Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இனவாதம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மெதுவாகவே தலைகாட்டத் தொடங்கியது. 1911 இல் "இந்திய வம்சாவழித் தமிழர்" என்று உத்தியோகபூர்வமாக தமிழ் மற்றும் சிங்கள இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.

1915இல் இலங்கையில் நடந்த சிங்கள - முஸ்லீம் கலவரத்தின் போது கூட, தமிழ் தலைவர்கள் மற்றைய இனங்களுக்கு துரோகம் செய்தனர். கண்டியில் முஸ்லீம் வழிபாட்டு தலத்துக்கு அருகில் வைத்து புத்தரின் பிறந்த தினத்தை கொண்டாடும் போதே, இந்த இனக் கலவரம் உருவானது. இது பின்னால் திட்டமிட்ட வகையில் வளர்ச்சி பெற்றது. அந்த இனக்கலவரத்தின் போது 86 முஸ்லீம் வழிபாட்டு தலங்கள் சேதமாகின. 4075 முஸ்லீம் கடைகள் சூறையாடப்பட்டன அல்லது எரிய+ட்டப்பட்டன. 35 முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 198 பேர் படு காயங்களுக்கு உள்ளானார்கள். 4 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். 17 கத்தோலிக்க தேவாலயங்கள் எரிக்கப்பட்டன.

 

 ஒரு சிறுபான்மை இனம் மீதான தாக்குதலாக இருந்த போதும், சிங்கள தமிழ் தலைவர்கள் சிறுபான்மை இனங்கள் மேல் வெறுப்பை தொடர்ந்து வளர்த்தனர். இந்த இனக்கலவரத்தின் காரணமாக பின்னால் முதல் பிரதமராக வந்த சேனநாயக்காவின் இரு சகோதரர்களும், அநாகரிக தர்மபாலவின் இரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டனர். இதை விட பல முக்கிய பிரமுகர்களும் கைதானார்கள். இவர்களை விடுவிப்பதற்காகவே சேர் பொன் இராமநாதன் லண்டன் சென்றார். சிங்கள இனவாதிக்களுக்காக சேர் பொன் இராமநாதன் லண்டனில் வாதாடியதற்காக, அவர் இலங்கை வந்த போது தேரில் வைத்த வடம் கட்டி இழுத்தனர். அத்துடன் இனவாதிகள் 1917ம் ஆண்டு ஒரேயொரு படித்த இலங்கையருக்கான ஆசனத்துக்கான போட்டியில், சாதி குறைந்த கராவ சாதியைச் சேர்ந்த மார்க்கஸ் பெர்னான்டோவை தோற்கடிக்கும் அளவுக்கு நன்றி தெரிவித்தே ஆதரவு கொடுத்தனர். இங்கு சாதிய உணர்வும் இணைந்து கொண்டது. இலங்கையில் பின்னால் ஆட்சிகளுக்கு வந்தவர்கள் பலர் கடந்த கால இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவும், இனவாத பேச்சுகளில் ஈடுபட்டவர்களாவர். இதனால் இலங்கை இனவாதம் ஒரு அரசியல் போக்காகவே வளர்ச்சி பெற்றது.

 

1920 இல் சட்ட நிருபண சபைக்கு இந்திய பிரதிநிதிகள் தெரிவு செய்வதை தமிழ் சிங்கள இனவாதிகள் எதிர்த்தனர். 1929 இல் இந்திய மக்களுக்கு வாக்குரிமை வழங்க முனைந்த போதும், தமிழ் சிங்கள தலைவர்கள் எதிர்த்தனர். மலையகத்தவர்கள் வெறும் கூலிகளாக அடிமைகளாக தமக்கு சேவை செய்தபடி இருப்பதையே விரும்பினர். இதைப் போன்றே பெண்கள் மற்றும் தாழ்ந்த சாதி மக்களுக்கும் தொழிலாளருக்கும் வாக்குரிமை வழங்குவதை தமிழ் சிங்கள தலைவர்கள் கூட்டாக எதிர்த்தனர்.

