08192022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

தோழர் கீ. வீரமணி அவர்களுக்கு,

"பெரியார் டைப்பிஸ்ட்" தமிழச்சி எழுதிக் கொள்வது,

தந்தை பெரியார் அவர்கள் ஏடுகளில் எழுதிய எழுத்துகள், பேச்சுகள், பேட்டிகள், வெளியீடுகள் அத்துணையும் அவர்களால் 1935-இல் உருவாக்கப்பட்டு, 1952 - இல் பதிவு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடைமைகளாகும் - சொத்துகளாகும் (Intellectual Properties). இவைகளை அச்சில் வெளியிட்டு விளம்பரமும், வருவாயும் தேட தனிப்பட்ட சிலரும், சில இயக்கங்களும், பதிப்பகங்களும் முயலுவதாகத் தெரிய வருகிறது! அப்படிச் செய்வது சட்ட விரோதமாகும். மீறி அச்சிட்டு நூலாகவோ, மற்ற ஒலிநாடா குறுந்தகடுகளாகவோ வெளிவந்தால், அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்ற உங்களின் அறிவிப்பை விடுதலையில் காண நேர்ந்தது. அறிவிப்பு குறித்து விமர்சிக்கும் முன் உங்களிடம் சில கேள்விகள்...

 


தந்தை பெரியாரின் எழுத்துக்களை நான் இணையத்தில் பதிவு செய்யத் தொடங்கிய காலகட்டத்தில் வாழ்த்துக்களுடன் எனக்கு மின்னஞ்சல் செய்திருந்திருந்தீர்கள். அதன் பின் இணையத்தில் தந்தை பெரியாரின் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யும் உரிமையையும் எனக்கு தந்தீர்கள்.

பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா என்ற அமைப்பை பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்தின் அனுமதியுடன் ஏற்படுத்திய போது உலக மயமாகும் பெரியார் என்று பூரித்து போய் விடுதலையில் செய்தி போட்டீர்கள். உங்களுடன் தொலைபேசியில் பேசிய போது பெரியார் எழுத்துக்களை நாட்டு உடையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததற்கு அதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிட்டீர்கள்.

மற்றொரு முறை சில பேச்சுக்கள் வந்த போது, தோழர் கொளத்தூர் மணி அவர்களும், நீங்களும் என்னைப் பொறுத்த வரையில் ஒன்று தான் என்று சொன்னதற்கு, கழகத்தில் இருந்து வெளியேற்றியவர்களுடன் எல்லாம் என்னை ஒப்பிட்டு பேசாதீர்கள் என்றீர்கள்.

மற்றொரு முறை இணையத்தில் பெரியார் கருத்துக்களை பதிவு செய்யும் பணி ஆரம்பிக்கும்படி சொன்னதற்கு அதெல்லாம் ஏற்கனவே செய்தாகிவிட்டது. உங்களை விட அதிகமாக இருக்கிறது என்று 35 - கட்டுரைகளை 3500 - கட்டுரைகளுடன் இணைத்து பேசினீர்கள்.

சமீபத்தில் இணைய வாணொலி "பெரியார் குரல்" ஆரம்பிக்கப்பட்ட போது தந்தை பெரியார் குறித்த ஒலி நாடாக்கள் கேட்டதற்கு உங்கள் புகழ்பாடும் ஒலிநாடாக்களே அதிகமாக வந்து சேர்ந்தது. இணைய வானொலியில் முதல் நாள் ஆன் செய்த போது "கடலூர் வீரமணி" குறித்த பாடல் ஓடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து போய் உடனே பாடலை நிறுத்தச் சொன்னேன்.

"தோழரே! வீரமணியார் புகழ் பாட தமிழ்நாட்டில் ஆட்கள் இருக்கீனம். நம்ப குறிக்கோள் தந்தை பெரியாரை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" என்பது தான். தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த ஒலி நாடாக்களை தூக்கி குப்பையில் போடுங்கள் என்றேன். எங்கே எப்போது சந்தடி சாக்கில் உங்கள் புகழை பரப்ப முடியுமோ அங்கேயெல்லாம் புகுந்து வீரமணி புகழ் பாட வைத்து விடுகிறீர்களே! அப்போதே உங்களை பற்றிய மதிப்பு குறைந்து போய்விட்டது. (அதற்கு முன்பும் நல்ல அபிப்பிராயம் இல்லை) என் அனுபவத்தில் உங்களுடன் பேசியதில் உங்களிடம் செயல் திட்டங்களுக்கான எந்த அறிகுறியும் கிடையாது என்பதை உணர்ந்து கொண்டேன்.

