கருணா தலைமையிலான பாசிச கும்பல், கிழக்கில் புதிய கொலைக்களத்தை உருவாக்கி வருகின்றது. பேரினவாதிகளின் கூலிக்கும்பலாகவே மாரடிக்கும் இந்தக் கும்பல், தமது அரசியல் நக்குண்ணித்தனத்தை, வடக்கு மக்களுக்கு எதிராக வெளிப்படுத்துகின்றது.

 கிழக்கில் இருந்து புலிகள் ஒழிக்கப்பட்ட நிலையில், கிழக்கு மக்களுக்கு எதிரியாக வடக்கு மக்களைக் காட்டுகின்றது.

 

உண்மையில் என்ன தான் நடக்கின்றது. இதுவரை கருணா கும்பல் புலிகளை எதிரியாக காட்டி அரசியல் விபச்சாரம் செய்தவர்கள், இன்று எதிரியாக யாரைக் காட்டுவது என்ற புதிய அரசியல் நெருக்கடியைச் சந்திக்கின்றனர். புதிய வளர்ப்பு எசமானனான அரசை, தமது எதிரியாகக் காட்டமுடியாது. அந்த அரசின் தயவில் நக்கி, அதில் உண்ணியாக வாழ்பவர்கள், தமது அரசியல் இருப்பு சார்ந்து புதிய எதிரி தேவைப்படுகின்றது. அந்த வகையில் வடக்கு மக்களையே, தனது எதிரியாக இன்று காட்டத் தொடங்கிவிட்டனர்.

 

அண்மையில் துண்டுப்பிரசுரம் மூலம் விடுத்த கொலை அச்சுறுத்தல், இதன் ஒரு அங்கம். அரசுடன் தன்னைப் போல் இணைந்து இயங்கும் போட்டிக் கைக்கூலி துரோகக் குழுக்களின் தலைவர்களுக்கு விடப்பட்டது எச்சரிக்கை, உள்ளடக்க ரீதியாக அவ்வச்சுறுத்தல் அவர்களை நோக்கியதல்ல. மாhறக இதன் பின்னணியும், அரசியல் நோக்கமும் தெளிவானது. அதாவது உண்மையில் வடக்கு மக்களுக்கு விடப்பட்ட, ஒரு கொலை அச்சுறுத்தல் தான் இது.

 

போட்டிக்குழுக்களுடனான கிழக்கு அதிகாரம் தொடர்பான மோதல் என்பது, இந்தப் பாசிச அரசியல் வழிகளில் தான் தீர்க்கப்படுகின்றது. கருணா என்ற கிழக்குவாதம் பேசும் பாசிச கூலிக் கும்பலால், அரசியல் ரீதியாக மாற்றுக்குழுக்களை எதிர்கொள்ள முடியாது. மாற்றுக் குழு அரசியலை விமர்சித்து அரசியல் செய்ய, இந்தக் கும்பலிடம் எந்த மாற்று அரசியலும் கிடையாது. இது தான் அரசுடன் சேர்ந்து இயங்கும் அனைத்து கூலிக் குழுக்களின் நிலையும் கூட.

 

இதுபோல் தான் புலிகளை எதிர்த்து புலியெதிர்ப்பு அரசியல் செய்யும் கும்பல்களிடமும், புலிக்கு மாற்றாக வேறு அரசியல் எதுவும் கிடையாது. இதனால் அது குறுகிய புலியெதிர்ப்பில் ஈடுபடுகின்றது. அரசின் கிழக்கு கூலிக்கும்பலாக செயல்படும் இந்தக் கும்பலின் அரசியல் என்பது, பேரினவாதத் தேவையை ஓட்டியதே. இதுதான் அதன் இருப்பும், அதன் பலமும். இதற்கு வெளியில் மக்களுக்கு முன்வைக்கவென, எந்த சொந்த அரசியலும் கிடையாது.