 

சி.டபிள்யூ.டபிள்யூ.கர்னங்கர 15.11.1928 இல் பாராளுமன்றத்தில் பேசும் போது "இந்திய தொழிலாளர் இலங்கையின் நிரந்தர குடிகளை மூழ்கடித்து விடுவர். இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்குவதை எதிர்க்காதவர்கள் துரோகிகளே" என்றார். இதே போன்று "நான் கொழும்பில் வாழும் இந்தியர்களை விட தோட்டங்களில் வாழும் இந்திய கூலிகளைப் பற்றியே அஞ்சுகிறேன். இந்திய தொழிலாளி காலை ஆறு மணிக்கு வேலைக்குப் போய் இரவு ஆறு மணிக்கே தனது கூலி லைன்களுக்குத் திரும்புகின்றான்… நாட்டு நடப்புக்கள் என்ன தெரியும்? .... ஆகவே அரசியல் விவகாரங்களில் வாக்களிக்கும் தகுதியும் அருகதையும் அவனுக்கு இல்லை" என்று 2.11.1928 இல் வீ.டி.எஸ். விக்ரமநாயக்க பாராளுமன்றத்தில் பேசினார். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1930 இல் "இந்திய வர்த்தகருக்கும் தொழிலாளிக்கும் அரசியல் அதிகாரம் கொடுக்கப்பட்டால் இன்னும் இருபது அல்லது முப்பது ஆண்டுகளில் அவர்களுடைய ஆதிக்கத்தில் நாம் வாழவேண்டிய நிலை ஏற்படுவது மட்டுமல்ல, எங்களுடைய எதிர்கால சீவியமே ஒரு பிரச்சினையாகிவிடும் என்று நாம் எண்ணுவதில் எவ்விதத் தவறுமில்லை" அதே ஆண்டில் மீண்டும் அவர் "இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டால் இலங்கையர்களாகிய நாம் எம்முடைய நாட்டிலேயே அந்நியர்களாகிவிடுவோம்" என்றார். சேர் பொன். அருணாசலம் "தோட்ட கூலிகளுக்கு" வாக்குரிமை வழங்கக் கூடாது என வாதிட்டார். தமிழ் சிங்கள தேசிய தலைவர்கள் மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்குவதை ஒருமனதாக எதிர்த்தனர். பலாத்காரமாகவும் ஏமாற்றியும் நாடு கடத்திக் கொண்டுவரப்பட்ட மலையக மக்கள் அடிப்படை வசதியற்ற நிலையில் வாழ்ந்தார்கள். நாட்டின் தேசிய வருவாயை சொந்த உழைப்பின் ஊடாக தந்து கொண்டு இருப்பவர்களுக்கு எதிராக இனவாதம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதைக் காட்டுகின்றது. காலனித்துவ பிரிட்டிசாருக்கு கால்களை துடைத்துவிட்டபடி, தேசியத்தை இன அடிப்படைவாத எல்லைக்குள் திரித்துவிடும் இந்த செயல், வௌவேறு காலத்தில் ஒரே வடிவத்தில் வளர்ச்சி பெற்றது. இன்று புலிகளும் இதையே செய்கின்றனர். அன்று பண்டாரநாயக்க மட்டுமல்ல, தமிழ் சிங்கள இனத் தலைவர்களும் இந்த அடிப்படை நிலையை கொண்டிருந்தனர்.

 

1930 இல் இந்தியரே வெளியேறு என்ற கோசம் உயர் வர்க்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் 8000 பேரை தனது இலாக்காவில் இருந்து வெளியேறுமாறு ஒரு மாத நோட்டிஸ் கொடுத்தார். 1939ம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலை செய்த 4000 பேரை இந்தியாவுக்கு திருப்பியனுப்பினர். 1931ம் ஆண்டு புள்ளிவிபரப்படி இந்தியத் தமிழர் 818 500 யாகும். இதில் 692 540 பேர் தோட்ட தொழிலாளர்கள் ஆவர். மிகுதியானோர் பல்வேறு கட்டுமான பகுதிகளில் தோட்டத்துக்கு வெளியில் வேலை செய்தனர்.