கேள்விகள் கேட்பதற்கு நிறைய இருக்கின்றன.இப்படியெல்லாம் கேள்விகளை கேட்க ஆரம்பித்தால் பின்விளைவுகள் என்னவாக இருக்கும்? நான் இனி என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரும் என்று மிக தெளிவாகவே அறிந்து இருக்கின்றேன். இருப்பினும் சக தோழர்களை இழிவாக நினைக்கும் உங்கள் சிந்தனை என்னை கேள்வி கேட்க தூண்டுகிறது? எனக்கு கிடைத்த அங்கீகாரம் ஏன் அவர்களுக்கில்லை? சகதோழர்களுக்கு உங்களிடம் இருக்கும் வயிற்றெரிச்சல் கொஞ்சம் நாகரிகமாக சொல்லப்போனால் காழ்ப்புணர்வுக்கு ஒரு அளவில்லையா?

தந்தை பெரியார் விட்டுச் சென்ற கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்து நீங்களும் எதுவும் செய்யமாட்டீர்கள். தோழர் கொளத்தூர் மணி தந்தை பெரியாரின் எழுத்துக்களை முன்னெடுத்து செல்லும் பணியில் எதை எதை அடமானம் வைத்து செயல்படுகிறார் என்று தெரிந்திருந்தும் வியாபார நோக்கத்திற்காகவும், வருவாய் ஈட்டவுமே செயல்படுவதாக எப்படி அவர்களுடைய உணர்வுகளை ஒரு கருப்புச் சட்டைக்காரனாக இருந்து இவ்வளவு கேவலமாக விளித்து பேச முடிகிறது உங்களால்? அவர்கள் வியாபார நோக்கத்துடன் செயல்படுவதாக இருந்தால் புத்தகத்தில் பணத்தை கொட்டி தமிழ்மக்களிடம் சம்பாதித்து விட முடியுமா?

தந்தை பெரியாரை உலக மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை போல் மாய தோற்றத்தை உண்டாக்கும் நீங்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடைமைகளாகும் - சொத்துகளாகும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் தந்தை பெரியாரை கேரள மாநிலத்திற்கு கூட கொண்டு செல்ல முடியாது.

தந்தை பெரியாரின் எழுத்துக்களை கலைஞர் நாட்டுமையாக்க முற்பட்ட போது தடுத்து விட்டீர்கள். உங்களுடைய செயல்களுக்கெல்லாம் ஒவ்வொரு காரணம் சொல்லி தப்பித்துக் கொண்டாலும் குடியரசு தொகுதி வெளீட்டுக்கு இப்படியொரு அறிக்கையை வெளியிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் இழந்து விட்டீர்கள். அதனாலென்ன மானமிகு, மானமிகு வீரமணி என்று பார்க்கும் இடங்களிலெல்லாம் நோட்டீஸ் ஒட்டி உங்களுடைய மானத்தை நிலைநிறுத்திக் கொள்வீர்கள். பெரியாரை நிலைநிறுத்த என்ன செய்யப்போகிறீர்கள்? எங்களுக்கு தெரிந்த ஒரே வழி தந்தை பெரியாருடைய எழுத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்பது தான்.

அது தான் உங்களுடைய ஒருதலைப்பட்டமான நிலைப்பாடுகளுக்கு நல்லது. எனக்கு கிடைத்த அங்கீகாரம் சக தோழர்களுக்கும், தனி மனிதர்களுக்கும், இதர அமைப்புகளுக்கும் கிடைக்க வேண்டும்.இப்படிக்கு

சுயமரியாதையை உங்களிடம் அடகு வைக்க விரும்பாத "பெரியார் டைப்பிஸ்ட்"


தமிழச்சி

http://thamizachi.blogspot.com/2008/08/blog-post_9653.html


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்