 

அரசு வடக்கு கிழக்கென தனது கூலிக் குழுக்களை பிரிப்பதுடன், பிரித்து கையாள்வதுடன், ஒன்றுடன் ஒன்று மோத வைக்கின்றது. இது தான் பேரினவாதத்தின் புலிக்கு பிந்தைய தேவையாகும். வடக்கு கிழக்காக தமிழ் மக்களை மோதவைப்பதே, பேரினவாதத்தின் நீண்ட கால தேவையும் திட்டமும் கூட. இதற்கு தனது கூலிக் குழுக்களை மோத வைப்பது அவசியம். அது படிப்படியாக அரங்குக்கு வரத்தொடங்குகின்றது. இதன் போக்கில், இதை புலிகளின் உதிரியான படுகொலைகளையும் பயன்படுத்துகின்றது. இதில் வெற்றி பெறுவது, பேரினவாத நலன்கள் தான்.

 

மறுபக்கத்தில் நிலவும் யாழ் மேலாதிக்கம் பற்றிப் பேச இந்த கருணா என்ற அரச கூலிக்கும்பலுக்கு, எந்த அருகதையும் கிடையாது. அதற்குரிய அரசியல் அடிப்படையும் கிடையாது. அதற்கான அரசியல் தகுதியும் கிடையாது.

 

பேரினவாத சதிக்கும் தேவைக்கும் ஏற்ப, கூலிக்கு மாரடிக்கும் இந்தக் கும்பலால் அரசியல் ரீதியாக யாழ் மேலாதிக்கத்துக்கு எதிராக எதையும் முன்வைக்க முறியடிக்க முடியாது. இதனால் அது அரசியல் ரீதியாக இழிந்து போகின்றது. வடக்கு மக்களை எதிரியாக காட்டி, அவர்களை கொல்லுதல் தான், அவர்களின் எதிர்கால நடவடிக்கையாக பரிணமிக்கின்றது. இப்படி கிழக்கு மேலாதிக்க பாசிட்டுக்களுக்கு, தெரிந்த ஒரேயொரு அரசியல் தமிழ் மக்களை பிளந்து கொல்லுதல் தான்.

 

முன்பு புலிகள் பேரினவாதத்தை அல்ல, சிங்கள மக்களை எதிரியாக காட்டினர். பேரினவாத அரசியலை எதிர்கொள்ளும் அரசியல் அடிப்படை அவர்களிடம் இருக்கவில்லை. சிங்களவன் என்ற கூறிக் கொலை செய்கின்ற அரசியல் மூலம் தமிழ் தேசியத்தையே கற்பழித்தனர். இப்படித் தான் அனைத்து குழுக்களும் செயல்பட்டன.

 

இன்று அதன் வழி வந்த கருணா என்ற பாசிட், தனது எதிரியாக இதுவரையும் புலியைக் காட்டி ஒட்டுண்ணியாக வாழமுடிந்தது. கிழக்கை புலிகளிடம் இருந்து பேரினவாதம் கைப்பற்றிய பின், தனது அரசியல் இருப்பைக் காட்ட கருணா கும்பலுக்கு புதிய எதிரி தேவைப்படுகின்றது. தனது எதிரியாக வடக்கு மக்களைக் காட்டுவதைத் தவிர, வேறு எந்த அரசியல் குறுக்கு வழியும் இந்தக் கைக்கூலியிடம் கிடையாது.

 

இதன் விளைவு எதிர்காலத்தில், வடக்கு மக்களை கிழக்கில் கொல்லுதல் தான் அதன் அடுத்த கட்ட வேலைத்திட்டம். அத்துடன் அவர்களை வெளியேற்றுதல் என்ற நிகழ்ச்சியையும், இந்த கூலிக் கும்பல் செய்யும். இதுதான் பேரினவாத அரசின் நடைமுறைத் திட்டம்.

