தமிழனே இது கேளாய் -- உன்பால்
சாற்ற நினைத்தேன் பல நாளாய்!

கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு
காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு!
நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு
நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு!
தமிழனே இது கேளாய்

தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு;
தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு!
கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு
காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு.
தமிழனே இது கேளாய்

வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார்.
தமிழனே இது கேளாய்

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt136