Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

05 -08-2000 அன்று ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரில் நடந்த சந்திப்பில், பெண்கள் தொடர்பான விவாதம் ஒரு பெரும் விவாதமாக மாறியது. இங்கு வைக்கப்பட்ட பெண்ணியம் தொடர்பான கருத்துக்களை ஒட்டிய விவாதத்தை வளர்த்து எடுக்கும் வகையில், அன்று முன் வைத்த கருத்துக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.


1. பொருளாதார விடுதலையே பெண்ணை விடுவிக்கும் என்று மார்க்சியம் பிரகடனம் செய்வதாகவும், பெண் பொருளாதார விடுதலையைப் பெற்ற போதும் ஆணாதிக்கம் ஒழிந்துவிடவில்லை என்ற வாதங்கள் மீது பார்ப்போம்.

 

இந்த விவாதம் மாhக்சியத்துக்கு எதிரானது. மார்க்சியம் வர்க்கப் போராட்டத்தைக் கோருகின்றதே ஒழிய, பொருளாதாரவாதத்தைக் கோரவில்லை. வர்க்கப் போராட்டத்தை அரசியல் ரீதியாகப் புரிந்து கொள்ளாத எல்லா நிலையிலும், பொருளாதார வாதத்தை மார்க்சியமாகக் காட்டுவது நிகழ்கின்றது.


தொழிலாளர் வர்க்கம், வர்க்கப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கும் புரட்சிகர வரலாற்று நிகழ்வை, வெறும் தொழிற்சங்கப் பொருளாதாரக் கோரிக்கைக்குள் புரிந்து கொள்கின்ற போது, அரசியல் போராட்டம் பின்தள்ளப்பட்ட எல்லா நிலையிலும், பொருளாதார வாதம் முதன்மை பெறுகின்றது. இது சகல துறையிலும் விரவிப் பரவுகின்றது.


மார்க்சியத்தைப் பொருளாதார வாதமாகப் புரிந்து கொள்வதன் ஊடாக, மேல் கட்டுமான வர்க்கப் போராட்டத்தைக் கைவிடுவதுடன் மட்டுமின்றி, அனைத்தையும் பொருளாதார வடிவத்துக்குள் காட்டி விடுவதும் நிகழ்கின்றது. இது வர்க்கப் போராட்டத்தின் உயிர்த்துடிப்பான போராட்டத்தை முடக்குவதுடன், சமுதாயத்தின் பிரச்சினைக்கான தீர்வுகளைப் புரட்சிக்குப் பின் என்ற வாதத்தை முன்வைத்து விடுகின்றனர்.


வர்க்கப் போராட்டம் சமுதாயத்தின் அனைத்து மேற் கட்டுமானம் மீதும் நாள்தோறும் நடக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளாத வரை, அதை மாற்றும் போராட்டத்தில் எமது கவனத்தைச் செலுத்தாதவரை, சீர்திருத்தம் கோட்பாட்டு ஆதிக்கத்தைப் பெற்று நடைமுறைத் தத்துவமாக மாறுகின்றது. மேல் கட்டுமானத்தில் கோரப்படும் ஜனநாயகக் கோரிக்கையில் பாட்டாளி வர்க்கம் ஊன்றி நிற்க தவறி, பொருளாதார வாதத்துக்குள் முடங்கிவிடும் போது, பொருளாதார எதிர்ப்புவாதமாக மாறி சீர்திருத்தம் ஆதிக்கத்தைப் பெற்றுவிடுகின்றது. இது பொருள்முதல்வாதத்தை மறுக்கும் பொருளாதாரவாத எதிர்ப்பாக மாறிவிடுகின்றது. இது மார்க்சிய எதிர்ப்பாக மாறுகின்றது.


பெண் பொருளாதார ரீதியாக விடுதலை அடைகின்ற போது, பெண் விடுதலை அடைவாள் என்று கூறியது மார்க்சியம் அல்ல. அது மட்டுமின்றி இது வர்க்கப் போராட்டமும் அல்ல. ஏங்கெல்ஸ் பெண்ணின் பொருளாதார விடுதலை பெண் விடுதலைக்கு முன் நிபந்தனை என்று கூறினாரே ஒழிய, அது ஆணாதிக்கத்தை ஒழிக்கும் என்று என்றும் கூறிவிடவில்லை. பெண் சுதந்திரமாகச் சிந்திக்கவும், சுயமாகப் போராடவும், அவள் பொருளாதார ரீதியாக ஆணைச் சார்ந்து இருப்பது முடிவுக்கு வரவேண்டும். இந்த குறித்த நிலைமை தான் இன்று வரை, பெண்ணின் சமூகப் பங்களிப்பை மட்டுப்படுத்துகின்றது. ஆண்கள் அளவுக்குச் சமூக ஈடுபாடு குறைவாக இருப்பதும், கல்வியில் பின்தங்கி இருப்பதும், தலைமை தாங்குவதில் முன்னேற முடியாது இருப்பதும் யதார்த்தமாக உள்ளது. பெண் பொருளாதார ரீதியாகச் சுதந்திரம் அடைவது, அவளின் விடுதலைக்கு முன்நிபந்தனையாகும்.


இந்தப் பொருளாதார விடுதலை என்பதை மார்க்சியம் இறுதியானதும் முடிவானதுமாக என்றுமே முன்வைத்ததில்லை. ஆனால் பெண்ணின் பொருளாதார விடுதலை பெண் விடுதலைக்கு நிபந்தனையானது என்பதை முன்வைத்ததுடன், புரட்சிக்குப் பிந்திய சோசலிசச் சமூகங்களில் பெண்ணின் பொருளாதார விடுதலைக்கு ஊடாகப் பெண்ணை முதலில் விடுவித்தது. பெண்ணின் விடுதலை என்பது பல பண்பாட்டு - கலாச்சாரப் புரட்சியூடாகவே நிறைவு பெறும் என்பதைப் பாட்டாளி வர்க்கம் தெளிவாக விளக்கியுள்ளது. இதுவும் சோசலிசச் சமூகத்தில் இருந்து கம்யூனிச சமூகத்தை நோக்கிய மாற்றத்தை, அடிக்கட்டுமான பொருளாதார அலகை மாற்றிச் செல்லுகின்ற போது பெண் விடுதலையை மேலும் துல்லியமாகக் கோருகின்றது.


2. சோசலிசப் புரட்சி பெண் விடுதலையைப் பெற்றுத் தரும் என்ற வாதம் தொடர்பாகவும், சோசலிசச் சமூகங்கள் பெண் விடுதலையைப் பெற்றுத் தரவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாகவும் பார்ப்போம்.


இவை இரண்டும் மார்க்சியத்தை விட்டு விலகிச் செல்லும் வாதமாகும். சோசலிசச் சமூகம் பெண் விடுதலையைப் பெற்றுத் தரும் என்று கூறுவதன் மூலம், சோசலிசப் புரட்சி வரை பெண்களின் பிரச்சினையை ஒத்திப் போடுவது போன்ற பொருளாதார வாதம் முன்வைக்கப்படுகின்றது. சோசலிசப் புரட்சியை நோக்கிய தயாரிப்பில், ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதும் ஒரு வர்க்கக் கடமையாகும். ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தைச் சோசலிசச் சமூகத்துக்கு முன்பே தொடங்குவது, அடிப்படையான பாட்டாளி வர்க்கக் கடமையாகும். இதுவே வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்றது. யாரும் முரண்பாடுகளையும் அதனால் எழும் போராட்டங்களையும் ஒத்தி வைக்க முடியாது.


சோசலிசச் சமூகம் வரை காத்திருக்க கோரமுடியாது. போராடும் உரிமை உயிர் வாழ்தலின் அடிப்படை நியதியாகும். ஆனால் சோசலிசச் சமூக மாற்றமின்றி பெண் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற காரியவாதச் சந்தர்ப்பவாதத்துடன் கூடிய, மார்க்சிய விரோதத் தன்மையை அம்பலம் செய்வதை இது தடுக்காது.


