் ஒரு பக்கத்தைத் திரட்டித் தனக்குச் சார்பாக அதாவது இன்றைய உலகமயமாதலில் பெண்ணின் நிலையை நியாயப்படுத்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. மூலதனத்தின் அதிகாரப் பலத்தில் பெண் எதைச் செய்தாலும் அதை ஆதரிக்கும் இழிநிலைக்கு, ஆதாரத்தைத் தேடித் திரட்டியுள்ளது இந்த நூல். இது இன்றைய ஏகாதிபத்திய நுகர்வுக் கலாச்சாரத்தில் பெண்ணின் சீரழிவை நியாயப்படுத்துகின்றது.
கடந்தகால வழிபாடுகள் மற்றும் மரபுகளின் எச்சச் சொச்சங்களில் உள்ள பொருளுக்கும் கருத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஒரு பகுத்தாய்வு முறையில் பிரித்து எடுத்து ஆராய மறுக்கின்றது. பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் இருந்து சமூகத்தையும், அதன் மரபுகளையும் விமர்சனங்களுக்கு உள்ளாக்குவதைத் திட்டமிட்டே மறுக்கின்றது. கடந்த கால மரபுகள், பண்பாடுகள் தொடங்கி இலக்கியம் ஈறாகச் சமூகப் பொருளாதாரத்தைப் பிரதிபலித்த வண்ணம், தனக்குள் கருத்து முதல்வாதத்தை ஆழமாகக் கொண்டே காணப்படுகின்றது. இதை இந்த நூல் பிரித்துப் பார்ப்பதைத் திட்டவட்டமாக உள் நோக்குடன் மறுக்கின்றது. இதைத் துல்லியமாகவே இந்த நூலில் இருந்து ஆராய்வோம்.
("ஆணாதிக்கமும் பெண்ணியமும்" என்ற என் நூல் கி.பி. 2001-இன் நடுப்பகுதியில் எழுதப் பெற்றிருந்தது. அதை வெளியிடுவதில் உள்ள சில நடைமுறை பிரச்சினைகள் ஏற்பட்டதன் காரணமாக இரண்டாம், மூன்றாம் பகுதிகள் காலதாமதமாக வெளியாகின்றது. அதன் இறுதிப்பகுதியில் முக்கியத்துவம் கருதி இந்தக் கட்டுரை இணைக்கப்படுகின்றது.)
"உலக வரலாற்றில் பெண்கள்" என்ற நூல் தனது அடிப்படைத் தத்துவ விளக்கமாகப் பெண் ஏன், எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்பதை, எதை ஆதாரமாகக் கொண்டு விளக்குகின்றது எனப் பார்ப்போம்.
"சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, மக்கட் தொகையில் ஏற்பட்ட பெருக்கம், உணவு உற்பத்தி செய்யப்பட்ட முறையில் மாற்றங்களைக் கட்டாயப்படுத்தியது. சிறிது சிறிதாகப் பெண்களின் தோட்டக் கலைக்குப் பதிலாகப் பெருமளவான மற்றும் கூடுதலான தீவிரமான விவசாயம் தோன்றியது" (பக்கம்-82) என்ற புரட்டில் இருந்து தோன்றியதாகும்.
உற்பத்தியை அதிகரிக்க வைத்து இன்றைய வறுமையை ஒழிக்கவே, பசுமைப் புரட்சி தொடங்கிய உலகமயமாகும் உற்பத்திக்குப் போராடுவதாக மார்பு தட்டும் மூலதனத்தின் சொற்றொடர்கள் தான் இது. வறுமைக்குரிய காரணத்தை மூலதனம் மூடிமறைத்து, உலகமயமாதலில் மேலும் மக்களை வறுமைக்குள் தள்ளி வேட்டை ஆடும் அலங்கார வார்த்தைகளே இவை. இதன் கடைக் கொடியில் நின்றே, 8000 ஆண்டுகளுக்கு முன் நடந்த உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு விளக்கம் கூறப்படுகின்றது.
மக்கள் தொகையில் ஏற்பட்ட பெருக்கமே உற்பத்தி முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்தது எனின், கேலிக்குரியதாக மாறுவது பெண்ணியவாதமாகும். 8000 வருடங்களின் முன் பெண்களின் தலைமையிலான தனிச் சொத்துரிமையற்ற சமூக ஆட்சியே காணப்பட்டது. சில வேளைகளில் ஒரு சில விதிவிலக்குகள் இருந்து இருக்கலாம். ஆனால் ஆணாதிக்கச் சமூகமும் தனிச் சொத்துரிமையும் இருந்ததில்லை. பெண்கள் இனவிருத்தியின் அடிப்படையிலும், உணவை உற்பத்தி செய்து சமூகத்துக்குச் சமூகத் தேவையில் இருந்து பகிர்ந்துண்ண தலைமை தாங்கியதிலும் இருந்து தொடர்ந்து சமுதாயத்தின் மதிப்புக்குரிய மனித ஜீவியாகவே வாழ்ந்த காலமாகும்.
இந்தக் காலத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் தான் உற்பத்தியை மாற்றியது எனின், பெண்ணின் இனப்பெருக்க ஆற்றலை அடிப்படையாகக் கொண்டே, (அதிக குழந்தைகளைப் பெறுவதால்) பெண்ணை இழிவுக்குள்ளாக்கித் தன்னைத் தானே (பெண் சமூகத்துக்குத் தலைமை தாங்கியதால்) அதாளப் பாதாளத்துக்குத் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் ஆணாதிக்க வரலாறுக்கு முன் வரலாற்றில் அப்படி ஒரு போதும் நடந்ததில்லை. பெண்ணின் அதிக இனவிருத்திதான் அதிக மக்கள் தொகையைப் பெருக்குவதாகக் கூறி, உணவு கிடைப்பதைத் தடுத்த பெண்ணை அல்லது குழந்தையைப் பலியிட்டு இருக்க முடியும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆனால் ஏகாதிபத்தியப் பெண்ணியல்வாதம் இப்படி ப+ச்சூட்டிக் காட்டுவதன் உள் நோக்கம் தெளிவானதுதான்.
கடந்தகால உற்பத்தி முறைகள் இயற்கை கடந்து செயற்கையில் உணவை உற்பத்தி செய்த காலத்தில், உற்பத்தி கருவிகளின் முன்னேற்றம் தற்செயலாகவே எப்போதும் முக்கியமான பங்காற்றியுள்ளது. ஒவ்வொரு கண்டுபிடிப்பும் தேவையைப் ப+ர்த்தி செய்யும் ஒரு கருவியாக இருந்த போது, மனிதச் சமுதாயத்தில் தீர்க்கமான மாறுதல்கள் நடந்தன. உற்பத்தியில் கருவிகளை உபயோகிப்பதும், உழைப்பின் ஆற்றல் வளர்ச்சி பெற்ற போது, நிலையான சமூகங்கள் நிலைத்து வாழ்வது அதிகரித்தது. உணவைத் தேடும் வடிவம் பெருமளவில் சுற்றுப்புறம் சார்ந்து காணப்பட்டது. இதில் பல முன்னேற்றகரமான உழைப்புக் கருவிகள் உருவானதுடன், நவீனமாகியும் வந்தது.
இந்த நூல் ஆசிரியர் திரித்துக் காட்டுவது போல், மக்கள் தொகை பெருக்கம் உற்பத்தி வடிவத்தை மாற்றி அமைக்கவில்லை. அதிகரித்த மக்கள் தொகை பெருக்கம் உற்பத்தி வடிவத்தை மாற்றி அமைக்கவில்லை. அதிகரித்த மக்கள் தொகை எப்போதும் சமுதாய வளர்ச்சியின் நெம்புகோலாகவே இருந்தது. இரண்டு கைகள் இருந்த வரை சொந்த உடல் உழைப்பு ஆற்றல் சமூகச் சொத்தாக இருந்த வரை, மக்கள் தொகை என்பது சமூகத்தின் ஒரு பிரச்சினையாக என்றும் இருந்ததில்லை. தனிச் சொத்துரிமை தான், மற்றவனின் தேவையைச் சுரண்டியபடி மறுக்கும் போதே மக்கள் தொகை பற்றி கூச்சலிடுகின்றது. சமுதாயத்தின் சமூகத் தேவை எப்படி பகிரப்படுகின்றது என்பதில் இருந்தே, மக்கள் தொகை பற்றிய பிரச்சினை எழுகின்றது.
ஆணாதிக்க அமைப்புக்கு முந்தைய சமுதாயத்தின் தேவையை, சமூகத் தேவையில் இருந்து பெண்ணின் தலைமையில் பகிர்ந்த போது மக்கள் தொகை என்ற பிரச்சினையைச் சமூகம் உணர்வதற்கான எந்த அடிப்படையும் இருந்ததில்லை. இங்கு சுரண்டும் உபரி பற்றியோ, மற்றவனுக்கு மறுப்பது பற்றியோ யாரும் சிந்திக்கவே முடியாத உன்னதமான சமுதாயமாகத் திகழ்ந்தது. நவீன மூலதனம் மக்கள் தொகைப் பெருக்கம் என்று போலியாகவே உலக அறிவியலை ஏமாற்ற வைக்கும் நெருக்கடியை, அன்று ஒருக்காலும் அந்தச் சமூகம் சந்திக்கவில்லை. அது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. இந்தச் சமூகம் பெண்களின் தலைமையில் இருந்ததுடன், சமூகத் தேவையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு சமூகம் தான். தனிச் சொத்துரிமை உருவாகாத உன்னதமான காலக்கட்டம் அது.
அந்தச் சமுதாயத்தில் இருந்து மாறி வந்த கால ஓட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டு உழைப்பில் ஏற்பட்ட முன்னேற்றம், உற்பத்தியில் முன்பை விட அன்றாடத் தேவைகளுக்கு அதிகமானதை உருவாக்கியது. இந்த அதிக உணவு பெண்ணின் தலைமையில் சமூகத் தேவையைப் ப+ர்த்தி (உணவு இல்லாத காலத்தில் அல்லது சூழல் பாதிப்பு ஏற்படும் நெருக்கடிகளை எதிர் கொள்ளும் சமூகத் தேவையாகவே) செய்யும் பொதுச் சொத்தாகவே இருந்தது. இந்த மேலாதிக உணவைப் பாதுகாக்கும், பதப்படுத்தும் வடிவங்கள் மேலும் மேலும் மேம்பட்டன.
அதே நேரம் சுற்றுவட்டாரத்தில் வேட்டைக்கு உரிய மிருகங்கள் அருகி வந்தன. வேட்டை ஆடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்ததும், வேட்டையாடுவதில் இருந்து தப்பிக்க மிருகங்களின் இடப்பெயர்ச்சியும், பாரம்பரியமாக உணவு தேடும் ஆண்களின் வழிமுறைகளை நெருக்கடிக்கு உள்ளாகியது. ஆண்கள் பெண்களுடன் தரித்து நிற்கவும், பெண்ணின் உணவு உற்பத்தியில் முன்பைவிட நெருக்கடிக்குள்ளாகியது.
ஆண்கள் பெண்களுடன் தரித்து நிற்கவும், பெண்ணின் உணவு உற்பத்தியில் முன்பைவிட நெருக்கமாகச் சார்ந்து வாழத் தொடங்கிய ஆண், படிப்படியாக விவசாயத்தில் தனது உழைப்பைப் புகுத்தினான். இதனால் பலமான ஆணின் உடல் வலுவும், வேட்டையில் பயன்படுத்திய நவீன உத்திகளும், கண்டுபிடிப்புகளும் விவசாயத்தில் புகுந்த போது, விவசாயம் வேகமான வளர்ச்சியைச் சந்தித்தது. அத்துடன் விவசாய உற்பத்தி விரிந்த தளத்துக்கு மாறிச் சென்றது. ஆணின் வேட்டையாடும் திறன் இயல்பாக விவசாயத்தை அழிக்கும் மிருகத்துக்கு எதிரான தற்பாதுகாப்பு மற்றும் வேட்டை சார்ந்த தாக்குதல் திறன் சமுதாயத்தின் விவசாய உற்பத்தி முறையை விரிவாக்கியது. இருந்தபோதும் இந்த உணவு உற்பத்தி பெண்ணின் தலைமையில் இருந்ததுடன், அது சமூகத் தேவையில் இருந்து பகிரப்பட்டு நுகர்வதே சமூக நடைமுறையாக இருந்தது.
உழைப்புக் கருவிகளின் நவீனக் கண்டுபிடிப்பு இதனால் ஏற்பட்ட உற்பத்தி அதிகரிப்பும் இயல்பாக ஆணின் மதிப்பை அதிகரிக்க வைத்தது. ஆணின் உடல் வலிமை, ஆணின் நவீன உற்பத்திக் கருவிகள் ஆணைச் சமூகத்தில் மதிப்புக்குரிய ஒருவனாக மாற்றியது. உணவுத் தேவை என்பது முன்பை விட இலகுவாகவும், தேவையானதைப் பெறுவதையும் உறுதி செய்தது. இந்த நேரத்தில் வேட்டை முற்றாகக் கைவிடப்படவில்லை. மூன்று விதமான உழைப்பில் ஆண்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.
1. முற்றாக உழைப்பை விவசாயத்தில் ஈடுபடுத்தினர்.
2. முற்றாக உழைப்பை வேட்டையில் ஈடுபடுத்தினர்.
3. விவசாயத்திலும் வேட்டையிலுமாக உழைப்பை ஈடுபடுத்தினர்.
இங்கு விவசாயத்திலும் வேட்டையிலும் ஈடுபட்ட பிரிவே தனிச் சொத்துரிமைக்கான அடிப்படையை நிறுவியது. வேட்டையில் மிருகங்கள் அருகிய போது, அயல் சமூகத்திற்கு இடையில் வேட்டை பொருள் மீதான உரிமை மற்றும் எல்லைக் கோடுகள் நெருக்கடிக்கு உள்ளாகியது. இதனால் கொல்லுவது, யுத்தம் செய்வது ஒரு மரபாக வளர்ச்சி பெற்றது. முன்பு இப்படி நடக்கும் போது கொன்று விடுவதே சமூக நடைமுறை. பின்பு அதை வேட்டையிலும் விவசாயத்திலும் ஈடுபட்ட பிரிவு மாற்றி, தனது விவசாய உழைப்புக்குப் பயன்படுத்த அவர்களைக் கட்டாயப்படுத்தி அடிமைப்படுத்தி கொண்டு வருவது புதிய நடைமுறையானது.
மிருகங்களை அடைத்து பழக்கி உழைக்க வைக்கும் அனுபவம், அதில் இருந்து கிடைத்த தொடர்ச்சியான அனுபவம் கைதிகள் மேல் ஆழமான அடிமைத்தனத்தை நிறுவ முடிந்தது. சமுதாயத்தில் மனிதனை மிருகமாகக் கருதிய சமுதாய நடைமுறை இதற்குத் துணையாக நின்றது. சிந்திக்கும் ஆற்றல் உள்ள மிருகத்தின் (மனிதன்தான்) உழைப்பை உரிமை கொண்டாடியவனுக்கு உபரியை வழங்கியது. இந்த உபரியைச் சமூகத்தில் பொதுவாக்குவதா? அல்லது தனதாக்குவதா? என்ற போராட்டத்தில் தான், தனிச் சொத்துரிமை பரிணமிக்கின்றது.
இந்தப் புதிய உழைப்பு வடிவத்தைப் பெண்களும், விவசாயத்தில் ஈடுபட்ட ஆண்களும், வேட்டையில் ஈடுபட்ட ஆண்களும் நிராகரித்திருப்பர். மற்ற மனிதனை மிருகமாகவோ அல்லது தன் இனத்தைச் சேர்ந்த மனித இனமாகவோ கருதிய எல்லா நிலையிலும் புதிய சுரண்டல் வடிவம் சமுதாயத்துக்குப் புறம்பானதாக இருந்தால், இயற்கைக்கு எதிராக இருந்தால் கேள்விக்குள்ளாகியிருக்கும். அத்துடன் அடிமைகள் இரத்தப் பலிவாங்கலுடன் கூடிய போர்க்குணாம்சம், இனத்தின் இழப்புகளுக்கு அடிகொலுவானவாக இருந்திருக்கும். கைதி அல்லது அடிமை அங்கிருந்து தப்பிச் செல்கின்ற போது அல்லது பலிவாங்கும் போராட்டத்தில் எல்லாம், சமுதாயத்தின் உறுப்பினர்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாத நிகழ்வாக இருந்தது.
இதனால் சமூகம் அடிமை உழைப்புக்கு எதிரான உணர்வுகளால் அடிமையினதும் அதை வைத்திருந்தவனின் உழைப்பின் உற்பத்தியை ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கலாம். அடிமையை சுரண்டி வாழும் புதிய நடைமுறை சமுதாயத்தின் நடைமுறைக்கு எதிரானதாகக் காணப்பட்டதால் அவை தெளிவான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும். இது சமுதாய அமைப்புக்கே முற்றிலும் எதிரான புதிய நடைமுறை. ஆனால் வேட்டை, விவசாயத்தையும் கைக்கொண்ட பிரிவு அதீதமான உழைப்பில் உற்பத்தி திறனைக் கொண்ட பிரிவாக இருந்ததால், மனித இனத்தில் இரண்டாவது தடவையாக உழைப்பு பிரிவினைக்கு வித்திடுவதாக அமைந்தது.
இது எப்படி இருந்த போதும் தனிமனிதனின் குறிப்பான திறமை ஆண் சார்ந்த போது, அவனின் மரபைச் சமூகத்தின் முன் உயர்த்தியது. சமூகத்தின் உணவுத் தேவையில் தனிப்பட்ட ஆணின் அறிவு மற்றும் உழைப்பின் ஆற்றல் கருவியின் மதிப்புடன் உயரே எழுந்தது. அவனுக்கு ஏற்பட்ட மதிப்பு, அவனின் கடந்தகாலப் வர்க்கத்துடன், மேலும் தனிச் சொத்துரிமை கண்ணோட்டமாக மாற்றுகின்றது.
வேட்டையின் போது தனியாகவும் கூட்டாகவும் வேட்டையாடும் பொருளை, ஆண்கள் அங்கு வைத்தே உண்ணுகின்ற நெடுங்காலத்திய பழக்கம், தனிச்சொத்துரிமைக்குக் குறிப்பாக ஊக்கியாகத் தொழில்பட்டது. வேட்டையின் மிகுதியைக் கொண்டு வருவது அல்லது பாதுகாப்பு கருதி (பிற மிருகங்களின் தாக்குதலுக்கு அஞ்சி) கொண்டு வருவது போக, எப்போதும் ஆண் தனியாக வேட்டையின் போதே உண்டு வாழ்வது ஒரு சமூகப் பண்பாக இருந்தது. இந்தப் பண்பும், கண்ணோட்டமும் விவசாய உழைப்பிலும் கோருவதற்கு அடித்தளம் இட்டது.
விவசாயத்திலும் வேட்டையிலும் ஈடுபட்ட ஆண்கள், வேட்டைக்குச் செல்லும் போது மந்தைகளை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லும் நடைமுறை உருவானது. முன்பு பெண்கள் அருகில் இருந்த சுற்று வட்டார மேய்ச்சல் நிலம் சார்ந்து இருந்த போது, உணவுப் பற்றாக்குறையால் அதிக இனவிருத்தி மற்றும் பயன் குறைவாகவே இருந்தது. அதனால் இதை மாற்றிய ஒரு பகுதி ஆண்கள் விவசாயம் தவிர்ந்த நேரத்தில் மேய்ச்சலுக்கு வளர்ப்பு மிருகங்களை நகர்த்திய போது, அதிக பயனையும் மிருக விருத்திக்கும் வித்திட்டது. இது அதிக உபரிக்கு (தனிமனிதன் சார்ந்து) வழி அமைத்தது. உணவுத் தேவையின் பூர்த்தி மற்றும் சமுதாயச் செல்வத்தின் பங்கு அதிகரிக்க, அதிகரிக்க குறித்த ஆண்களின் செல்வாக்கு உயர்ந்தது.
விவசாயம், மேய்ச்சல், வேட்டை என மூன்று தளங்களில் ஆணின் நுகர்வு தனித்துவமாகத் தனியாக மாறுவது மேலும் நுட்பமடைந்தது. இதனால் பலமும், அறிவுத் திறனும், தொழில் நுட்பமும், அனுபவ அறிவும் கூட சிலரிடம் பிரிந்து அதிகரித்தது. மேய்ச்சல், வேட்டை என்ற இரண்டு தளங்களில் குழுக்கள் வேட்டையின் போது சிதறிச் செல்வது மேலும் வளர்ச்சியடைந்தது. இங்கு வேட்டை, மிருகப் பாதுகாப்பு என இரு உற்பத்தியிலும் பிரிவினை உருவானது. மிருகப் பாதுகாப்பின் போது மிருகங்களுடனான போராட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், அதன் பாதுகாக்கும் உரிமை சார்ந்து தனிச் சொத்துரிமை கண்ணோட்டம் தனிப்பட்ட நுகர்வு சார்ந்து துல்லியமாக வளர்ச்சி பெற்றது. இது தனிச்சொத்துரிமைக் கண்ணோட்டத்தை மேலும் ஆர்வமாக்கியது. விவசாயம் மற்றும் வேட்டையில் இருந்து. மேய்ச்சல் தனியாகப் பிரிவதற்கு இது மேலும் துணையாகியது.
மந்தை வளர்ப்பு அதிக ஓய்வையும், அதிக நுகர்வையும் கொடுத்த போது, சுற்றுச்சூழல் மேலான அறிவைச் சிலருக்குக் குறிப்பாகப் பெற வழிவகுத்தது. இது சமுதாயத்தில் மேலும் ஆழமான மதிப்பைக் குறித்த ஆண்களுக்கு வழங்கும் ஊடகமாகியது. மந்தை வளர்ப்பு அதிக உபரியைக் (தனிமனிதனுக்குக்) கொடுத்த போது, உழைப்பில் ஏற்பட்ட பிளவு அது சார்ந்து தனிச் சொத்துரிமையை உருவாக்கியது. இந்தத் தனிச்சொத்துரிமை ஆணின் செல்வாக்குக்கு வழிவகுத்தது.
உணவு மீதான ஆதிக்கத்தைத் தனிமனிதன் சார்ந்த ஆணின் உழைப்பு பெற, ஆணின் அதிகாரம் உருவானது. இப்படித் தான் முதன் முதலாக அதிகாரம் வித்திடப்பட்டது. சமுதாயத்தின் தேவை மறுக்கப்பட்ட நிலையில் சில ஆண்களிடம் சமுதாயம் அடிமையாவது தவிர்க்க முடியாத வகையில் உற்பத்தியின் பிளவு வழிகாட்டியது. சமூகத் தேவை மறுக்கப்பட்ட நிலையில், அதற்காகக் கையேந்தும் ஒரு பிரிவாகப் பெண்கள் மாறத் தொடங்கினர். பெண்ணின் உழைப்பு சமூகத்துக்குப் பகிரவேண்டி இருந்ததால், தேவை பூர்த்தி செய்யப்படாத நிலையில் பற்றாக்குறை இயல்பானதாகவும், இயற்கையானதாகவும் இருந்தது. இதனால் ஆணைச் சார்ந்து வாழ்வது ஒரு நியதியாக, அதுவே படிப்படியான ஆணாதிக்க அதிகாரமாகியது. இது தனிச்சொத்துரிமை அமைப்பாகியது.
இதற்கு நேர்மாறாக இந்த நூல் கூறுவதைப் பார்ப்போம். "பெண்கள் அவர்களது இயற்கையான நேசச் சக்தி என்ற முறையில், ஒருவகைப்பட்ட அனுதாப மாயச்சக்தியாக இயற்கையுடன் பணிபுரிந்து வந்தனர். ஆனால் இப்பொழுது ஆண்கள், அவர்கள் நிர்ணயித்ததை வழங்கும்படி செய்வதற்கு இயற்கையை வசப்படுத்தி, அதன் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டியிருந்தது. விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்ட புதிய வழிமுறைகளின் விளைவாக ஆண், பெண் பாத்திரங்களிலும் உறவு முறைகளிலும் அதே போன்று பாதிப்பு ஏற்படுத்தும் (பக்கம் - 82) என்று அடிப்படையற்ற ஒரு விவாதத்தை இப்படி இட்டுக் கட்டமுடிகின்றது.
பெண்களை அடிமைப்படுத்த ஆண்கள் திட்டமிட்டு இயற்கையை மாற்றி அமைத்தனர் என்ற கூற்று, பெண்ணின் இழி நிலையைத் திரிப்பதாகும். இயற்கை மீதான மனித உழைப்பு பெண்ணை அடிமைப்படுத்த உருவானவையல்ல. குரங்கில் இருந்து மனிதனாக மாறிய எல்லா படி நிலைகளிலும், அதன் எல்லா வளர்ச்சி படிநிலைகளிலும் இயற்கை மீதான உழைப்பின் பாத்திரம் தீர்க்கமான முறையில் பங்காற்றுகின்றது. எல்லா உழைப்பின் முன்னேற்றத்திலும், உழைப்புத் திறனிலும் விட இயற்கையை மாற்றுவதன் ஊடாக உணவைத் தேடுவது ஓர் இயங்கியலாக இருந்தது. இது இயங்கியலற்ற வகையில் திட்டமிட்ட வகையில் பெண்ணை அடிமைப்படுத்த ஆண்கள் உருவாக்கவில்லை. ஆண்கள் தமது உழைப்பின் வடிவத்தை மாற்றிய போது கூட, இது திட்டமிட்டு வசப்படுத்தி நடத்தப்படவில்லை.
