Language Selection

தா ய்ப் பால் குடிக்கும் குழந்தையை விட, புட்டிப்பால் குடிக்கும் ஏழைக் குழந்தையின் இறப்பு 15 மடங்கு அதிகமாகும். ஐக்கிய நாட்டுச் சபை சார்ந்து யுனிசேவ் விடுத்த அறிக்கையொன்றின்படி தாய்ப்பால் மறுக்கப்பட்டுப் புட்டிப்பால் குடிப்பதன் காரணமாக, அது சார்ந்த நோயால் நாள் ஒன்றுக்கு 4,000 குழந்தைகள் இறந்து போகின்றன என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது.

 

ஆனால் குருட்டுப் பெண்ணியம் (ஏகாதிபத்தியப் பெண்ணியம் தான்) தாய்ப் பால் கொடுப்பதும், கொடுக்காததும் பெண்ணின் உரிமை என்றும், அத்துடன் அது உடல் சார்ந்தது என்றும் முழங்குவதன் மூலம் இயற்கையின் பாதுகாப்பை மூலதனச் சந்தைக்கு அடகு வைத்து குழந்தைகளையே படுகொலை செய்கின்றனர். அத்துடன் ஆணாதிக்க ஆண்களுக்கு, இயற்கையின் பால் சுரப்பியை வெறும் பாலியல் நுகர்வு உறுப்பாக்கி அழகு காட்ட, ஆணாதிக்கச் சந்தைப்படுத்தும் வழியில் பால் கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றனர். குழந்தையின் தாயுரிமையைக் கைவிட்டுச் செல்லும் பெண்ணியம், அந்தக் குழந்தையின் ஆரோக்கியத்தைத் தனது நுகர்வு தளத்தில் பண்டமாக்கி அலட்சியப்படுத்துகின்றனர். இது நவீன ஆணாதிக்க வளர்ச்சியாகும்.


குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்தை அட்டவணை:4-இல் காணலாம்.14
அட்டவணை: 4


கண்டம்                    மாதம்
ஆப்பிரிக்கா              18
ஆசியா                        17
தென்அமெரிக்கா     9
வடஅமெரிக்கா        1
ஐரோப்பா                    1
மற்றையவை           3


தாய்மையின் கடமைகள் நாகரிகத்தின் வக்கிரத்தால் சிதைகின்ற போது குழந்தைக்கும் தாய்க்கும் இடையிலான இயற்கையிலான உறவும் சேதத்துக்கு உள்ளாகின்றது. பெண்ணின் மார்பின் ஊடான குழந்தைக்கான பால் என்பது இயற்கையாக, நோயெதிர்ப்பு பாதுகாப்பைக் குழந்தைக்கு வழங்கியது. ஆனால் ஆணாதிக்கம் தனது சொந்தப் பண்பாட்டால் பெண்ணின் மார்பைப் பாலியலில் நுகர்வுக்குரிய கவர்ச்சிப் பண்டமாக்கியதன் மூலம் அதனைச் சதையுள்ள மூலதனமாக்கியது. குழந்தை பால் குடிக்கும் உறுப்பு என்பது சிதைந்து ஆணின் கவர்ச்சிப் பொருளாகியது. இந்தப் பண்பாட்டில்தான் பெண்ணின் மார்பை ஆண் அழகுபடுத்தினான். இந்த வக்கிரமான பாலியல் வளர்ச்சியில் பெண்ணின் மார்பைச் சந்தைத் தளத்தில் நுகர்வு விளம்பரக் கலை உத்தியாக்கினான். வியாபாரத்தின் விளம்பரக்கலை பெண்ணின் மார்பில் மையம் கொண்டது. பெண் அதை நோக்கிய பண்பாட்டுக்குள் சிதைந்தாள்.


