09222023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

நம்மை முட்டாள்களாக வைத்திருக்கவே மனுதருமம் எழுதினர் பார்ப்பனர்!

அவ்வாறு அவர்களை (தமிழர்களை) முட்டாள்களாக வைத்திருப்பது தான் தருமம் என்று பார்ப்பான் மனு தருமத்தில் எழுதி வைத்திருக்கிறான். உலகம் விஞ்ஞானத்தில் (அறிவியலில்) தலை சிறந்து அற்புத-அதிசயங்களைக் கண்டுப்பிடித்து போட்டிப்போட்டுக் கொண்டு முன்னேறுகிறது. ஆகாயத்திலே சந்திரமண்டலம் வரையில் மனிதன் பறந்துச் சென்று வருகிறான். தந்தி பறக்குது. அமெரிக்காவிலே பேசினால் இங்கே கேட்குது. கேட்பது மட்டுமல்ல. பேசுகின்ற மனிதனையும் நாம் நேரே பார்க்கலாம் டெலிவிஷன் மூலம்! இத்தகைய அதிசயங்களை எல்லாம் கண்டுப் பிடித்து ஆராய்ந்து முன்னேறும் போது நாம் என்னடாவென்றால் சுத்தக் காட்டு மிராண்டிகளாக மாட்டையும், கழுதையையும், குரங்கையும், கல்லையும், கடவுள் என்றும் அந்த சாமிக்கு கல்யாணம், எத்தனை பிள்ளை, அதற்கு இத்தனை பூசை செய்தால் மோட்சம் என்று ஆராயும் முட்டாள்தனமான காரியத்தில் உச்சநிலையில் இருக்கிறோம். குழவிக்கல் சாமி. அதற்கு தினம் ஆறு வேளை-12 வேளை சோறு. வருஷா வருஷம் கல்யாணம். இதுவும் பத்தாமல் வைப்பாட்டி வேறு. அதற்குக் கருமாதி வேறு! நகை, கோயில் இப்படி அனேகம் செய்கிறோம். இதைப் பற்றியெல்லாம் ஒருவராவது சிந்திப்பது இல்லை. மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவை எவனும் உபயோகப்படுத்துவதே இல்லை.

மனித வாழ்க்கையில் இன்று நாம் மடமை நிறைந்தவர்களாக இருக்கிறோம். அப்படி இருக்கக் காரணம் நமக்கு நோய் வந்தது தான். பார்ப்பான் புகுத்திய இந்த நோய் நம்மை ஷயரோகக்காரனாக ஆக்கி விட்டது. எவனும் தைரியமாக வெளியில் வந்து கூறமுடியவில்லை. அப்படிப் பேசினாலும் உடனே அவனைப் பார்ப்பான் ஒழித்துக் கட்டி விடுகிறான். பார்ப்பானுடைய தயவிலே தான் வாழ வேண்டியுள்ளது. கலியாணம், கருமாதி என்று பிறப்பு முதல் இறப்பு வரை நடைப்பெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் எல்லாத் துறைகளிலும் பார்ப்பான் புகுந்து விடுகிறான். பத்து வருடங்களாக நாங்கள் போர் நடத்தி வருகிறோம்.

நல்ல தமிழ் இருக்கையிலே தமிழ் நாட்டில் தெலுங்கு சங்கீதம் ஏன் இருக்க வேண்டும்? எதற்காக இருக்கணும் என்று கேட்டுப் போராட்டம் துவக்கினது நாங்கள் தான். நம்மிலேயே சில பேர் என்ன சங்கீதத்திலே கூடவா வகுப்பு வாதம் பேசுவது? என்று எங்களைக் கிண்டலும், கண்டிப்பும் செய்தார்கள். எப்படியோ நமக்கு நல்ல வளர்ச்சி ஏற்பட்டது. சமூதாயத் துறையிலும் நமக்கு இழிவு தேடும் மற்ற வகையிலும் கேடுகளும் இருக்கின்றன. அப்படியே தான் காலம் கடந்து போகிறதே தவிர ஏன் இப்படி என்று கேட்க ஆள் இல்லையே? நாங்கள் தான் எவனுடைய நிஷ்டுரம் (இடையூறு) தொல்லை வந்தாலும் சரி வரட்டும் என்று துணிந்து என்ன கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து நாம் கூறுவோம். கேட்டால் கேட்கட்டும். விட்டால் விடட்டும் என்று கருதி பாடுபட்டு பிரச்சாரம் செய்து வருகிறோம்.