 

கருணா கும்பல் மீதான தொடர்ச்சியான பலதரப்பு குற்றச்சாட்டுகளுக்கு, புலிகளைப் போல் அதே புரட்டல் பதில். அத்துடன் உருட்டல், மிரட்டல், சுத்துமாத்தும், படுகொலைகள். நாற்றமெடுக்கும் இந்த கிழக்குப் பாசிட்டுகள் கதை மாறாது. இந்த நிலையில் கருணா கும்பலின் ஒடிப்போகாத புதிய பேச்சாளர், ஐயோ இந்த துண்டுப் பிரசுரத்துக்கும் தமக்கும் எந்தத் தொடர்புமிலை என்று பி.பி.சியில் கூவுகினறார். அப்படி என்றால் யார் இதை வெளியிட்டது எனக் கேட்ட போது, அதைப் புலிகள் என்றார்.

 

இதில் உள்ள அரசியல் வேடிக்கை என்னவென்றால், புலிகள் இதை வெளியிட்டு இருந்தால், கருணா கும்பலின் கிழக்கு மேலாதிக்க பாசிச நிலையை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர் அல்லவா! இந்த நிலையில் அதை புலிவிட்டால் என்ன, நீங்கள் விட்டால் என்ன, எல்லாம் ஒன்று தான். உங்கள் நிலைப்பாட்டைத் தான் வடக்குக்கு எதிரான துண்டுப்பிரசுரம் கொண்டுள்ளது. நீங்கள் என்ன சொல்ல நினைக்கின்றீர்களோ, என்ன செய்ய முனைகின்றீர்களோ, எதைச் செய்கின்றீர்களோ, அதையே துண்டுப்பிரசுரம் கொண்டுள்ளது.

 

இதை புலி விட்டதாக நீங்கள் கூறினாலும் சரி, இல்லை நீங்கள் ஒரு முகவரியற்ற பெயரில் விட்டாலும் சரி, உங்களின் மக்கள் விரோத அரசியல் அதில் அப்படியேயுள்ளது. கறைபடிந்த வக்கிரம், வடக்குக்கு எதிரான அரசியலாகவன்றி எப்படித் தான் பரிணமிக்கும்.

 

இந்த கிழக்கு பாசிசக் கும்பலிடம், மாற்று அரசியல் எதுவும் கிடையாது. எதிரி இன்றி, கருணா அரசியல் அனாதையாக முடியுமா? முடியாது. அரசிடம் நக்கி வாழ, இன்று வடக்கு மக்கள் என்ற புதிய எதிரி தேவைப்படுகின்றது. இதனடிப்படையில் வடக்கு மக்கள் மேல் படுகொலைகள் நடக்கும். அதை புலியின் பெயரில் கருணா கும்பல் அவிக்கமுனையும். இந்த பாசிசக் கைக்கூலி அரசியலில் எல்லாமே சாத்தியம்.

 

இந்த கூலிக் கும்பல், தாமல்ல என்று கூற தாம் ஜனநாயகத்துக்கு திரும்பியவர்கள் என்கின்றது. தாம் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாம். வேடிக்கை தான். பேரினவாத இராணுவத்தின் கூலிக் கும்பலுக்கு வெளியில், வேறு எதுவுமற்றவர்கள் இவர்கள். தமது இருப்புக்கான செயல் என்பது, கொலை முதல் அனைத்து மனிதவிரோத நடத்தைகள் கொண்ட ஒரு வெறும் கூலிக் கும்பல்.

 

இந்த கூலி ஜனநாயகவாதிகள், ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களின் அரசியல் இருப்பும், அதன் நடைமுறையும் என்ன? பேரினவாதத்தின் தயவில், அதன் பாதுகாப்பில், அது கொடுக்கும் பணத்தில் நின்று, தமிழ் மக்களை புலிகளின் பெயரில் வேட்டையாடுவது தான். அத்துடன் தமிழ் மக்களை வடக்கு கிழக்கு மக்களாகப் பிளந்து, வடக்கு மக்களை படுகொலைக்கு அழைத்துச் செல்வதன் மூலம், கிழக்கு மக்களை மேலும் ஒடுக்குவது தான், இந்த கும்பலில் பாசிச இலட்சியம்.