பெண்கள் எப்படி இயற்கையைச் சார்ந்த இயற்கை மீது உழைத்தும், உழைப்பின் வடிவத்தை மாற்றிய படி வாழ்ந்தார்களோ, அதே போன்றே ஆண்களும் வாழ்ந்தார்கள். ஆண் பெண்ணை அடக்க வேண்டுமென்றோ, பெண் ஆணை அடக்க வேண்டுமென்றோ உள்ளாந்த உணர்வு எதுவுமே இருக்கவில்லை.
இந்த நூல் தொடர்ச்சியாகப் பல இடங்களில் ஆணைப் பெண் அடக்கி வாழ்ந்தாள் என்றும், ஆண் பெண்ணை அடக்கி ஆள விரும்பினான் என்றும் இட்டுக்கட்ட தீவிர முயற்சி எடுக்கின்றது. தனிச் சொத்துரிமை உருவாகும் முன்பு, அனைத்துக் காலங்களிலும் யாரும் யாரையும் அடக்கி ஆளவில்லை. அயல் குழுக்களுக்கிடையிலான மோதல், எப்போதும் மற்றவர்களை மற்றொரு மிருகமாக எண்ணியே நடைபெற்றது. அதனால் நரமாமிச உண்ணிகளாக நீடித்ததன் மர்மம் இதில் தான் அடங்கியுள்ளது.
தனிச் சொத்துரிமை தான் மனிதனை மனிதன் அடக்கும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் வித்திட்டது. அதாவது உழைப்பின் பயனைச் சமூகத்திடம் இருந்து சுரண்டுவது, பாதுகாப்பது என்ற கண்ணோட்டம் உருவானது. தனிச்சொத்துரிமை அமைப்பு உருவாகும் முன்பு ஆண் விவசாயத்தில் ஈடுபட்ட போதும், மந்தை வளர்ப்பை விரிவாக்கிய போதும் கூட, ஆண் - பெண் முரண்பாடு உருவாகவில்லை. உழைப்பில் ஏற்பட்ட சமூகக் கூட்டுத் தன்மை, ஆண் - பெண் உறவில் இறுக்கத்தையும், ஒன்றாக நெருங்கி வாழும் சமூகத் தன்மையையும் பலப்படுத்தியது. முன்பைவிட சமுதாயத்தின் கூட்டு மனப்பாங்கு மீள ஒருமுறை உயர்வான நிலையில் காணப்பட்டது. பெண் நிலையாகத் தரித்து (தனித்து) நிற்கவும், ஆண் மட்டும் வேட்டையாடச் செல்லும் முறை தொடங்கும் முன்பு, ஆணும் பெண்ணும் குழந்தைகளும் ஒன்றாகவே போராடி வாழ்ந்தனர்.
இந்தச் சமுதாயத்தில் ஏற்பட்ட சமுதாய உணர்வு, பின்னால் பெண் தரித்து (தனித்து) நிற்க ஆண் வேட்டைக்குச் சென்று வந்த போது ஒரு முரண் காணப்பட்டது. ஆனால் அது ஒரு சமூகப் பிளவாக ஆகவில்லை. ஆனால் ஆண் - பெண்களின் விவசாயத்தில் உதவி புரிய தன்னை நுழைத்து அதை உழைப்பாக மாற்றிய போது, ஆண் - பெண் உறவில் முன்பைவிட மிகவும் மகிழ்ச்சியான கூட்டான வாழ்வு உருவானது. முன்பு இருந்த காலங்களை விடவும் தேவையான உணவு மற்றும் பாதுகாப்பு கூடிய சமூகப் பண்பு உயர்ந்த சமூக மட்டத்தை அடைந்து விடவில்லை. இதை முற்று முழுதாகக் கம்யூனிச சமூகம் மட்டுமே சாதிக்கும்.
ஆண் மற்றும் பெண்ணின் கூட்டான ஒரே உழைப்பு, சமுதாயத்தின் மதிப்பை உயர்ந்த நிலையில் நகர்த்தியது. பின்னாலும், சம காலத்திலும் உழைப்பில் ஏற்பட்ட பிரிவினையும், அதனால் சமுதாயத்தின் தேவையை மறுப்பதில் தொடங்கிய உபரியின் அதிகரிப்புடன் கூடிய உழைப்பின் பிரிவினையும் வளர்ச்சி பெற்ற போதே சமுதாயப் பிளவுகள் ஒரு நிகழ்ச்சி நிரலாகியது. வேலைப் பிரிவினை சமூகத்தில் உருவான போது, அது சார்ந்து சிலருக்கு உணவுப் பற்றாக்குறை உழைப்பு வடிவத்துடனும், சூழலுடன் தொடர்புடையதாக உருவானது. இது பரஸ்பரம் பகிர்வது என்ற நிலை கடந்து, சிலர் தமது உழைப்பை அதன் விளைவையும் தனதாகக் கருதிய போது, உபரி மற்றவனின் உழைப்பைக் கடனாகவும், விலைக்கு வாங்கும் திறனையும் பெற்றது. இது மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டும் நிலைக்கு மாற்றியது. இது பெண்ணுக்கு மட்டுமின்றி சமுதாயத்திடம் இயற்கைக்கு மாறான அனைத்து அடிமைத்தனங்களுக்கும் அஸ்திவாரமாகியது.
விவசாயம் உழுது பயிரிடும் முறை ஆணின் அதிகாரத்தை உயர்த்தியது (பக்கம் - 86) என்ற கூற்று பாலியல் உள்ளடக்கத்தில் திரித்துக் காட்டுகின்றது. ஏர் உழவும் முறை ஆணின் அதிகாரத்தை உயர்த்தியதில்லை. இதை ஆண் மட்டும் சிறப்பாகக் கண்டுபிடித்தான் என்பது அடிப்படையற்ற, ஆதாரமற்ற வாதமாகும். பெண்தான் நிலத்தைப் பயன்படுத்தும் வடிவமாக உழுதலைக் கையாண்டாள். விவசாயத்துடன் தொடர்பற்று இருந்த ஆணால் இதைக் கற்பனையில் கூட நினைக்க முடியாது. பெண்ணின் உழைப்பில் ஆண் பங்குபற்ற (பங்குபெற) தொடங்கிய போது உழும் முறையை ஆண் மேம்படுத்தியிருக்கமுடியும். அவனின் வேட்டை சார்ந்த அறிவும் அது சார்ந்த கருவிகளின் அறிவும் இதற்குள் புகுத்தப்பட்டு இருக்கும்.
உழுதல் என்பது விவசாயத்தில் உற்பத்தி சார்ந்த கலையாக இருந்த போதும், இது உணவு உற்பத்தியை அதிகரிக்க வைக்கவில்லை. பல்வேறு சமுதாயத்தில் அண்மைக் காலம் வரை கூட, நிலத்தை உழுவது என்பது பூ என்ற தாயின் வயிற்றைக் குத்தி கிழிப்பதாகவே கருதப்பட்டது.
அமெரிக்கா கண்டமெங்கும் செவ்விந்தியத் தலைவர்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடிய போது உழுவதை எதிர்த்து நின்றனர். இன்று நவீன விவசாயத்தை எதிர்த்த போராட்டத்தில் இதுவும் ஓர் அம்சம். உழுவது ஏன்? உண்மையில் உழுவது என்பது இயற்கை வளத்தை அழிப்பதுடன், உணவுச் சங்கிலித் தொடர் நிகழ்ச்சியையும் அழிக்கின்றது. இதனால் பயிரின் வளர்ச்சி தடைப்படுகின்றது. நிலத்தில் பயிர்களும் உயிரினங்களும் உயிர்வாழும் மண்ணின் பதத்தை உருவாக்க உழுதல் அவசியமில்லை. இது விதிவிலக்கானது மட்டுமே.
ஆனால் உலகமயமாதல் உழுதலை ஒரு நிபந்தனையாக, உற்பத்தியின் திறனுடன் தொடர்பு படுத்துகின்றது. இதையே இந்தப் புத்தகம் காவி (அணைத்து) வருகின்றது. ஆனால் அன்றைய விவசாயி உழுதலை மண் பதப்படுத்தல் என்ற வகையில் விதிவிலக்காகவே கையாண்டான். இயற்கையில் வளப்படுத்த முடியாத நிலத்தின் மீது மட்டுமே இதைக் கையாண்டான். இது ஆண் அதிகாரத்தின் சின்னமாக எப்போதும் இருந்ததில்லை. வளப்படுத்துவதில் பெண்கள் கைதேர்ந்தவர்களாகவே இருந்தனர். அனுபவ ரீதியான அறிவு ஆணிடம் இதன் மேல் இருந்ததில்லை. வளப்படுத்தலுக்கு இசைவான சில கருவிகளை வேட்டை சார்ந்து ஆண் மேம்படுத்தியிருக்க முடியும். மேம்படுத்தலின் போதும் கூட அது ஆணின் அதிகாரத்தை உருவாக்கவில்லை. சமுதாயத்தின் தேவையை மறுத்த உபரி ஒன்று தான், அதன் மீதான தனிச் சொத்துரிமை தான் பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கியது.
மற்றொரு அபத்தமான வாதத்தைப் பார்ப்போம். "பழங்குடிகள், தானியப் பற்றாக்குறையினாலோ அல்லது பயிர்கள் சரியாக விளையாததினாலோ நிர்ப்பந்தமாக இடம் பெயர்ந்து செல்ல நேரிட்டது. இதனால் குழுக்கள் ஒன்றையெதிர்த்து மற்றொன்று போரிடவேண்டிய அவசியம் ஏற்பட்டது." (பக்கம் - 82) இடம் பெயர்ந்தால் தான் யுத்தங்கள் ஏற்பட்டது என்பது மற்றொரு திரிபாகும்.
ஆரம்பக் காலங்களில் ஒரு குழு மற்றொரு குழுவை ஒரு மிருகமாகவே கருதியது. தன்னையொத்த மற்றொரு குழுவைச் சோந்த ஒருவனைத் தனது குழுவாகக் கருதவில்லை. மாறாக மற்றொரு மிருகக் கூட்டமாகவே எண்ணினான். இதன் போதான மோதலின் முடிவில் கொன்றவரை உண்டு (தின்று) விடுவது சாதாரண நடைமுறையாகவே இருந்தது. மற்றொரு மிருகத்துடன் நடக்கும் மோதலில் சொந்த அணியைச் சோந்தவர்கள் இறக்கும் போது, அவர்களை உண்பதும் ஒரு நடைமுறைதான். உணவு பற்றாக்குறையின் போது முதிர்ந்த சொந்த இனத்தவர்களைக் கொன்றுவிடுவது சமூக நடைமுறையாக இருந்தது. இதை டார்வின் தனது ஆய்வில் நேரடியாகக் கண்டறிந்தவர். இப்படி பல.
அன்றாடம் நடந்த இந்த இடப் பெயர்ச்சியே உலக முழுக்க மனிதன் பரவுவதற்கு வித்திட்டது. இந்த இடப்பெயர்ச்சிகள்தான் சூழலுக்கு முகம் கொடுத்த போது மனித இனத்தின் வெளித் தோற்றத்தில் பல மாறுதல்கள் உருவானது. அறிவின் வளர்ச்சியில் பரந்த தன்மை உருவானது. உணவு பழக்க வழக்கங்கள் முதல் பண்பாடு - கலாச்சாரம் வரை அனைத்தும் வேறுபட்டன.
இதில் இருந்து நிலையாக மனிதன் வாழத் தொடங்கி, உபரி என்ற தனிச் சொத்துரிமை ஏற்பட்ட காலத்தில் நடைபெற்ற இடப்பெயர்ச்சிகள், மற்ற குழுக்களின் வாழ்விடங்களை அபகரிப்பதாகவும் (அதிகரிப்பதாகவும்) தனிச்சொத்துக்களைக் கைப்பற்றுவதாகவுமே இருந்தது. இது வர்க்கப் போராட்டமாகவே இருந்தது. இது உணவுப் பற்றாக்குறையால் நடக்கவில்லை. தானியப் பற்றாக்குறையால் ஏற்பட்டவை விதிவிலக்கு மட்டுமேயாகும். இங்கு கிடைப்பதைப் பகிர்ந்து உண்ணும் கோட்பாடு கடைப்பிடிக்கப்படவில்லை. தானியத்தைப் பெறுவதற்கென்று நடக்கும் யுத்தம் எதிரி மனிதனுக்கு மறுக்கும் கண்ணோட்டம் சார்ந்தாக இருக்கும் போதே, அது தனிச்சொத்துரிமை கண்ணோட்டம் சார்ந்து தான் நடக்கின்றது. அதாவது தானியப் பற்றாக்குறையில் யுத்தம் நடந்தது எனின், தானியத்தைக் கைப்பற்றிய போது அது என்றுமே சமுதாயத்தின் தேவைக்குப் பகிரப்படவில்லை. மாறாக மற்ற சமுதாயங்களை அடிமைப்படுத்த, சுரண்டலை அடிப்படையைக் கொண்ட இடப்பெயர்ச்சிகள் பல்வேறு போராட்டங்கள் போன்று ஒரு வடிவம் மட்டுமேயாகும்.
யுத்தங்களின் வரலாறு என்றும் தனிச் சொத்துரிமை அமைப்பில் எப்போதும், வர்க்கப் போராட்டமாகவே இருந்தது இது அடிமை உடைமை என்ற பொருளாதார அடிப்படையைக் கொண்டிருந்தது. இது வெறும் உணவுக்கான போராட்டமாக இருக்கவில்லை. உணவு அதில் ஓர் அங்கம் மட்டுமேயாகும். யுத்தங்களின் அடிப்படையிலான உள்ளடக்கத்தை, தன்மையை மறுத்து ஒரு கூற்றை மட்டும் முதன்மைப்படுத்திக் காட்டுவது இன்றைய யுத்தங்கள் வரை உள்ள பொதுவான திரிபாக உள்ளது. இது போன்றே அன்றைய இடப்பெயர்ச்சி மற்றும் பொதுவான யுத்தங்களையும் நாம் காணமுடியும்.
இடப்பெயர்ச்சியை விளைச்சலின் இன்மையிலும், பற்றாக்குறையிலும் மட்டும் நிகழ்ந்தது என்பது நுட்பமான திரிபாகும். இடப்பெயர்ச்சியில் இதுவும் ஓர் அங்கம் மட்டுமேயாகும். இடப் பெயர்ச்சி சூழலில் சார்ந்து, மனித விரிவாக்கம் சார்ந்து, உள் மோதல் சார்ந்து, மிருகங்களின் அச்சுறுத்தல் சார்ந்து, புதிய மேய்ச்சல் நிலங்களைத் தேடியும், வளமான பூமியைத் தேடியும் நாடோடி வாழ்க்கையைச் சார்ந்தும், அடிமைகளைக் கைப்பற்றவும், புதிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கவும், ஒரு குழு ஒரு பிரதேசத்தில் ஊடுருவும் போது அதைக் கைவிட்டு செல்லல் என எண்ணற்ற வழிகளில் இடப்பெயர்ச்சிகள் நடந்தன. ஆனால் இவை அனைத்தும் யுத்தங்களைச் சந்திக்கவில்லை. மாறாக மனிதர்களற்ற, யுத்தமற்ற சூனிய பிரதேசத்திலும், மற்ற குழுக்களின் வரவேற்புடனும் நடந்த இடப்பெயர்ச்சிகளின் போது விதிவிலக்காகவே யுத்தங்கள் நடந்தன.
"ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் நாடோடிகளாகத் திரிந்து சென்றதிலும், போர் செய்ய வேண்டி நேரிட்டதிலும் ஆண்களுக்கே அனுகூலம் ஏற்பட்டது. ஏனெனின் அவர்கள் பெண்களைக் காட்டிலும் மேலான உடல் வலிமை கொண்டிருந்தனர்" (பக்கம் - 83)
நாடோடிகளாக அலைந்து திரிந்ததாலும், போர் செய்ய வேண்டி இருந்ததாலும், ஆண்கள் உடல் ரீதியான வலுவைப் பெற்றதால் ஆணுக்கு அனுகூலம் ஏற்பட்டது என்பது தவறான வாதம். உடல் வலிமை அனுகூலத்தை ஏற்படுத்தவில்லை. போர் மற்றும் நாடோடி வாழ்வில் மற்ற குழுக்கள் மீதான ஆதிக்கம் அல்லது சூறையாடல் சுரண்டிக் கொள்ளையடிப்பதைத் தமது நோக்கமாகக் கொண்டிருந்தது. இங்கு வலிமை தனிச்சொத்துரிமை சார்ந்து செயல்படுகின்றதே இங்குள்ள முக்கியமான அடிப்படையாகும். இதனால் தான் பெண்ணைக் காட்டிலும் ஆண் அதிகமானதைச் சூறையாட முடிந்ததே ஒழிய சொந்த வலிமையால் அல்ல.
ஆண்களின் உடல் வலிமை பெண்ணை விட அதிகமாகக் காணப்படுவதற்கு அடிப்படையான காரணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட முதல் வேலைப் பிரிவினைதான் ஆகும். வேட்டைக் கருவிகள் நவீனப்பட்டதால் வேட்டையும் தற்பாதுகாப்பும் முன்பைவிட இலகுவானதாக, பெண் இயற்கை சார்ந்து தாய்மை மற்றும் குழந்தை பராமரிப்பில் தனித்து நிற்கத் தொடங்கினாள். ஆண் வேட்டைக்குச் சென்று வருவது மனித வரலாற்றில் நீண்ட காலக்கட்டமாக நீடித்தது. இந்தக் காலத்தில் வேட்டையாடும் இடத்தில் முதல் உணவை ஆண் உண்ணத் தொடங்கினான். அதிக இறைச்சியைப் பெற்று, அதிக உடல் உழைப்பையும் ஆண் செய்யத் தொடங்கிய போது, அவனின் உடல் பலம் பெண்ணை விட சீராக அதிகரித்தது. பெண்ணின் தனித்து நின்ற சடுதியான மாற்றமும், உழைப்பின் புதிய வடிவமும் அதன் எல்லை குறைவாக இருந்ததுடன், இறைச்சி உண்பது குறைந்தது. ஆண்களின் வேட்டையின் போது தான் உண்டது போக, மேலதிகமான இறைச்சி கிடைக்காவிட்டால் பெண் பட்டினி கிடப்பது என்பது ஒரு நடைமுறையாக இருந்தது. அத்துடன் ஆண் காட்டில் இயற்கையான தாவர உணவைப் பெறும் பூர்த்தியின் தன்மை, பெண்ணுக்கு மேலும் உடல் வளர்ச்சியில் சடுதியான இழப்பை ஏற்படுத்தியது.
ஆண் முதலில் கிடைக்கும் இயற்கை உணவு முதல் சிறு வேட்டையைக் கூட உண்டு விடுவான். ஆனால் அதைக் கட்டாயம் பெண்ணுக்குக் கொண்டு வரவேண்டிய அவசியமில்லை. பெண் பட்டினியில் தவித்தாள். இதில் இருந்தே பெண் சுற்றுச்சூழலை ஆராய்ந்து உணவைக் கண்டறிந்துடன், விவசாய உற்பத்திக்கான முதல் கால்களை எடுத்து வைத்தாள். இந்தக் காலக்கட்டம் நீண்ட நெடிய போராட்டமாக இருந்தது. ஆண் அதிகமான உணவைப் பெற்றதால் பெண்ணை விட உடல் வலிமையைப் பெற்றான்.
மரத்தில் இருந்து இறங்கிய மனிதக் குரங்கு இறைச்சியை எப்போது உண்ணத் தொடங்கியதோ, அதில் இருந்தே இன்றைய மனிதன் பரிணமிக்க தேவையான வலுவைப் பெற்றான். மூளை விரைவாக வளர்ச்சி பெற்றது. இது போன்றே உழைப்பில் ஏற்பட்ட ஆண் - பெண் பிளவில் ஆண் மேலும் வலுப்பெறுவதற்கான அடிப்படையைப் பெற்றான். பெண் குழந்தையைப் பெற்று, உணவைப் பகிர்ந்து குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய தன்மை அனைத்தும் இணைந்த போது, பெண்ணின் பலத்தை ஆணுக்கு நிகராகக் கட்டிக்காக்க முடியவில்லை. இதில் இருந்தே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மூளையின் பருமனில் கூட வேறுபாடு தோன்றியது. அதிகமான இறைச்சி உடல் வலுவையும் உற்பத்தித் திறனையும் கொடுத்த போது ஆணின் சிந்தனை ஆற்றல் விரிவடைந்து மூளை வளர்ச்சி பெற்றது. இருந்த போதும் ஆண் - பெண் உறவில் சமுதாயம் விரிவாகியதால் இது ஓர் உயிரியல் பிளவாக வளரவில்லை. அத்துடன் சமுதாயத்தின் கூட்டு வாழ்வியல் இதைச் சமச்சீராகத் தலைமுறை கடந்த போதும் உயிரியல் அடிப்படையில் இயங்கியலாக்கியது. ஆணாதிக்க அமைப்பில் பெண் ஓர் உயிரியல் கூறு என்ற ரீதியில், ஒரு பெண்ணை அடக்கி ஒடுக்கி கூனிக் குறுக வைத்ததன் மூலம், பெண்ணின் பண்புக் கூறுகளில் இருந்து, மேலும் கூர்மையாகப் பெண் பலவீனப்பட்டாள். இவை மனித உடலியல் உயிர் தொகுதியில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. ஆணின் பலத்தைப் பெண் பெற முடியுமா எனின் நிச்சயமாக முடியும். ஆணாதிக்கமற்ற அமைப்பின் நீண்ட வளர்ச்சி கட்டத்தில் மட்டும் இது சாத்தியமானது.
பெண்ணின் அடிமைத்தனத்தையும், மக்களின் அடிமை வாழ்வையும் பலம் சார்ந்து ஏற்பட்டதாக திரித்துக் காட்டும் வடிவத்தை மேலும் ஆராய்வோம். "பலத்தை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய மோதல்கள் தவிர்க்க முடியாமல் ஆதிக்கம் செலுத்தும் குழுக்களையும் - பணிந்து போன குழுக்களையும், வெற்றியடைந்தவர்களையும் - தோல்வியடைந்தவர்களையும் தோற்றுவித்தது. இது ஏற்றதாழ்வு நிலையையும், அடிமைத்தனத்தையும் அடிமைப்படுத்துவதையும் நிர்ணயித்தது. இந்தச் சூழ்நிலையில் பெண்களால் இந்தக் கட்டமைப்பிலிருந்து தப்பித்துச் செல்ல முடியவில்லை. உழுமுனைக்கும் குத்துவாக்கும் இடையிலான வன்முறையில் சிக்கி கொண்ட பெண்கள் தோல்வி காண நேரிட்டது." (பக்கம் - 83)
பலத்தை அடிப்படையாகக் கொண்ட யுத்தமே ஏற்றத்தாழ்வுகளையும், அடிமைத்தனத்தையும், அடிமைப்படுத்துவதையும் உருவாக்கியது என்பது மனித வரலாற்றின் மற்றொரு திரிபாகும். பலம் எப்போதும் அடிமைப்படுத்துதலையும் ஏற்றத்தாழ்வையும் மனித வரலாற்றில் உருவாக்கவில்லை. இதற்கு பலம் குறிப்பாகச் செயலாற்றினவே ஒழிய, இதுவே (பலமே) அனைத்துமல்ல. ஏன் ஏற்றத்தாழ்வையும், அடிமைப்படுத்துதலையும் மனிதன் மற்றொரு மனிதன் மேல் செய்தான் என்ற கேள்வியே, இந்த ஆணின் வலிமைக் கோட்பாட்டைத் தகர்த்துவிடும்.
ஏற்றத்தாழ்வும், அடிமைத்தனமும் எதைச் செய்தது? தாழ்வாகப் பட்டவர்களின், அடிமையாக்கப்பட்டவர்களின் உழைப்பைச் சுரண்டுவதையே தனது குறிக்கோளாகக் கொண்டது, சுரண்டுவதற்காகவே மக்களை அடிமைப்படுத்தினர். அடிமைப்படுத்துவதற்காக யுத்தத்தை நடத்தினர். யுத்தத்தை நடத்துவதற்காகப் பலத்தைப் பெருக்கினர். பலத்தைப் பெருக்க முறையான போர் படையையும், நவீனக் கருவிகளையும், சதிகளையும் திட்டமிட்டனர். இதற்காக மக்களை மந்தையாக்கினர். ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் வகையில் ஒரு நீடித்த சங்கிலித் தொடராக நிகழ்ச்சிகள் தொடர்கின்றது. இவை அனைத்தும் மனிதனின் உழைப்பைச் சுரண்டுவதன் மூலம், அவனின் சமூகத் தேவையை மறுக்கும் கொள்கையை அடிப்படையாகக் கொள்கின்றது. பலம் இருந்ததால் மோதல்கள் நடக்கவில்லை.
முதல் கூற்றில் இடப்பெயர்ச்சியால் மோதல் நிகழ்ந்தது என்பதும், பின்னால் பலம் இருந்ததால் மோதல் நிகழ்ந்தது என்பதும் ஒன்றுக்கு ஒன்று முரணான எடுகோள்கள். அதாவது சுயமுரண்பாடு) இந்த மோதல் தான் பெண்ணையும் மீளமுடியாதபடி அடிமைப்படுத்தியது என்பது மற்றொரு அபத்தமாகும். வலிமை தான் பெண்ணை அடக்கியது என்பது கற்பனாவாதமாகும்.