சோசலிசச் சமூகமும் அடுத்த கட்ட கம்யூனிசச் சமூகத்தை நோக்கிய வர்க்கப் போராட்டமுமே பெண்ணின் விடுதலையை நிறைவு செய்கின்றது. இருக்கின்ற சுரண்டல் அமைப்பில் இருந்து தொடங்கும் போராட்டம் கம்யூனிசச் சமூகத்தில் தான் குறித்த சமூக அவலத்தைக் களைகின்றது. இந்த நீண்ட போராட்டத்தை மறுத்த அனைத்து விலகலும், ஆணாதிக்கத்தைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொள்கின்றது. நீண்ட இடைவெளியற்ற போராட்டத்தை ஒத்திப் போடமுடியாத வரலாற்று நிகழ்வு காணப்படுகின்றது. இது ஏற்ற இறக்கம் கொண்ட வழிகளில் மட்டுமே ஒழிக்கப்படுகின்றது.


சிலர் சோசலிசப் புரட்சி நடந்தவுடன் பெண் விடுதலை அடைந்து விடவில்லை என்று மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்துகின்றனர். இது சோசலிசப் புரட்சி பெண் விடுதலையைத் தந்து விடும் என்பது பொருளாதாரவாதக் கோட்பாட்டின் மறு பக்கமாகும். இது கோட்பாட்டு உள்ளடக்கத்தில் பொருளாதார வாதமாகவும், அராஜகவாதமாகவும் வெளிப்படுகின்றது. பண்பாட்டு - கலாச்சாரப் புரட்சியை மறுத்த, கம்யூனிசச் சமூகத்தை நோக்கிய அடிக்கட்டுமான மாற்றங்களை மறுத்த வழிகளில் இது பிரதிபலிக்கின்றது. புரட்சியின் ஏற்ற இறக்கம் கொண்ட நீண்ட அலைவரிசையான இயங்கியலை மறுக்கின்ற தன்மை, ஒரேயடியாக மாறிவிடும் என்ற அராஜகப் பிரமையை விதைப்பதன் ஊடாக, எதிர்ப்பதில் இரட்டைத் தன்மை இங்கு வெளிப்படுகின்றது. இது மார்க்சியத்தின் உயிரோட்டமுள்ள இயங்கியல் மற்றும் புரட்சிகர தன்மையைச் சிதைக்கின்றது. இது மார்க்சிய எதிர்ப்பாக வளர்ச்சி பெறுகின்றது. மார்க்சியத்தைத் திரித்த, திரிந்த வழிகளில் புரிந்து கொள்ளும் போது, ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் முடக்கப்படுகின்றது.


3.மார்க்சியத் தலைவர்கள் ஆண்களாக இருப்பதாகவும், மார்க்சியம் ஆண்களின் இயக்கமாக இருப்பதாகவும், அதனால் பெண்கள் தனியாகப் பெண்கள் தமக்குரிய தலைமையை உருவாக்க வேண்டும் என்ற வாதம் தொடர்பாகப் பார்ப்போம்.


மார்க்சியம் ஆண்களின் இயக்கமா? மார்க்சியம் ஆண்களின் சொத்துரிமையா? மார்க்சியத் தலைவர்களாகப் பெண்கள் வரமுடியாதா? என்ற அடிப்படையான கேள்வி இங்கு எழுகின்றது. இது பல நூல்கள் முதல் பூர்சுவா பெண்ணியல் வாதிகள் வரை முன்வைக்கும் விடயமாகி, மார்க்சிய எதிர்ப்பாகி விடுகின்றது. மார்க்சியம் எப்போதாவது எங்காவது ஆண்கள் இயக்கமாகப் பிரகடனம் செய்ததா? பெண்களை உள்வாங்க மறுத்து, தலைமையில் இருந்து எட்டி உதைக்க முனைந்ததா? இப்படி எங்காவது நடந்தால் அங்கு விமர்சனம், சுயவிமர்சனம் நிகழ்கின்றது. விமர்சனம், சுயவிமர்சனம் மறுக்கப்படும் எல்லா நிலையிலும் அக்கட்சி பாட்டாளி வர்க்கக் கட்சியாக இருப்பதில் இருந்து முதலாளித்துவக் கட்சியாக சீரழிகின்றது.