 

மலையக மக்களுக்கு எதிராக இனவாதம் திட்டமிட்ட வகையில் தமிழ் சிங்கள தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். தமது அதிகாரத்துக்கு ஏற்ப இந்த இனவாத நடவடிக்கையை ஒரு அதிகார வடிவமாக்கினர். 1937 இல் கொண்டு வரப்பட்ட உள்ளுராட்சி தேர்தல் சட்டம் மலையக மக்களின் வாக்குரிமையை பறித்தது. உள்ளுராட்சி அமைச்சராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவே இச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இது ஆரம்பத்தில் தோட்டதுறைகளில் இருந்த ஐரோப்பியருக்கு மறுக்கப்பட்டாலும், பின் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதே நேரம் இந்திய மூலதனத்தை பெரியளவில் கொண்டிருந்தவர்களுக்கு பறிக்கப்படவில்லை. இந்திய மூலதனம் பெரியளவில் இலங்கையில் இருந்தது. 1945ம் ஆண்டு 750 இந்தியச் செட்டிகள் நிறுவனங்கள் 10 கோடி ரூபா வங்கிப்பணத்தை கட்டுப்படுத்தினர். இவர்கள் உள்ளுர் கடன்களை கட்டுப்படுத்தி மக்களை கொள்ளையடித்தனர். இவர்கள் மொத்த வணிகத்தில் 90 சதவீதத்தையும், இடை வணிகத்தில் 60 சதவீதத்தையும், சில்லறை வியாபாரத்தில் 40 சதவீதத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனால் இந்த மூலதனத்தை எதிர்த்து தேசியத்தை முன்வைக்கவில்லை. மாறாக மூலதனம் மீதுள்ள வர்க்க காதல் அதை பாதுகாக்க இனவாதத்தையே முன்வைத்தனர். இந்தியா மூலதனம் உட்பட பிரிட்டன் மற்றும் அனைத்து மூலதனத்தையும் தேசிய மயமாக்க கோரிப் போராடுவதற்கு பதில், இனங்களைப் பிளந்து இனவாதத்தையே தமிழ் சிங்கள தலைவர்கள் முன்வைத்தனர். இது இன்று வரை பொதுவான ஒரு இனவாத அரசியலாக உள்ளது.

 

1938 இல் தோட்ட தொழிலாளர்களின் வாக்குரிமை மறுப்பு ஒரு சட்டமாக வந்தது. இதைத் தொடர்ந்து 1939ம் ஆண்டு 2 25 000 இந்தியா வாக்காளர்கள் தொகை 1943 இல் 168 000 யாக மாறியது. இலங்கையில் அரசாங்கம் சார்ந்த பல்வேறு துறைகளில் 1936 இல் 36 சதவீதம் இந்தியராக இருந்தனர். இது 1939 இல் 19 சதவீதமாகவும், 1941 இல் 12 சதவீதமாகவும் மாறியது. தமிழருக்கு இன்று நடப்பது அன்று இந்தியா தொழிலாளருக்கு நடந்தது. ஆனால் அன்று தமிழ் தலைவர்கள் இதற்கு துனை நின்றனர். மலையக மக்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்ந்த தேசிய இனங்கள், அவர்களின் உழைப்பின் மூலம் இலங்கையில் பல நிரந்தரமான கட்டுமானப்பணிகளில் சுரண்டிய பின்பு, அவர்களை கேவலப்படுத்தி தூக்கியெறியவும் மற்றைய இனங்கள் தயங்கவில்லை. 1939 போக்குவரத்து அமைச்சராக இருந்த சேர்.ஜோன்.கொத்தலாவல 2500 மலையக தொழிலாளர்களை போக்குவரத்து துறையில் இருந்து துரத்தினார். தொடர்ச்சியாக மலையக மக்களை படிப்படியாக வேலையில் இருந்து நீக்குவது அதிகரித்தது. இதனால் அரசுதுறையில் 26 சதவீதமாக இருந்த மலையக தொழிலாளர்கள் 1943 இல் 12 சதவீதமாக குறைந்தனர்.