உண்மையில் பெண்ணை அடக்கிய போது தான் வலிமை அதில் பங்காற்றியது. பெண்ணை அடக்குதல் அல்லது ஒடுக்குதல் என்ற நடைமுறையில்தான் வலிமை அல்லது பலம் என்ற கருத்து தோன்றுகிறது. வலிமை இருந்ததால் பெண் அடக்கப்படவில்லை. வலிமை இருந்ததால் பெண் அடிமையானாள் என்பது நகைப்புக்குரிய ஓர் எடுகோள் ஆகும். ஆண் சமுதாயத்தின் தேவையை மறுத்து உபரியை உற்பத்தி செய்து அதைத் தனது சொத்தாக்கிய பின்பே, பெண் அந்த உபரியை தனிச்சொத்தைச் சார்ந்து வாழும் ஒரு நிலை உருவான போதே பெண் ஆணுக்கு அடிமையானாள். பெண் ஆணிடம் உணவுக்குக் கையேந்தும் அவலம் இதிலிருந்துதான் உருவானது.
இந்தத் தனிச்சொத்துரிமையைப் பாதுகாத்த ஆண், பெண்ணை அடிமைப்படுத்தும் பல்வேறு வழிகளில் வலிமையும் ஒன்று. பெண் அடிமையான போது, ஆண் பெண்ணின் உழைப்பையும் சுரண்டத் தொடங்குகின்றான். முதல் வர்க்கப் போராட்டம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் தான் தொடங்குகின்றது. இது கடுமையான போராட்டமாக விடாப்பிடியான வடிவில் நடந்தது, நடக்கின்றது.
இதனால் பெண்ணுக்கு எதிரான ஆணாதிக்க அமைப்பு விடாப்பிடியான போராட்டத்தை நடத்தியது, நடத்துகின்றது. பெண்ணின் எதிர்ப்புகளை ஒடுக்க இடைவிடாத ஒடுக்குமுறைகளைப் பண்பாட்டுத் துறையில் இருந்து உடல் ரீதியான கட்டுப்பாடு வரை கையாளப்பட்டது, கையாளப்படுகின்றது. தனிப்பட்ட குல வழிபாடுகள் தொடங்கி சிறு வழிபாடுகள் மேல் உருவான மதங்கள் இரண்டு பிரதான விடயம் சார்ந்து, தன்னைத் தத்துவார்த்த சமூகச் சட்டப் புத்தகமாக்கியது. ஆணுக்கு அடங்கிப் போகும் பெண்ணின் அடிமைத்தனமும், (ஆணின் சுரண்டலுக்கு எதிர்ப்பற்று கீழ்படிதல்), சமூகச் சொத்துரிமையில் இருந்த, தனிச் சொத்துரிமையைப் பாதுகாக்கும் போராட்டமும் என்ற இரு தளங்களில் தான் மதங்கள் தோன்றின. இதை விளக்குவதே மதத்தின் பணியாக மட்டும் இருக்கவில்லை. இதை மீறுவதற்கு எதிரான தண்டனைச் சட்டத்தையும், என்ன தண்டனை என்பதையும் கூட வரையறை செய்தது.
மனித வாழ்வில் பெண்ணை அடிமைப்படுத்தியதும், பெண்ணின் தலைமையில் இருந்த சமூகச் சொத்துரிமையைத் தனிச் சொத்துரிமையாக்கிய போதும் இருந்த கடுமையான எதிர்ப்பு மற்றும் அராஜகத்தை ஒழுங்குபடுத்தவே மதத் தத்துவங்கள் உருவானது. நடந்த வர்க்கப் போராட்டத்தின் பிரதிவாதங்களே, சொத்துரிமை சார்ந்து உருவான நிலப்பிரபுத்துவ வர்க்கம் சார்ந்து மதங்கள் உருவானது. இது தனிச் சொத்துரிமை சார்ந்து உருவான பெண்ணடிமைத்தனத்தையும். தனிச் சொத்துரிமையையும் பாதுகாக்கும் வகையில் விரிவாக்கப்பட்டது சட்டத்தொகுப்பே மதத் தத்துவமாகும். முதலாளித்துவம் உருவாகாத காலக்கட்டம் எல்லாம், மதங்களின் சட்டங்களே மனித ஒழுக்கத்தை வரையறை செய்ததுடன், ஆளும் வர்க்கத் தனிச் சொத்துரிமை அதிகாரத்தை ஒழுங்குபடுத்தியது. ஆணாதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கும், தனிச் சொத்துரிமையை மையப்படுத்துவதற்கும் எதிராக இருந்த சிறு வழிபாடுகளை மதம் அழித்தது. கடுமையான வர்க்கப் போராட்டமாக நீடித்த இக்காலக்கட்டம், இன்று வரை சில பிரதேசங்களில் குறிப்பான போராட்டமாக உள்ளது. நிலப்பிரபுத்துவ அமைப்புக்கே உரிய வகையில் மதம் கோலோச்சியது. அதிகாரம் நிலப்பிரபுக்களிடமும், அதை மையப்படுத்திய அரசிடமும் நிலவிய போது, மதத் தலைவர்களே மக்களுக்கு எதிரான சட்ட ஒழுங்கின் நீதிபதிகளாக விளங்கினர்.
இதற்கு எதிராக வைக்கும் கருத்தைப் பார்ப்போம் "ஏக கடவுள் கோட்பாடுகளும் ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் துணை செய்து முழுமையாக்குகின்ற இரு எதிர் நிலைகளில் உருவாக்கப்பட்டன." (பக்கம் - 142) என்ற வாதம் முற்றாகத் தவறானது.
இங்கு ஒருவருக்கு ஒருவர் துணை செய்கின்ற அடிப்படையில் வர்க்கங்களையும், மனிதப் பிளவுகளையும் வர்க்கச் சமுதாயம் உருவாக்கவில்லை. முதல் வர்க்க ஒடுக்குமுறையாகத் தோன்றிய பெண்ணடிமைத்தனமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மாறாக ஆண் அல்லது பெண்ணாக இருக்கலாம் அல்லது மற்ற சமுதாயப் பிளவுகளாக இருக்கலாம். அனைத்தும் ஒரு பிரிவினருக்கு அடங்கி அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. அதை இயல்பான விடயமாக்குவதும், பக்தியின் பெயரில் இணங்கி போவதைக் கோருவதாகவும் இருந்தது. இதை மீறிய எல்லாத் தருணங்களிலும், வன்முறை கையாளப்பட்டு அடங்கி போகக் கோரப்பட்டது.
இன்றைய ஜனநாயகம் போல் மதம் துணை செய்வது போன்ற தோற்றத்தைக் கொடுப்பதில், பண்பாட்டுக் கலாச்சார உள்ளடக்கத்தில் தீவிரமான கோட்பாடுகளை, கட்டுக் கதைகளைக் காவியமாக்கியது. இந்த எல்லையைத் தாண்டவில்லை. ஒருவருக்கு ஒருவர் துணை என்ற சொல்லடுக்கள் மீது, தன்னை அமைப்பாக்கிய நிலப்பிரபுத்துவ அமைப்பும், சட்டத் தொகுதியான மதமும் அல்லது இதை மீறிய போதும் இதை மறுத்த போதும் இன்றைய முதலாளித்துவ ஜனநாயகம் போல் வன்முறையைப் பரிசளித்தது.
இதில் மற்றொரு வாதமாக ஒருவருக்கு ஒருவர் துணை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. இங்கு உருவாக்கப்பட்டது என்பது கருத்துமுதல்வாதமாகும். யாரும் சமூகத்துக்கு வெளியில் எதையும் கற்பனையில் உருவாக்க முடியாது. ஆணின் கையில் தனிச் சொத்துரிமை உருவாகி அதுவே சில ஆண்களிடம் குவிந்த போதும், சொத்தற்றுப் போன பெண்கள் மற்றும் ஆண்களை அடக்கி ஆள உருவான சமூகப் பொருளாதார அமைப்பின் மேல் தான் மதங்கள் உருவானதே ஒழிய உருவாக்கப்பட்டவை அல்ல.
முதலில் பொருள் தோன்றி விடுகின்றது. இதன் மேல் உருவான மதம் கருத்துமுதல்வாதத்தால் தன்னை ஆயுதபாணியாக்கியது. பொருளை மறுத்து தன்னை ஆயுதபாணியாக்கும் போது, இருக்கும் சமூகப் பொருளாதார உறவின் அடிமைத்தனத்தின் பொருளாதாரக் கூற்றை அங்கீகரித்து அதைச் சட்டத் தொகுப்பாக்குகின்றது. உண்மையில் மதம் சமூக அடிமைத்தனத்தை நியாயப்படுத்த, ஓர் அடிமைக் கோட்பாட்டைப் பரந்துபட்ட மக்கள் முன் திணிக்கின்றது.
ஆணாதிக்க அமைப்பு எப்படி உருவானது என்பதைத் திரித்து புரட்டுகின்ற வரிகளைப் பார்ப்போம். ஆண் தனது விந்து கருவுறுவதற்கு அவசியம் என உணர்ந்த நிகழ்வு ஆணாதிக்கத்துக்கான ஒரு புரட்சியாக மாறியது. (பக்கம்-73)
பெண்களைக் கருவுறச் செய்வதற்கு ஓர் ஆண் மட்டும் தேவை என்ற உணரப்பட்டவுடனே, ஒரே ஒரு ஆண் என்ற கருத்தை நிலைநாட்டுவதற்கு அது ஒரு சிறிய நடவடிக்கையாயிற்று." (பக்கம்-90)
"எழுச்சியுற்று வந்த லிங்க வழிபாட்டாளர்களின் முயற்சிகள் அதிகமாக அதிகமாக கூடுதல்வகை வளமுள்ள மற்றும் தொடர்ந்த எதிர்ப்பையும் அவன் தோற்றுவித்தான்." (பக்கம்-96)
கி.மு. 1500 ஆம் ஆண்டுகளில் லிங்க உருவ வழிபாடு உலகெங்கும் பரவியபோது பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகரித்த எதார்த்தத்தை மறுக்கமுடியாது." (பக்கம்-104)
லிங்க வழிபாடு எப்படி தோன்றியது என்ற அடிப்படைப் பொருளை மறுத்து, லிங்க வழிபாடு உருவான போதே பெண்ணின் அடிமைத்தனம் முதலில் தோன்றியது என்பது அர்த்தமற்ற வாதமாகும். ஒரே ஒரு ஆண் என்ற கண்ணோட்டமும், ஆணுக்குக் கருவுறச் செய்யும் ஆற்றல் உண்டு என தெரிந்தவுடன் ஆணாதிக்கம் உருவானது என்பது அடிப்படையான தர்க்க ரீதியான விளக்கமல்ல. பெண்ணைக் கருத்தரிக்க வைக்கும் ஆற்றல் ஆணுக்கு உண்டு என்பதால், ஒரே ஒரு ஆண் என்ற ஆணாதிக்கம் உருவானதாகக் கூறுவது இயங்கியல் தன்மையை இழக்கின்றது.
தனிச் சொத்துரிமை அமைப்புதான், ஆணின் விந்தும் கருத்தரிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இடித்துரைக்கின்றது. இது எப்படி எனப் பார்ப்போம். பெண்ணின் தலைமையில் சமூகம் இருந்த போது, வரைமுறையற்ற புணர்ச்சியே (கால ஓட்டத்தில் மிக நெருங்கிய உறவுகளைத் தவிர்த்து) நிலவியது. பெண் கருத்தரித்தபடியே இருந்தாள். இது எப்படி நிகழ்கின்றது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. நம்பிக்கை மற்றும் இயற்கை மீதான காரணத்துடன் தொடர்புபடுத்திய புனைவுகள் எல்லாம் ஓர் ஆணின் விந்து பெண்ணைக் கருவடைய வைக்கத் தேவை என்பதை அனுபவ ரீதியாக, பொருள் ரீதியாகப் (உடலுறவு தான் அதை உருவாக்குகின்றது.) புரிந்து கொள்ள எந்த நடைமுறை வழியும் இருக்கவில்லை.
தனிப்பட்ட பெண் தனிப்பட்ட ஆணின் சொத்தாக அல்லது தனிப்பட்ட ஆண் தனிப்பட்ட பெண்ணின் சொத்தாக உருவாகாத உலக வரலாற்றில், ஆணின் விந்து கருத்தரிப்பில் முக்கியமான பங்காற்றும் நிபந்தனை என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் தனிச்சொத்துரிமை அமைப்பு உருவான போது, தனிப்பட்ட பெண் ஆணின் தனிச் சொத்துரிமை அமைப்பு சார்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டாள். இதனால் மட்டும் பெண் ஓர் ஆணைக் காதலிக்கவும், ஓர் ஆணைத் தேர்ந்தெடுக்கவும் செய்தாள். இது பின்னால் பெண்ணின் தேர்வை மறுத்து ஆணின் தேர்வாக மாறியது. பெண் அடிமையாக்கப்பட்டாள். இந்தக் காலத்தில்தான் குழந்தை பிறப்பில் ஆண் விந்தின் அவசியத்தை உணரக் கூடிய, நடைமுறையான அனுபவ ரீதியான அறிவு உருவானது. இது கூட விஞ்ஞான ரீதியானவை அல்ல. இதில் இருந்து தான் கற்பு பற்றிய கோட்பாடும், ஆணின் வாரிசுரிமை பற்றிய அடிப்படையான சமூக அமைப்பும் உருவாகின்றது.
பெண் ஆணின் சொந்த அடிமையான போது, பாலியல் உறவுகள் விலக்குகளுக்குள்ளாகிய போதே, கருத்தரிக்கும் ஆற்றல் ஆண் இன்றி பெண்ணுக்குச் சாத்தியமில்லை என்பதை எதார்த்தம் அனுபவ ரீதியாகக் கற்றுக் கொடுத்தது. ஒரே ஒரு ஆண் என்பது கருவுறச் செய்வதற்குத் தேவை என்பது, தனிச்சொத்துரிமையின் தொடர்ச்சி வாரிசுரிமை மீதே கோரப்படுகின்றது. அதாவது பெண் அடிமைத்தனம் உருவான பின்பே கருத்தரிக்கும் ஆற்றல் பெண்ணுக்குச் சுயமாக இல்லை என்பது சமூகத்துக்குத் தெளிவாகின்றது. இதில் இருந்தே வாரிசுரிமையைப் பெண்ணின் தூய்மை மீது கோருவதும், கற்பு பற்றிய கோட்பாடுகளும் எழுகின்றதே ஒழிய வெற்றிடத்தில் இருந்து அல்ல. அத்துடன் இதில் இருந்து லிங்க வழிபாடு தோன்றவில்லை.
லிங்க வழிபாடு ஏன் தோன்றியது தாய் வழிபாடு என்ன என்பதைச் சரியாகப் புரிந்தாலே லிங்க வழிபாட்டில் உள்ள அடிப்படையைப் புரிந்து கொள்ளமுடியும். தாயே எல்லாம் படைக்கின்றாள். உணவு அளிக்கின்றாள். தலைமுறையை உருவாக்குகின்றாள் என்ற எதார்த்தத்தின் மேல் உருவானது. மனித அறிவியலின் எல்லை எதார்த்தமாக உள்ள போது, அதன் ஒரு பிம்பமே வழிபாட்டுக்கு அல்லது மதிப்புக்கு உரியதாகின்றது. பின்னால் பெண் விவசாயத்தின் மூலம் அளித்த உணவால், இயற்கையைத் தாயாகப் போற்றுவதும், வழிபடுவதும் உயர்ந்த கட்டத்தை அடைந்தது.
இந்த இயற்கை சார்ந்த பெண்ணின் உழைப்பில், ஆணின் உழைப்பு புகுந்த போது ஏற்பட்ட வேலை பிரிவினையுடன் (மந்தை வளர்ப்பு) உருவான தனிச் சொத்துரிமை ஆணின் சொத்தான போது, தனிப்பட்ட ஆண் சமூகத்துக்கு உணவு வழங்குபவனாகத் திரிபடைந்தது. தனிச் சொத்துரிமை அமைப்பில் ஆண் முதன்மையானவனாக மாறியதால், அவனை வழிபடுவது என்ற புதிய போக்கு சமூகப் போக்காக வளர்ச்சி பெற்றது. தாய் வழிபாடு திரிபடைந்து தந்தை வழிபாடு உருவானது. இதனால் லிங்க வழிபாடு கோலோச்சியது.
சொத்துரிமை சார்ந்து, பெண்களை ஆண்கள் பாலியல் ரீதியாகக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சியும், வரைமுறையற்ற காட்டுமிராண்டித்தனமான புணர்ச்சியும் மேலும் துல்லியமாகப் பெண்ணை இழிவுக்குள்ளாக்கியது. இதனால் பெண்கள் ஓர் ஆணைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளும் பரஸ்பர காதல், இருவரும் தாம் பரஸ்பரம் நெருங்கிய போது ஒற்றைக் குடும்ப அமைப்பு வளர்ச்சி பெற்றது. இது தனிச் சொத்துரிமையிலான காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக, சொத்து சார்ந்த வரைமுறையற்ற புணர்ச்சிக்கு எதிராகப் பெண்ணே தேர்வு செய்தாள். இதன் மூலம் மனிதன் மற்றொரு கண்டுபிடிப்பை அனுபவ ரீதியாகப் புரிந்து கொள்ள முடிந்தது. பாலியல் உறவு தொடர்பற்ற நிலையில் பெண் கருத்தரிக்க முடியாது என்ற உண்மையைத் தெரிந்து கொள்கின்றான். பெண்ணுடன் சேர்ந்து உறவுக் கொள்ளும் போதே கருத்தரிப்பு நிகழ்வதைப் புரிந்து மனிதன், ஆணின் புணர்ச்சியே கருத்தரிப்புக்கான அடிப்படையாக இருந்ததை அரூபமாகவே புரிகின்றான். மற்றொரு வழியிலும் இதைப் புரிந்து கொள்ள மந்தை வளர்ப்பும் ஊக்கியாக இருந்தது. மந்தைகளை ஆண் - பெண் வேறாகப் பிரித்த போது கருத்தரிக்காமையைக் கண்டாள். ஆணின் உறவு கருத்தரித்தலில் அவசியமானது என்ற உண்மையை மேலும் எதார்த்தத்தில் வலுவூட்டியது. அனுபவ அறிவு இதை செம்மைப்படுத்தியது. இதில் இருந்தே தனிச்சொத்துரிமை தனக்கான வாரிசு உரிமையைப் பெறுவதை உறுதி செய்ததுடன், அதைத் தக்க வைத்துக் கொள்ளும் நடைமுறைகளும் உருவாகியது. இதனால் லிங்க வழிபாடு மேலும் கூர்மையடைகின்றது. ஆணின் உறவுக்குரிய ஆண் உறுப்பு லிங்க வழிபாடாக வருவதற்குத் தனிச்சொத்துரிமை மீதான ஆணின் உரிமை உந்தித் தள்ளுகின்றது.
தனிச்சொத்துரிமை அமைப்பு ஆணின் கையில் இல்லாத எல்லா நிலைகளிலும், லிங்கம் வழிப்பாட்டுக்குரிய பொருளாக வந்திருக்கவே முடியாது. லிங்க வழிபாடு பெண்ணை அடிமைப்படுத்த வரவில்லை. தனிச்சொத்துரிமை உருவான போது கருத்தரிப்பில் ஆணின் உறவுக்குரிய முக்கியத்துவம் கண்டறியப்படுகின்றது. இது தனிச்சொத்துரிமை சார்ந்த வாரிசு உரிய உடைமை மற்றும் உரிமை என்பன இயல்பாகவே லிங்க வழிப்பாட்டைத் தாய்மை வழிபாட்டுக்குச் சமாந்தரமாகவும் (சமமாக) உருவாகி அதையும் மேவி வளர்த்தெழுகின்றது. தொடர்ந்தும் லிங்க வழிபாடு உலகம் தழுவிய ஒரு வழிபாட்டு முறையாக, உலகம் தழுவிய மதமாக மாற முடியவில்லை. மாறாக நிலவிய தாய் வழிபாடு சிறுவழிபாடுகள், இயற்கை வழிபாடுகள், மூதாதையரை நோக்கிய எண்ணற்ற வழிபாட்டு முறைகள் மேல் புதிய மதங்கள் உருவாயின. இவை அனைத்தும் பழைய வழிபாட்டு முறையை அழித்தன அல்லது அதை உள்வாங்கி அதன் மேல் தெளிவாகப் பெண்ணை அடிமைப்படுத்தி சுரண்டுவதையும், சமூகச் சொத்துரிமையைத் தனிச்சொத்துரிமையாக்குவதையும் தெளிவாகவே உறுதி செய்தன.
நிலப்பிரபுத்துவச் சொத்துரிமை வடிவம் வீங்கி வெம்பி மையப்படுத்தப்பட்ட வாரிசு ஆட்சி வடிவமாக வளர்ந்த போது, மதம் ஓர் ஆதிக்கச் சக்தியாக அடிமைப்படுத்தும் ஒரு சின்னமாக எழுச்சியுற்றது. பெண்களுக்கு நாயிலும் கீழான ஓர் அடிமை வாழ்வுடன் கூடிய சித்திரவதையை வாழ்வாக்கியது. ஒரு பெண் சிந்திப்பது, அதை வெளிப்படுத்துவது உள்ளிட்ட அனைத்தையும் கைவிட நிர்ப்பந்தித்த மதம், தனது முகத்தையும் கூட மற்றவர் தெரிந்து கொள்ள முடியாத இருண்ட சூனியத்தில் சிறை வைக்கப்பட்டாள். அதே நேரம் கடின உழைப்பில் அலுப்பூட்டும் வகையில் ஒரே வேலையை, மிக நெருங்கிய ஆண்களுக்கு முகமன் செய்தே சேவை செய்து வாழ்வதே உயர்ந்த பண்பாக மதங்கள் சமூகமயமாக்கின. இந்த அடிமை மரபுக்கு இணங்க அழுந்தி சாவதைச் சமூகம் உறுதி செய்தது.. இது உலகம் தழுவிய ஒரு போக்காகக் காணப்பட்டது.
ஆனால் இதை மறுத்து வைக்கும் வாதம் பெண் அடிமைத்தனத்தையே திரிப்பதாக உள்ளது. "நிகழ்ச்சிகளின் நிர்ப்பந்தமும் புதிய முனைப்புத் தன்மையுடன் கூடிய லிங்க உருவ எழுச்சியின் தூண்டுவிசையும் இணைந்து பெண் தெய்வ அதிகாரத்தின் மற்றும் கடைசி எஞ்சிய கூறுகளையும் விரட்டியடித்தன. பொதுவாகப் பார்க்கும் போது, இந்த மாற்றங்கள், முதலாவதாக ஏற்பட்ட வெற்றிகரமான சமூக ஒழுங்கமைப்பின் விளைவான மக்கள் தொகைப் பெருக்கத்திலிருந்து தோன்றின."
"விழிப்புணர்வு ஆழமடைந்த போது இந்த வெற்றிடத்தில் பொறாமை நுழைந்து புதிய உயிரைப் படைக்கும் சக்தி முற்றிலும் பெண்களிடத்தே இருக்கும் தோற்றத்தைக் கண்டு, அச்சமடைந்து பெண் கருப்பையின் காரணமாகப் பொறாமையடைந்த ஆண்களிடத்தில் எதிர்ப்பு உருவாயிற்று. இயற்கையின் அனைத்து லயங்களையும் பெண்கள் தமது ஏகபோகமாக்கிக் கொண்டதனால் சினங்கொண்ட ஆண்கள் தங்களுடைய சொந்த லயங்களைப் புனைந்து உருவாக்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர்." (பக்கம் - 71)
ஆணின் லிங்க வழிபாடும், மக்கள் தொகைப் பெருக்கமும், பொறாமையும், அச்சமும், எதிர்ப்பும் பெண்ணின் அதிகாரத்தையும், பெண்ணியச் சமுதாயக் கண்ணோட்டங்களையும் ஒழித்தது என்பது கருத்துமுதல்வாதமாகும். இது நேரடியாகப் பொருள் முதல்வாதத்தை மறுப்பதாகும். லிங்க வழிபாடு திடீரென ஏன் தோன்றியது என்பதை வெறும் ஆண்களின் பொறாமையாகக் காட்டுவது ஒரு திரிபாகும். அப்படியானால் ஏன் திடீரென பொறாமை உருவானது? எதிர்ப்பு ஏன் திடீரென உருவானது? அச்சம் ஏன் திடீரென உருவானது? மக்கள் தொகை பெருக்கமே பெண்ணை மிதித்தது எனின், பெண்ணின் கருத்தரிப்புதான் அவளுக்கு எதிராக இருந்ததா?
நான் மேலே விவாதித்ததன் அடிப்படையில் இந்தக் கூறுகளும் பெண்ணை அடிமைப்படுத்தவில்லை. இவை அடிமைப்படுத்தப்பட்ட பெண்ணின் அடிமைத்தனத்தை மேலும் ஊக்குவிக்கும் ஒரு மேல்கட்டுமானமாக இருந்தது. இது போன்று பல கூறுகள் செயற்பட்டன. மக்கள் தொகைப் பெருக்கம் தான் பெண்ணை அடிமைப்படுத்த காரணம் எனின், ஆணின் உறவுக்குரிய முக்கியத்துவம் கண்டறியப்பட்ட நிலையில் ஆணை அல்லவா இழிவாக்கியிருக்க வேண்டும். அச்சம், பொறாமை, எதிர்ப்பு என்பன மானிட அமைப்பில தனிச் சொத்துரிமை தோன்றிய பின் உருவானவையே. இவை முன்பு தோன்ற எந்த அடிப்படையும் ஆதாரமும் எதார்த்தத்தில் கிடையாது.