இந்த வேலைக்கு வேறு யாரும் முன் வராததற்கும் நாங்கள் ஒருவர் முன்வந்ததற்கும் காரணங்களை நீங்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவர்கள் இந்த வேலைக்கு வராததோடு மட்டுமல்ல! எங்களை முன்னோர்கள் சொல்லுக்கு கட்டளைக்கு மாறானவர்கள் நாஸ்திகர்கள் என்று விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். தன்னையும் வேசி மகன், சூத்திரன் என்று கூறுகிறானே! என்று சிறிதும் கவலையில்லாமல் மானம், ஈனம் அற்றுப் போய் அவனும் பார்பானுடன் சேர்ந்து கொண்டு தன் வயிறு வயிறு கழுவ, பொறுக்கித் தின்ன, அவனது அடிமையாக ஆகி நமக்குத் தொல்லையும் தந்து வருகிறான். இப்படி 2000-3000 வருஷங்களாகவே இந்நிலை இருந்து வருவதால் தான் நாம் இன்னும் வளரவில்லை. நம் நாட்டில் நாம் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த ஒலிபெருக்கி ரயில் கப்பல் மின்சாரம் போன்றவற்றை தினமும் அனுபவிக்கிறோம். அவன் தினமும் ஒவ்வொன்றைப் புதிதாகக் கண்டு பிடித்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் நம்மவன் குழவிக் கல்லைத் தவிர வேறு என்ன கண்டு பிடித்து இருக்கிறான்? ஏதாவது கண்டுப்பிடித்தான் என்று கூற முடியுமா?

காலையில் ஏறினால் மாலையில் பம்பாய், மறுநாள் லண்டன், அமெரிக்கா என்று செல்ல வழி கண்டுப் பிடித்து விட்டான். ஏழரை மணிநேரத்தில் 16 தடவைகள் உலகத்தைச் சுற்றுகிறான். சந்திரமண்டலம் வரை செல்கிறான். தனிப்பட்ட மனிதன் ஆகாயத்திலே பறக்கிறான். இந்த அளவுக்கான சாதனங்களை அவன் கண்டுப் பிடித்ததோடு அல்ல. மேன்மேலும் பல அற்புதங்களைக் கண்டுப் பிடிக்க ஆராய்ச்சியும் செய்து வருகிறான்.ஆனால் நம்மவனோ தகப்பனைக் கொன்று விட்டுத் தாயிடம் படுத்த பாவம் தீர எந்தக் குளத்தில் குளித்தால் பாவம் தீரும் என்று ஆராய்ந்து புராணம் எழுதுகிறான். எப்படியோ பார்ப்பான் நம் சமூதாயத்தை நாசம் செய்து விட்டான். சாஸ்திரப்படி நமக்கு திருமணம் கல்யாணம் கிடையாது. அது மாத்திரமில்லை. நாம் எல்லாரும் சூத்திரர்கள்- வேசி மகன். நம் தாய்மார்கள் எல்லாம் பார்ப்பானுடைய வைப்பாட்டிகள் என்று எழுதி வைத்திருக்கிறான்.