பெண் தனது மார்பைப் பாலியல் கவர்ச்சியின் அங்கமாகக் கண்டும், அழகுபடுத்தியும் தனது ஆணாதிக்கமயமாதலை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் முன்னேறினாள். இதில் இருந்து குழந்தைக்குப் பால் கொடுப்பது என்பது சொந்த மார்பின் அழகைக் கெடுக்கும் என்ற பெண்ணின் கண்ணோட்டம் குழந்தையின் இயற்கை உரிமையைத் தகர்த்தது. தனது சொந்த உடல் சார்ந்தது என்ற வாதத்தைச் சேர்த்துக் கொண்டதன் மூலம், வாய் பேசாத குழந்தையின் உரிமையை மறுத்து, ஆணாதிக்கக் கவர்ச்சிக்குத் தன்னை அழகுபடுத்தினாள்.


இது வறுமைக்கும், செல்வத்துக்குமிடையிலான பிளவை இந்தப் பாலூட்டும் அங்கம் தொடர்பான பார்வையில் வேறுபடுத்தியது. வறுமைப்பட்ட தாய்மை இதைப் பாலியல் அங்கமாக அல்ல, குழந்தையின் பால் வழங்கும் உறுப்பாகத் தெளிவாகக் காணும் யதார்த்தம் துல்லியமாக்குகின்றது. பணக்காரப் பெண்களிடையே இது பாலியல் அங்கம் என்ற எல்லைக்குள் சிதைந்ததைக் காட்டுகின்றது. இந்த இடைவெளி பணக்கார நாட்டுக்கும், ஏழைநாட்டுப் பெண்களிடையேயான கண்ணோட்டத்திலும் தெளிவாக வெளிப்படுகின்றது.


குழந்தை பற்றிய பணக்காரக் கண்ணோட்டமும், ஏழைக் கண்ணோட்டமும் பாலியல் தளத்தில் பிளந்து போவதை மேலும் துல்லியமாக்குகின்றது. புட்டிப்பால் போன்றன பற்றாக்குறையை ஈடுசெய்வதற்குப் பதில், அது ஆணாதிக்கப் பாலியல் வக்கிரத்தின் அழகை ஈடுசெய்யும், பெண்ணின் விளம்பரமான பாலியல் உடல் சுதந்திரத்தின் ஊடகமாக மாறிவிடுகின்றது. குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய்மை இயற்கையில் ஒன்றி வாழும் ஆரோக்கியமான சிந்தனைத் தளத்தில், உயர்ந்த சமூக வடிவமாகும். இது நாகரிகமும், பணத்திமிரும் புகுந்து செல்ல முடியாத இடங்களில் இன்னமும் இயற்கையாக நீடிக்கின்றது.


இயற்கையை அண்டியும், சேர்ந்தும் வாழும் பல்துறை சார்ந்த பெண்கள் தான் குழந்தைக்குப் பால் கொடுப்பதிலும் இயற்கையுடன் ஒன்றிப் போயுள்ளனர். அவளிடமே பெண்ணியம் தன்னை உருவாக்க வேண்டுமே ஒழிய ஆணாதிக்கப் பெண்களின் வக்கிரத்தில் இருந்து பெண்ணியத்தை உருவாக்கின், அது ஆணாதிக்கத்தின் இன்னுமொரு வடிவமாகவே மட்டும் எஞ்சும்.


அடுத்த சமூகச் சீரழிவைப் பார்ப்போம். அமெரிக்கப் பாடசாலையில் செய்த ஆய்வுகளில் ஆறாம் வகுப்பு மாணவர்களில் 28 சதவீதமும், எட்டாம் வகுப்பு மாணவர்களில் 49 சதவீதமானோரும், பத்தாம் வகுப்பு மாணவர்களில் 60 சதவீதமான மாணவர்களும் பாலியல் நடத்தையில் ஈடுபடுகின்றனர். கர்ப்பத் தடையைத் தவிர்க்க 10 வயது பெண் குழந்தைக்கும் கர்ப்பத்தடை உறை (ஆணுறை) இலவசமாக வழங்கப்படுகின்றது.2 ஜனநாயகம், தனிமனிதச் சுதந்திரம் மூலதன விரிவாக்கத்தில் வெம்பும் போது இவை விளைவு ஆவதைத்தான் இது காட்டுகின்றது.