மனித வரலாற்றில் உணவை எப்படி எந்த வழியில் பெறுவது என்பதே தீர்க்கமான சமூகப் பண்பாட்டுக் கூறுகளை உருவாக்கியது. அனைத்துப் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகள் தொடங்கி அதிகார அமைப்புகளின் தோற்றங்கள் முதல் அடிமைப்படுத்துதல் ஈறாக இது சார்ந்து தெளிவாகத் தன்னை எதார்த்தத்தில் வேறுபடுத்தியும், மாற்றியும், மாறியும் வந்துள்ளது. உணவு தேடும் வடிவம் எந்த உற்பத்தி வடிவங்கள் ஊடாக, எந்த உழைப்பின் ஊடாக, எப்படி உணவைப் பகிர்கின்றது என்ற சமூக அடிப்படையில் இருந்தே, அனைத்துவிதமான சமூகப் பொருளாதாரக் கூறுகளும் உருவானது, உருவாகின்றது. மனித அடிமைத்தனங்கள் இதற்கு வெளியில் கற்பனையில் உருவாவதில்லை. இது சார்ந்தே மனிதப் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகள் உருவாகின்றன.
மக்கள் தொகைப் பெருக்கம், லிங்க வழிபாடு வெறும் வெற்றிடங்களில் இருந்து உருவாவதில்லை. மனிதத் தேவையைப் ப+ர்த்தி செய்யும் உற்பத்தி முறைக்கும், அது பகிரப்படும் முறைக்கும் வெளியில் மனிதச் செயற்பாடுகள் - சிந்தனைகள் உருவாவதில்லை. மாறாக உணவு பகிரப்பட்ட வடிவத்தில் இருந்தே வழிபாட்டு முறையும், மக்கள் தொகை பற்றிய கூச்சலும் எழுகின்றது. மக்கள் தொகை பற்றிய கூச்சல் நவீன முதலாளித்துவத்துக்குரிய ஒரு மாபெரும் மோசடி மட்டுமேயாகும். மனிதன் தன் தேவைக்கு உழைக்க இரண்டு கைகள் இருந்த வரை, மனித உழைப்பு இயற்கை மீது சுதந்திரமாக இருந்த வரை, மக்கள் தொகை பெருக்கம் என்ற கூச்சல் வெறும் கட்டுக்கதை மட்டுமேயாகும்.
மக்கள் தொகை பற்றி சுரண்டுபவன் கூறுவதற்கு அதாவது மனிதத் தேவையை மறுப்பவன் கூறுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. அது எப்பொதும் உள்நோக்கம் கொண்டவையாகும். இவை நவீன ஆய்வு முறைக்குப் பொருத்தமற்ற ஒரு தர்க்கவியலும் கூட. ஆனால் ஏகாதிபத்தியச் சுரண்டல் கோரமாக இது ஒரு நிரந்தரமான வாழ்வியல் மனிதக் கோட்பாடாகக் காட்டுவது வாழ்வியல் திரிபாகும். இதை என்றைக்கும் நிலவியதாகப் ப+ச்சூடுவதும் நவீன மோசடியாகும்.
லிங்க வழிபாடு ஆணாதிக்க அமைப்புக்கு அஸ்திவாரமாக இருந்தது என்றால், இன்றைய மதங்கள் ஒருக்காலும் தோன்றியிருக்க முடியாது. லிங்க வழிபாடு உலகெங்கும் ஆதிக்கம் பெற்ற ஒரு மதமாக வளர்ச்சி பெற்றிருக்கும். தனிச்சொத்துரிமை ஆணாதிக்க அமைப்பும், நிலப்பிரபுத்துவமும் இணைந்து இதைத் தனது ஆதிக்க மதச் சின்னமாக மாற்றியிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. அது சரி பெண்ணை அடிமைப்படுத்தியதாகக் கூறும் ஆணாதிக்கச் சின்னமாக இருந்த லிங்க வழிபாடு, ஆணாதிக்கம் அழியாமல் ஏன் எப்படி அழிந்து போனது? முதல் வர்க்க ஒடுக்குமுறையாக எழுந்த பெண் அடிமைத்தனம் இன்றுவரை அழியவில்லை அல்லவா! லிங்க வழிபாடு அழிந்து விட்டதல்லவா! எப்படி இது சாத்தியமானது?
தொடர்ந்து பார்ப்போம். பெணகள் நிர்வாணமாக முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது, அதீனியாவில் கணவன் இறந்தால் மனைவி நிர்வாணமாகச் சவ ஊர்வலத்தில் செல்வது போன்றன பற்றி இந்நூல் பேச முனைகின்றது. (பக்கம்-62)
சிவனுக்குப் பூஜை செய்யும் ஓர் அர்ச்சகர் கோயிலில் இருந்து நிர்வாணமாக வெளியே வந்து ஒரு சிறிய மணியை ஒலித்த வண்ணம் தெருக்களின் வழியாக நடந்து செல்வார். இந்த மணியோசை சமிக்ஞையைக் கேட்டதும் எல்லாப் பெண்களும் வெளியே வந்து, கடவுள் பிரதிநிதியின் புனிதமான பிறப்பு உறுப்புகளை முத்தமிடுவார்கள்." (பக்கம்-77)
ஓர் அராபியர் "வீரியமுள்ள உறுப்புகளைக் கொண்ட தந்தையே. என்னுடைய பிரமாணத்திற்குச் சான்றாக இருப்பீராக" என்று கூறி ஆண் உறுப்பை ஆராய விருந்தினரை அனுமதிக்கின்றார். ரோமானியர் ஆண்குறியைப் பிடிப்பது, அதன் மேல் வாழ்த்து கூறுவது, தொழுவது என்பனவற்றைக் கடைப்பிடித்தனர். (பக்கம்-77)
கிரீசில் பல ஆண்குறி கொண்ட சிலைகள், உருவப் பொருட்கள் உருவாக்கப்பட்டன. இதைவிட பல லிங்கம் பெண்ணுக்கு எதிராக நிலை நிறுத்தப்பட்டது அல்லது சுற்றி வளைக்கப்பட்டது. எகிப்தில் பெண்கள் லிங்கத்தைத் தமது வழிபாட்டின் போது எடுத்துச் சென்றனர். இப்படிப்பட்ட போக்கில் "பெண் தெய்வங்கள் தான் லிங்க வழிபாட்டை நிறுவியது" (பக்கம்-75)
ஏன்? இதை மட்டும் கட்டுரை விவாதிப்பதை மறுக்கின்றது. பெண்கள் ஏன் லிங்க வழிபாட்டை ஏற்றுக் கொண்டனர்? அடிப்படையில் தனிச்சொத்துரிமையின் சொந்தக்காரனாக ஆண் இருந்தான் என்பதே அடிப்படையாகும். ஆண் பெண்ணுக்கு உணவளிக்கும் முறை உற்பத்தி சார்ந்து உருவாகியவுடன், லிங்க வழிபாடு சமுதாய வழிபாடாக மாறுகின்றது. லிங்கம் சக்தி வாய்ந்த உற்பத்திமுறையின் பிறப்பாகத் திரிபடைகின்றது. ஆனால் இது பெண் வழிபாட்டுடன் சமரசம் செய்தே தோன்றுகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்பு வளர்ச்சி பெற்று இறுக, இறுக சமரசம் தகர்ந்து அடக்குமுறையாக மாறும் பொது, புதிய மதம் உருவாகின்றது. இருந்த பழைய சமுதாய எச்சத்தை உள்ளடக்கிய புதிய சமுதாயத்தின் தோற்றத்தில் காணப்பட்ட அராஜகத்தை ஒழித்துக் கட்டுகின்றது. இதனால் லிங்க வழிபாடும் தகர்கின்றது அல்லது உட்செரிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது.
கி.மு. 1300-இல், எகிப்தை ஆண்ட மெனெப்தா நிறுவிய பெரிய லிங்க சிலையில் ஒரு கல்வெட்டின் கீழ் வாசகம் ஒன்று எழுதப்பட்டு இருந்தது. அதில் தனது பகைவனை வென்றதுடன் 13,240 ஆண்களின் ஆண்குறியை வெட்டி வந்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது. (பக்கம் - 79)
இதனால் இந்த நூல் ஆசிரியர் பெண்ணின் அதிகாரம் தகரவில்லை என்று கூறி இதை ஆதாரமாகக் காட்டுகின்றார். இதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. சமூகத்தை மாற்ற முடியாத வக்கரித்த பெண்கள் இதைப் பெருமையாகக் கூறி, தமது ஆட்சியின் பெருமையாகப் பீற்றுகின்றனர்.
ஒரு யுத்தத்தில் ஆணின் ஆண்குறியை வெட்டிக் கொண்டு வருவதன் மூலம் அதுவே பெண்களின் ஆட்சி என்பது, அடிப்படையான சமூகப் பொருளாதாரக் கூறுகளையே மறுப்பதாகும். மக்களை அடக்கி ஒடுக்கி ஓர் ஆட்சி அமைப்பு நிலவியது என்றால், அங்கு தனிச்சொத்துரிமை அமைப்பு இருக்கிறது என்பது அரசியலில் அடிப்படை அறிவாகும். தனிச்சொத்துரிமை அமைப்பு இருக்கின்றது என்றால், பெண் அடிமைத்தனம் அதன் அச்சாக உள்ளது என்பது அர்த்தம். ஆண்குறியை வெட்டுவதன் மூலம் பெண் விடுதலையை எதிரி நாட்டுப் பெண்ணுக்கு வழங்கினாரா? அந்தப் பெண்களுக்கு என்ன தான் நடந்தது? சொந்த அந்தப்புரத்தில் அல்லது சொந்த நாட்டு வீரர்களின் சொத்தாக்கினாரா? பெண்களின் தந்தையை, கணவனை, மகனைக் கொல்வதன் மூலம் அல்லது ஆண் குறியை அறுப்பதன் மூலம், அவர்களின் பாலியல் ரீதியாக அடிமை உடைமை உரிமையாக வாழ்ந்த பெண்கள் மேல், எதிரி நாட்டு ஆணாதிக்க ஆண்கள் நிரந்தரமான உரிமையைப் பெறுவதையே உறுதி செய்தனர். சொந்த நாட்டுக்காகப் போராடிய வீரர்களின் ஆண் உறுப்பு என்ற கண்ணோட்டத்தில் வெட்டப்படவில்லை.
சொந்த நாட்டு வக்கிரம் பிடித்த ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை ஆட்சிகளின் செயல்களுக்குக் காரணம் கூறி, அதைப் பெண்ணியல் நோக்கில் நியாயப்படுத்துவது இன்றைய பெண்ணின் இழிநிலைக்குக் கம்பளம் விரிப்பதாகும். பெண் எதைச் செய்தாலும் அதை ஆதரிப்பதும், ஆணுக்கு எதிராக ஆண் தொடங்கி, எந்தப் பிற்போக்குப் பெண்ணும் எதைச் செய்தாலும் அதை ஆதரிப்பது, நவீன பெண்ணியத்தின் உச்சக்கட்ட வக்கிரமாகும். இதைப் போன்று கடந்த காலத்தில் பெண்கள் ஆணாதிக்க அமைப்பிலான ஆட்சிகளில் கொளுவீற்று இருந்த போது, அவர்களின் ஆட்சியைப் பெண்ணிய ஆட்சியாக இந்த நூல் பல இடங்களில் எடுத்துக் காட்டுவதன் மூலம் நியாயப்படுத்துகின்றது. இதை உலக வரலாற்றில் பெண்ணின் பெருமையாகப் பீற்றுகின்றது.
அதில் சிலவற்றைப் பார்ப்போம். "....பெண்கள் மிக ஆரம்பக் காலத்திலேயே அதிகார இயந்திரத்தை எவ்வாறு இயக்குவது, கட்டுக்கோப்பினுள் - அது அவர்களின் செயல்களைக் கட்டுப்படுத்தியிருக்க கூடும். எவ்வாறு வெற்றிகரமாகச் சூழ்ச்சித் திறனுடன் செயலாற்றுவது என்பதைக் கற்று அறிந்து இருந்தனர்." (பக்கம்-99)
"ரோமானியச் சக்கரவர்த்தினிகள் ட்ருசில்லாவிவியாவும் (கி.மு. 55 - 29), வலேரியா டெஸ்ஸாலினாவும் (கி.பி. 22- 48) தங்களுடைய சூழ்ச்சித் திட்டங்களுக்கு எதிராக ஏற்படும் எந்தத் தடங்கல்களையும், தங்கு தடையின்றி விஷத்தை உபயோகப்படுத்துவது உள்ளிட்டு, முடிவற்ற பயங்கரமான சூழ்ச்சிகளைக் கையாண்ட பலரில் அடங்குவர். காவியப் புகழ் அழகி ஸெனோபியாவின் ஆயுதங்களில் விஷமும் ஒன்றாகும். இந்தச் சைத்திய இன வீராங்கனை அரசி ரோமானிய இராணுவத்தை முறியடித்து, எகிப்தையும், ஆசிய மைனரையும் கைப்பற்றினாள். இறுதியில் ரோமானியர்களால் தோற்கடிக்கப்பட்ட இந்த அரசி, ஓர் ரோமானியச் செனட்டரை வசியப்படுத்திக் கொண்டதன் மூலம், கொல்லப்படுவதில் இருந்து தப்பித்தாள். பின்னர் அவள் அவரையே திருணம் புரிந்து கொண்டாள். பின்னர் பெருந்தன்மையுடன் ஓய்வு பெற்று வாழ்ந்து வந்தாள்" (பக்கம் - 100)
"இரு புதல்விகளையும் கொண்ட "ஜீலியஸ்கள்" என்ற சக்தி வாய்ந்த பெண் பரம்பரையின் புகழ்பெற்ற வாழ்க்கைகளிலிருந்து காணப்படுகின்றது. மூத்த சகோதரி ஜீலியா தோம்னா, செவெரஸ் சக்கரவர்த்தியை மணந்து கொண்ட போது ரோமன் அதிகார அரசியலுக்குள் முதலில் ஊடுருவினாள்.
கி.பி. - 217 இல், அவள் மரணமடைந்த போது, அவளுடைய இளைய சகோதரி ஜீலியா மெய்ஸா ஆட்சியை மேற்கொண்டாள். அவள் ~ஜீலியஸ்கள்| என்ற தனது இரண்டு புதல்விகளுக்கும் மதிநுட்பத்துடன் மணமுடித்து வைத்ததன் பயனாக, அவர்கள் அடுத்த இரண்டு சக்கரவர்த்திகளுக்கு அன்னை ஆனார்கள். அவர்கள் மூலமாக, இந்த மூன்று பெண்களும் 235 ஆண்டு வரையில் மிகவும் உறுதியாக ஆட்சிபுரிந்தனர்." (பக்கம் - 98)
பெண்கள் பாலியல் ரீதியாக எதிரியுடன் உறவு கொண்டு படுகொலை செய்வது அல்லது அதை நோக்கி கவர்ந்து யுத்தங்களை வெல்வதன் மூலம் ஆட்சியை அல்லது அதிகாரத்தைத் தக்க வைப்பது அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களுடன் சோரம் போய் தம்மைத் தற்காப்பது (பக்கம் - 63) என அனைத்தையும் இந்த நூல் பெண் என்பதால் நியாயப்படுத்துகின்றது.
பெண் அதிகாரத்தில் இருந்தால் அதைப் போற்றுவது என்ற கடைக் கோடியில் நின்று, இந்த ஆணாதிக்க அமைப்பை ஆதரிக்கின்றது. இன்றைய உலகமயமாதல் வரை இதற்குள் சங்கமமாகின்றது. பெண்கள் பழைய மரபு ரீதியில் அல்லது கணவன் இறக்க அதைக் கைப்பற்றுவது அல்லது கணவன் பலவீனமானவனாக இருந்தால் அதிகாரத்தைப் பெறுவது அல்லது பாலியலை உபயோகித்து அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்லது சதிகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவது அல்லது யுத்தத்தில் நாட்டைக் கைப்பற்றி புகழ் பெற்று அதிகாரத்துக்கு வருவது என எண்ணற்ற வழிகளில் சமுதாயத்தின் இழிந்த ஆணாதிக்கப் போக்குகளின் மூலம் பெண்கள் உலகின் பல பாகங்களில் ஆட்சிக்கு வந்தனர், வருகின்றனர். இவை அனைத்தையும் பெண்ணின் திறமையாகவும், பெண்ணின் ஆட்சியாகவும் இந்த நூல் பெருமை பட எடுத்துக் காட்டுகின்றது.
இந்தப் பெண்கள் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை அமைப்புக்கு எதிரான போராட்டத்தை நடத்தி, சமூகச் சொத்துரிமையின் காவலராக, ஆணாதிக்க அமைப்பின் தூண்களாகவே திகழ்ந்தனர். இவர்கள் பெண்ணின் இழிநிலையைப் போக்கியவர்கள் அல்ல. சிற்சில சீர்திருத்தங்களைச் செய்திருக்கலாம். ஆனால் பலர் ஆணாதிக்கக் கொடூரத்தை ஆழமாக்கி கொடுங்கோல் ஆட்சியை மக்கள் மேல் நிறுவினர். பெண்களின் ஆட்சியாக இருந்தாலும் சரி, ஆண்களின் ஆட்சியாக இருந்தாலும் சரி எங்கும் அதன் தன்மை அதன் நோக்கம் ஒன்றாகவே இருந்தது. வெறுமனே ஆட்சியில் இருந்தவர்கள் பால் ரீதியில் மட்டும் உடலால் வேறுபட்டனர். சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுக் கூறுகளால் இவர்கள் வேறுபட்டு இருக்கவில்லை. பெண் அங்கு எந்த விடுதலையும் பெற்றிருக்கவில்லை.
பெண் என்ற முதன்மைப்படுத்துதல் மூலம் அதை ஆண் வெறுப்பாக மாற்றி பெண்ணின் அனைத்துச் செயல்களையும் ஆதரிப்பதும், அதை மட்டும் முதன்மைப்படுத்துவதும் என்ற கடைக்கோடிக்குச் செல்கின்றனர். இதன் அடிப்படையில் வைக்கும் மற்றொரு வாதத்தைப் பார்ப்போம்.
அடிமைகளின் எண்ணிக்கை பெருக பெருக பிரமிடுகள் உருவாக்கப்பட்டன. இதில் பெண்கள் மட்டும் ஈடுபட்டதாகக் காட்டுவதன் (பக்கம்-95) நோக்கம்தான் என்ன? ஆண் அடிமைகளும் இதில் பங்காற்றினர் என்பதைத் திட்டமிட்டே மூடி மறைக்கப்படுகின்றது. அத்துடன் பிரமிடுகளை அடிமைகளின் மூலம் நிறுவினர் என திரிக்கின்றனர். அடிமைகள் எப்படி உருவானார்கள்? ஆணாதிக்க அமைப்பு அதற்கான அச்சாணியாக இருந்தது. பிரமிடுகள், கோபுரங்கள் உருவான வரலாறுகள் கடுமையான சுரண்டலுடன் கூடிய, அதீதமான உபரிக்கு உரிய பங்கு இங்கு திட்டவட்டமாக மூடி மறைக்கப்படுவது நிகழ்கின்றது. இந்தப் பிரமிடுகள் உருவான போது அங்கு பெண்கள் ஆட்சிகளும் நிலவியிருந்தன.
மிகவும் செல்வச் செழிப்பான நீர் வளங்கள் உள்ள பிரதேசத்தில் உற்பத்தி உபரியாகப் பெருகிய போது, அடிமை வாழ்க்கை நேர்விகிதத்தில் எகிறிப் பாய்ந்தது. அடிமைகளின் அடிப்படைத் தேவையை மறுத்ததன் மூலம் இயற்கையின் வளத்தைத் தனிச் சொத்துரிமை அமைப்பு தனதாக்கிய போது அது உபரியாகியது. வர்க்க முரண்பாடுகள் கூர்மையான போது உழைக்கும் வர்க்கத்தைச் சவுக்கு அடிக்கு முன்நிறுத்தி, உபரியின் சொந்தக்காரரான அதிகார வர்க்கம் தனது அடக்குமுறையின், அதிகாரத்தின் பெருமைகளையே பிரமிடாக்கினர். அந்தப் பிரமிடுகளை உருவாக்கிய தேவைகள் மறுக்கப்பட்ட அடிமைகள், அஸ்திவாரத்தின் தூண்களாக மாற ஆயிரக்கணக்கில் தம் உதிரத்தையே அஸ்திவரத்துக்குப் பாய்ச்சினர்.
இதுதான் சோழ கால கோபுரங்களின் வான் உயர்ந்த அதிகாரத்திலும் நடந்தது. தஞ்சைப் பிரகதிஸ்வரர் கோயில் (பெரிய கோவில்) (கங்கைகொண்ட சோழபுரம்). தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமன்றி, சொந்தச் சாதியைச் சேர்ந்த ஏழைகளின் மேல் நிறுவிய இந்துப் பண்பாட்டு ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை ஆட்சியே, கோபுரங்களாக வெளிப்பட்டன. மனித உழைப்பை உயிருடன் உறிந்து பலியிட்ட உயர்ந்த கோபுரங்களை, பிரமிடுகளைக் கட்டி முடிப்பதில் தொடங்கி அதற்குத் தனது ஒரு வாய் சோற்றைக் கூட உழைக்கும் மக்கள் தியாகம் செய்தனர். இந்த அடிமைகளின் சின்னங்கள் மேட்டுக் குடிகளின் கவர்ச்சிகரமான வக்கிரமான பிரமிடுகளாக, கோபுரங்களாக வெடித்துக் கிளம்பின.
அடிப்படையும் ஆதாரமற்றதுமாக, சமூகப் பொருளாதார எதார்த்தத்துக்கு எதிராக வைக்கும் மற்றொரு வாதத்தில் பெண்ணின் ஆட்சியை ஆண்கள் எப்படிக் கைப்பற்றினர் என்பதாகும். "ஆட்சி அதிகாரம் பெண் வழியில் சென்ற இடங்களில், ஒரு துணிச்சலான சாகசக்காரன் அரசியை வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொள்வதன் மூலமோ அல்லது கற்பழிப்பதன் மூலமோ அவளைத் தன் வசப்படுத்திக் கொள்வதன் மூலமோ அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள முடிந்தது." (பக்கம்-86)
இப்படி ஆணாதிக்கம் கோலோச்சியதாகக் கூறுவது பெண்ணியம் பற்றிய இழிவான கொச்சைத்தனமாகும். ஆணாதிக்க அமைப்பு என்பது உலகளவில் இது போன்ற அடிப்படைத் தத்துவத்தாலோ அல்லது உதிரிச் சம்பவத்தாலோ உருவானவையல்ல.
உலகம் தழுவிய ஆணாதிக்க அமைப்பு, விதிவிலக்கின்றி தனிச் சொத்துரிமை அமைப்பின் மேல் எழுந்ததே. ஆணாதிக்க அமைப்பில் பெண் ஆட்சியில் இருந்து அலங்கரித்த போது பலாத்காரமான சம்பவங்கள், சதிகள், நஞ்சூட்டல்கள் என எண்ணற்ற செயற்பாடுகள் தனிப்பட்ட மனிதன் தன் சொந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக நிகழ்ந்தவையே. இதில் ஆண் - பெண் வேறுபாடு இன்றி எதிர் பாலினத்தின் விடுதலை அல்லது ஒடுக்குதல் என்ற அடிப்படையில் பெண் அல்லது ஆண் ஒருநாளும் கையாண்டது இல்லை. மாறாக ஆணாதிக்க அமைப்பில் சொத்துரிமை இயங்கியலுக்கு ஏற்ப நடந்தவைதான். இதைப் பெண்ணியமாகவும், ஆணியமாகவும் ஜோடிப்பது வக்கிரமான கோட்பாடாகும்.
இதைப் போன்றே மற்றொரு வாத "பெண்களின் தனிச் சிறப்புரிமையின் மீதான மூர்க்கமான ஆணின் ஆக்கிரமிப்பு ஏற்பட்ட இந்தக் காலக்கட்டத்திலிருந்து மன்னர் குடும்பத்தில் முறையான புணர்ச்சி புகுத்தப்பட்டது. இதன்படி தனது மனைவி இறந்ததையொட்டி சிம்மாசனத்தை விட்டு இறங்குவதற்கு விருப்பமில்லாத அரசன் சிம்மாசனத்திற்கு நியாயமான வாரிசை, அதாவது அவளுடைய மகளைத் திருமணம் செய்து கொள்வான் அல்லது இதற்கு மாறாக, அவன் தனது புதல்வர்களில் (மகனை) ஒருவனைப் புதிய அரசிக்குத் திருமணம் செய்து கொடுப்பான்." (பக்கம்-86)
இது கூட எப்போதும் விதிவிலக்கான உதிரிச் சம்பவங்களே. இது ஆணாதிக்கத்துக்கும் பெண்ணியத்துக்கும் எதிரானது அல்லது சார்பானது அல்ல. இது இருக்கின்ற தனிச் சொத்துரிமை அமைப்பை எந்த விதத்திலும் மாற்றி விடவில்லை. தனிப்பட்ட ஆண் அல்லது பெண்ணைப் பாதிக்கின்ற வகையில் வர்க்கக் கொடூரங்களின் ஒரு பாகமாக இருந்தது. தனிச்சொத்துரிமையை ஆட்சியில் தக்கவைக்கவும், அதை நீடிக்கவும், சொந்த வர்க்க அதிகாரத்துக்கும், சுகபோகம் சார்ந்து இந்தச் சம்பவங்கள் புகுத்தப்பட்டன அல்லது புதிதாக நடைமுறையாக்கப்பட்டது. இதற்கு மதங்கள் கொள்கை விளக்கம் வழங்கின. ஆனால் இது ஆணாதிக்க அமைப்பின் உலகம் தழுவிய விதியாக இருக்கவில்லை. தனிப்பட்ட ஆண் - பெண் தனிச்சொத்துரிமை அமைப்பில் சுரண்டலின் தொடர்ச்சியைப் பேணி, தமது தனிச்சொத்துரிமை அமைப்பின் நலன்களைத் தக்கவைக்க செய்யப்பட்ட இர்pவான பக்கங்கள் தான் இவை.