 

1931 இல் இந்தியா வாக்காளர் தொகை 2.25 லட்சமாக இருந்தது. இது 1936 இல் 1.68 லட்சமாக குறைந்தது. அதேநேரம் மற்றைய இனங்களின் வாக்குரிமை 1931 இல் 10.5 லட்சத்தில் இருந்து 26.4 லட்சமாக அதிகரித்தது. 1940 இல் வாழ்விட தெரிவு என்ற இனவாதச் சட்டத்தின் மூலம் 57000 மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. உண்மையில் மலையக மக்களின் உழைப்பை மலிவாக மற்றைய தேசிய இனங்கள் சுரண்டி கொழுக்க ஆசைப்பட்டன. ஆனால் அந்த மக்களுக்கு தேவையான உரிமையை வழங்க தயாராக இருக்கவில்லை. 1939ம் ஆண்டு இந்தியா பயிற்றப்படாத இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றுவதை தடை செய்த போது, இதை நீக்கக் கோரி இந்தியா சென்ற குழுவில் இனவாத தலைவர்கள் முக்கியமானவர்களாக இருந்தனர். 1940 இல் இந்தியா சென்ற குழுவில் டி.எஸ்.சேனநாயக்க, பண்டாரநாயக்காவும் முக்கியமானவராக இருந்தனர். இவர்கள் தான் சமகாலத்தில் இனவாத்தை உச்சத்தில் தொடங்கியதுடன் அதை நிலைநிறுத்தினர். மூலதனத்தை விரிவாக்க மலிவான உரிமைகள் அற்ற அரையடிமைக் கூலிகளை இனம் கடந்து இறக்கவும், இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு மூலதனத்தை பாதுகாக்கவும் என்ற இரட்டை நடைமுறையை பின்பற்றினர். என்.எம். பெரேரா 1937 இல் இந்திய தொழிலாளர்களை இறக்குமதி செய்வதற்கு லைசன்ஸ் வழங்குவதை நிறுத்தக் கோரி தீர்மானம் கொண்டு வந்த போது, 29 வாக்கு எதிராகவும் 5 வாக்குகள் ஆதரவாகவும் கிடைத்தது. எதிராக வாக்களித்து இந்தியத் தொழிலாளர்களை இறக்கக் கோரியவர்கள், சம காலத்தில் வெளியேறக் கோரும் இனவாதத்தையும், வாக்குரிமையையும் பறித்தபடியே இதை எதிர்த்தனர். 1948 இல் பிரஜாவுரிமையை பறித்தவர்களும், நாட்டை விட்டு வெளியேற கோரியவர்களும் இவர்களே. மலையக வாக்காளர் தொகை படிப்படியாகவே இந்த பிரஜாவுரிமை பறிப்புக்கு முன்பே பல்வேறு இனவிரோத சட்டங்கள் மூலம் சரிந்து வந்தது.

 

ஆண்டு                     வாக்குகள்

1921-24                        13 000

1931                            100 000

1936                           145 000

1939                           225 000

1943                           163 000

 

1948 இல் 10 இலட்சம் மக்களின் வாக்குரிமை ஒரே நாளில் பறிக்கப்பட்டது. இனங்களை எதிரிடையாக நிறுத்திய இந்த இனவாத நிகழ்வு அடிப்படையில் மூலதனத்தை காப்பற்றவே கையாளப்பட்டது. இனங்களுக்கிடையிலான மோதலை உருவாக்கியதன் மூலம், எலும்புகளை கைப்பற்றும் இனத் தேசிய யுத்தமாக இழிவாக்கமுடிந்தது. அடிப்படையில் தெருநாயின் சண்டைக்கு வழிகோலியது. இனவாதத்தை கட்டவிழ்த்து விட்ட டி.எஸ்.சேனநாயக்கா 1947 இல் மலையக மக்களுக்கு எதிரான தனது பிரச்சாரத்தில் "கம்யூனிச அபாயத்தில் இருந்து பௌத்தத்தை பாதுகாக்க" தனக்கு வாக்களிக்கக் கோரியே ஆட்சியைக் கைப்பற்றினர். இங்கு தெளிவாகவே இனவாதம் மூலதனத்தை பாதுகாக்கும் அடிப்படையில் எழுச்சிபெறுவதைக் காட்டுகின்றது. இதையே இன வரலாறு தொடங்கி யுத்தத்தின் இன்றைய எல்லை வரையிலான விரிந்த தளத்தில், பரஸ்பரம் அரசியல் உள்ளடக்கமாக காணப்படுகின்றது. 1947 தேர்தலின் பின்பு மூலதனத்தைப் பாதுகாக்க போலிச் சுதந்திரத்தை பெற்றவர்கள், இனங்களை திட்டமிட்டபடியே பிளந்தனர். கட்சிகளும் தலைவர்களும் இன அடிப்படையில் உருவானார்கள். இன எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட பிழைப்புவாதம், இனங்களை எதிர் நிலைக்கு தள்ளிச் சென்றனர். இந்த இனவாதத்தையே தமிழ் தலைவர்களும் கூட்டாக செய்தனர். இதில் முதலில் மலையக மக்கள் மேல் தமது இனவாதத்தை கட்டவிழ்த்தனர். சிங்கள தமிழ் தலைவர்கள் மலையக மக்களுக்கு எதிராக மூன்று பிரதான மனிதஉரிமை மீறல் சட்டத்தைக் கொண்டு வந்தனர்