ஆதாரங்கள் இருக்கின்றன. கடவுள் புத்தகங்களை, அவதாரங்களை, புராணங்களை- எல்லாம் எடுத்தால் அசிங்கம் இல்லாதது ஒன்று கூட இல்லை. இவற்றை எல்லாம் எடுத்துக் கூற ஒரு புலவனும் முன் வரவில்லை. பார்ப்பான் காலைக் கழுவிக் குடிப்பவன் தான் பெரிய புலவனாக இருக்கிறான். "திரவுபதி" என்பவள் 5- பேருக்கு மனைவியாக இருந்தாளாம். அதுவும் பத்தாமல் ஆறாவதாக கர்ணன் என்பவன் மீது வேறு ஆசைப்பட்டாளாம். அவள் பதிவிரதையாம்! பார்ப்பான் கட்டுப்படாகக் கதை எழுதி வைத்திருக்கிறான். ஆனால் நம்மவன் அப்படி இருந்தால் "குச்சிக்காரி" என்று கூறுவான்.மற்றும் இராமன் சீதை இவர்களைப் பற்றி எவன் உண்மையைக் கூறியிருக்கிறான். இராமன் புரோகிதனுக்கு சினையாகிப் பிறந்தவன். அப்படித்தான் புராணத்திலே எழுதியிருக்கிறான். ஒழுக்கம் என்பதே அயோக்கியதனமும், நடத்தையில் பித்தலாட்டமும், புரட்டும் தான் உள்ளது. வால்மீகி இராமாயணத்திலே பார்த்தால் தெரியும். சீதை ஒரு பெரிய "காலாடி பொம்பளை" என்று கூறும் தன்மையில் தான் இருந்திருக்கிறாள்.இந்தச் சர்க்காருக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை என்றே கூறலாம். சிறிதாவது பொறுப்பு இருந்தால் இந்த மாதிரியான கதைகள் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்காமல் தடை செய்திருக்க வேண்டாமா? இந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் திருட்டுப் பசங்கள் தான். பார்ப்பானுக்கு நல்ல பிள்ளைகளாக இருந்து, வயிறு கழுவி, பெருமை சம்பாதிக்கணும் என்று கருதித் தான் அதற்கு ஏற்ப வாழ்ந்தர்களே! தவிர, மக்களின் உண்மையான நலன் கருதி மக்களுக்குள்ள இழிவு, கேடு ஒழிய வேண்டும் என்று ஒருவன் கூட நினைக்கக் கூட இல்லை.

இந்த "மாடாதிபதிகள்" என்பதே பார்ப்பான் என்பவனுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது தான். ஆனால் பார்ப்பான் காலில் கடைசியில் வீழ்ந்து விட்டான். தலை எடுக்கும் போது நம் பெயரால் தலை தூக்குவது பிறகு பார்ப்பான் காலில் விழ்ந்து விடுவதுமாகவே இருக்கிறார்கள்.கல்யாணம் என்ற வாத்தையே தமிழ் வார்த்தை அல்ல. விவாகம் என்றால் அதுவும் வடமொழி தான். ஏன் தமிழில் இல்லை என்றால் கல்யாணம் என்பது பார்ப்பானுக்குத் தானே ஒழிய தமிழனுக்கு சூத்திரனுக்குக் கிடையாது. அதனால் தான் அதற்கேற்ற வார்த்தையும் தமிழில் இல்லை. மிகவும் சிறப்பான முறையில் நடத்துபவர்கள் கன்னிகாதானம், விவாகோற்சவ பத்திரிக்கை, தாரா முகூர்த்தம் என்று போட்டு நடத்துவார்கள். இவை எல்லாம் வட மொழிதான்! தமிழ்ச் சொற்கள் இல்லை. தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு அவனுடைய இல்வாழ்க்கையில் இன்றியமையாது நடைப்பெறும் முக்கிய நிகழ்ச்சிக்கு அவனுடைய தாய்மொழியில் பெயர் இல்லை என்றால் என்றால் என்ன அர்த்தம்?