தொடர்ந்து இந்த நூல் உலகத்தை வகைப்படுத்தும் போது (பக்கம் -79)
1. முதலாவது கட்டத்தில் ஆற்றல் மிக்க அன்னை மட்டுமே உலகமாக இருக்கின்றாள் அல்லது படைக்கின்றாள். அவளுக்கு நிரந்தரமான காதலர்கள் இருக்கின்றனர். பல குழந்தைகளின் தாயாகவும் தலைமையானவளாகவும் இருக்கின்றாள்.
2. இரண்டாவது கட்டத்தில் அவளுக்கு ஒரு வாழ்க்கைத் துணைவன் இருக்கின்றான். அதாவது அவன் மகனாகவோ அல்லது இளைய சகோதரனாகவோ அல்லது இளைய மகனாகவோ இருக்கின்றான். இதில் இருந்தே அவனின் அதிகாரம் வளர்ச்சி அடைகின்றதாம்.
3. மூன்றாவது கட்டம் கடவுள், அரசன், வாழ்க்கைத் தலைவன் பெண் தெய்வத்துடன் சமமாக ஆட்சி புரிகின்றான். அவள் கீழே வீழ்த்தப்படுவதற்குக் களம் அமைக்கப்படுகின்றது. ஆண் கடவுள் அரசனாகின்றான். பெண் கடவுள் தோற்கடிக்கப்படுகின்றாள்.
அனைத்தையும் பாலியல் எல்லைக்குள் காட்டுவதன் மூலம், சமூகங்களின் வரலாற்றுப் பக்கத்தைத் திரிப்பது நிகழ்கின்றது. பெண் குழந்தைகளின் தாயாகவும், எல்லா ஆண்களுடனும் உறவு கொள்ளும் ஆற்றல் மிக்க அன்னையாக, அவளே உலகமாகக் கொண்ட பெண்ணாகவா இருந்தாள்? இல்லை.
மாறாக மனிதக் குரங்கில் இருந்து உருவான மனிதன் வேட்டையையும் இயற்கையையும் ஆதாரமாகக் கொண்ட மனிதனில் பெண் முதன்மை பெறவில்லை. அதுபோல் ஆணும் முதன்மை பெறவில்லை. இங்கு உழைப்பு சார்ந்த சமூகமே முதன்மை பெற்றதாக இருந்தது. இங்கு முதன்மை பெற்ற ஒரு பிரிவு என்று இருக்கவில்லை. ஆண் அல்லது பெண் இரு பகுதியினருமே ஒரே வகையில் உணவைத் தேடினர். ஒன்றையே உண்டனர்.
பால் உறுப்புகளும் அதன் செயல்வினை சார்ந்தும், பெண் கருவுறுவதும் மட்டும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் விதிவிலக்காக இருந்தது. குழந்தை பாதுகாப்பில் விசேடமாக எதையும் முதன்மைப்படுத்தப்படவில்லை. தாய் எல்லா உயிரினத்தைப் போலவும் குழந்தையின் பாதுகாப்பில், மூர்க்கமானவளாக, ஆணைவிட அதிக பலம் கொண்ட எதிர்ப்பாற்றல் கொண்டவளாக உயிர்வாழும் போராட்டத்தில் திகழ்ந்தாள். ஆண் இதற்கு அக்கம் பக்கமாகத் தொழிற்பட்டான். இது ஒரு குறித்த வேலைப் பிரிவினையாக இருக்கவில்லை. இயற்கையான ஒரு பிரிவாக இருந்த போதும், வாழ்வின் உயிர் வாழ்தல் சார்ந்து இது முரணாக மாறி விடவில்லை. பெண்ணை மதிக்கும் சமூக அடிப்படை பின்னால் ஏற்படுகின்றது. இது எப்படி உருவானது?
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட உழைப்புப் பிரிவினையில் இது உருவானது. உயிர்வாழும் போராட்டத்தில் குழந்தையின் பாதுகாப்புக்குத் தொடர்ச்சியாக ஏற்பட்ட அச்சுறுத்தலின் போது தற்காப்பு கருதி குழந்தையைத் தாங்கிய கருத்தரித்த பெண், குழந்தையுடன் பெண் நிலைத்து நிற்பது அவசியமாகின்றது. இதன் போது கூட அனைத்துப் பெண்களும் தனித்து விடவில்லை. தாய்மை மற்றும் கருத்தரித்த பெண் நிலையாகத் தற்காப்பில் தனித்து நிற்கத் தொடங்கியது முதல் படிநிலை மாற்றம் ஆரம்பமானது.
அடுத்து தனித்து நின்ற இடங்கள் மேலான மற்ற மிருகங்களின் இலகுவான தாக்குதலால் ஏற்பட்ட இழப்பை எதிர்கொள்ள, முதிய பெண்களும் முதிய ஆண்களும் அதைத் தொடர்ந்து அனைத்துப் பெண்களும் நிலையாகத் தனித்து வாழும் வேலைப்பிரிவினை உருவானது. இது ஓர் இயங்கியல் ரீதியான நீண்ட வளர்ச்சிப் போக்கில் நிகழ்ந்தது. முதலில் தனித்த பெண் தற்காப்பு ஆயுதங்களை மேம்படுத்தியதுடன், சுற்றுச்சூழல் மேலான ஆராய்வில் முதிர்ச்சி பெற்று விவசாயத்தைக் கண்டுபிடித்தாள். இதனால் தனித்து நிற்கும் இயல்பு படிமுறையாக வளர்ச்சி கண்டது. இது ஆண் தனித்து நிற்கும் வரை தொடர்ச்சியான இயங்கியல் தன்மை கொண்டதாக இருந்தது. உணவு உற்பத்தி மற்றும் உழைக்கும் கைகளை உடைய குழந்தை செல்வம் சார்ந்து பெண் சமுதாயத்தில் உயர்வாக மதிக்கப்பட்டாள்.
அத்துடன் குழுவின் பலம் உழைக்கும் இரண்டு கைகள் சார்ந்து பெருகிய போது, எதிரியை இலகுவாக வெல்வது நடைமுறையாகின்ற போது, குழுவின் உயிர்வாழும் ஆற்றல் பலமான போது குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மை சிறப்புக்குள்ளாகியது. பெண் போற்றப்படுவது சமூக நடைமுறையாகியது. பெண் நிலையாக நிற்பது மேலும் பலப்பட்டு விவசாயத்தை வாழ்வின் ஆதாரமாக்கி, மிருக வளர்ப்பை உருவாக்கிய போது, குழுவின் உயிர் வாழும் ஆற்றல் மேலும் முன்பைவிட பல மடங்கு உயர்ச்சி அடைந்தது. இதைக் கண்டறிந்து செயற்படுத்திய பெண்களின் மதிப்பு சமுதாயத்தில் உயர்ந்த மதிப்பாகியது. இந்த வளர்ச்சியில் பெண் சமுதாயத்தைத் தலைமை தாங்கி நடத்தியது மட்டுமின்றி, புராதான கம்யூனிசத்தைச் சமூகக் கொள்கையாக நடைமுறையில் கொண்டிருந்தாள். எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. அனைத்தும் சமூகத்தின் சொத்தாக நிலவியது. தாயின் தாய்மைக் கூறுகள் சமூகத்தின் கண்ணோட்டமாக நிலவியதால், இந்த உன்னதமான தாயின் நிலை காரணமாக இதைச் சமுதாயம் போற்றிப் பாதுகாத்தது. குழுவின் பாதுகாப்பு முதன்மையானதாகவும். உயிர்வாழும் ஆற்றல் பகிரப்பட்டு செம்மையாக நிலவியது. உற்பத்தியும் அதன் பயன்பாடும் தாய்வழி அமைப்பில் என்றைக்கும் ஒரு தனிமனிதனின் சொத்தாக இருக்கவில்லை. இதுவே தாய்வழிச் சமூகத்தின் சிறப்பான முதன்மையான அம்சமாகும்.
தாய்வழிச் சமூகத்தில் நிலவிய சமூகச் சொத்துரிமை, எப்போது மாற்றப்பட்டதோ அப்போதே தனிச்சொத்துரிமை உருவானது. இங்கு ஆண் அல்லது பெண் மரபு சார்ந்து தலைமை ஏற்ற போது, அவை அனைத்தும் ஆணாதிக்கச் சமூக அமைப்பின் ஒரு வடிவமாகத் திகழ்ந்தது. சமாந்தரமாகச் சமச்சீராக ஆணாதிக்கமும் பெண்ணியமும் ஒரு நாளும் நீடிக்கவில்லை. இங்கு ஒன்று முதன்மைக் கூறாக மற்றது இரண்டாவது கூறாக நீடித்த வளர்ச்சியையும் அழிவையும் சந்தித்தது. சமூகக் கண்ணோட்டம் ஒன்றில் தனிச்சொத்துரிமை ஆணாதிக்கமாகவும் அல்லது பெண்ணின் தலைமையிலான சமூகச் சொத்துரிமை கொண்ட சமூகமாகவே நீடித்தது. இரண்டும் ஒரே நேரத்தில் ஒரே சமூக அமைப்பாக இருக்கவில்லை. ஆனால் சமூகத்தினுள் பல்வேறு கூறுகள் உதிரியாக மட்டும் நீடித்தன. சமூகக் கண்ணோட்டமாக நீடிக்கவில்லை, நீடிக்கமுடியாது. இது எல்லாக் கூறுகளுக்கும் பொருந்தும். ஆனால் இந்த மாற்றம் உலகளவில் ஒரே நாளில் சடுதியாக (விரைவாக ஏற்படவில்லை. உற்பத்தி மற்றும் உழைப்புப் பிரிவினை வௌவேறு பிரதேசத்தில், வௌவேறு காலத்தில் உருவானது போது, ஆணாதிக்கமும் அதற்கு இசைவாகவே இருந்தது.
இதை மறுத்து வரலாற்றைக் குறிப்பாக்கி திரித்துக் காட்டும் வடிவத்தைப் பார்ப்போம். "பெண்கள் மட்டுமே புதிய உயிரை உண்டாக்க முடியும். எனவே அதன் காரணமாகப் பெண்கள் மதிக்கப்பட்டு வந்தனர். இயற்கையின் எல்லாச் சக்தியும் இயற்கையின் மீதான சக்தியும் அவர்களுடையதே" (பக்கம் - 38)
வெறும் உயிரை உண்டாக்கும் (இயந்திரப்) பெண் என்பதால் பெண் மதிக்கப்படவில்லை. மாறாக உயிர்வாழும் போராட்டத்தில் உணவு கிடைப்பதை உறுதி செய்ததாலும் நீடிக்க வைத்த தலைமுறையின் உரைக்கும் ஆற்றல் சார்ந்த தாய்மையின் தொடர்ச்சியாலும் அவள் மதிக்கப் பெற்றாள். பெண் மனித இனத்தின் உயிர்வாழும் ஆற்றலின் மையமாகத் திகழ்ந்தாள். உழைக்கும் இரண்டு கைகளையும், விவசாயம் மற்றும் மிருக வளர்ப்பின் மூலம் சமுதாயத்தின் உயிர் மூச்சை உயர்ந்த நிலைக்கு நகர்த்தினாள். இதற்கு மாறாக இயற்கை மீதான எல்லாச் சக்தியும் அவளுடையதே என்ற அடிப்படையில் மதிக்கப்படவில்லை. மாறாக நிலையாக நிலைத்து வாழத் தொடங்கிய சமுதாயத்தில், இயற்கை மீது தானிய உற்பத்தி மற்றும் மிருக வளர்ப்பை உருவாக்கி மனிதத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆற்றலைப் பெற்ற போதே மதிக்கப்பெற்றாள். அத்துடன் தேவைக்கு ஏற்ப பகிர்வைச் சமுதாயத்தின் ஒழுக்கமாகக் கொண்டு தலைமை தாங்கினாள். இதைப் பெண்கள் தமது வாழ்வு சார்ந்து உழைப்புப் பிரிவினை சார்ந்து சாதிக்க முடிந்தபோதே, பெண்ணின் மதிப்பு மிகவும் உன்னதமான நிலைக்கு உயர்ந்தது. சமுதாயத் தேவையைப் பூர்த்தி செய்வதில், பெண்ணின் குறிப்பானதும் முக்கியமானதுமான உழைப்பு சார்ந்த உற்பத்தியும், உழைப்பை விருத்தி செய்த இனவிருத்தியின் நீடித்த பண்பும், இயல்பாகச் சமூகத்தில் மதிப்புக்கு உரியதாகியது. இதற்கு வெளியில் இதற்கு யாரும் வேறு விதமாகப் பூச்சூட்ட முடியாது.
அடுத்த திரிபைப் பார்ப்போம். "எண்ணற்ற பண்டைக்காலப் புராணக் கதைகள் பெண்களிடமிருந்து அல்லது பெண் கடவுள்களிடமிருந்துதான் மொழி பிறந்தது என்று கூறுகின்றன" (பக்கம் 191) என்று புராணக் கதைகள் மற்றும் கல்விக்கான பெண் கடவுளை ஆதாரமாக வைக்கின்றார்.
மொழியை ஆண் அல்லது பெண் உருவாக்கியதாகக் கூறுவது ஓர் எல்லைக்குட்பட்ட எடுகோள்தான். இந்த நூல் பார்க்க மறுத்த தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான நெருக்கமான உறவு, மொழிக்கான முயற்சியில் மிக தீர்க்கமான பங்கை ஆற்றியிருக்கும். இதில் குழந்தை கூடுதலாகத் தாயிடம் தனது தேவையைக் கோருவதை அடிப்படையாகக் கொண்டிருக்கும். குழந்தையின் உந்துதல்தான், தாயின் மொழியாகின்றது. இதில் ஆண் - பெண் குழந்தைக்கு இடையில் பேதம் இருந்ததில்லை. தாய் குழந்தை மேல் ஆண் - பெண் பேதத்தைக் காட்டியதில்லை.
சமுதாயத்தில் மிக நெருக்கமான தாய் - குழந்தை உறவில், குழந்தை தாயை நோக்கிய உள்ளுணர்வுடன் கூடிய தேவை மொழிக்கான முதல் முயற்சியாக இருந்திருக்கும். மனித உணர்ச்சி உடலில் பிரதிபலித்து, அதுவே தாள கதியாகின்ற போது மொழிக்கு அஸ்திவாரமிட்டது. ஆனால் இந்த மொழி உணர்ச்சி சார்ந்த மிக குறுகிய மொழி குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் மட்டும் பெரும்பாலும் நீடித்தது. இதை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் அனுபவத்தை, அதை வெளிப்படுத்தும் ஆற்றலை உருவாக்குகின்றது. ஆனால் மொழியின் விரிவாக்கம் சமூக வாழ்வில், சமுதாயத்தின் ஒன்றுபட்ட உழைக்கும் வாழ்வுக்கான போராட்டத்தில் இருந்து பரிணாமித்தது. உழைப்பையும், உழைப்புக்குப் பயன்படும் பொருட்களை விளக்கவும், புரிய வைக்கவும் முயன்ற போது மொழி உயர்ந்த கட்டத்துக்கு வளர்ச்சி பெற்றது.
முதலில் குழந்தை தாய் உறவில் மொழி ஓர் அர்த்தமற்ற கத்தலாக, கொஞ்சலாக, கெஞ்சலாக, கோரிக்கையாக, பாசம் நிறைந்த உணர்ச்சியாக வெளிப்பட்டதில் இருந்து, மொழி பொருள்சார்ந்து உழைப்பைக் கையாள்வதில் இருந்து சீர்பட்டு அர்த்தமுள்ள பொருள் சார்ந்தே வளர்ச்சி பெற்றது. அதாவது மொழி பொருள்சார்ந்து அதற்குரிய அர்த்தமாகிய போது, சீர்பட்ட ஓசைகள் ஒரு பொது மொழியாகின்றது.
பெண்ணின் அடிமைத்தனத்துக்குக் காரணமாகக் கூறும் முந்தைய வாதத்துக்கு முரண்பாடான திரிபு ஒன்றைப் பார்ப்போம். பெண்களைக் கற்பழித்தே தனிப்பட்ட ஆண் தொடங்கி ஆணாதிக்கச் சமூகம் தமது மேலாண்மையை நிறுவியது (பக்கம்-111)
"வரலாற்றுக்கு முந்திய காலத்தில் பாலியல் ரீதியான பலாத்காரமும் நடைபெறாமல் இருக்கவில்லை" (பக்கம்-29)
ஆணாதிக்கத்தைப் பெண் மீதான கற்பழிப்பில் நிறுவப்பட்டதாகக் கூறி புனைவது, இயற்கையின் வரலாற்று இயங்கியலை மறுப்பதாகும். கற்பழிப்பது என்பது ஆணாதிக்கத்தால் இறுகிய ஒரு சமுதாயத்தின் குறித்த பண்பேயாகும். தனிச் சொத்துரிமை அமைப்பில் பெண்ணை அடிமையாக்கி பின் ஏற்பட்ட பாலியல் ரீதியான பிளவும், பாலியல் மறுப்பும், திருமணம் என்ற பெயரில் உள்ள விபச்சாரமும் கற்பழிப்பின் ஊற்று மூலங்களாகும். ஒரு பெண்ணின் மீதான பலாத்காரம் முதல் கற்பழிப்பு வரை, தனிச்சொத்துரிமை என்ற கண்ணோட்டம் சார்ந்தே சமூகத்தில் நடைமுறையாகியது.
தனிச்சொத்துரிமைக்கு முந்திய தாய்வழிச் சமூகத்தில் தாயின் ஆட்சியிலும் கற்பழிப்பு என்பது, நகைப்புக்குரிய ஒரு கண்மூடித்தனமான எடுகோளாகும். காதல் கூட தனிச்சொத்துரிமை அமைப்பில் வரைமுறையற்ற கற்பழிப்புக்கு எதிர் நிலையில் உருவான ஒரு குறித்த பண்பாகும். (சமுதாயத்தில் சில விலக்குகள் இருந்தது.) ஆண் - பெண் புணர்ச்சி நிலவிய சமுதாயத்தில், தனிச்சொத்துரிமை புகுந்த போது சொத்துடைய வர்க்கம் அதைத் தனது நலனுக்கு இசைவாக்கியது. வரைமுறையற்ற பாலியல் நடைமுறையைச் சொத்துரிமை சார்ந்து சொத்துடைய வர்க்கம் கற்பழிப்பாக மாற்றியது. இங்கு பெண்ணின் உணர்வைச் சொத்துரிமை மறுக்கின்ற போதே, முந்தைய சமுதாயத்தில் இருந்து வேறுபட்டு கற்பழிப்பாகியது.
பெண் தன் மீதான கற்பழிப்பைத் தடுக்கும் தற்காப்பில் நின்று உருவாக்கிய ஓர் உணர்ச்சி காதலாகும். பெண்ணைத் தனிச்சொத்துரிமை கண்ணோட்டத்தில் அடிமைப்படுத்திய பின்புதான், கற்பழிப்பு நடக்கத் தொடங்கியது. தனிச்சொத்துரிமை வளர்ச்சியடைய, பெண் அடிமைத்தனம் ஒரு சமூக ஒழுக்கமாகியது. ஆணாதிக்கச் சமூகச் சொத்துரிமையால் தூக்கி எறியப்பட்டுத் தனிச் சொத்துரிமை சார்ந்த வாரிசு உரிமையில் பங்காற்ற முடியாத பெண்கள், விபச்சாரம் என்ற நிலைக்குள் ஆணாதிக்க அமைப்பு தள்ளிச் சென்றது. இதன் மூலம் வரைமுறையற்ற புணர்ச்சியைச் சொத்துடைய ஆணாதிக்கம் தக்கவைத்தது. இதைப் பெண்களுக்குச் சொத்துடைமை சார்ந்து மறுத்ததுடன், இருதார இணை (பரஸ்பரம் காதலிப்பதை) மணத்தை அழித்து ஒருதார மணமான திருமணத்தை உருவாக்கி அதையும் விபச்சாரமாக்கியது. விபச்சாரம் மனிதச் சமுதாயத்தின் ஒரு சாரமாகியது.
இதற்கு மாறாகப் பெண்கள் மீதான கற்பழிப்பைச் செய்து பின்பு பெண்ணை அடிமைப்படுத்தவில்லை. பெண் வழிச் சமுதாயத்தில் கற்பழிப்பு என்பது நினைத்தே பார்க்க முடியாத ஒன்றாகும். சில மரபுகள் சார்ந்து இன்று கூட விரும்பிய ஆண் விரும்பிய பெண்ணைப் புணர்வதும், இதை அடிக்கடி மாற்றிக் கொள்வதும் எதார்த்தத்தில் காணப்படுகின்றது. அதாவது நான் சொத்துடைய இன்றைய வர்க்கத்தின் வரைமுறையற்ற நுகர்வு விபச்சாரத்தைக் குறிப்பிடவில்லை. மாறாக நாகரிகம் எட்டாத மிக வறிய கிராமங்களில் நடக்கும், சில மரபு சார்ந்த இயற்கையான உறவைக் குறிப்பிடுகின்றேன். நூலின் முன் பகுதியில் இவை பற்றிய ஆதாரத்தையும் தந்துள்ளேன்.
எந்தப் பெண்ணும் எந்த ஆணையும் உரிமை கொள்ளாத சமுதாயத்தில், கற்பழிப்பு என்பது கற்பனையே. கற்பழித்த பின் தான் பெண்ணை ஆண் அடிமைப்படுத்தினான் என்பது ஒரு கற்பனையே. பெண்ணை அடிமைப்படுத்திய பின்புதான் கற்பழிப்புகள் நடந்தன என்பதே மனித இனத்தின் வரலாறாகும்.
ஆணாதிக்கம் எப்படி உருவானது என்று கூறும் மற்றொரு திரிபைப் பார்ப்போம். "பெண் இனத்தினுடைய அதிகாரத்தின் சவாலை ஏற்றுக் கொள்வதற்கு ஆணின் செருக்கு பொங்கி எழுந்தது. வருகின்ற ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பாலியலையும் சமுதாயங்களையும் பிரிப்பதற்கான பாலியல் போரைத் துவங்கியதன் மூலம், மனிதன் பெண்ணை ஆற்றல் மிக்க அன்னையாகவும் பெண் தெய்வமாகவும், போர்ப்படையாளியாகவும், காதலியாகவும் மற்றும் அரசியாகயாகவும் ஆக்கிய அனைத்துக்கும் சாவு மணியடித்து அழிப்பதன் மூலம் தனது ஆண் தன்மையை வலியுறுத்துவதற்கு முயன்றான்." (பக்கம்-68)
"பாலியல் போரில் பெண்களின் உடம்புகள் இத்தகைய ஒரு கேந்திரமான போர்க்களமாக மாறியதேன்? இதற்கான பதில் மேலாதிக்கத்திற்கான ஆணினத்தினுடைய போராட்டத்தின் மையத்தில் அடங்கியுள்ளது. பெண்களைத் தனிப்பிரிவாக வேறுபட்டவர்களாக, தாழ்ந்தவர்களாக, கீழ்ப்பட்டவர்களாகக் குறிப்பிட்டதன் மூலம் மனித இனத்தின் வரலாற்றில் முதலாவது மற்றும் மிகப் பெரிய ஒதுக்கப்பட்ட பிரிவாக்கினர்." (பக்கம்-150)
பெண்ணை அடிமைப்படுத்த ஆணின் பாலியல் போரும், செருக்கும், மேலாதிக்கமும்தான் காரணம் என்ற வாதம் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தையே மறுக்கின்றது. அத்துடன் தனிப்பிரிவாக, தாழ்ந்தவர்களாக, கீழ்ப்பட்டவர்களாக, வேறுபட்டவர்களாகக் காட்டியதன் ழுலம், அடிமைப்படுத்தினர் என்பது பொருளை மறுக்கின்ற அர்த்தமற்ற கற்பனைப் புனைவாகும்.
பாலியல் போரை ஆண் நடத்தினான் எனின், கற்பனையான அழகான ப+ச்சூடல்தான். பாலியலே மனித வரலாற்றின் தத்துவம் என்பதும் பெண்ணின் அடிமைத் தனத்துக்கு அதுதான் அடிப்படை என்பதும் இன்றைய உலகமயமாதலின் வெட்டுமுகம்தான். பால் ரீதியான வேறுபாடு பாலியல் போரை நடத்துவதற்கான எந்த அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை. உயிரினத் தொகுதிகளில் ஒரே உயிரினத்தில் ஆண் பெண் என்ற ஒற்றைத் தொகுதியில் தொடங்கி உருவான ஆண் - பெண் என்ற வேறுபட்ட உயிர்ப் பிரிவில் என்றைக்கும் பாலியல் யுத்தம் நடக்கவில்லை.
பாலியல் எப்போதும் ஆண் - பெண் உறவில் தீர்க்கமானதாகவும், நேசத்துக்குரியதாகவும் இருந்துள்ளது. ஆண் - பெண்ணின் நெருக்கமான பிணைப்பு, சமூக உருவாக்கத்தை மேலும் ஆழமாக்கியது. உயிர் வாழ்வதற்கான போராட்டத்திலும், உணவைத் தேடும் போராட்டத்திலும் சமூகக் கூட்டுணர்வு நிலவிய போது, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மிக நெருங்கிய உறவு அச்சமூகத்தின் ஐக்கியத்தைத் தொடர்ச்சியாகப் பலமாக்கியது. இங்கு பெண் தரித்து நின்ற காலத்திலும், ஆண் வேட்டைக்குச் சென்ற நிலையிலும் கூட இந்த உறவு என்றைக்கும் பிரிந்து சென்றதில்லை.
