இந்த கோப்பிச் செய்கைக்கு அந்த மலைகளின் அடிவாரங்களில் வாழ்ந்த சிங்கள மக்களை பயன்படுத்த முடியாமைக்கு இருந்த பிரதான காரணம் என்ன.
1.நிலம் சார்ந்த நிலப்பிரபுத்துவ அமைப்பில் சுயபொருளாதார சொந்த உழைப்பு சார்ந்து அந்த மக்கள் வாழ்ந்தனர். சொந்த தேவையை பூர்த்தி செய்யும் சுய பொருளாதார விவசாய கட்டமைப்பு விரிவாக பரந்து காணப்பட்டது. இதற்கு இலங்கையில் திட்டமிட்டு மக்களின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட குளங்களே சாட்சியாக நிமிர்ந்து நிற்கின்றது. அத்துடன் கூலிக்கு செல்வதை பண்பாட்டு ரீதியாக அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இலகுவாக தமது தேவையை பூர்த்தி செய்த சமூகம், கடுமையான தனது தேவைக்கு அந்நியமான உழைப்பில் ஈடுபடுவதை, ஈடுபட வைப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் தாராளமான நிலங்கள் தேவைக்கு ஏற்ப சம வெளிகளிலேயே பரந்து காணப்பட்டது. இதனால் சிங்கள மக்களை காலனித்துவ வாதிகள் தமது மூலதன திரட்சிக்கு நேரடியாக பயன்படுத்த முடியவில்லை.
2.இலங்கையை கடைசி அரசான கண்டி ஆட்சி 1815 லேயே வெல்ல முடிந்தது. இருந்த போதும் தொடர்ச்சியாக அவர்கள் இரு போராட்டங்களை 1819லும், 1848 பிரிட்டிசாருக்கு எதிராக நடத்த முடிந்தது. பிரிட்டிசாருக்கு எதிரான உணர்வுகள் கண்டியில் ஆழமாக இருந்தது. இதனால் பிரிட்டிசார் அவர்களை கூலிக்கு ஈடுபடுத்த முடியவில்லை. மலிவான கூலியாக பண்ணையடிமை முறையில் அந்த மக்களை கொண்டுவருவது சாத்தியமும் இல்லை. இந்த சமூகத்தின் தன்மையை மறுத்த யாழ் குறுந் தமிழ் தேசிய இனவாதிகள், சிங்களவரை சோம்பேறிகள் என்பதால், மலையக மக்கள் கொண்டு வரப்பட்டதாக காட்டுவது சொந்த கைக் கூலித்தனத்தை மறைப்பதாகும். அதாவது நக்கி வாழ்ந்த ஏகாதிபத்திய விசுவாசம் மற்றும் தேசியத்தின் சுய தன்மையை குழி தோண்டி புதைப்பதை கவனமாகக் கொண்டே ஒரு இனத்தை இழிவாகக் காட்டுகின்றனர். ஏனெனின் சிங்கள மக்களின் காலனித்துவ எதிர்ப்பும், மலையக மக்களை காலனித்துவ வாதிகள் ஏன் கொண்டு வந்தனர் என்ற அடிப்படை நோக்கத்தையும் திரிப்பது குறுந் தேசியத்தின் மையமான ஏகாதிபத்திய கைக்கூலித்தனமாகும். மறு தளத்தில் கண்டி மன்னன் கடைசி சிங்கள மன்னனாக காட்டி சிங்கள தேசியம் பற்றி பீற்றுவது சிங்கள இனவாதத்தின் இனவாதமாகும். கண்டி மன்னன் விக்கிரமராஜசிங்கன் என்ற சிங்கள பெயரில் ஒரு தமிழனே ஆண்டன். அவனின் உண்மைப் பெயர் கண்ணசாமி ஆகும். இவனை வீழ்த்த இனவுணர்வை பிரிட்டிசார் பயன்படுத்திய போதும் அது வெற்றிபெறவில்லை. அவனை காட்டிக் கொடுத்த கண்டிய பிரதானிகளிடையே கூட இனவுணர்வு இருக்கவில்லை. வெள்ளையனுக்கு விசுவாசமாக இருந்து கண்டி இராஜ்ச்சியத்தை காட்டிக் கொடுத்த கெப்பட்டிபொல திசாவ செல்வாக்கு மிக்க கண்டி பிரதானிகளில் ஒருவன். இன்று சிங்கள வீரனாக காட்டப்படும் இவன், 1919 கலவரத்தின் போதும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி துரைசாமி என்ற மலையகத் தமிழனுக்கு முடிசூட்டவே போராடினான். ஒரு தமிழன் தலைமையில் ஆட்சியை நிறுவ போராடியதும் இனமற்ற தேசிய வரலாறுமாகும். 