திருமணம் என்று கூறுகிறோம் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அழகிய இடம் என்று தானே பொருள்படும்? நமக்குப் பார்ப்பான் வந்து கல்யாணம் செய்து விடுகிறான்- கருமாதி செய்து வைக்கிறான் காசுக்காக! நமக்கு செய்து விட்டுச் சென்ற பிறகு அதற்கு – அதாவது நமக்குச் செய்ததற்காக அவன் பிராயச்சித்தம் செய்து கொள்கிறான். சூத்திரனுக்கு இவையெல்லாம் கிடையாது. தமிழனுக்கு நடைபெறும் திருமணம் போன்ற இன்றியமையாத காரியங்களும் திவசம் சிரார்த்தம், கருமாதி போன்றவையும், வடமொழியில் இருப்பதன் காரணம் தமிழனுக்கு… சூத்திரனுக்கு இவை எல்லாம் கிடையாது என்பதையே ருசுப்படுத்தும். பார்ப்பான் வந்து தான் இவற்றை நம்மிடையே புகுத்தியுள்ளான். அவன் வந்து நமக்கு சடங்கு செய்ய வந்தவுடன் நம்மை முதலில் பார்ப்பனனாக ஆக்குவான். நமக்குப் பூணுலூம் மாட்டி அதற்கு மந்திரம் செய்து அதற்குப் பிறகு தான் நமக்குத் திருமணம் செய்து வைப்பான்! சடங்கு முடிந்ததும் பூணூலை அவிழ்த்து ஆற்றில் போட்டு விடு என்பான்.

மேலோர் மூவர்க்கும் அதாவது பார்ப்பனர்- சத்திரியர்- வைசியர் மூவர்க்கும் உள்ளவற்றை கீழோராகிய சூத்திரர்க்கும் கொண்டு வந்து புகுத்துகிறார்கள். எதற்காக என்றால் காசுக்காக. எப்படியோ திருமணம் என்று இருப்பதாக வைத்துக் கொண்டாலும் சரித்திர ஆதாரப்படி கூறட்டும். நான் படித்த புலவர்களையே கேட்கிறேன். அம்முறைக்கு நம்மிடம் என்ன பெயர் வழங்கி வந்தது? என்ன முறை இருந்தது? இருக்க வேண்டுமே ஒரு முறை. .. இருந்ததா? இருக்கிறதா? கூறுங்கள் பார்க்கலாம். தமிழர்களுக்குத் திருமண முறை எது என்ற ஆதாரம் சொல்ல முடியுமா? புலவர்களைக் கேட்டால் புராணத்தைக் காட்டுவார்கள். பரமசிவனுக்கும்- பார்வதிக்கும் நடந்தது, இராமனுக்கும்- சீதைக்கும் நடந்திருக்கிறது என்பார்கள். நேற்று நான் மாயவரத்தில் நடைப்பெற்ற திருமணத்தில் பேசிய போது இதைத் தான் கூறினேன். தமிழனுக்குத் திருமண முறை என்று இருந்ததா என்றால் எதிலேயும் தென்படவில்லையே என்று.

அடுத்துப் பேசிய தவத்திரு "குன்றக்குடி அடிகளார்" அவர்கள் திருமண முறை இருந்தது. அகநானூறு புறநானூற்றைப் பார்த்தால் தெரியும் ஒத்த காதல் நடந்திருக்கிறது. சிலப்பதிகாரத்திலே கண்ணகிக்கும் கோவலனுக்கும் நடந்திருக்கிறது என்று கூறினார். இந்தப் புராணங்கள் எல்லாம் நமக்கு ஏது? அதுவும் எப்போது வந்தது? எப்படி வந்தது? 1000-2000-3000 ஆண்டுகட்கு முன் எழுதப்பட்ட இலக்கியங்கள் தானே இவை? நாம் 10 - ஆயிரம் 20- ஆயிரம் வருஷத்திற்கு முந்திய மக்கள் ஆயிற்றே! நமக்கு இது இப்போது எப்படி பொறுந்தும்? 20 - ஆயிரம் வருஷங்களுக்கு முன் என்ன முறை நமக்கு இருந்தது என தெரிய வேண்டாமா? இம்முறைக்குக் கூறப்படும் வார்த்தைகளிலாவது சிறிதாவது மரியாதை இருக்க வேண்டாமா?