ஆண் - பெண்ணுக்கிடையில் பாலியல் போர் நடந்தது என்பது கற்பனை ஆகும். இது போன்று ஆணின் செருக்கு பெண்ணை அடிமைப்படுத்தியது என்பதும் கற்பனையாகும். செருக்கு என்பது தனிச் சொத்துரிமை அமைப்புக்கே உரிய ஒன்றாகும் தனிச்சொத்துரிமை அமைப்புக்கு முன்பு செருக்கு இருந்தது என்பது வெற்று வெட்டித்தனமாகும். அதற்கு முன் செருக்கு ஏற்படுவதற்குச் சமூக அடிப்படை எதுவும் கிடையாது. உழைப்பும் அதன் பயன்பாடும் சமூகச் சொத்துரிமையாக இருந்த வரை, செருக்கு இருந்தது என்பது சமூக அடிப்படையற்ற ஒன்றாகும். தனிச் சொத்துரிமை தான் தனது மேலாண்மை சார்ந்து செருக்கு என்ற புதிய உணர்வை உண்டாக்குகின்றது. செருக்கு என்ற உணர்வுக்கு முன்பே பெண் அடிமையாகிவிட்டாள். செருக்கு, பாலியல் அடிமைத்தனம் என்பன ஆணாதிக்க அமைப்பில் உருவானவை. எந்த வரலாற்றிலும் ஒரு பாலியல் போர் நடக்கவில்லை. ஆணாதிக்க வரலாற்றில் பாலியல் அடிமைத்தனமும், சேவைத்தனமும், நூகர்வும் விபச்சார உணர்வுக்குள் அரங்கேறுகின்றது.
தாழ்ந்தவர்கள், கீழ்ப்பட்டவர்கள், வேறுபட்டவர்கள் எனக் காட்டி பெண்ணைத் தனிப்பிரிவாக மாற்றி ஆணாதிக்கத்தை ஆண்கள் நிறுவியது என்பது நல்ல மாஜிக் வித்தையாகும். எதையும் எப்படியும் கற்பனையில் மாற்றிவிடவோ, உருவாக்கிவிடவோ முடியாது. மாற்ற வேண்டுமாயின் அதற்குச் சில அடிப்படையான செயல்பாடுகள் தேவை. இது உணர்வில் இருந்து பொருளை உற்பத்தி செய்யும் செயல் வரை பொருந்தும். பெண்கள் தாழ்ந்தவர்களாக, கீழ்ப்பட்டவர்களாக, வேறுபட்டவர்களாக, தனிப்பிரிவாக இன்று வாழ்கின்றனர் எனின், அது ஆணின் விருப்பங்கள் என்ற உணர்வு மாற்றி விடவில்லை. ஆணுக்கு அப்படி ஒரு விருப்ப உணர்வு வரவேண்டுமாயின் கூட, அது கற்பனையில் உருவாக முடியாது. விருப்பங்கள் தனிச்சொத்துடைமை அமைப்பில்தான், அடிமைப்படுத்தும் கண்ணோட்டத்துக்கு அடிப்படையாகின்றது. இதுவே பின்னாள் மனித இனத்துக்கு எதிரான, இயற்கைக்கும் எதிரான உணர்ச்சிகளை உருவாக்குகின்றது.
மனிதச் சிந்தனை ஆற்றல் எப்படி உருவானது? என்பதை எப்படி திரிக்கின்றார் என்று பார்ப்போம். மாதவிடாய்க்கும் சந்திரனின் பிறைக்கும் இடையில் தொடர்புபடுத்தி பெண் அரூபமானதை உணர்ந்து கொள்ளவும், இணைப்புகளை ஏற்படுத்தவும், உருவக ரீதியில் சிந்திப்பதற்கான ஆற்றலைத் தூண்டிவிட்டன (பக்கம் - 17) என்ற கூற்று நகைப்புக்குரியது.
பெண்ணின் மாதவிடாய்க்கும் சந்திரனின் பிறைக்கும் தொடர்பற்ற ஒரு நிலையில், கற்பனைக் கனவுகள் ஒருதலைபட்சமாகப் பெண்ணை உயர்த்திக் காட்டுவதில் திரிபடைகின்றது. பிறை ஓர் ஒழுங்குமுறைக்கு ஊடாக, கோள்களின் சுழற்சியில் ஏற்படுகின்றது. ஆனால் மாதவிடாய் வரைமுறையற்ற, ஒழுங்கற்ற முறையில் பெண்களிடையே உருவாவதுடன், தனிப்பட்ட பெண்ணுக்கு மட்டும் ஒழுங்குக்கு உட்படுகின்றது. இதிலும் மாதவிடாய் தடைப்படும் போது ஒழுங்கு குலைந்து புதிய வடிவில் ஒழுங்குக்கு வருகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு, பிறையுடன் எந்த விதத்திலும் பொருத்திப் பார்க்க முடியாது. அத்துடன் மாதவிடாயும், பிறையும் எண்ணிக்கையில் ஒரே நாட்களை அடிப்படையாகக் கொண்ட சுழற்சியை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
இந்த நிலையில் இதனுடன் பொருந்திய பெண் சிந்திப்பதற்கான ஆற்றலைப் பெற்றாள் என்பது கற்பனையானது. சிந்தனையின் ஆற்றல் என்பது உணவைத் தேடுவது எப்படி என்ற அடிப்படையில் இருந்து தொடங்குகின்றது. உணவை இயற்கையிலும், செயற்கையில் கருவிகளைக் கொண்டும் பெறுவது எப்படி என்ற அடிப்படையில் இருந்து பரிணமிக்கின்றது. இதற்கு வெளியில் இருந்து அல்ல. சிந்தனை பொருளைக் குறித்து அதன் செயல்பாடுகளைக் குறித்து அதை எப்படி மாற்றி அமைப்பது? என்ற வடிவில் மொழியாக வளர்ச்சி பெற்றது. இதற்கு வெளியில் இருந்து அல்ல. உணவை எப்படி பெறுவது என்பதில் சிந்தனை பரிணமிக்கின்றது.
குரங்கில் இருந்து மனிதனாக மாறிய படிநிலையிலும் சரி, அடுத்தடுத்த மனித முன்னேற்றத்திலும் சரி உணவைத் தேடும் உழைப்பு சார்ந்தே சிந்தனை வளர்ச்சி பெற்றது. இது இயற்கையான பொருள் மேலானதாக அதன் மேலான உழைப்பு சார்ந்ததாக இருந்தது. தனிச்சொத்துரிமை அமைப்பு உருவான பின்பு, கருத்துமுதல்வாதம் உள்ளடங்கிய வகையில் உபரியை எப்படி எந்த தளத்தில் பெறுவது சார்ந்து சிந்தனை திரிபடைந்து பிரிவடைகின்றது. இதற்கு முந்திய சிந்தனை இயற்கை மீதானதாகவே எப்போதும் இருந்தது.
தொடர்ந்து கோட்பாடு ரீதியாக ஆணாதிக்கத்தைக் காப்பாற்ற பெண் பற்றி கற்பனையான பிரமிப்புகளை முன்வைப்பதைப் பார்ப்போம். "முதலாவது (ஆதிகாலப் பெண்) பெண் சிற்றின்ப வேட்கையை மாதவிடாயாக மாற்றுவதற்குக் கற்றுக் கொண்டாள். இது அவளை ஆணுக்கு ஆண்டு முழுவதும் பாலின ரீதியில் நுகரச் செய்வதற்கு அனுகூலமாக்கியது." (பக்கம்-20)
என்ன வேடிக்கையான வாதம். சரி எப்படி பெண் சிற்றின்ப வேட்கையைக் கற்றுக் கொள்ளமுடிந்தது? எப்படி மாற்றி அமைக்க முடிந்தது? உயிரினத் தொகுதி தனது உயிhவாழும் ஆற்றலுக்கான உந்துதல், அதனால் மனிதன் தனது உழைப்பைக் கொண்டு வாழ முடிந்த போது, தனது உடலை அதற்கு இசைவாக நீண்ட பல படிநிலைகளில் மாற்றிக் கொள்ள முனைகின்றான். இதனால் உடற்கூறுகள் மனித உழைப்புச் சார்ந்தும், உயிர்வாழும் ஆற்றல் சார்ந்தும் பரிணாமம் அடைகின்றது. இது நின்றுவிடாது தொடர்கின்றது. இதில் பாலியல் கூறும் ஒன்று.
பெண் - ஆண் என இருவரும் பாலியல் உறவு கொள்ளும் வகையில் சமச்சீராகவே ஒரே உயிரியல் தொகுதியில் தன்னைத் தான் வாழும் முறை சார்ந்த பரிணாமத்துக்கு இசைவாக மாற்றி அமைக்கின்றது. இதைப் பெண் மட்டும் தனக்குச் சார்பாக விரும்பியவாறு மாற்றவில்லை, மாற்றவும் முடியாது. மிருகத்தில் இருந்து பிரிந்த மனித இனத்தில், உழைப்புக்கும் இயற்கைக்கும் உள்ள உறவே உடல்ரீதியான மாற்றத்தை உருவாக்குகின்றது.
இதைப் போன்ற மற்றொரு கற்பனையாகக் கூறியதைப் பார்ப்போம். "அம்மண மனிதக் குரங்கு பற்றிக் கவனத்தை ஈர்க்கத்தக்க வகையில் விளங்குவது போன்று, பெண் மார்பகங்களை வளர்த்துக் கொண்டதன் மூலம் புணர்ச்சியை மேலும் இன்பகரமாக்கும், இந்த விருப்பத்திற்கு விட்டுக் கொடுத்தது." (பக்கம் - 20)
என்ன வக்கிரமான இன்றைய ஏகாதிபத்திய நக்குவாதம். பெண் மார்பகத்தை இன்பம் தரும் பாலியல் கூறாக மாற்றினாள் என்றால் அதுவும் ஒரு கற்பனையே. ஓர் உறுப்பைப் பாலியல் கூறாக மாற்றமுடியாது. பாலியல் கூறு என்பது இயற்கையான இனப்பெருக்கம் சார்ந்தது. மார்புகள் தாய்மைக் கூறில் திகழும் முக்கியமான உணவூட்டும் ஓர் அங்கம். குழந்தையின் உயிர்வாழ்வுக்கு மிக முக்கியமான அடிப்படையான உறுப்பாகும்.
உண்மையில் மார்பகம் குழந்தைக்குப் பால் கொடுக்கும் ஓர் உறுப்பு மட்டுமேயாகும். அது இயற்கையாகவே குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குகின்றது. குழந்தை அதன் வெதுவெதுப்பில் தூங்கி வாழும் மென்மையான தங்குமிடம் மேனியாகின்றது. இது பாலியல் உறவில் குறிப்பான பாலியல் உறுப்பு அல்ல. எந்த மிருகமும் இதைப் பாலியல் உறுப்பாகக் கருதி புணர்வதில்லை. நவீன மூலதனத்தினால் புட்டிப்பால் வர, முன்பு மார்பகத்தின் முக்கியத்துவம் திரிபுகள் இருந்த போதும் பின்பு தெளிவாகப் பளிச்சென இருந்தது. பெண்ணின் மார்பு பற்றிய நவீன புனைவுகள் அனைத்தும் ஆணாதிக்க அமைப்பில் ஏற்பட்ட வக்கிரங்களே.
ஒரு பெண்ணைக் கற்பழிக்க எண்ணும் கண்ணோட்டம் போன்று, பெண்ணின் மார்பு பற்றி கூறப்பட்ட பல நிலப்பிரபுத்துவ உற்பத்தி சார்ந்த பாடல்கள் காணப்படுகின்றது. முதலாளித்துவம் இதைப் பின்னால் நவீனப்படுத்தியது. உண்மையில் ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் மார்பு பற்றிய கற்பனைப் புனைவுகள், படிப்படியாக ஆண் - பெண் சிந்தனைத் தளத்தில் பாலியல் உறுப்பாக மாறுகின்றது.
உண்மையில் ஆணாதிக்கச் சிந்தனைத் தளத்தில், மார்பகம் ஒரு பாலியல் உறுப்பாக மாற்றப்பட்டதே ஒழிய, அதற்குரிய இயற்கையான சமூகத் தேவையின் அடிப்படையில் இருந்து அல்ல. குழந்தைக்குப் பால் கொடுப்பதை மறுக்கின்றது. ஆணாதிக்கச் சிந்தனைக்குத் தீனி போடுகின்றது. மார்பகத்தைப் பெண் வளர்த்துள்ளாள் என்பதன் மூலம் மார்பகம் சிறுத்த பெண்களை ஆணாதிக்க இழிவாடலுக்குள் இட்டுச் செல்லுகின்றது. இது மட்டுமா? இன்று செயற்கையாகவே மார்பகம் செய்யப்படுகின்றது. பெண்ணின் மார்பகத்தை ஆணாதிக்கம் பாலியல் உறுப்பாக்கியதால், மூலதன்ம தனது விளம்பரத்தின் மையமான இருப்பிடம் ஆக்கிவிட்டது.
அடுத்து மற்றொரு உயிரியல் உறுப்பைப் பற்றிய திரிபைப் பார்ப்போம். "பெண்கள்தான் மனித இனமேயாவர். சக்தி வாய்ந்த தொடக்கப் பாலினமாவர். ஆண்மகன் உயிரியல் ரீதியில் பின்னர் ஏற்பட்டவனேயாகும்." (பக்கம்-4)
இதற்குக் கருவுறும் நிகழ்வின் போது பெண்ணை உருவாக்கும் ஒரே இணையானப் பாலினக் கூறு ஓஓ இலகுவாக இணைவதாகவும் ஆணை உருவாக்கும் வேறுபட்ட இணையான பாலினக் கூறு ஓலு வேற்றுமைக்கிடையில் இணைவதையும் எடுத்துக்காட்டுகின்றார். கரு இணைவில் உள்ள வேறுபாடுகளைக் கொண்டு ஆண்கள் உயிரியல் ரீதியில் உருத்திரிந்தவர்கள் என்றும், வழிவிலகி தோன்றியவர்கள் என்றும் காட்டுகின்றார். உண்மையில் அறிவியல் ஆராய்ச்சிகளை ஆணாதிக்கம் போன்று, சீரழிந்த பெண்ணியவாதிகள் போன்று திரித்துக் காட்டுகின்றார்.
மனிதன் மனிதனாக எப்போதும் தோன்றி விடவில்லை. மாறாக நீண்ட நெடிய பரிணாம வளர்ச்சியில் தோன்றிவன். இனவிருத்தி என்ற அடிப்படை இன்றி உயிரினங்கள் முன்னேறி இருக்கவில்லை. இங்கு ஆண் - பெண் என்ற இரு அடிப்படைக் கூறுகளும் எப்போதும் இருந்து வந்துள்ளது. ஓரணு உயிரில் (அமீபாவில்) இருந்து இதன் செயற்பாடு இருந்துள்ளது. பெண் மட்டும் முதலில் தோன்றி ஆணை பெத்துப் போடவில்லை. இது கடவுள் என்ற கற்பனையின் கருத்துமுதல்வாதத்துக்கு இட்டுச் செல்லுகின்றது. பெண் மட்டும் முதலில் தோன்றினாள் என்றால், எங்கிருந்து? எப்படி? ஏன் தோன்றினாள்? எப்படி இனப்பெருக்கம் நடைபெற்றது? பெண்ணுக்குத் தாயும் தந்தையும் இல்லையா? தாய் மட்டுமே இருந்தாளா?
பெண்ணில் இருந்து உருத்திரிந்த உயிரே ஆண் என்பதும், வழிதவறியவர்கள் என்பதும் உண்மையில் ஆணாதிக்க அமைப்பில் தத்தம் நிலையைத் திரித்துக் காட்ட எடுக்கும் முயற்சியாகும். உயிரியல் கூறு எங்கும் எல்லாவற்றிலும் ஆண் - பெண் கூறு பிரிந்தே காணப்படுகின்றதே ஒழிய உருத்திரிந்து வழிதவறி பிறக்கவில்லை. பெண் முதலில் தோன்றினாள் என்பது, உருத்திரிந்தது என்றால், இந்தக் கற்பனை உலக அதிசயம்தான். உருத்திரிந்த வழிவிலகிய உயிரினம் எப்படி பெண்ணுடன் பாலியலில் உறவு கொள்ளும் வகையில் எப்படி உருத்திரிந்தாள்? எப்படி பெண் அதற்கு இசைவாக மீள உருக்குலைந்தாள். இவை அனைத்தும் பொருளற்ற கருத்துமுதல்வாதமாகும். இதை ஆணாதிக்கம் போல் ஜோடித்துக் காட்டவே இந்த நூல் முனைகின்றது. மனிதனைக் கடவுள் ஆணாதிக்கவாதியாக அதற்கு இசைவாக எப்படி தோற்றுவித்தானோ, அதே போல்தான் இதுவும்.
உணர்வுகளும் உணர்ச்சிகளும் உருவான சமூகப் பொருளாதார அடிப்படைக்கு நேர் எதிராகக் காட்ட முனைவதைப் பார்ப்போம். "எதார்த்தத்தில் ஆரம்பக்கால ஆண்கள், ஆரம்பக் காலப் பெண்களைப் போன்றே மற்றவர்களிடம் எவ்வாறு அன்பு செலுத்துவது என்பதைக் கற்றுக் கொண்ட போதுதான் மனிதத் தன்மை உடையவர்களாயினர்." (பக்கம்-28)
பெண்கள் எப்படி அன்பு செலுத்துவது என்பதைப் புரிந்தே ஆண்கள் அதைக் கற்றனர் என்பதும், அதில் இருந்து மனிதத் தன்மை உருவானது என்பதும் மற்றொரு திரிபாகும்.
மனிதத் தன்மை என்பது என்ன? அன்பு என்பது என்ன? மிருகத்துக்கும் மனிதனுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டையே இது திரிக்கின்றது. அன்பு மனிதனுக்கு உரிய பண்பு அல்ல. அது சொத்துடைமைக்கு உரிய பண்பு. மனிதனையும் மிருகத்தையும் எது பிரிக்கின்றது நிச்சயமாக அன்பும் அதனால் உருவானதாக காட்டும் மனிதத்தன்மையும் அல்ல.
மனிதன் என்பவன் இயற்கை மீதான உழைப்பு என்பதில் இருந்தே, மிருகத்திடமிருந்து தெளிவாகத் தன்னை வேறுபடுத்துகின்றான். அன்று முதல் அவன் மனிதன் தான். இங்கு சமுதாயத்தின் கூட்டு உழைப்பும், கூட்டுச் சமுதாயக் கண்ணோட்டமும் உன்னதமான மனிதப் பண்பாக இருந்தது. இது அன்பு, பொறாமை, வெறுப்பு, காதல், மனிதத் தன்மை என்ற எந்த உள்ளடக்கமும் அற்றது. சமுதாயத்தின் இருப்பு, வாழ்வு அதன் பாதுகாப்பே மனிதப் பண்பாக இருந்தது. இங்கு யாரையும் யாரும் அடிமைப்படுத்தவும் இல்லை, அடக்கவும் இல்லை. இதுதான் இயற்கையான உயர்ந்த மனிதப் பண்பாகும். இந்தப் பண்புதான் மிக உயர்ந்த சமுதாய வடிவமும் ஆகும். இதைப் பிந்திய எந்த மனித வரலாறும் இந்தளவுக்கு உயர்ந்த மனிதப் பண்பைக் கொண்டிருக்கவில்லை.
இதை மறுத்து அன்பு மூலம் மனிதப் பண்பைப் பெண் கற்றுக் கொடுத்தாள் என்பது, மிகக் கீழ்த்தரமான ஆணாதிக்க வாதமாகும். அன்பு என்பது சொத்துடைமை வர்க்கத்தில் சொத்துடைமை சார்ந்து உருவான ஓர் உணர்வே. எல்லோருக்கும் பதில் குறிப்பாக அன்பு செலுத்தும் மானிடப் பண்பு சொத்துடைமையின் குறித்த பண்பாகும். மனித இனத்தின் அன்பு செலுத்தும் பண்பு, சொத்துடைமைக்கு எதிரானது. இங்கு அன்பு என்பது அர்த்தம் இழந்து போகின்றது. வர்க்கமற்ற சமுதாயத்தில் ஜனநாயகம், அரசு எப்படி அர்த்தமற்ற கற்பிதமாகி விடுகின்றதோ, அதே போல் அன்புக்கும் நிகழும். அன்பு என்பது சிலரை மட்டும் நேசித்து, பலரை நேசிக்க மறுப்பதில் இருந்து உருவான ஒரு சமூகப் பொருளாதாரப் பண்பே.
தாய்க்கும் குழந்தைக்கும் இடைப்பட்ட உணர்வு இயற்கையான ஒரு சமுதாயப் பிணைப்புதான். செயற்கையான பிணைப்பு அல்ல. இதை அன்பு என்று வரையறுக்க முடியாது. அன்பு என்பது சமூகப் பொருளாதாரத் தனிச் சொத்துரிமை அமைப்பால் குறிப்பான அர்த்தம் பெற்று உருவாகும் முன்பே, தாய் - குழந்தை உறவு இருந்தது. அதாவது உயிரினங்களிடையே எப்படி குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் உறவு நீடிக்கின்றதோ, அது மனிதனுக்கும் பொருந்தும்.
தனிச்சொத்துரிமை அமைப்பு உருவாகும் வரை என்றைக்கும் எப்போதும் அன்பு என்பதும், மனிதத் தன்மை என்பதும் விவாதத்துக்கு உரிய மனித நடத்தைக்கு உரிய உரு பொருளோ அல்லது அது ஓர் உணர்ச்சியோ அல்ல. அன்பு, மனிதத் தன்மை, பொறாமை, ஏக்கம் என அனைத்தும் தனிச் சொத்துரிமை அமைப்புக்குரிய சிறப்பான மனிதப் பிளவு சார்ந்த உணர்ச்சிகளாகும். இருப்பவனுக்கும் - இல்லாதவனுக்கும், அடக்குபவனுக்கும் - அடங்குபவனுக்கும் இடையிலான பல்வேறுபட்ட உணர்ச்சிகளாகும்.
அடுத்து உயிரியல் கூறு சார்ந்த மற்றொரு திரிபைப் பார்ப்போம். மனிதனின் வலது கை பயன்பாட்டுக்குப் பெண்கள் குழந்தைகளை இடது கையால் எடுத்துச் சென்றதால் ஏற்பட்டது என்கின்றனர். இதில் இடது கையால் இடது பக்கத்தில் எடுத்துச் செல்ல முக்கிய காரணம், இதயத் துடிப்பால் குழந்தைக்கு ஆறுதல் கொடுக்க முடியும் என்பதால், அதைப் பெண்கள் செய்தனர் என கூறப்படுகின்றது. (பக்கம் - 14)
இதயத் துடிப்பை உள்ளடக்கிய உள் உணர்ச்சி சார்ந்து, பெண்கள் இயல்புணர்ச்சிக்கு உட்பட்டு இதைச் செய்தனர் எனின் இது வரலாற்று இயங்கியலுக்குப் பொருந்தி வரவில்லை. சரிபாதியான ஆண்கள் ஏன் வலது கைப் பழக்கமாக இருக்கின்றனர் என்பதை இது விளக்கவில்லை. ஆண்கள் இரண்டு கைப் பழக்கத்தையும் கொண்டவராக இருந்திருக்க வேண்டும். தாய்மைப் பண்பு போன்று பெண்களுக்கு மட்டுமே இது சிறப்பாகப் பொருந்தியிருக்க வேண்டும். இது பொருந்தாத போது இது பெண்ணுக்கு எதிராகவே மாறிவிடுகின்றது. இத்துடன் பெண்ணின் கருத்தரிப்பு காலம், குழந்தையைத் தன் மார்பில் வைத்திருந்த காலம், பெண்ணின் ஆயுளில் மிக குறைவான காலமாகும். இன்று உள்ளது போல் அன்றி, குழந்தை நேரடியாகத் தாயைச் சார்ந்து வாழ்ந்த காலம் மிகக் குறுகியது.
எந்தக் கையால் அதிகம் உழைப்பது என்பதைப் பெண்ணின் தாய்மை தீர்மானிக்கவில்லை. குழந்தையைத் தூக்கி வைத்திருக்கும் காலம் கூட நகர்ச்சியின் போதும், விதிவிலக்கான நிலைகளில் மட்டுமே நிகழ்ந்தது. மிகக் குறுகிய பலத்த இடைவெளிக்கு இடையில் சமுதாயத்தில் சிலர் மட்டும் குழந்தையைத் தூக்கிச் சென்ற வடிவம், நிச்சயமாக வலது கைப் பழக்கத்தை உருவாக்க முடியாது. அதுவும் பெண் ஆணைப் போல் வேட்டையாடி வாழ வேண்டிய நிலையில் இருந்தாள்.
குரங்கில் இருந்து மனிதனாகத் தோன்றிய பல இடைநிலை வடிவங்களைக் கடந்த போதும், குழந்தையே தாயைப் பிடித்துக் கொள்ளும் பழக்கம் நீடித்தே இருந்திருக்கும். இது உழைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வசதியானதாகவும், பாதுகாப்பானதாகவும், தற்காப்பானதாகவும் இருந்திருக்கும். மனித உழைப்புக்கு ஏற்ப மனிதன் பரிணாமம் அடைந்த போது, குழந்தை தாயைக் கவ்விப் பிடிக்கும் ஆற்றலை இழந்தது. அதாவது கை உழைப்புக்கு ஏற்ப தன்னை இசைவாக்கிய போது, குழந்தை தாயைக் கையால் பிடித்திருக்கும் ஆற்றலை இழக்கின்றது. இது அலைந்து திரிந்து வேட்டையாடும் உழைப்புக்குத் தடையாக இருக்கும் ஓர் இடைநிலை படிவத்தை உள்ளடக்குகின்றது. குழந்தை தாயைப் பிடித்திருக்கும் ஆற்றலை இழக்கும் தன்மை, நிலைத்து வாழும் வாழ்வுக்கு நெருங்கிய காலத்துடன் மிக நெருங்கிய தொடர்புடையது.
இதனால் தாய் குழந்தையைத் தனது கையால் பிடிக்க வேண்டிய புதிய நிலைமை உருவானது. தாயின் உழைப்பு மற்றும் தற்காப்பு முன்பைவிட கடுமையாகியது. இதனால் தாய்மை அடைந்த பெண்கள் மட்டும் தனித்து வாழ வேண்டிய நிலைக்குச் சமுதாயத்தை இட்டுச் சென்றது. தாய் மற்றும் குழந்தையின் தற்காப்பு, சமுதாயத்தில் முதிர்ந்தவர் பாதுகாப்பு, குழந்தையின் பாதுகாப்பு, உற்பத்தியில் புதிதாக ஏற்பட்ட விவசாயம் என அனைத்தும் ஒருங்கே சேர்ந்த போது, பெண் தாயுடன் இணைந்து தனித்து வாழத் தொடங்கினாள். இது புதிய உழைப்புப் பிரிவினையை ஏற்படுத்தியது. ஒட்டு மொத்தமாக ஆராயின் வலது கைப் பழக்கத்துக்கு வேறு அடிப்படை காரணமே இருந்திருக்கும். உழைப்பின் குறிப்பான நீடித்த வடிவம் ஒன்று எல்லோருக்கும் நீண்ட பல இலட்சம் வருடங்கள் வலது கை சார்ந்த வகையில் பொருந்தியிருக்க வேண்டும். இது ஓர் உழைப்பின் முறையின் மீதான அனுபவ உழைப்பாகவும் அறிவு சார்ந்தாக இல்லாத நிலையிலும், வலது கைப் பழக்கம் ஒரு மனித விபத்தாகவே மாறியிருக்கும். எப்படி உழைப்பு சார்ந்து மனிதன் நிமிர வேண்டி ஏற்பட்டதோ, அதுபோன்றே வலது கைப் பழக்கமும் ஏற்பட்டதாகும்.
அடுத்து ஓர் உயிரியல் அடிப்படையிலான மற்றொரு புரட்டைப் பார்ப்போம். தொடக்கக் காலப் பெண்கள் 20 வயது பெண்கள் யாரும் இருக்கவில்லை (பக்கம் - 10) என்பது ஒரு நகைப்புக்குரியவாதம். குழந்தை பராமரிப்பை மாதவிடாயுடன் தொடர்புபடுத்தும் அதி நவீன புத்திசாலித்தனமான திரிபாகும். பராமரிப்பு பற்றி கூறும் வாதங்கள் நிலைத்து வாழத் தொடங்கிய சமுதாயத்துக்கு முந்திய காலத்தில், அவசியமற்ற வெற்று வாதமாகும். நிலைத்து வாழாத வரை, பராமரிப்பு என்பது குழு சார்ந்ததாகவே இருந்தது. அத்துடன் முதிர்வு என்பது மாதவிடாயுடன் தொடர்புடையவை அல்ல. முதிர்ந்த பெண்ணுக்கு மாதவிடாய் நின்று விடுவதில்லை. அதேபோல் முதிராத பெண்ணுக்கு மாதவிடாய் நிச்சயம் தொடர வேண்டிய அவசியமில்லை.
இங்கு ஆணின் முதிர்வை வரையறுப்பது? முதிர்வு என்பது வேறு அடிப்படையைக் கொண்டது பொதுவாக முதிர்வு என்பது உழைப்பில் ஈடுபட முடியாத ஒரு நிலையை, அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால் இன்று உள்ள ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை சமுதாயத்தில் பலவிதமான அர்த்தப்பாட்டைக் கொண்டு காணப்படுகின்றது. முதிர்வுக்கான அடிப்படை சமுதாயத்தின் சமூகப் பொருளாதாரக் கூறுகளால் வரையறுக்கப்படுகின்றது. மாதவிடாய் நின்ற பெண்கள் உழைப்பில் ஈடுபடாது ஓய்வில் இருந்தில்லை. ஏன் பாலியல் உறவைக் கூட நிறுத்தியதில்லை. நூலில் பல வாதங்கள் பாலியல் கண்ணோட்டத்தில் வெற்று குதர்க்கவாதமாகின்றது.
20 வயது தான் அன்றைய மாதவிடாய் சமுதாயத்தின் ஆயுளாக இருந்தது எனின், அந்த 20 வயதில் முதிர்வும் இயற்கையானதே. மாதவிடாய் 20 வருடத்துக்குள் நின்று போகும் இயல்பும் இயற்கையானதே. முதிர்வற்ற ஒரு சமுதாயமாக அன்று மனித இனம் இருக்கவில்லை. இயங்கியலில் வளர்ச்சியில் முதிர்வு என்ற விதிக்கமைய, உயிர்வாழும் உயிரினங்களின் விதியை அன்றைய 20 வயது மனிதனும் கூட கொண்டே காணப்பட்டான். இன்றைய நடப்பு மனிதனின் 20 வயது இளமையை, அன்றைய மனிதனின் 20 வயது முதுமையை மறுத்து, பொருத்துவது ஒரு முட்டாள்தனமான குதர்க்கவாதமாகும். இதைச் சொல்லி பெண்ணை ஒருதலைப்பட்சமாக உயர்த்திக் காட்டுவது நவீன ஏகாதிபத்தியப் பெண்ணியச் சீரழிவுகள் தான்.
ஆண் - பெண் உயிரியல் தொடர்பு சார்ந்த இயற்கை விதிக்கு முரணாக, ஆணாதிக்கம் எப்படி பெண்ணை அடிமைப்படுத்துகின்றதோ, அதே போன்ற ஒரு குதர்க்கத்தைப் பெண் சார்ந்து வைக்கப்படுவதைப் பார்ப்போம். "பெண்ணை மையமாகக் கொண்ட குடும்பத்தில் ஆண்கள் எப்போதாவது அங்கு வருபவர்களாக இருந்தனர். முக்கியத்துவமற்றவர்களாக இருந்தனர்." (பக்கம் - 14) என்ற வாதம் தனிச் சொத்துரிமை அமைப்பு சார்ந்து இன்றைய நவீனத்துவக் கண்ணோட்டத்துக்குப் பொருந்தும் வகையில் பொருத்திக் காட்ட முனைகின்றது.
மனிதன் நிலைத்து வாழத் தொடங்கும் முன்பு நீடித்த மனித வரலாற்றில், ஆண் - பெண் என்றுமே தனது கூட்டத்துக்கு வெளியில் பிரிந்து வாழ்ந்ததில்லை. உயிர் வாழும் போராட்டத்தில் உணவைத் தேடும் போது சமுதாயத்தின் ஒன்றுபட்ட செயற்பாடு, மிக அவசியமானதாகவும் நிபந்தனையானதாகவும் இருந்தது. இங்கு உழைப்பு பிரிவினை உருவாக்கி விடவில்லை. ஆண் - பெண் என்ற பிளவு இருந்ததில்லை. ஒன்றாகவே கூடி உண்டு வாழ்ந்தனர். சமுதாயம் நிலையாகத் தனித்து வாழ தொடங்கிய போது, பெண் ஆணுக்கிடையில் பிளவு ஏற்படவில்லை. உழைப்பு சார்ந்தும், இதுவும் பல படிகளைக் கடந்தே வந்தது. ஒரேயடியாகக் கூட்டத்தின் எல்லாப் பெண்களும் தனித்து வாழவில்லை. இது தொடர்ந்தது. அத்துடன் முடிவடைந்து விடவும் இல்லை. இதன் வளர்ச்சியில் ஆண்களும் தனித்து வாழ்கின்ற நிலை பின்னால் உருவாகின்றது. அது மற்றொரு வேலைப் பிரிவினைக்கு இட்டுச் சென்றது. இதை மேலே எடுத்துக் காட்டியுள்ளேன்.
தாய் அல்லது பெண்கள் தனித்து வாழத் தொடங்கிய சமுதாயத்தில், உழைப்புச் சார்ந்து ஆண் வெளியே செல்பவனாக இருந்தான். இது முதிய ஆண்களுக்கு விதிவிலக்கே. இதிலும் கூட ஆண் தற்காப்பு கருதி இரவில் நிலைத்த பிரதேசத்துக்கு வந்துவிடுபவனாகவே இருந்தான். இங்கு வேட்டை கிடைத்தவுடன் தனித்து வாழ்ந்த பிரதேசத்துக்குள் வந்துவிடுபவனாகவே இருந்தான். ஆண் எப்போதாவது வருபவனாக இருக்கவில்லை. ஆண் பெண்ணுடன், பெண் ஆணுடன் எப்போதும் ஒன்றாக ஒரே சமூகமாக இருந்தனர். தேவையை அடிப்படையாகக் கொண்ட உழைப்புச் சார்ந்து மட்டும் குழுவுக்கு வெளியில் ஆண் சென்று வந்தான். ஆண் முக்கியத்துவமற்றவராக மாறிவிடவில்லை.
தனித்து வாழத் தொடங்கிய பின், பெண் சொந்த உற்பத்தியில் உணவைப் பெறவும், குழந்தையைப் பராமரிக்கவும், ஆணுக்கு வேட்டை கிடைக்காத போது உணவு அளிக்கவும் முடிந்த போது பெண்ணின் மீதான மதிப்பு உயர்ந்தது. அத்துடன் தாய்மையும் குழந்தையும் உழைப்பில் தீர்க்கமான பங்காற்றிய நிலையில் தான் பெண்ணின் மதிப்பு உயர்வாக இருந்தது. இதனால் ஆண் எப்போதும் வருபவனாக மாற்றி விடவில்லை. மனித இனத்தின் அடிப்படை சமூகக் கூட்டில் சார்ந்துள்ளது. எப்போதும் வருபவனாக இருந்தால், மனித இனம் எப்போதே அழிந்திருக்கும்.
ஆண் சமுதாயத்தில் முக்கியமற்றவனாக இருந்தான் என்பதும் கற்பனையே ஆகும். முக்கியத்துவம் என்பதை எது தீர்மானிக்கின்றது? எது அதை நிராகரிக்கின்றது? இன்றைய ஏகாதிபத்தியத் தனிச் சொத்துரிமை சொல்வது போன்று ஒரு வக்கற்ற சமூகத் தன்மைதான், இதை வரையறுக்கின்றது. மூலதனம் உழைப்பையும், உழைப்பை வழங்கும் மனிதர்களும் எப்படி முக்கியத்துவமற்றதாகத் தூக்கியெறிந்து ஜனநாயகத்தைப் பற்றி பீற்றுகின்றதோ, அதே வாதமே இங்கும் பூச்சூடுகின்றது. மனித உழைப்பு இல்லை என்றால் மூலதனம் இல்லை. இது போன்று தான் அன்றும். சமுதாயத்தில் ஆண் - பெண் யாரும் முக்கியத்துவமற்று போகவில்லை. யாரும் சமுதாயத்துக்கு வெளியில் சுதந்திரமாக வாழவும் இல்லை. இது ஆணாதிக்க அமைப்பிலும் எதிரிடையில் பெண் சார்ந்தும் பொருந்தும். ஆதிக்கம் செய்ய விரும்பும் தனிச் சொத்துரிமை பிரிவுகள், மனித வரலாற்றைத் திரித்துக் காட்டுவதும், வரலாற்றை இழிவாக்குவதும் இன்றைய நவீன சிந்தனைகளில் ஒன்றாகும்.
ஆணாதிக்க அடிமை வரலாற்றைத் திரித்துக் காட்டி பூச்சூடும் வரிகளைப் பார்ப்போம். "கூடுதலாக விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டு, குலங்கள் நகரியங்களாக ஒன்றுபடுத்தப்பட்டதோடு, மானிடச் சமுதாயங்கள் மேலும் மேலும் போலிப் பகட்டுடையதாயின. அவற்றுக்குக் கட்டுமானங்களும், அமைப்புகளும், அரசு நிர்வாகமும் தேவைப்பட்டன. உயிர்வாழ்வது உறுதி செய்யப்பட்டவுடனே, உபரியானது சொத்தாயிற்று." (பக்கம்-110)
இங்கு உபரி சொத்தாயிற்று என்பது, உபரி சமுதாயத்தில் சுதந்திரமாகப் தோன்றுவதாகக் காட்டப்படுகின்றது.
உற்பத்தியின் அதிகரிப்பே, உபரியின் தோற்றுவாய் என்ற உள்ளடக்கத்தை இது முன் வைக்கின்றது. மனிதன் அல்லாத உயிரினம் தனது தேவைக்கு அதிகமானதை உபரியாக்கிக் கொள்வதில்லை. ஆனால் இன்றைய மனிதன் அதை உபரியாக்கிக் கொள்கின்றான் ஏன்? கடந்த கால மனிதனும் தேவைக்கு அதிகமானதை உபரியாக்கியதில்லை. தேவைக்கு மேலதிகமானது உபரியாக அழைக்கப்படுவதில்லை. இது ஒரு மாயைத் தோற்றமாகும். உபரி என்பது உழைப்பையும், உழைப்பில் பங்கு கொள்ளாத ஒருவன் அபகரிப்பதில் இருந்து உருவாகின்றது. இது சமூகம் என்ற கண்ணோட்டத்தை நிராகரிப்பதில் இருந்து தோன்றுகின்றது.
உபரி என்பது சமுதாயத்தில் என்றுமே தோன்ற முடியாது. இயற்கையை யாரும் உபரியாகவும் கொள்ள முடியாது. சமுதாயம் தனது தேவைக்கு அவசியமான உற்பத்தி செய்யும் போது, அங்கு உபரி இருப்பதில்லை. அன்றாடத் தேவைக்கு அதிகமானதைச் சேகரிக்கும் போதும் கூட, அது உபரியாக இருப்பதில்லை. மாறாக அதுவும் சமுதாயத்தின் தேவையாகவே இருக்கின்றது. ஏனெனில் இயற்கை மற்றும் சூழல் சார்ந்து ஏற்படும் நெருக்கடிகளில் சேகரிப்பும் தேவையாகவே உள்ளது.
உபரி என்பது சமூகமாக மனிதச் சமூகம் உள்ளவரை என்றுமே உருவாக முடியாது. உபரி என்பது உழைப்பைச் சுரண்டும் போது மட்டும் உருவாகும் ஒன்றாகும். அடிப்படையில் மற்றவனின் தேவையை மறுக்கும் போது, அதாவது சமுதாயத்தின் தேவை மறுக்கப்பட்டு இருக்கும் போது, உபரி உருவாகின்றது. நவீனக் கண்டுபிடிப்புகள் சமுதாயத்தை ஒன்றிணைக்கின்றது என்ற வாதம் கூட திரிபாகும். நவீனக் கண்டுபிடிப்புகள் தனிச் சொத்துரிமை அமைப்பில் சமுதாயத்தைப் பிளக்கின்றது. சமுதாயம் ஒன்று இணைவதை அழித்தே நவீனக் கண்டுபிடிப்புகள், தனிச் சொத்துரிமை அமைப்பை வீங்க வைக்கின்றது. சமுதாயத்தின் ஒன்றிணைவு என்பது, சுரண்டலை விரிவாக்கவும், அதிக மக்களைச் சுரண்டவும் உருவான வடிவங்களேயாகும். இதற்கு நவீனக் கண்டுபிடிப்புகளைச் சார்ந்து நிற்கின்றது.
இங்கு உலகமயமாதல், நவீனக் கண்டுப்பிடிப்புகளால் ஒன்றுபடுத்தப் படவில்லை. உலகைச் சுரண்டவே, உலகங்கள் ஒன்றுபடுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு நவீன அறிவியல் விபச்சாரம் செய்கின்றது. போலியான பகட்டுத்தனம், சுரண்டலின் உச்சக் கொப்பளிப்பாகும். சுரண்டல் கோரமாகும் போது, பரந்துபட்ட உழைக்கும் மக்களின் தேவை மறுக்கப்பட்டு இல்லாமை சமுதாய மயமாகி விடும் போது, பகட்டுத்தனமும் போலித்தனமும் உச்சத்தை அடைகின்றது. இந்த அமைப்பைக் கட்டிப் பாதுகாக்கவே அரசுகள் உருவாகின்றது. அரசுகள் வர்க்கத்தைப் பிரதிபலிக்கின்றன. இதைப் பாதுகாக்க சட்டமும், நீதியும், தண்டனையும் அரசால் ஒழுங்குபடுத்தப்படுகின்றது. சமுதாயப் பிளவை நியாயப்படுத்த ஜனநாயகம் என்ற போலித்தனம் சமுதாயத்தின் ஒழுக்கமாகின்றது. இதை நியாயப்படுத்தும் வாதங்களைப் பார்ப்போம்.
18-ஆம் நூற்றாண்டில் மூலதனத்தின் தோற்றம் இயந்திர உற்பத்தியைத் தொடங்கிய போது, பெண்களையும் ஆண்களையும் ஈவிரக்கமின்றி கொடுமைப்படுத்திய நிகழ்வை இந்த நூல் பாதுகாத்து வக்காளத்து வாங்குகின்றது. இதைத் "தொழிற்சாலை ஸ்தாபனத்தின் மீதே பழி போட்டு விட முடியாது" என்று குறிப்பிட்டு, மக்கள் தொகைப் பெருக்கமே மனித அவலத்துக்குக் காரணம் என பழி சுமத்துகின்றது. அதிக குழந்தைகள் உயிர் பிழைத்தமை, பெண்கள் பிரசவத்தின் போது உயிர் தப்பியமை, குழந்தைகள் உயிருடன் தப்பித்து வாழ்ந்தமை ஆகியவற்றால் ஜனத்தொகை மீது குற்றம் சாட்டுகின்றார். (பக்கம் - 301)
மக்கள் உயிர்வாழவும், உணவு அளிக்கவும், உடையைப் பெறவும் இதனால் வேலை பெறவும் இயந்திர மயமாக்கல் அவசியம் என்கிறார். அயர்லாந்தில் ஐந்து பேரில் ஒருவர் இறந்தது என்பது இயந்திரமயமாகாமையேதான் என்கிறார். அந்தப் பிரதேசத்தை விட்டு மக்கள் வெளியேறியமை மற்றும் காலனிகளை நோக்கி மக்கள் புலம் பெயர வைத்தமை அவசியமானதாக இருந்தது. ஏன்எனின் மக்கள் தொகைப் பெருக்கம் அனைத்துக்கும் காரணம் என்று கூறுகின்றார். (பக்கம் - 302)
வறுமை, மக்களின் இழிந்த நிலை, அடிமை வாழ்வு, கேட்பாரற்ற அடக்குமுறை, இயந்திரத்தின் ஒரு பாகமாகி சக்கையாகின்ற துன்பம் அனைத்துக்கும் மக்கள் தொகைப் பெருக்கமே காரணம் என முன்வைப்பதன் நோக்கம்தான் என்ன? மூலதனம் மீதான பற்றான காதலே.
மூலதனத்தின் சொந்தக்காரர்கள் மேல் இதற்கான காரணத்தைக் குற்றம் சாட்டமுடியாது என்று எடுத்துக் காட்ட, பல மரமண்டைகளின் கடந்தகால மேற்கோள்களைக் காட்டி வக்கரிக்கின்றனர். தொழிற்சாலைகள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சி இயந்திரம் இயக்கிய போது, மூலதனத்தைப் பல மடங்காகப் பெருக்குவதே அதன் குறிக்கோளாக இருந்தது. ஆனால் மக்களுக்கு உணவும், உடையும், இருப்பிடமும் அளிக்க இது அவசியம் என்கின்றார், இந்த ஏகாதிபத்தியப் பெண்ணியவாதியான ஆசிரியர்.
மக்களை இழிநிலைக்குள்ளாக்கி அவர்களைக் கொன்று, அவர்களுக்கே வாழ்வளிக்க விரும்பினராம் மூலதனத்தின் தந்தைகள். என்னே நகைப்புக்குரிய வாதம். இன்று உலகமயமாதல் ஏழை எளிய மக்களின் உழைப்பையும் வாழ்வையும் அழித்து, பட்டினிக்குள் தள்ளி குளிர்காய்கின்றது. மக்களின் உழைப்பு ஆற்றலுக்குரிய அடிப்படை மூலப் பொருட்களை அபகரித்து, கொழுத்தது எல்லாம் மக்களின் நலனுக்காக என்பதே நூலாசிரியரின் மையவாதமாகும். ஏழை எளிய மக்களைக் கையேந்தி வாழவைக்கும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் மூலதனத்தின் வக்கிரத்தை, நியாயப்படுத்த அன்றைய முதலாளித்துவத்தின் வக்கிரத்தைத் திரித்துக் காட்டுவது அவசியமாகின்றது. பஞ்சப் பராரைகளாக உள்ள மக்கள் கூட்டத்தைப் பட்டினியில் கொன்ற இன்றைய நவீன மூலதனத்தின் அடிப்படையாக இருப்பது அன்றைய மூலதனம். மக்களைப் பலாத்காரமாகக் காலனிகளுக்கு அனுப்பி வைத்தனர் அல்லது நாடு கடத்தினர். மக்களின் சொத்தைச் சூறையாடிய மூலதனம், அவர்களின் உழைப்பு ஆற்றலை அழித்து அவர்களை வக்கற்றவர்களாக்கியது. காலனிகளை உருவாக்கி அங்கு வாழ்ந்த மக்களை ஈவிரக்கமின்றி சுரண்டியதுடன், அந்த மக்களைக் கொன்று அதன் மேல் நவீனச் சமுதாயங்களை உருவாக்கினர். பல காலனிய நாட்டு மக்கள் அழிக்கப்பட்டுப் புதிய நாடுகளாக, புதிய ஒரு சமுதாயத்தினால் நிரப்பப்பட்டது. அங்கு வாழ்ந்த மக்கள் மூலதனத்தினுடைய கால்களின் கீழ் புதைந்து உரமானார்கள்.
இந்தக் காலக்கட்டத்தில் நவீனத் தொழில் துறை உருவாகாத நாடுகளில் எங்குமே, இந்தளவுக்கு வறுமையிலும் மனிதச் சிதைவிலும் சிதைந்து விடவில்லை. நிலப்பிரபுத்துவ ஆட்சிகளுடன் கூடிய சமூகப் பண்பாடுகளும் நிலவிய, காலனித்துவவாதிகளின் சுரண்டல் சட்டங்களும், சுரண்டலும் புகாத பிரதேசத்திலும் வாழ்ந்த மக்கள், மேற்கு சமுதாயம் அடைந்த இழிநிலையை ஒருக்காலும் சந்திக்கவில்லை. இது வரலாற்று உண்மை.
உண்மையில் மேற்கு மக்களின் உழைப்பு ஆற்றல் பறிக்கப்பட்டு அல்லது இயந்திரத்தின் ஒரு பாகமாக்கி, உடுக்க ஆடையற்று நிர்வாணமாகக் கையேந்திய பஞ்சத்திலும் சிக்கி வாழ இடமற்று பொந்துகளிலும் நெரிந்து வாழும் இழிநிலைக்குள்ளானார்கள். இவர்களின் வாழ்வுமுறையின் மேல் அடக்குமுறை சமூகத்தின் ஒழுக்கமாகவும் ஜனநாயகமாகிய குறிப்பான நிலைமையை மூலதனமே உருவாக்கியதே ஒழிய அதிக மக்கள் தொகை அல்ல. அதிக உணவைத் தயாரிக்கும் உற்பத்தி முறை அல்ல. மாறாக மூலதனத்தை விரிவாக்க உற்பத்தி முறையை மாற்றாத எந்த நாட்டிலும், இந்த இழிவு ஒருக்காலமும் நடந்ததில்லை. அந்த நாடுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்புக்கே உரிய ஒடுக்குமுறையே நீடித்தது.
மூலதனத்தைப் பாதுகாத்தபடி ஆணாதிக்கத்தை எதிர்க்கும் போது "உயிர் வாழ்வதற்கான போராட்டம் ஓரளவு தளர்ந்து, அதன் பொருளுக்கான மிகவும் கடினமான போராட்டமாக மாறிய போது, பெண் முதலாவது உருவக ரீதியான சிந்தனையின் குவிமையமும், சாதனமும் ஆனாள்" (பக்கம் - 37) பொருளுக்கான போராட்டம் என்றால் என்ன? இது எப்படி பெண்ணை அடிமையாக்கியது? ஆணின் உழைப்பில் ஒரு உற்பத்திக்கான பொருளாகப் பெண் இருக்கவில்லை அல்லவா! ஏன் பெண் எதிரிடையில் ஆணைப் பற்றி உருவகமாக சிந்திக்கவில்லை? ஆண் மட்டும் இப்படி சிந்தித்தான் எனின் ஏன்?