மார்க்சியம் தனிப்பட்ட நபர்களினதோ, குறித்த மக்கள் கூட்டத்தினதோ சொந்தச் சொத்தல்ல. புரட்சிகர வர்க்கமான தொழிலாளர் தலைமையில் ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்கப் போராட்டப் பாதையில், மார்க்சியத்தை முன் வைத்து யாரும் போராட முடியும். இங்கு புரட்சிகர வர்க்கமான தொழிலாளர், அனைத்து மக்கள் கூட்டத்திலும் காணப்படுகின்றனர். இங்கு ஆண், பெண், மதம், சாதி, நிறம்.. என்ற எல்லை கடந்து யாரும் மார்க்சியத்தை முன்வைத்துப் போராடமுடியும். இங்கு மார்க்சியம் ஆண்களினதோ, உயர் சாதிப் பிரிவுகளினதோ, வெள்ளை நிறத்தினதோ சொத்தல்ல. சில மார்க்சிய விரோதக் கோட்பாட்டாளர்கள் இப்படி இருப்பதாகக் கூறுவதன் மூலமே, தமது இழிந்த குறுகிய காரியவாத, சந்தர்ப்பவாத, பிழைப்புவாத நலன்களை நியாயப்படுத்துகின்றனர்.


பெண்கள், சமூகத்தில் மிக பின்தங்கிய சாதிகள், கறுப்பு நிற மக்கள், ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் என யாரும் மார்க்சியத்தைத் தமது புரட்சிகரத் தத்துவமாகக் கொண்டு போராடவும், தலைமை தாங்கவும், அமைப்புகளை உருவாக்கவும் முடியும். இதை யாரும் தடுக்கமுடியாது. இங்கு எந்த வேலியும், அதிகாரமும் கிடையாது. இவை தொழிலாளர் வர்க்கத் தலைமையில் மனிதப் பிளவுகளைக் கடந்து போராட, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவுவதையும், அதைத் பாதுகாக்கவும், வர்க்கப் போராட்டத்தைத் தொடருவதையும் அடிப்படையாகக் கொள்ளும் போராட்டத்தை, முன்னெடுக்கும் எல்லா நிலையிலும் சர்வதேசியமாகிவிடுகின்றது.


4. ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் வர்க்கப் போராட்டமல்ல என்ற வாதம் தொடர்பாகப் பார்ப்போம்.


ஆணாதிக்கம் மீதான போராட்டம் வர்க்க எல்லை கடந்தது என்ற அரசியல் உள்ளடக்கத்தில் இருந்து இது முன்வைக்கப்படுகின்றது. இதன் மூலம் வர்க்கப் போராட்டமின்றி பெண் விடுதலை அடையமுடியும் என்ற கோட்பாட்டு விவாதம் மட்டுமின்றி, நடைமுறையிலும் முன்வைக்கப்படுகின்றது.


இவை உள்ளடக்கத்தில் சீர்திருத்தவாத, காரியவாத நலன்களை அடிப்படையாகக் கொண்டு தன்னை அடையாளம் காட்டுகின்றது. ஆணாதிக்கம் இயற்கையானதாக இது மறைமுகமாக விளக்க முனைகின்றது. ஆணாதிக்கம் எப்படி தோன்றியது என்ற வரலாற்றுத் தன்மையைப் புரிந்து கொள்ள மறுப்பதன் மூலம், ஆண்களின் சொத்துரிமையைத் தனிப்பட்ட பெண்கள் அனுபவிப்பது முதல் முதலாளித்துவ அமைப்பில் சொத்துரிமை பெற்ற பெண்கள் வரை தமது வர்க்க நலன் சார்ந்து இதை முன்வைக்கின்றனர். அதாவது ஆணாதிக்கச் சொத்துரிமை வழியில் சலுகை பெற்ற பெண்கள் தமது சொத்துரிமையைப் பாதுகாக்க, வர்க்கப் போராட்டத்தில் இருந்து பெண்ணியத்தை விலக்கி வைக்க விரும்புகின்றனர்.


