சூதும் வாதும் நிறைந்த பூதலமீது நல்லார்
ஓதும்வழி நடந்தால் யாதும் துயரமில்லை
ஏதும் சந்தேகம் உளதோ -- நெஞ்சே இதில்
தீது சிறிதும் உளதோ?

சாதி சமயக்கடை வீதியின் அப்பால்ஒரு
சோதி அறிவிற் சரி நீதி விளங்கும் அதைக்
காதினில் தினம் கேட்பாய் -- நெஞ்சே இந்த
மேதினி தனை மீட்பாய்!

கூழுமில்லாது நாட்கள் ஏழும்பசித் துன்பமே
சூழும்படியே பிறர் தாழும்நிலை தவிர்க்க
வாழும் முறைமை சொல்வார் -- நெஞ்சே நல்லார்
பாழும் இருளைக் கொல்வார்!

மேழி உழவன் பாட்டும், கோழியின் ஆர்ப்பும் கேட்டாய்
ஆழியிற் கதிர்ஏறும் நாழிகை யாயிற்றே
வாழிய மனப்பாவாய் -- அறிஞர் காட்டும்
ஊழியம் செயப் போவாய்!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt134