பார்ப்பனனைக் காக்கவே மற்றவரைப் பிரித்தனர்!

எதற்காகப் பார்ப்பான் என்றும், சூத்திரர்கள் என்றும், அவர்ணஸ்தர்கள் என்றும் பிரித்தார்கள் என்றால் இவர்கள் ஒற்றுமையாக இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்று கருதியே பார்ப்பான் இப்படிப் பிரித்தார்கள். தமிழர்களுக்குள்ளாவே நான் மேல்ஜாதி, நீ கீழ்ஜாதி என்று சண்டை போட்டுக் கொண்டால் தம்மிடம் சண்டைக்கு வரமாட்டார்கள் என்பதாகக் கருதியே பார்ப்பான் இந்த மாதிரி சூழ்ச்சி செய்திருக்கிறான்.

 

பூணூல் போட்டவன் மேல் ஜாதியா?

மற்றபடி வைசியன் ஏது? சூத்திரன் ஏது? ஆசாரி பூணூல் போட்டுக் கொள்வதாலேயே தன்னை மேல்சாதி என்று கருதிக் கொண்டிருக்கிறான். அதுப்போல் தான் பார்ப்பனர் முதலியவர்களும். ஆந்திராவில் உள்ள நாயக்கர்களுக்குப் பூணூல் உண்டு.

 

எதற்காக?

தன்னை மேல் ஜாதி என்று மற்றவர்கள் நினைப்பதற்காகத் தான். புரோகிதன் எதற்கு? புரோகிதன் எதற்கு? புரோகிதன் என்றால் என்ன? என்பது முதலில் யோசிக்கத்தக்கதாகும். இன்று புரோகிதன் என்பவனுக்கு உள்ள லட்சணம் எல்லாம் முதலில் அவன் பெரிய சாதிக்காரனாக இருக்க வேண்டும். அவனுடைய நடத்தை, தன்மை முதலியவைகளைப் பற்றி நமக்குக் கவலையில்லை. பெரிதும் நமக்குத் தெரியாத மொழியில் அவனுக்குப் புரியாத சடங்குகளைச் செய்யச் சொல்லிப் பணம் வசுலித்துக் கொண்டு போகிறவனையே தான் இன்று புரோகிதன் என்கிறோம். மற்றும் அவன் காலில் நாமும், மணமக்களும் விழுந்து கும்பிடுகிறோம். அவனைச் சாமி என்று அழைக்கின்றோம்.

 

இவற்றைத் தவிரப் புரோகிதனுக்கு வேறு லட்சணம் சொல்லுங்கள் பார்க்கலாம்! அல்லது வேறு பயனையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்! இந்தப் புரோகிதன் நமக்கு எதற்கு என்று உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? அவன் நமது தமிழ் மக்கள் திருமணங்களில் எந்தக் காலத்தில் வந்து கலந்து கொண்டான் என்று உங்களுக்குள் யாருக்காவது தெரியுமா?

 

புரோகிதர் எதிர்ப்பு?

நாம் செய்த முதல் மாறுதல் நம் திருமணங்களில் புரோகிதமோ, பார்ப்பானோ இல்லை என்பதாகும். ஒருவரை மேலான பிறவி தாழ்ந்த பிறவி என்பதாக நாம் ஒப்புக் கொள்வதில்லை. அதற்காகப் பார்ப்பனத் துவேஷமோ, அவர்களிடத்தில் வெறுப்போ நாம் கொள்வதில்லை. நாம் கீழான சாதி என ஒப்புக்கொள்வதில்லை. அவ்வளவு தான்.

 

மேலும் கூட்டங்களில் நெய் விட்டு நெருப்பு உண்டாக்குவது போன்ற புரியாத சடங்குகளையும் செய்வதில்லை. இது நமக்கும் தெரியாத ஏதோ ஒரு பழக்கம். அது எப்பொழுது உண்டாயிற்று என்று நமக்கும் தெரியாது. அதைச் செய்கின்ற புரோகிதனுக்கும் தெரியாது. நாம் உஷ்ண நாட்டில் வாழ்வதால் குளிர்காய நெருப்பு அவசியமில்லை.

 

சாப்பாட்டுக்கு போட்டுக் கொள்ள வேண்டிய நெய்யை நெருப்பில் ஊற்றும் முட்டாள்தனத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்கிற முடிவிற்கு வந்து விட்டோம். அதுபோலவே வேறு பல காரியங்களையும் வெறுக்கின்றோம். ஏதோ காலத்திற்கு, உணர்ச்சிக்கு, பழக்கத்திற்கு அல்லாமல் இன்றும் ஆதாரத்தோடு இன்ன காரியம் செய்யப்பட்டது என்பதாக ஒன்றும் வரவில்லை. புராணத்தில் வேண்டுமானால் அதுமாதிரி இதுமாதிரி சொல்லியிருக்கிறது என்று சொல்வானே தவிர ஆதாரம் ஒன்றும் காட்டமுடியாது.

  

(தந்தை பெரியாரின் "வாழ்க்கைத் துணைநலம்" என்ற நூலில் இருந்து சில…)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_09.html