 

புலிகளில் இருந்தபோது, இந்த கருணா என்ற பாசிட் எதையெல்லாம் தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்தானோ, அதையே இன்று பேரினவாதத்துக்காக செய்கின்றான். வாலாட்டி நக்கும் வேட்டை நாயாக, நாய்க்குரிய வேட்டைப் பண்புடன், மக்கள் மேல் இந்த பாசிட் பாய்ந்து குதறுகின்றது. ஊட்டி வளர்ப்பவர்களை எட்டப்பனாக நக்குவதும், மற்றவர்களை வேட்டையாடுவதுமே, இந்தக் கும்பலின் துரோக அரசியலாகும்.

 

அன்று யாழ் மேலாதிக்கவாதிகளும் கிழக்கு கருங்காலிகளும் சேர்ந்து, கிழக்கில் முஸ்லீம் மக்களை கொன்று குவித்த வரலாறு எம் முன்னால் உள்ளது. இன்று சிங்களப் பேரினவாத பாசிட்டுகளுடன் சேர்ந்து, வடக்கு மக்களை கொலை செய்ய தூபமிடுகின்றனர்.

 

பேரினவாத பாசிச அரசுடன் சோந்து இயங்கும் கிழக்கு கூலிக்கும்பல்களால், வடக்குக்கு எதிராக விடப்படும் அச்சுறுத்தல் என்பது, பேரினவாதத்தின் திட்டமிட்ட சொந்த சதிதான். தமிழ் மக்களை வடக்கு கிழக்காக பிளந்து, அவர்களின் தேசிய கோரிக்கைக்கு வேட்டு வைப்பது, பேரினவாதத்தின் இலட்சியம்.

 

இந்த பேரினவாத தேவையை, தனது சொந்த வழிகளில் செய்யமுடியாது. அதைக் கிழக்கு மக்கள் ஒருநாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனால் கருணா என்ற கிழக்கு கைக்கூலியைக் கொண்டு சாதிக்க முனைவது, இன்று தெளிவாகவே ஊரறிய அம்பலமாகின்றது.

 

கருணா எட்டப்பனுக்குரிய சலுகைகள், வசதிகளுடன் களத்தில் இறங்கிவிடப்பட்டுள்ளான். கிழக்கு மக்களை வடக்கு மக்களுக்கு எதிராக நிறுத்தி, பிளக்கின்ற அரசியல் பித்தலாட்டங்களை அரங்கேற்றுவதையே, கருணா மூலம் பேரினவாதம் கோருகின்றது. அதை நோக்கி முன்னேறுகின்ற பேரினவாதபடிகளில் ஒன்று தான், இந்தத் துண்டுப்பிரசுரம்.

 

இந்த கிழக்கு பாசிட்டுக்களுக்கு கிழக்கு மக்களின் துயரங்களையும் தீர்க்கும், எந்த அரசியல் அடிப்படையும், அரசியல் நேர்மையும் கிடையாது. தானும் தனது கிழக்கு கும்பலும் நன்றாக பேரினவாதத்தை நக்கி வாழும் கனவில், தமிழ் மக்களை மேலும் பிளந்து பந்தாடுகின்ற வக்கிரமே, இன்று புலியின் பெயரால் அரங்கேறுகின்றது. கருணா என்ற கிழக்கு பாசிட்டின் உதயம், ஒரு கிழக்கு எட்டப்பனின் வரலாறாகவே வரலாறு இதைப் பதிவு செய்யும். மன்னிக்க முடியாத, மனித குலத்தின் எதிரிகள் அணியில், முடிவின்றி தொடர்ந்தும் பலர் போட்டிபோட்டு இணைகின்ற இன்றைய காலகட்டத்தில், அவற்றை சமரசமின்றி தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி போராடவேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம்.

பி.இரயாகரன்
11.09.2007