ஆனால் ஆணாதிக்கம் தனிச் சொத்துரிமை அமைப்பில் ஆண்களின் தனிச் சலுகையில் இருந்து உருவானது. ஆணின் வாரிசைப் பெத்துப் போடுவதன் ஊடாகப் பெண் ஆணின் அடிமையானதால், சொத்தையும் சொந்தக் குழந்தைச் செல்வத்தையும் ஆணிடம் இழந்த பெண், ஆணுக்குச் சேவை செய்வதன் மூலம் ஆணின் தயவில் வாழ நிர்ப்பந்தித்த மூலதன அமைப்பு, பெண்ணை ஆணின் அடிமையாக வாழ வழிகாட்டியது. இதற்கு எதிரான போராட்டம் என்பது மூலதனத்தைத் தகர்ப்பதில் சார்ந்துள்ளது. அதாவது தனிச் சொத்துரிமை அமைப்பின் மேல் கட்டப்படும் அனைத்து மேல் கட்டுமான அமைப்பின் மீதான போராட்டங்கள், திட்டவட்டமாக வர்க்கப் போராட்டமாக இருப்பது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.


ஆணாதிக்கம் அடிக்கட்டுமான அமைப்பில் உருவான பிளவாகும். சொத்தை இழந்த பெண் இங்கு ஆணின் அடிமையானாள். இதன் அடிப்படையில் உருவான பண்பாடுகள், கலாச்சாரங்கள் அது சார்ந்த மொழிகள் என அனைத்தும், ஆணின் தனிச் சொத்துரிமை எல்லைக்குள் வளர்ச்சி பெற்றவையே. இன்று ஆண்கள் பெருமளவில் சொத்திழந்த போதும், சிறிதளவு பெண்கள் சொத்தைப் பெற்ற போதும் (இங்கு பெண் சொத்தைப் பெற்றதால் ஆண் சொத்தை இழக்கவில்லை. மூலதனக் குவிப்பு சுரண்டல் வடிவில் உச்சக் கட்டத்தை அடைந்ததன் ஊடாக இவை நிகழ்கின்றது.), ஆணாதிக்க உறவு சொத்துரிமை வடிவில் நீடிக்கின்றது. இது பண்பாட்டு - கலாச்சாரத் தளத்தில் மிக இழிவாக மூலதன வடிவில் நீடிக்கின்றது.


பாட்டாளி வர்க்கப் போராட்டம் புரட்சிக்கு முந்திய நிலையில், மேல் கட்டுமானத்தில் நிகழ்கின்றது. புரட்சிக்குப் பிந்திய சமுதாயத்தில் தான் அடிக்கட்டுமான பொருளாதார அலகின் மேல் நிகழ்வதன் ஊடாக, மேல் கட்டுமான புரட்சி மேலும் வீறுகொள்கின்றது. பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான தயாரிப்பு மேல் கட்டுமானம் மீதான அனைத்துத் தளங்களிலும் தயாரிக்கப்படுகின்றது. இது நடைமுறைப் போராட்டத்தில் ஜனநாயகக் கோரிக்கை முதல் கம்யூனிசச் சமூகக் கோரிக்கை வரை அனைத்தையும் முன்வைத்து ஆயுதபாணியாவதுடன், பல வீரமிக்க போராட்டங்களையும் முன்னெடுக்கின்றது. கோரிக்கைகளை வென்று எடுக்கின்றது. இதை நிரந்தரமாக்கவும், ஒரேயடியாக இவற்றை முடிவு கட்டவும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவவும் போராடுகின்றது. பெண் விடுதலைக்கான தயாரிப்பைப் புரட்சிக்கு முந்திய ஜனநாயகக் கோரிக்கையிலும் பாட்டாளி வர்க்கக் கோரிக்கையிலும் தயார் செய்கின்றது. நடைமுறை போராட்டத்தில் தலைமை தாங்கி கோரிக்கைகளை வென்று எடுப்பதுடன், அடுத்த இலக்கை நோக்கி முன்னேறுகின்றது. இந்த வர்க்கப் போராட்டம் என்பது மார்க்சியத்தின் புரட்சிகரத் தன்மையால் தலைமை தாங்கப்படுகின்றது.