வாழ்க்கை ஒப்பந்தம் என்ற ஒரு வார்த்தையும், முறையும் ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை வேலைக்காரியாக அடிமையாக பிள்ளை பெறும் ஒரு ஜந்துவாக சேர்ப்பது என்பது தான். எல்லா முறைகளும் பெண்களை அடிமை ஆக்குகிற முறை தான். "கன்னிகாதானம்" என்பார்கள். கன்னிகாதானம் என்றால் கன்னியை அதாவது பெண்ணை ஓர் ஆணுக்குத் தானமாகக் கொடுத்து விடுவது ஆகும். இதை இப்போது மணமக்களாக இருப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?நாம் தமிழர்கள். இந்தத் தமிழ்நாட்டின் பூர்வீகக் குடிகள். நமது மொழியான தமிழ் மொழிச் சொல்லை விட்டு விட்டு வேறு ஒருவனுடைய மொழிச் சொல்லை நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? அவ்வாறு அவன் சொல்லை ஏற்றுக் கொண்டால் நாம் எல்லோரும் வேசி மக்கள் என்று சொல்லுகின்ற அவனது சம்பிரதாயங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டவர்களாக ஆகிவிடுகிறோமே?

"கன்னிகாதானம்" என்ற சொல் வட மொழிக்காரனுடையது. அதனுடைய பொருள் பெண்களை ஜீவனற்ற ஒரு பொருளாக வைத்து தானமாக்கிக் கொடுப்பதாகும்.தாராமுகூர்த்தம் என்றால் பெண்களை ஆணுக்குத் தாரை வார்த்து தானமாக் தருவது என்பதாகும். தானம் என்ற சொல் தமிழிலேயே இருக்கிறதா என்றால் இல்லை. பிச்சை என்று தான் இருக்கிறது. தானம் வாங்கிய பொருளை தம் இஷ்டம் போல் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பெண்ணுக்கு எவ்வித உரிமையும் இல்லை. அதோடு மட்டுமல்ல. தாரை வார்த்து வாங்கியவன் வாங்கிய பெண்ணை யாருக்கு வேண்டுமானலும் கொடுத்து விடலாம். அடகு வைக்கலாம். அதற்கெல்லாம் அவனுக்கு உரிமை இருக்கிறது. ஏன் என்று யாரும் கேட்க முடியாது? இவ்வாறாக புராண இதிகாசங்களில் நடந்திருக்கிறது.

தருமன் திரவுபதியைப் பணயம் வைத்து சூதாடியிருக்கிறான். அரிச்சந்திரன் தன் மனைவியை வேறு ஒருவனிடம் விற்று இருக்கிறான்.இயற்கை நாயனார் என்பவர் தன்பெண்டாட்டியை ஒரு பரதேசியிடம் கூட்டிக் கொடுத்துள்ளார். மற்றும் பெண்களைக் கணவன் எந்தவிதக் கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம். பெற்றவனோ பெண்ணோ ஏன் என்று கேட்கக் கூடாது. திருமணம் நடக்கையிலேயே தாசியின் மேல் ஆசைப்பட்டு அவளுடன் போய் விட்டான் கோவலன். திரும்பி வரும் வரையில் கண்ணகி தன்னை அலங்கரித்துக் கொள்ளக் கூடாது. உப்பில்லாத உணவு உண்டு பாயில் படுக்காமல் இருக்க வேண்டும் என்று அப்படியே இருந்தாளாம்! அந்த ஸ்தானத்தில் ஓர் ஆணை வைத்துப் பார்த்தால் அப்படி நடக்குமா? மனைவியானவள் கணவனை விட்டு வேறு ஓர் ஆணுடன் போய் விட்டால் கணவன் அவள் வரும் வரையில் இப்படி உப்பில்லாத உணவு சாப்பிடுவானா? பகவான் பார்த்து நம்மிடம் நம் மனைவியைக் கொண்டு வந்து சேர்க்கும் வரை நமக்கு சுகம் தேவையில்லை என்று கவலையுடனிருப்பானா? இருக்க மாட்டான். ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்று சிலப்பதிகாரத்திலும் கூடக் கூறப்பட்டிருக்கின்றது.கண்ணகி கதையை உதாரணம் காட்டிப் பேசுகிறவர்களுக்காகத்தான் இதைக் கூற ஆசைப்பட்டேன்.