எதையும் சமூகப் பொருளாதார வாழ்வுடன் ஆதாரமாக வைக்க முடியாத அடிப்படையற்ற வெற்றுவாதம். பொருள் என்பது மனித உழைப்பு தொடங்கிய போதே இயற்கையிலும், இயற்கை மீதான உழைப்பிலும் செயற்கையில் உருவாகின்றது. இது எந்த விதத்திலும் உயிர் வாழும் போராட்டத்தின் முடிவை அல்லது தளர்வை ஏற்படுத்தவில்லை. உற்பத்தி செய்த பொருளை எப்போது மற்றவனிடம் இருந்து மற்றொரு மனிதன் அபகரித்தானோ, அப்போதே தனிச்சொத்துரிமை உருவாகின்றது. இதில் பெண் ஆணைச் சார்ந்து வாழ்வது அதிகரிக்க அதிகரிக்க, பெண் அடிமைத்தனம் உருவாகின்றது. இந்த அடிமைத்தனமே பெண் மீதான உருவாக ரீதியான சிந்தனை சார்ந்த ஒடுக்குமுறையையும் உருவாக்குகின்றது. அதாவது மற்றவனைச் சுரண்டச் சுரண்ட, தன்னைச் சார்ந்து வாழ்பவர்கள் உருவாகின்றனர். இதன் மேலான புதிய அடக்குமுறையும், அது சார்ந்த சிந்தனையும் உருவாகின்றது. இது முதலில் பெண்கள் மேலானதாக ஆணின் தனிச் சொத்துரிமை சார்ந்து மாறுகின்றது.
இந்த நூலுக்கான முன்னுரையில் குறிப்பிடும் போது, சமுதாய நாகரிகத்தில் பொதுவான வளர்ச்சிக் கட்டத்தில் பெண்ணின் விடுதலையைக் காட்டுகின்றது என லெனின் கூறியுள்ளதாகக் குறிப்பிடுகின்றார். இது உண்மையானால் பண்டைய அதீனியக் கலாச்சாரம், மறுமலர்ச்சி, பிரெஞ்சுப் புரட்சி பெண்ணுக்கு விடுதலையைத் தரவில்லை என்று (பக்கம்-7) கூறி லெனினை மறுக்கின்றது.
லெனின் எதைக் கூறினார்? என்பதைப் புரிந்து கொள்ளாமல், அதைத் திரிக்கும் போதே இப்படி கூற முடிகின்றது. இப்படி சொன்ன லெனின் எதற்காகப் போராடினார் என்பதே, இதற்கான தெளிவான பதிலாகும். லெனின் நடந்து வந்த புரட்சி அனைத்தையும் வர்க்க யுத்தமாகக் கருதியதுடன், அவை அனைத்தும் சுரண்டலை ஒழிப்பதை, அதாவது தனிச் சொத்துரிமையை ஒழிப்பதைக் கொண்டிருக்கவில்லை என்றார். அப்படி இருக்கும் போது பெண் எப்படி பூரண விடுதலையை அடையமுடியும்? லெனின் ஒவ்வொரு புரட்சியிலும் கூட பெண்ணுக்கு மூச்சு விடுவதற்கு ஓர் ஓட்டையை விட்டுச் சென்றதையே குறிப்பிட்டுக் காட்டுகின்றாரே ஒழிய, பெண்ணின் விடுதலையை அது பெற்றுத் தந்ததாக ஒருநாளும் கூறவில்லை. பாட்டாளி வர்க்கப்போராட்டம் மட்டும் தான், பெண்ணின் விடுதலையைத் தனிச் சொத்துரிமை ஒழிப்பில் சாதித்து காட்டும். இதுவே லெனின் பெண் பற்றி கூறிய பொதுவான மையமான, அடிப்படையான சாராம்சமாகும்.
ஆணாதிக்க வரலாறு சார்ந்து ஆணின் உரிமை ஒன்றை, திரித்துக்காட்ட இந்த நூல் தொடர்ந்து முனைகின்றது. ஆணாதிக்க அமைப்பில் பெண்ணை முதலில் புணர்வது சொந்தக் கணவனாக இருந்ததில்லை. சமூகத்தின் பல மட்டத்தைச் சேர்ந்த அரசன், பூசாரி, நிலப்பிரபு, உயர் அதிகாரி கூட்டான பல ஆண்கள் ஒன்றன் பின் ஒன்றாக, தந்தை அல்லது குடும்பத்தில் இன்னொரு மூத்த உறுப்பினர் கன்னிப் பெண்ணைப் புணர்ந்தனர். இந்தச் சம்பவத்தை இரத்தம் மீதான பீதி (முதல் உடல் உறவின் போது கன்னிச் சவ்வு உடைதலில் இரத்தம் வருவதால்) அல்லது பிசாசின் தரிப்பிடத்தைக் கணவன் புணரக் கூடாது என்று கூறி நடந்தது என்கிறார். இது பெண்ணின் இழிவு சார்ந்து கட்டமைக்கப்பட்டது என்கிறார். (பக்கம்-161-162)
இந்த வாதம் ஆணாதிக்கத்தின் வரைமுறையற்ற புணர்ச்சி உரிமையைப் பாதுகாக்கின்றது. இரத்தம் மீதான பீதி, பெண்ணின் உறுப்பானது பிசாசின் இருப்பிடமாக இருப்பதால் கணவன் முதலில் புணரக் கூடாது என்ற காரணத்தினால், பெண்களின் முதலிரவுப் பிற ஆண்களினால் புணரக் காரணமானது என்பது ஒரு திரிபாகும். இங்கு முதல் புணர்வு சார்ந்து பிசாசு, இரத்தப் பீதியை ஒழிக்க சமூகத்தில் உயர்ந்த வர்க்கங்கள் ஈடுபட்டது என்பது, உண்மைக்குப் புறம்பான நோக்கத்தை வெட்டவெளிச்சமாக்குகின்றது. தீட்டு மற்றும் இழிவான காரியத்தைப் போக்க உயர் வர்க்கங்கள் ஆர்வத்துடன் உரிமை சார்ந்து ஈடுபட்டன என்பது, மைய வாதத்தின் மோசடியை அம்பலமாக்குகின்றது.
பெண்ணைக் கணவன் புணரும் முன்பு, பிற ஆண் அல்லது ஆண்கள் புணர்வது என்பது என்பது சடங்கு முறைகள் அல்லது பயத்தில் இருந்து உருவாகவில்லை. வரைமுறையற்ற ஆண் - பெண் உறவு முறையைத் தனிச் சொத்துரிமை ஆணாதிக்கம் தகர்த்த போது, உடலுறவு மிகவும் மோசமான தனிச்சொத்துரிமை கண்ணோட்டமாகியது. பெண்கள் முன்பை விட இந்தப் புதிய உடலுறவுமுறை, தம் மீதான பாலியல் ஆதிக்கத்தைத் திணிப்பதைக் கண்டு வெறுத்தனர். முந்திய வரைமுறையற்ற பாலியல் உறவில் இருந்த தேர்வுச் சுதந்திரமும், இயல்பான இணைவும் சொத்துரிமை சார்ந்து குரூரமாகி பெண்ணை இழிவாக்கத் தொடங்கியது.
பெண் இதை எதிர்த்து ஓர் ஆணைத் தெரிவு செய்யும் இருதாரத் திருமணத்தைக் (இரு தாரம் என்பது ஆண் - பெண் பரஸ்பரம் இருவரும் காதல் செய்வதைக்) கோரினாள். இது தனிச்சொத்துரிமை அமைப்புக்கு எதிரான, ஆணின் தனிச் சொத்துரிமை சார்ந்த ஆதிக்க வெறிக்கு எதிராகப் பெண் தொடுத்த போராகும். இதைச் தனிச்சொத்துரிமை ஆண்கள் சகித்துக் கொள்ள மறுத்து, பழைய வடிவில் வரைமுறையற்ற புணர்ச்சியைத் தனக்கு மட்டும் கோரினான். இதைப் பெண் மறுக்கவும், ஒரு தொடர்ச்சியான போராட்டமே நடந்தது. தனிச் சொத்துரிமை சார்ந்த ஆணாதிக்கம், பழைய பாலியல் ஆதிக்கத்தைத் தக்கவைக்க கையாண்ட வழிகளில் சடங்கு ரீதியான முறைமைகளும் ஒன்று. பழைய மரபைச் சடங்கு ரீதியாக அனுபவிப்பதை ஆணாதிக்க மரபு புகுத்தியது. இதன் போதே பெண் தேர்வு செய்த இருதார மணத்தின் முன், மற்ற ஆண்களின் உரிமையும் ஏற்று கொள்ளப்பட்டது. அதாவது திருமணத்தின் முன் பெண்ணின் மேலான ஆண்களின் வரைமுறையற்ற பாலியல் உறவு அங்கீகரிக்கப்பட்டது. இதுவும் பல தளங்களில் பல மாறுதல் வடிவங்களில் நீடித்தது. வௌவேறு சமுதாயங்களில் பெண்கள் கூட திருமணத்தின் முன் வரைமுறையற்ற புணர்ச்சியைப் பேணமுடிந்தது.
மறுதளத்தில் ஆணாதிக்க அமைப்பு இருதார மணத்தைக் கைவிட்டு ஒருதார மணத்தைக் கோரிய போது, அது பெண்ணைத் தனிச் சொத்துடைமை ஆக்கியது. இந்த இடத்திலும் பெண் பழைய மரபை அடிப்படையாகக் கொண்ட வரைமுறையற்ற புணர்ச்சியைக் கோரினாள். இதன் போதும் பெண் திருமணத்துக்கு முன் அல்லது சில சடங்குகளில் அல்லது சில நாட்கள் என்ற பல வகைப்பட்ட வகையில் பிற ஆண்களுடன் உறவு கொள்வது ஒரு வடிவமாகியது. ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட பாலியல் உறவு முறைமைகள் அக்கம்பக்கமாகச் சமுதாயத்தில் நீடித்து நிலவியது. இவை காலத்தால் பல திரிபுகளுக்கு உள்ளாகியது.
ஒருதாரமணம் இறுகி பெண் - ஆணின் தனிப்பட்ட சொத்தாகியதால், பெண்ணின் தூய்மை, கன்னித் தன்மை என்பன கோரப்படுவது அதிகரித்தது. இக்காலத்தில் மதங்கள் சொத்துரிமையையும் ஆணாதிக்கத்தையும் சார்ந்து சமுதாயத்தை ஒழுங்குபடுத்தியதால், ஆண் சார்ந்த பாலியல் உரிமை மதத்துடன் இணைக்கப்பட்டது. ஒருதார மணத்தில் பெண் மிகவும் கீழ்த்தளமாகத் தாழ்ந்த போது, பெண் பல ஆணுடன் சில மரபு சார்ந்த புணர்ச்சி வடிவங்களின் காட்டுமிராண்டித்தனத்தைச் சகித்துக் கொள்ளுவதை எதிர்க்கத் தொடங்கினாள்.
இங்கு பல முரண்பட்ட உறவு முறைமைகள் அக்கம் பக்கமாக நிலவிய போதும், ஆணாதிக்க அமைப்பு தனக்கு இசைவாகவே முதல் புணர்ச்சியை மதம் சார்ந்த ஒரு பக்தி மற்றும் மிரட்டல் போன்ற வழிகளில் பெண்ணின் மீது தனது உரிமையைத் தக்கவைத்துக் கொண்டது. இதுவும் கால ஓட்டத்தில் கடுமையான எதிர்ப்பை முரண்பட்ட கண்ணோட்டத்தில் ஆணும் பெண்ணும் இதை வெறுத்ததன் மூலம், இந்த முறைமையும் தகர்ந்து போகின்றது.
பெண் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்த நிலையில், ஆண் கன்னித்தன்மை மற்றும் தனது விந்துவால் உருவான குழந்தை என்ற கண்ணோட்டம் வரைமுறையற்ற புணர்ச்சி சார்ந்த சடங்குகளைத் தகர்த்தது. ஆணாதிக்க மதங்கள் உருவாக்கிய மிரட்டல், பீதி, சடங்கு என அனைத்தும் தகர்ந்து சிதைந்து போனது. சில விதிவிலக்குகள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. முதல் உறவு சார்ந்த உரிமை பிந்திய சமூக வடிவங்களில் இருந்து தோன்றவில்லை. அது வரலாற்று ரீதியான தனிச் சொத்துரிமை அமைப்பில் சூறையாடும் முன்னேற்றத்தில் இருந்து தோற்றம் பெற்றது.
பெண் தெய்வங்கள், அரசிகள் ஆணைப் புணர்ந்த பின் கொல்லும் பலவிதமான நடைமுறைகள் இருந்தது. (பக்கம் - 46-47) ஆணின் ஆண்மை நலமடிக்கப்பட்ட நிகழ்வுகள் அல்லது கொல்லுவதற்கு முன் ஆணை நலமடித்தல் (பக்கம்-47) போன்றன பெண்ணின் பெருமையாக அல்லது பெண்ணின் உரிமையாக இந்த போற்றுகின்றது.
இவை உண்மையில் சமூகத்தில் காணப்படவில்லை. தனிச் சொத்துடைமை சார்ந்த அதிகாரத்தில் காணப்பட்டது. ஆனால் இதைப் பெண்ணியக் கண்ணோட்டத்தில் உயர்ந்த நடைமுறையாகப் பெருமைபட இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது. தனிச் சொத்துரிமை அமைப்பு உருவான போது, மரபு சார்ந்த சமரசங்களுடன் பெண்களின் தலைமையிலான ஆட்சிகள் நிலவத்தான் செய்தது.
அதாவது முதலாளித்துவம் உருவான போது, ஐரோப்பாவில் புரட்சிகள் இன்றி நிலப்பிரபுத்துவ மற்றும் மதஅடிப்படைவாதிகளுடன் எப்படி சமரசங்கள் காணப்பட்டு அதன் ஆட்சி வடிவங்களாக இருந்தது. அதன் போது ஆணாதிக்க அமைப்பில் அதிகாரத்தில் இருந்த விதிவிலக்கான பெண்ணின் பாத்திரம் தனிச்சொத்துரிமை சார்ந்து கொடூரமானதாக மாறியது.
சொத்துரிமை பொதுவான சமூகத்தில் ஆணிடம் இருந்த போது, அதிகாரத்தில் இருந்த ராணிகள் அல்லது செல்வம் படைத்த அல்லது அதிகாரம் பெற்ற பெண்கள் ஆணாதிக்க வடிவில் தனது வக்கிரத்தைத் தீர்த்துக் கொண்ட போது, தன்னுடன் உறவு கொள்ளும் ஆணின் ஆண்மை மீது உரிமையைக் கோரினாள். ஆண்மையை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் தனது சொத்துரிமையாக்கினாள். இதன் அடிப்படையில் நுகர்வு வெறியுடன் புணர்ந்த இந்த மேல்மட்டப் பெண்கள், அந்த ஆணைத் தனது பாலியல் தேவைக்கு, பின் கொல்லுதல் அல்லது நலமடித்தலை அல்லது இரண்டையும் செய்தனர். இது ஒரு சமூக நடைமுறையல்ல. ஆணாதிக்கச் சமுதாயத்தில் இது
விதிவிலக்காக இருந்தது. சமுதாயத்தில் இதற்கு நேரிடையான எதிர்போக்கு சொத்துடைமை சார்ந்து இறுகி வந்தது. விதிவிலக்கான சடங்குகளை, சம்பிரதாயங்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தி ராணியின் கோபமாகவும் புனையப்பட்டது. கடவுள் இரட்டை பெண்சாதிக்காரனாகவும், பல பெண்களைப் புணர்பவனாகவும் எதார்த்தத்தில் புராணங்கள் முதல் சிற்பங்கள் வரை சமூக நடைமுறைக்கு எதிர் திசையில் இருக்கின்றது. எதார்த்தக் காட்சிகள் போன்றே இவை இருந்தன. இது ஆணாதிக்க அமைப்பைப் பழிவாங்க உருவானவை அல்ல. ஆணாதிக்க அமைப்பைப் பெண் உள்வாங்கிய போது, அதிகாரம் மற்றும் சொத்துரிமை சார்ந்து எழுந்த விதிவிலக்கான ஆணாதிக்க வக்கிரங்களே ஆகும்.
தனிச்சொத்துரிமை அமைப்பு வளர்ச்சி கண்டபோது பெண் ஒருதார மணத்துக்குள் சிறைவைக்கப்பட்டாள். பெண்ணின் தெரிவை மறுத்து, பெண்ணை விலை கொடுத்து வாங்கும் நிலைக்குச் சீரழிந்த போது, பெண் ஆணின் போகத்துக்குரிய பண்டப் பொருளாக மாறுகின்றாள். வாங்கிய பொருளை எப்படியும் பயன்படுத்தலாம் உரிமை சட்டவடிவமாகின்றது. ஆனால் சந்தை விதிக்கமைய வாங்கும் சந்தை மாறுகின்றது.
சந்தையில் பெண் விற்கப்படுவது நெருக்கடிக்குள்ளான போது, பெண்ணுடன் பணம் கொடுத்து விற்பது என்ற புதிய ஆணாதிக்க வடிவம் மேலேகின்றது இப்படி தான் ஒவ்வொரு நடைமுறையும் உருவானது, வளர்ச்சி கண்டது. சொத்துரிமை ஒரு வடிவமாகின்ற போது, அதன் பண்பாட்டுக் கலாச்சாரக் குணாம்சங்கள் தனது கொடூரத்தைச் சமூகமயமாக்கியது. அன்று சில பாகங்களில் மூத்த குழந்தை அல்லது ஆண் குழந்தை அல்லது குறித்த நாளில் ஒரு சமூகத்தின் குழந்தைகள், கடவுளின் பெயரால் அல்லது ஏதோ ஒரு காரணத்தால் நெருப்பில் இடுதல் அல்லது பல வழிகளில் பயிரிடப்பட்டனர். ஆனால் இவை அனைத்தும் ஏதோ ஒரு குறித்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த நூல் எதிரிடையில் இதைக் காட்ட முனைகின்றது. சீனாவில் ஓர் இனம் பெண்ணைத் தேர்ந்தெடுத்து ஒரு வருடம் நன்றாகப் பராமரித்த பின் மஞ்சள் நதியில் தள்ளிவிடும் சடங்கு முறையை (பக்கம்-94) எப்படி ஆணாதிக்கத்தின் கொடூரமாக நிறுவமுடியும். இதுபோன்ற சடங்குகள் எப்போதும் கருத்துமுதல்வாதத்தின் அடிப்படையில் இருந்தே எழுகின்றன. வாழ்வின் ஆதாரத்தை அடிப்படையாகக் கொள்ளாத நம்பிக்கையை ஆதாரமாக கொண்ட சடங்குகள், இயற்கையின் கோபத்தைத் தணிக்க கருத்துமுதல்வாதம் அதன் அடிப்படையாக உள்ளது. இது பெண்ணை அல்லது குழந்தையை அல்லது தாயைச் சடங்கு ரீதியாகப் பலியிடுதல் என்பது குறித்த நிகழ்வின் குறிப்பான தன்மையுடன் பொருத்திப் பார்க்கவேண்டும்.
பெண்ணை மஞ்சள் நதியில் தள்ளும் போது பெண் என்பதால், அதை ஆணாதிக்கச் செயலாகக் காட்டிவிட முடியாது. இதுபோன்று பொருத்திக் காட்டும் இந்த நூலின் பல உதாரணங்கள், அர்த்தமற்ற வாதங்களாக உள்ளன. அன்று எந்த அர்த்தமற்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இது போன்ற செயல்கள் எப்படி நீடித்ததோ, அதே போன்று பெண் என்பதால் அதை ஆணாதிக்கமாக ஜோடிப்பதும் எந்தவிதத்திலும் அன்றைய நிகழ்வை விட குறைவானவையல்ல. பெண் என்றால் அனைத்தையும் ஆதரித்து நியாயப்படுத்தும் நிலைக்கு அல்லது அதை ஆணாதிக்கத்தின் கொடூரமாகக் காட்டும் நிலைக்கு இந்த நூல் தன்னைக் கோட்பாட்டு வடிவத்தைக் கொடுக்கின்றது. இங்கு சமூக இயக்கம் அனைத்தையும் புறக்கணித்து அதைக் கேவலப்படுத்துகின்றது. பெண் உயர்ந்த நிலைக்கு எப்படி வந்தாலும் அதை அங்கீகரிக்கும் நிலைக்கு வக்காளத்து வாங்குகின்றது.
காலனித்துவத்தை ஏற்படுத்தி அதை மேற்கத்திய சமூகம் சூறையாடிய போது, அங்கு வாழ்ந்த மக்கள் கடுமையாக எதிர்த்துப் போராடினர். இதை எதிர்த்து மேற்கு பெண்கள் வீரம் செறிந்த போராட்டத்தைப் பெண்ணிய வழியில் நடத்தியதாக, இந்த நூல் பெருமைப்படுகின்றது. கி.பி.1857 - ஆம் ஆண்டில் இந்தியாவின் சுதந்திரத்துக்கான போராட்டத்தை எதிர்த்து, பிரிட்டீஸ் வெள்ளையினப் பெண்கள் சளையாது வீரமாகப் போராடியதாக இந்த நூல் பெருமைப்படுகின்றது. (பக்கம்-325)
இது போன்று இந்தியா முதல் அமெரிக்கா வரை அங்கு வாழ்ந்த மக்களைக் காட்டுமிராண்டிகளாகவும், சுதந்திரத்துக்கான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும் இந்த நூல் பெண் சார்ந்து பெருமைப்படுகின்றது. காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு எதிரான தாக்குதலை மண்ணின் மக்கள் நடத்திய போது, அதை எதிர்த்த ஆக்கிரமிப்பு பெண்கள் எப்படி போராடினர் என சில பக்கங்கள் பெருமைப்படவே முன்வைக்கின்றது. அது மட்டுமின்றி பெண்கள் காலனிகளில் வெற்றிகரமாகப் பணம் சேர்த்ததையும், மக்களை மதம் மாறவைத்து அடிமையாக்கிய பெருமையையும் பீற்றுகின்றது. இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள், அதிகார வர்க்கம் சார்ந்து சொர்க்கத்தைப் போன்ற ஆடம்பரக் களியாட்டங்களில், விழாக்களில் சொக்கிக் கிடந்தப் பெண்ணின் பெருமையாக இந்த நூல் பீற்றுகின்றது. பணம் படைத்த அதிகார வர்க்கம் சார்ந்து தன்னைத் தான் மேச்சும் போது, அடிமட்டப் பெண்ணைத் தனது சொந்த கால்களின் கீழ் மிதிக்கின்றது.
"ரோம் செனட்டர்கள் கி.மு. 215-இல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் பெண்கள் அரை அவுன்சுக்கு அதிகமான தங்கத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கக் கூடாதென்று தடை செய்து அவர்கள் ஓரு சட்டத்தை இயற்றினார்கள்" (பக்கம்-96)
இதை எதிர்த்துப் போராடிய பெண்கள் இந்தச் சட்டத்தை வாபஸ் பெறச் செய்ததாகக் கூறப்படுகின்றது. உண்மையில் சொத்துடைய வர்க்கத்தின் வர்க்க நலன்களை இது பிரதிபலிக்கின்றது. இந்தச் சட்டம் போன்று ஆண்களுக்கு எதிராகக் கொண்டு வரப்படாததை இந்த நூல் பேசவில்லை. பெண்களுக்கு எதிராகக் கொண்டு வந்திருந்தால், அதை ஆணுக்கு எதிராகக் கொண்டு வரக் கோரியே போராடியிருக்க வேண்டும். சொத்துடைய வர்க்கம் தனது ஆடம்பரத்தில் கூத்தடித்ததை எதிர்த்துப் (அதாவது அது ஆணா? பெண்ணா? என்பதல்ல இங்கு முக்கியமான விடயம்.)
பெண்ணுக்கு மட்டும் என்றால், அதை எதிர்த்து ஆணுக்கும் சட்டமாக்க கோரியிருக்க வெண்டும். இருவருக்கும் எதிரான சட்டங்களாக இருந்திருந்தால் இந்தப் போராட்டமே பிற்போக்கானது. சொத்தற்ற வர்க்கங்களின் அவலத்தைப் போக்க போராடாது சொத்துடைமையைப் பாதுகாக்க நடத்தும் போராட்டம் பெண்ணியமாக இருப்பதில்லை. இதை இன்று இந்த நூல் எந்த நிபந்தனையும் இன்றி போற்றும் போது, நூலுக்குரிய நோக்கம் உலகமயமாதலில் பெண்ணின் விபச்சார நிலையை அங்கீகரிப்பது தான். பெண் என்றால் அனைத்தையும் நியாயப்படுத்தும் உரிமை பெண்ணியமாக இந்த நூல் காட்ட முனைகின்றது.
பெண் எப்படி அடிமையானாள் என்பதை மறைத்துத் தனிச்சொத்துரிமை அமைப்பில் பெண்ணின் உயர் நிலைபற்றி பெருமைப்படுகின்றது. இதற்கு வரலாற்று ரீதியாகப் பெண் மீதான ஒடுக்குமுறைகளைத் தொகுத்து, அதன் மேல் பெண்ணின் பெருமையாகத் தனிப்பட்ட பெண்ணை முன்னுக்குத் தள்ளுகின்றது. இந்தத் தனிப்பட்ட பெண்கள் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை அமைப்பில் ஒரு நெம்புகோலாகவே இருந்தனர். இன்றும் இந்த ஏகாதிபத்திய அமைப்பில் தனிப்பட்ட பெண்களின் முன்னிலைப் பாத்திரம் கூட அதை அந்த விதத்திலும் மாற்றிவிடவில்லை. உலகமயமாதலை உலக மக்களுக்கு எதிராகப் பெண் கையாளும் போது, அதைப் பெண்ணின் பெருமையாக்கி, இதை இன்றைய ஏகாதிபத்தியப் பெண்ணியம் அங்கீகரிக்கின்றது. இதையே இந்த நூலில் ரோஸலின்ட் மைல்ஸ் செய்ய முனைகின்றார்.