5.மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பெண்ணியம் பற்றி கதைக்கவில்லை (பேசவில்லை) அல்லது மார்க்ஸ் அக்கறை கொள்ளவில்லை என்ற கருத்து தொடர்பாகப் பார்ப்போம்.


இந்த வாதம் தவறானது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பெண்கள் துன்பம் பற்றி கதைத்துள்ளதுடன், (பேசியுள்ளதுடன்) புகழ் பூத்த பெண்ணிய நூல்களையும் தந்தவர்கள். அவர்கள் தமது கடினமான போராட்டக் காலத்தில் கிடைத்த நேர எல்லைக்குள் இவை பற்றி கதைத்தேயுள்ளனர் (பேசியேயுள்ளனர்). இவர்கள் மார்க்சியத்தை நிறுவும் போராட்டத்தையே தமது காலத்தில் செய்தனர். பொருள் முதல் வாதத்தின் முரணற்ற விதியை நிறுவுவதிலும், அதன் மீது சகல சிந்தனைகள், துயரங்கள் நிலவுவதையும், இயற்கை கடந்த நிகழ்ச்சிகளில் இவற்றை நிறுவுவதிலும் போராட வேண்டியிருந்தது. அவர்கள் தேசிய இனப் பிரச்சினை, சுற்றுச் சூழல், ஆணாதிக்கம், நிறவாதம், காலனியாதிக்கம் என எண்ணற்ற பிரச்சினைகள் மீது தனித்துவமான ஆய்வுகளைத் தனித்து செய்வதில் அதிக கவனம் எடுக்க அவர்களின் ஆயுள் போதாததாகவே இருந்தது. இருந்த போதும் இவைகள் பற்றிய ஆய்வுகளை நடத்தி, தமது தெளிவான மார்க்சிய அபிப்பிராயங்களையும் கூட முன்வைக்க பின்நிற்கவில்லை. அவை வரலாற்று ரீதியாக முக்கியமானவையாக இன்றும் திகழ்வதைக் காணமுடியும்.


6.சோசலிசச் சமூகங்களில் புரட்சிக்குப் பிந்திய சமூகங்களில் பெண் விடுதலையில் கவனம் எடுக்கவில்லை என்ற அபிப்பிராயங்கள் மீது பார்ப்போம்.


இந்தக் கருதுகோள் முற்றாகத் தவறானது. சோவியத் புரட்சியைத் தொடர்ந்து பெண்களுக்குச் சட்டப்படி வழங்கிய உரிமைகளை, உலகில் எந்த நாடும் வழங்கியதில்லை. அதன் தொடர்ச்சியில் பெண் விடுதலையில் தொடர்ச்சியாக அவர்களை விடுவிக்கும் பல்வேறு நடைமுறைகளைக் கையாண்டனர். இவை அந்த நாடுகளின் பெண்கள் வரலாற்றில் ஆதாரப்பூர்வமாக உள்ளது. லெனின் தனது கட்சி மீதான விமர்சனத்தில், பெண்கள் விடுதலையை மேலும் பண்பாட்டு - கலாச்சார - பொருளாதாரத் தளத்தில் தீவிரமாக்க தவறியதற்காகக் கடுமையான விமர்சனத்தைக் கூட "சோசலிசச் சித்தாந்தமும் கலாச்சாரமும் குறித்து" என்ற நூலில் செய்துள்ளார்.