கி.பி. 1994-இல், பிரேசிலில் 15 வயதுக்கு உட்பட்ட 11,547 சிறுமிகள் குழந்தையைப் பெற்று எடுத்தனர். இது கடந்த 19 வருடங்களில் 391 சதவீதங்களில் அதிகரித்துள்ளது. ஆனால் ஜனத்தொகை 42.5 சதவீதம் மட்டும் அதிகரித்துள்ளது. இது 15-19 வயதுடையோர் குழந்தையைப் பெறுவது 60 சதவீதம் அதிகரித்துள்ளது.6
சிறுவயதில் கர்ப்பமாதல் என்பது ஒரு போக்காக உள்ளது. 13-19 வயதுக்கு இடைப்பட்ட 40 சதவீத அமெரிக்கர்களில் ஆய்வு செய்த போது இருபது வயதுக்கு உட்பட்ட 10 இலட்சம் சிறுமிகள் ஒருதடவை தன்னும், கர்ப்பம் அடைகின்றனர். இந்தப் பத்து இலட்சத்தில் 80 சதவீதம் சிறுமிகள் திருமணம் செய்யாதவர்கள். 13-19 வயதுக்கும் இடைப்பட்ட கர்ப்பம் தரித்தல் என்பது மேற்கு நாடுகளில் 12 சதவீதம் குறைந்துள்ளது. இது கரு அழிப்பு மூலமும், கர்ப்பத் தடை மருந்தை முன் கூட்டியே பாவித்தல் மூலமும் (15 வருடங்களுக்கு முன் கர்ப்பத்தடை மருந்து பாவித்தல் 11 சதவீதமாக இருந்தது. இன்று 44 சதவீதமாக உள்ளது.) தடுக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் 21 சதவீதத்தால் கர்ப்பமாதல் குறைக்கப்பட்டுள்ளது.(27.12.1998)6


சிறுமிகள் கர்ப்பமாதல் என்றுமில்லாத வேகத்தில் அதிகரித்துச் செல்லுகின்றதே, ஏன்? கர்ப்பத்தடை மற்றும் கருஅழிப்பை மீறியே இப்புள்ளிவிபரங்கள் அதிசயிக்கத்தக்க வகையில் உள்ளது. பாலியல் பற்றிய விகாரமான கற்பனைகள், யதார்த்த வாழ்க்கையில் இருந்து அன்னியப்பட்ட புனைவுகள், பாலியல் மீதான பிரமிப்பான இன்பக் கற்பனைகள் ஆகியவை பாலியல் நுகர்வை நாடவைக்கின்றது. இளமையில் பாலியல் பற்றிய விழிப்புணர்ச்சி, சந்தைப்படுத்தும் பாலியல் வக்கிரத்தால் கவரப்பட்டு அதை நாடவைக்கின்றது. மக்கள் தொடர்பு சாதனங்கள் எங்கும் பாலியல் வக்கிர விளம்பரத்தில் ஜனநாயக மூலதனத்தைப் பாதுகாக்கவும், இந்த அமைப்பைப் பாலியல் விகாரமாக்கும் போது, இது சமூக அமைப்பின் ஆதாரமாக உள்ளது.


இதிலும் பெண்கள் பாலியல் நுகர்ச்சியின் சின்னமாகக் கட்டமைக்கும் ஆணாதிக்கம், பெண்ணைப் பாலியல் அங்கமாக, ஆணின் கவர்ச்சிப் பொருளாகச் சித்தரித்து அனுபவிக்கத் தூண்டுகின்றது. இந்தப் பெண்கள் மீதான பார்வையை ஆண்களும், பெண்களும் அதன் யதார்த்த நிலையில் உள்வாங்கி அதன் சின்னங்களாகின்றனர். பாலியல் உணர்ச்சியைத் தூண்டும் இவ்வயதில் பெண்கள் மீதான சமூகப் பார்வையையும் அதன் நுகர்வுத் தன்மையையும் இன்பத்தின் உச்சமாகப் புனைந்து காட்டும் யதார்த்தத்துக்குப் புறம்பான வாழ்க்கையில் சிக்கி விடும் சிறுமிகள், ஆணின் போகத்துக்குள் பந்தாடப்படுகின்றனர்.