 

1.1948 இல் கொண்டு வந்த பிரஜா உரிமைச் சட்டம்

 

2.1949 இல் கொண்டு வந்த இந்தியா பாகிஸ்தான் பிரஜா உரிமைச் சட்டம்

 

3.தேர்தல் திருத்தச் சட்டம் மூலம் மலையக மக்களின் வாக்குரிமையை பறித்தனர்.

 

இந்த பிரஜாவுரிமைச்சட்டம் சிங்களவரை சிங்கப் பெயரைக் கொண்டே அடையாளம் காண வழிவகுத்தது. ஆனால் மற்றைய இனங்களுக்கு அது நிராகரிக்கப்பட்டது. 1895 லேயே பிறப்புரிமையை பதிவு செய்யும் சட்டம் கொண்டு வந்த நிலையில், பிரஜாவுரிமைச் சட்டம் இதை சாதகமாக்கியது. இந்த பிரஜாவுரிமைச் சட்டத்தை ஜி.ஜி.பொன்னம்பலமும், நேசையாவும், எஸ்.சுந்தரலிங்கமும் ஆதரித்ததுடன், பாராளுமன்றத்தில் மலையக மக்களுக்கு எதிராக இனவாதத்தைக் கக்கினர். இந்த இனவாதத்துக்கு கம்பளம் விரித்து உதவியதற்காக, சிங்கள இனவாதிகள் ஜி.ஜி.பொன்னம்பலத்துக்கு மந்திரி பதவியை வழங்கினர். இந்த பச்சை துரோகத்தை எதிர்த்து "இன்று அவர்களுக்கு நாளை எமக்கு" என்று கூறி செல்வநாயகம் கங்கிரஸ்சில் இருந்து பிரிந்து, தமிழ் அரசுக் கட்சியை 1949 லேயே தொடங்கினார். மலையக மக்களின் வாக்குரிமையை கோரி வந்த தமிழரசுக் கட்சியும் செல்வநாயகமும் 1956 இல் அதைக் கைவிட்டே பண்டா- செல்வா ஒப்பந்தை கையெழுத்திட்டார்.

 

ஒரு தேசிய இனத்தை மற்றைய இனத் தலைவர்கள் கூட்டாக சதி செய்து மண்ணில் இருந்தே பிடுங்கிய போது, அவர்கள் உரிமைகளற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். வாக்குரிமை இருந்த போது அவர்களைச் சுற்றி வந்த பாராளுமன்ற கதிரை அரசியல் கட்சிகளான தேசியவாதிகளும், இடது வேடமிட்டவர்களும் அந்த மக்களை நடுவீதியில் கைவிட்டனர். அந்த மக்களின் உரிமைக்காக போராடுவதன் மூலம், பாராளுமன்ற கதிரை கிடையாது என்பது உறுதியாகியது. இந்த நிலையில் முன்னைய தலைவர்கள் சம்பிரதாயபூர்வமாக இதை கண்டிப்பதுடன் தம்மை நிலைநிறுத்த முனைந்தனர். இனவாத அரசியலில் குளிர் காய்ந்தபடியே கதிரை வேட்டையில் இறங்கினர். படிப்படியாக இடதுசாரிகள் இனவாத அரசியலில் தம்மை இனம்காட்டினர். இது இலங்கையின் இடதுசாரி வரலாறாக மாறிவந்தது. இதில் இருந்து இன்றுவரை மீளவில்லை. இதற்கு சில விதிவிலக்குகள் இருந்த போதும், அது வளர்ச்சி பெற முடியாத அளவுக்கு இந்த இனவாதத்தை தெளிவாக வேறு பிரித்து அதை அம்பலப்படுத்தி வர்க்க அரசியலை சமூக மயமாக்கவில்லை.