சீனாவில் பெண்களின் கல்வி மற்றும் கிராமப்புறப் பெண் அடிமைத்தனம் மற்றும் பெண் குழந்தை உழைப்பு போன்றவற்றைத் தகர்க்கும் போராட்டத்தைக் கலாச்சாரப் புரட்சி காலத்தில் தீவிரமாக்கி சமூக வடிவமாக்கினர். இவை பற்றிய தகவல்களை என் ~ஆணாதிக்கமும் பெண்ணியமும்| என்ற நூலில் தொகுத்துள்ளேன்.


7. ஓரினச்சேர்க்கை இயற்கையானது என்ற வாதங்கள் மீது பார்ப்போம்.


இது இயற்கையைப் புரிந்து கொள்ள மறுப்பதில் இருந்து ஏற்படுகின்றது. இயற்கை ஆண் - பெண் வேறுபாட்டைப் பாலியல் சார்ந்து ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர ஆண் - பெண் வேறுபாடு பற்றிய விளக்கங்கள் எல்லாம், ஆணாதிக்கம் சார்ந்தவை. பாலியல் வேறுபாடு பெண்ணை ஆணின் அடிமையாக்கி விடவில்லை. இயற்கை சார்ந்த பாலியல் வேறுபாடு, அதற்கே உரிய உறவு விதியைக் கூட இயற்கை சார்ந்து உருவாக்கியது. இயற்கையை மனித வரலாற்றில் பாதுகாக்காதவரை, அவை மக்கள் விரோதத் தன்மை கொண்டவை.


இந்த இயற்கையை மறுத்த தொடர்ச்சியில் பாலியல் சார்ந்தும் ஆணாதிக்கமாக வளர்ச்சி பெற்றது. இது இயற்கை பாலியல் உறவை நலமடித்ததன் மூலம், இயற்கைக்குப் புறம்பாகப் பாலியல் உறவுகளை ஏற்படுத்தியது. இவை இயற்கை உறவைக் கொச்சைப்படுத்தும் வழியில், செயற்கையான உறவை ஆணாதிக்க எல்லையில் முன்வைக்கின்றது. இயற்கையான உறவை மறுக்கின்ற அனைத்து உறவுகளும் ஆணாதிக்க வகைப்பட்டவையே. ஆனால் ஆணாதிக்க அமைப்பில் செயற்கை உறவுகள், இயற்கையின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் கூட ஏற்படுகின்றது. இதன் மீது நாம் அனுதாபம் கொள்ள nமுடியும். இதை மாற்ற இயற்கை நோக்கிய சமூகப் புரட்சியை நடத்த போராட வேண்டும்.


இங்கு ஓரினச்சேர்க்கை இயற்கையானது என்ற வாதத்தில், குரங்கில் இருந்து மனிதக் குரங்கு உருவாகிய காலக்கட்டச் செயற்பாட்டை ஆய்வுக்குக் கொள்ள முடியும். குரங்குக்கும், மனிதக் குரங்குக்கும் குறிப்பானதும் அடிப்படையானதுமான வேறுபாடு கைகளினால் ஆன உழைப்பாகும். மரத்தில் தாவி ஏற பயன்படுத்திய கைகளை உழைப்புக்குப் பயன்படுத்திய மனிதக் குரங்கு, குரங்கில் இருந்து திட்டவட்டமாக வேறுபடுகின்றது. கைகளைப் பயன்படுத்த தெரிந்திராத குரங்குகள் எப்படி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருக்க முடியும்.


உதாரணமாகப் பெண் குரங்குகள் உணர்ச்சியை எப்படி தீர்த்து இருக்கும்? கைகளைப் பயன்படுத்த தெரிந்திருக்காத குரங்கு, ஒருக்காலும் ஓரினச் சேர்க்கையில் வெற்றி பெற முடியாது அல்லவா. அத்துடன் பாலியல் இன்ப உணர்ச்சியைத் தீர்க்கும் குறைந்த பட்ச அறிவை, இயற்கைக்குப் புறம்பாக ஒருக்காலும் பெற்றிருக்கவில்லை. கைகளை எப்படி எதற்குப் பயன்படுத்துவது என்பது கூட நீண்ட அனுபவ ரீதியான நடைமுறை முயற்சிகளில், தற்செயலான சம்பவங்கள் நிர்ணயமான பாத்திரத்தை வழங்கின.


