1956 இல் சிங்களம் மட்டுமே அரசகரும மொழி என்று அறிவித்து தேர்தல் களத்தில் இனவாதிகள் குதித்தனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தால் 24 மணித்தியாலத்தில் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை கொண்டு வருவதாக வாக்களித்தனர். 1961 1.1 தனிச் சிங்களம் நாடுமுழுக்க அழுலுக்கு வந்தது. மொழியில் மட்டுமல்ல, வேலை வாய்ப்பிலும், குடியிருப்பு நிலத்திலும் ஏன் முழு இலங்கையின் அனைத்துதுறையிலும் சிங்கள இன மயமாக்கும் உள்ளடக்கத்தை இனவாதிகள் தமது அரசியல் ஆணையாக வைத்தனர். இதையே படிப்படியாக செய்தனர், செய்து வருகின்றனர், செய்யத் துடிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாகவே மலையக மக்களின் வாழ்விடங்கள் சூறையாடப்பட்டன.
1939-1947 க்கு இடையில் மலையகத்தில் கிராம அபிவிருத்தி என்ற பெயரில் வழங்கப்பட்ட 148 562 ஏக்கர் நிலத்தில் ஒரு துளி கூட, மலையக மக்களுக்கு வழங்கப்படவில்லை. இதன் திட்டமிட்ட குடியேற்றத்தின் போது மலையக மக்கள் சொந்த வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். 1945 இல் நாவேஸ்மிர் தோட்டத்தில் 400 ஏக்கர் காணியை இனவாதிகள் பலாத்காரமாக பறித்த போது, அது கடுமையான எதிர்ப்பினால் தடுக்கப்பட்டது. 1950 இல் சேனநாயக்க உருளவள்ளி தோட்டத்தில் மலையக மக்களை வெளியேற்றி சிங்கள குடியேற்றத்தை நடத்த முற்பட்ட போது, இதை எதிர்த்து மலையக மக்கள் போராட்டத்தை நடத்தினர். தொடர்ச்சியான குடியேற்றங்களை இலங்கையில் இன அழிப்பு வரலாற்றின் ஒரு பகுதியாக மலையகத்திலும் திட்டமிட்டு நடத்தினர்.
1972 இல் கொண்டு வந்த காணி சீர்திருத்தச் சட்டம் இனவிரோதச் சட்டமாகி, 80000 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை கைப்பற்றி சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளித்தனர். மலையக மக்கள் அகதிகளாக வீதியில் விரட்டி அடிக்கப்பட்டனர். அத்துடன் அவர்களை தீவிரமான நாடு கடத்தலுக்குள்ளாக்கினர். பலர் பட்டினியால் வீதிகளில் செத்தனர். அந்த மக்கள் உழைப்பில் இருந்து அந்நியமாகி வீதிவீதியாக கையேந்தும் ஒரு சமூகமாக உருவானது. சிங்கள குடியேற்றங்கள் கொலனி என்ற பெயரில், கிராமங்களுக்கு வரும் வீதியோரங்களில் நடத்தப்பட்டது. இதன் மூலம் மலையக கிராமங்கள் சிங்கள குடியேற்றம் மூலம் சுற்றி வளைக்கப்பட்டது. நுவரெலியா மாவட்டத்தில் 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பிரதான வீதிகளை அண்டிய பகுதிகளில் இனவாத குடியேற்றத்தை நடத்த முயன்ற போது, பெரியளவில் போராட்டம் வெடித்தது. அது உயிர் தியாகம் செய்யும் அளவுக்கு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இனவாதிகள் திட்டமிட்ட இந்த குடியேற்றத்தை கைவிட வேண்டியதாகியது.