இந்த ஏகாதிபத்திய நுகர்வுச் சந்தையில், ஆண்கள் பெண்களை நுகர உருவான சமுதாயத்தில், சிறுமிகள் பாலியலில் ஈடுபடவும், வக்கிரத்துக்குள்ளாகவும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு எதிராகக் கட்டமைக்கும் பாலியல் சித்திரங்களின் விளைவுகளைத் தடுக்க கர்ப்பத்தடை, கரு அழிப்பு போன்றவற்றையே தீர்வாக வைக்கின்றனர்.


பாலியல் பற்றிய அறிவான கல்விக்குப் பதில் பாலியலை ஏகாதிபத்தியச் சந்தை நுகர்வுக்கு இசைவாகக் கற்றுக் கொடுக்கும் அயோக்கியத்தனம் இந்த ஜனநாயக அமைப்பின் ஆதாரமாக உள்ளது. பாடசாலை மாணவ-மாணவிகள் கற்றுக் கொள்ள வேண்டிய கல்விக்குப் பதில் இந்த அமைப்பின் அழுகல்களை உள்வாங்கி வெம்பிப் போகும் சமுதாய வளர்ச்சி, சமூகக் கண்ணோட்டத்தை நிராகரிக்கும் கண்ணோட்டத்தை உள்வாங்குகின்றது. இதன் விளைவு வன்முறை கொண்ட இளைய சமுதாயத்தைச் சமுதாயத்துக்கு எதிராகத் தோற்றுவிக்கின்றது. அனுபவிப்பும், நுகர்வும் தேடி அலைவது, அதன் தோல்வி இந்தச் சமுதாயம் மீதான வெறுப்பாகத் தோற்றம் பெறுகின்றது. இது சமுதாயத்தின் அனைத்துத் துறைகளையும் எதிர்த்துச் சமுதாய விரோதமாக மாற்றம் காண்கின்றது. இதன் மூலம் நுகர்வையும், அனுபவிப்பையும் அடைய முயல்கின்றது. பாலியல் மீதான நாட்டமும் அதன் மீதான யதார்த்தத்துக்குப் புறம்பான தோல்விகளும் பால் எதிர்ப்பைத் தோற்றுவிக்கின்றது.


இளமையில் வீங்கி வெம்பிப் போய் யதார்த்த வாழ்க்கைக்கு முரணாக ஈடுபடும் பாலியல், தோல்வியில் முடிகின்றது. கற்பனையான இட்டுக்கட்டி காட்டப்பட்ட பாலியல் நடத்தைகள் தோல்வியில் முடிகின்ற போது பால் எதிர்ப்பு வளர்ச்சி பெறுகின்றது. இது எதிர்பால் பாலியல் (ஆண் ஒ பெண் பாலியல்) உறவுகளைச் சமுதாயத்தின் முரண்பாடாகக் காண்கின்றது. இதை நிலவி வரும் ஆணாதிக்கக் கொடூரத்தின் பக்கமாகத் தவறாக அடையாளம் காண்பதும், காட்டுவதும் நிகழ்கின்றது. இதன் மூலம் எதிர்பால் உறவை வெறுப்பதும், ஓரினச் சேர்க்கையை நாடுவதும் அதிகரிக்கின்றது.


இளம் வயது பாலியல் நாட்டம் சமுதாயத்திற்குப் பல்வேறு கெடுதல்களை விளைவிக்கின்றது. இது மேற்கில் இருந்து மூன்றாம் உலகம் ஈறாக, பொதுவாக உள்ளது. இவை தொடர்பாக மேலே பல புள்ளிவிபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. சந்தைப் பொருளாதாரம் இலாப நோக்கில் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டு நுகர்வை ஊக்குவிக்கும் எல்லைவரை குழந்தைகளைப் பாலியலில் வெம்பி வெடிக்க வைப்பது தொடரும். இது மட்டுமே இந்த அமைப்பின் நம்பிக்கையான சந்தையைத் தீர்மானிக்கின்றது. இதைத் தகர்க்க வர்க்கப் போராட்டம் மட்டுமே மாற்றான பாதையாக எம் முன்னுள்ளது.