அறிவியல் பூர்வமாகப் கைகள் மூலமோ, வேறு உடலுறுப்புகள் மூலமோ பாலியல் இன்பத்தை அடைய முடியும் என்ற அனுபவ அறிவைப் பெறுவதற்குக் கூட, நீண்ட காலம் அவசியமாகவே இருந்தது மனிதனுக்கு. மனிதப் பாலியல் உணர்ச்சியையும், இன்ப நாட்டத்தையும் ஆண் - பெண் உறுப்புகளின் எப்பாகம் வழங்குகின்றன என்பதை இயற்கை கடந்து, புரிந்து கொள்ளும் அனுபவ அறிவு மனித வரலாற்றின் பிந்திய காலக் கட்டத்துக்குரியது. இங்கு ஆண் - பெண் உறுப்பு கடந்து எந்த உறுப்பும் பாலியல் அங்கமாக இருந்தது கூட இல்லை. இவை மிக அண்மைக் காலத்துக்குரியவையாகும்.


இன்று ஆண் குரங்கில் அவதானிக்கப்படும் (கவனிக்கப்படும்) விதிவிலக்கான ஓரினச்சேர்க்கை பெண் குரங்குகளிடையே இல்லை. இந்த ஆண் குரங்கு கூட பரிணாம வளர்ச்சியில் கைகளை மெதுவாக முன்பைவிட சிறப்பாகப் பயன்படுத்துவதின் விளைவு மட்டுமின்றி, குரங்கில் ஏற்படும் குறித்த கால வேட்கையின் விளைவாக அவதானிக்கப்படுகின்றது. பெண் குரங்கின் எண்ணிக்கை குறைவாக உள்ள போதும், ஆண்களின் போட்டியிலும், அதில் தோற்கின்ற போதே ஆண் குரங்குகளில் ஓரினச் சேர்க்கை அவதானிக்கப்படுகின்றது. ஆனால் வெற்றி பெறுவதில்லை. இந்த அவதானம் கூட எல்லாவகையான குரங்களிடமும் காணப்படுவதில்லை. இயற்கையாக அதிக உணவைப் பெற்று ஓய்வைப் பெறுகின்ற இனங்களிடையே தான், இவை முக்கியமாக அவதானிக்கப்படுகின்றது.


இங்கு அவை தன்னிச்சை சேர்க்கையில் ஈடுபடும் போது, அதை ஒத்த நிலையில் உள்ளது. உதவிக்கு வருவதன் மூலமே ஓரினச்சேர்க்கை அவதானிக்கப்படுகின்றது. இங்கு பெண்ணுடன் உடலுறவு கொள்வதில் மற்ற ஆண் குரங்குடன் போட்டியிட்டு வெற்றி பெறும் ஆண் குரங்கு, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. இது மற்ற விலங்குகளில் இருந்து விதிவிலக்காகக் கூட குரங்கில் அவதானிக்கப்பட்டது. மனிதன் இனவிருத்தியைத் தடை செய்து வளர்க்கும் மிருகங்களுக்கிடையில் கூட ஓரினச்சேர்க்கைக்கான முயற்சியில் முயல்கின்றதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் அதில் வெற்றி பெறுவதில்லை. அது இயற்கை சார்ந்து ஈடுபட துடிப்பதால், அதில் தோல்வி பெறுகின்றன.


இயற்கையாகப் பாலியலில் ஈடுபட முயன்று தோற்கின்ற போதே, ஓரினச்சேர்க்கை நிகழ்கின்றது. ஆணாதிக்க மனித அமைப்பில் பாலியல் நலமடிக்கப்பட்டு, அவை சிதைக்கப்பட்ட நிகழ்வுகளில் தான், ஓரினச் சேர்க்கை மையம் கொள்கின்றது. இது இயற்கையானது அல்ல. மாறாகச் செயற்கையாக ஆணாதிக்க விளைவாகக் காணப்படுகின்றது.