1915ல் கண்டி பிரதானிகள் வெள்ளை காலனித்துவவாதிகளுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் கெப்பட்டிபொல திசாவ தவிர அனைவரும் தமிழிலேயே கையெழுத்திட்டனர். இங்கு இனவாதமற்ற தமிழ் சிங்கள பேதமற்ற ஆட்சியே நிலவியது. உண்மையில் சிங்கள இனவாதிகள் காலனித்துவத்துக்கு காட்டிக் கொடுத்த துரோகத்தையும், அதை எதிர்த்துப் போராடிய வரலாற்றையும் தமிழ் இன குறுந் தேசியவாதிகள் போல் திட்டமிட்டே மறைக்கின்றனர். அதை வெறும் இனப்போராட்டமாக சித்தரிக்கின்றனர். உண்மையில் சிங்கள தமிழ் மக்கள் ஒரு மலையக தமிழனின் தலைமையில் காலனித்துவத்தை எதிர்த்து போராடிய வரலாற்றை மறைப்பதன் மூலம், ஏகாதிபத்தியத்துக்கு கைக் கூலிகளாகவே தொடர சபதம் ஏற்கின்றனர். கண்டியின் கடைசி ஆட்சிக் கொடியில் இருந்தே, இன்றைய இனவாதம் சார்ந்த சிங்கக் கொடி உருவானது.
உண்மையில் அன்று அதன் விளக்கம் வேறு. இன்று அதன் விளக்கம் வேறு. 1985 டிசம்பர் மாதம் கொழும்பு இராணுவ தலைமையகத்தில் பாடிய பாடல் ஒன்றில் இந்த இனவாதம் கொப்பளித்த விதத்தைப் பார்ப்போம்.
சிங்கக் கொடியின் மீது ஆணை!
சிங்களவரின் வெண்குடையின் கீழ்
மூன்று சிங்களப் பிரதேசத்தையும் கொணர்வோம்!
சிங்கக் கொடியின் மீது ஆணை!
சிங்களவரின் வெண்குடைக்கீழ்
சிங்களவரின் அமைதியைப் பாதுகாப்போம்!
இவ்வுடல் நூற்றாண்டு காலம் வாழ்வது ஏன்?
நம் இனம் காக்கப்படுவதற்காகவே!
எல்லோரும் ஒளித்தொளித்து வாழ்வது எதற்காக
நம் பூமி சீரழிந்து போய்விடும் இக்காலத்தில்?
சிங்கக் கொடியின் மீது ஆணை!
நாம் ஏன் சுகங்களை அனுபவிக்க வேண்டும்,
நமது நாடு எதிரியின் வாயால் விழுங்கப்படும் போது?
ஞாயிறு, திங்கள் வணங்கும்
நமது பூமியை, நாட்டைப் பாதுகாப்போம்,
சிங்கக் கொடியின் மீது ஆணை!
இந்தப் பாடலில் சிங்கள என்ற சொல்லுக்கு ஜாதிய என்ற பழம் சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. இங்கு மூன்று பிரதேசம் என்பது உறுகுணை, மாயரட்டை, இராஜரட்டை என்ற வகையில் முழு இலங்கையையும் கோருகின்றது. உண்மையில் இனவாதம் கொழுவேற்றுள்ளது. அன்று கண்டி ஆட்சியில் இருந்த தமிழனும் சரி, அதன் 1819 இல் ஆட்சியேற முயன்ற தமிழனும் சரி, அதற்கு பக்கபலமாக இருந்த சிங்கவர்களும் சரி இந்த கொடியை உயர்த்திய போது இனவாதம் இருக்கவில்லை. இனவாதத்தை பிரிட்டிசார் ஆட்சியைக் கவிழ்க்க பயன்படுத்திய போது, அந்த சமூகம் ஏற்கவில்லை. ஆனால் அதன் பெயரில் உருவான தேசியம் மலையக மக்களை எதிரியாக காட்டியது சிங்கள இன தேசியவாதமாகும். இந்த பிற்போக்கு தேசியம் மலையக மக்களை அந்த மண்ணின் விரோதிகளாக காட்டியது. இதற்கு தமிழ் இனக் குறுந் தேசியவாதிகளும் இணைந்தே அந்த மக்களை ஒடுக்கினர். இந்த தயவில் உருவான பெருந் தேசிய சிங்கள இனவாதம் அனைத்து சிறுபான்மை இனங்களையும் எதிரியாக நிறுத்தியது. இதைவிரிவாக பார்ப்போம்.