1983 இல் திருகோணமலையில் குடியிருந்த மலையக மக்களை பலாத்காரமாக மலையகத்துக்கு அனுப்பினர். இனவாதிகள் திட்டமிட்ட வகையில் இன அழிப்பை நடத்திய போதும், தமிழ் தேசியம் மௌனத்தின் மூலம் அதை அங்கீகரித்தது. கண்டன அறிக்கையுடன் இதை பூசி மொழுகுவதை காலகாலமாக செய்ததுடன், இதைக் காட்டி சொந்த நலனை கோருவது தொடர்கின்றது. 1988 மலையகத்தில் 14710 ஏக்கர் நிலத்தில் திட்டமிட்டு இனவாத குடியேற்றத்தை நடத்த பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தைப் பெற்றனர். சுவர்ணபூமி திட்டப்படி கண்டியில் 1000 ஏக்கரும், மாத்தளையில் 1000 ஏக்கரும், பதுளையில் 1200 ஏக்கரும், இரத்தினபுரியில் 1200 ஏக்கரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை நடத்தினர். கிராம விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ் கண்டியில் 400 ஏக்கரும், மாத்தளையில் 500 ஏக்கரும், நுவரெலியாவில் 400 ஏக்கரும், பதுளையில் 25 ஏக்கரும், இரத்தினபுரியில் 800 ஏக்கரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு ஒதுக்கப்பட்டது. காணி சுவீகரிப்பு திட்டத்தின் கீழ் கண்டியில் 400 ஏக்கரும், நுவரெலியாவில் 400 ஏக்கரும், பதுளையில் 100 ஏக்கரும், இரத்தினபுரியில் 85 ஏக்கரும் அபகரிக்கப்பட்டது. காணி சீர்திருத்த சட்டப்படி கண்டியில் 400 ஏக்கரும், இரத்தினபுரியில் 1600 ஏக்கரும் சூறையாடப்பட்டது. 1988 இல் மொத்தமாக கண்டியில் 2500 ஏக்கரும், மாத்தளையில் 2600 ஏக்கரும், நுவரெலியாவில் 2000 ஏக்கரும், பதுளையில் 2125 ஏக்கரும், இரத்தினபுரியில் 5485 ஏக்கரும் திட்டமிட்ட சிங்கள இனக் குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த நிலங்கள் மலையக மக்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாக குடியெழுப்பப்பட்டனர்.
இதைவிட மலையகத்தில் சட்டவிரோத குடியேற்றங்கள் ஊக்குவிக்கப்பட்டு, சட்டப்படி உறுதி வழங்கப்பட்டது. இந்த வகையில் 1988 இல் கண்டியில் 750 ஏக்கரும், மாத்தளையில் 2250 ஏக்கரும், நுவரெலியாவில் 65 ஏக்கரும், பதுளையில் 200 ஏக்கரும், இரத்தினபுரியில் 1500 ஏக்கருக்கும் உறுதி வழங்கப்பட்டது. அத்துமீறிய சிங்களவருக்கு மட்டுமே உறுதி வழங்கிய இனவாத அரசாங்கம், அத்துமீறி வாழ்ந்த மலையக மக்களுக்கு இதை வழங்க மறுத்தனர். 1987 இல் போகாவத்தையில் அத்துமீறி வாழ்ந்த மலையக மக்களை, பலாத்காரமாக பொலிசாரின் துணையுடன் வெளியேற்றப்பட்டனர். மலையக மக்களின் சிறியளவில் காய்கறி தோட்டங்களையும் கூட, மரநடுகை என்ற பெயரில் அபகரிக்கப்படுகின்றது.
இனவாத அரசாங்கம் 1935-1985 ஆண்டுக்கு இடையில் குடியிருப்பு சார்ந்து அரசு ஒதுக்கிய நிலம்
பாரிய குடியேற்றம் 434 751 ஏக்கர்
கிராம விரிவாக்கம் 682 737 ஏக்கர்
மேட்டு நிலக் குடியேற்றம் 33 519 ஏக்கர்
அத்து மீறிய குடியேற்றம் 508 438 ஏக்கர்
மத்திய வர்க்கத்திற்கான நிலம்135 951 ஏக்கர்
மொத்தமாக 1935-1985க்கு இடையில் 18 லட்சம் ஏக்கர் நிலம் பெரும்பான்மை இனத்துக்கு திட்டமிட்ட இன அழிப்பு சார்ந்து குடியேற்றப்பட்டனர். இதன் மூலம் இலங்கையில் நிலப்பிரபுத்துவம் இடையிலான முரண்பாடு தவிர்க்கப்பட்டது. அதேநேரம் இன அழிப்பை நடத்த முடிந்தது. இனத்தின் வாழ் நிலங்களை அபகரித்ததன் மூலம் இனத்தின் தனித் தன்மையை சிதைக்க முடிந்தது. தமிழ் முஸ்லீம் இனங்களின் பாரம்பரிய நிலங்கள் மட்டுமல்ல, மலையக மக்களின் நிலங்களும் இனஅழிப்பின் மூலம் சூறையாடப்பட்டது. தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புக்கு தேவையான நிலம் 15 000 ஏக்கர் மட்டுமேயாகும். ஆனால் இனவாதிகள் இதை கொடுக்க மறுத்ததுடன், இருந்ததை பறிப்பதிலேயே இலங்கையின் இனவரலாறு தொடருகின்றது. பெரும் இனவாத தேசியத்துக்கு எதிரான போராட்டம், ஒட்டுமொத்தமான அனைத்து சிறுபான்மை இனங்களின் ஜனநாயக கோரிக்கைகளையும் உள்ளடக்கத் தவறி, குறுந்தேசியமாகி மற்றவர்களின் அழிவில் சில நலன்களை அடைவதையே அரசியல் கோரிக்கையாக்கியுள்ளனர்.