ஆண் உயர்வு – பெண் தாழ்வு என்று தானே ஆகிறது. பெண் ஆணுக்கு அடிமை. கணவனால் விரட்டப்பட்டு பிறகு ஜீவனாம்சம் என்று கோர்ட் மூலம் கேட்டால் கூட இவள் "அவுசாரியாக"ப் போய் விட்டாள். ஆதலால் இவளுக்கு வாழ்க்கைப்பணம் கிடையாது என்பான்.பெரிய இலட்சாதிபதி ஆனாலும் ஜீவனாம்சம் என்னும் போது விலைவாசி பார்த்து மாதச் செலவுக் கணக்குப் பார்த்து அதன்படி தான் தருவான். கல்யாணம் என்றால் சாதி பார்த்து, புராணம் பார்த்து, வகுப்பு பார்த்து, காலம் நேரம் பார்த்துத் தான் நடக்கும். நம்மை நிரந்தர அடிமையாக்கும் நிகழ்ச்சியின் தத்துவப்படி தான் நடக்கும்.

நாமே பார்ப்பானை உயர் சாதி என்று ஒத்துக் கொள்கிறோம். அவர் அய்யர் மேல்சாதி. அவர் நம் வீட்டில் சாப்பிட மாட்டார் என்று கூறி அதற்குப் பதிலாக நம் வீட்டில் திருமணம் திவசம் செய்ய வரும் அய்யருக்கு நாம் பச்சை அரிசி, பச்சை காய்கறி, நெய், பால், தயிர், இலை இவற்றையெல்லாம் தந்து உங்கள் வீட்டில் போய் நீங்கள் சமைத்துச் சாப்பிடுங்கள் என்று தருகிறோம். அவன் வந்து நெருப்பை மூட்டி ஓமம் என்று வளர்க்கிறான். அதோடு விடுகிறானா என்றால் இல்லை. அந்த நெருப்பிலே நெய்யை வார்க்க விடுகிறான். நமக்கு சாப்பாட்டிற்கு கலப்பட நெய் போடுவார்கள். ஓமத்தில் ஊற்ற பார்ப்பான் கேட்டால் அசல் நெய் தருவார்கள்!

அரசாங்கம் யோக்கியமான அரசாங்கமாக இருந்தால் இவர்களையெல்லாம் உணவுப் பொருள்களை – பண்டங்களை நாசம் செய்கிறார்கள் என்று பிராசிகியூஷன் (குற்ற வழக்கு) செய்து தண்டித்திருக்க வேண்டும். மற்றும் பானையைக் கொண்டு வந்து ஆள் உயரம் அடுக்குவது போன்ற பல மூடத்தனமான காரியங்களைச் செய்வான். புதிய முறையில் இவை எல்லாம் கிடையாது. எதற்காக நம்மில் சாதி தொடர்ந்து வரணும்? கல்யாணம், கருமாதி போன்ற சமூதாயத்துறையில் சாதியைப் புகுத்துகிறான். இந்த சாதி ஒழிய வேண்டுமானால் சாதி வளரும் துறைகளை நாம் ஒழித்தால் தானே சாதி ஓழிப்பு? சாதியை வளர்க்கும் கடவுள்- மதம்- சாஸ்திரம்- புராணம்- பார்ப்பான்- அரசாங்கம் எதுவுமே வேண்டாம் எங்களுக்கு (தமிழர்களுக்கு) போடா முட்டாளே! என்று தூக்கி எறிந்து உடைத்தால் தானே சாதி ஒழிப்பு? இந்தத் தமிழ்நாட்டில் இத்தனை ஆயிரம் கோயில்கள் இருக்கிறதே. இதை யார் கட்டியது? யார் வீட்டுப் பணம்? இவற்றிற்கு உள்ள நிலங்கள், நகைகள் எல்லாம் யார் வீட்டு உடைமை? நம்முடையது தானே! பார்ப்பான் காசு ஒரு செப்புகாசாவது இருக்கிறது என்று கூற முடியுமா? இவ்வளவும் செய்து வைத்த நம்மைப் பார்த்து பார்ப்பான் "பிள்ளைவாள் உள்ளே வராதேயும், வெளியிலேயே நில்லுங்கோ தீட்டுப் பட்டு விடும். இது கர்ப்பகிரகம்" என்று கூறுகிறான். பார்பான்கிட்டே இல்லாத "துர்நாற்றமா" நம்மிடையே இருக்கிறது? தினம் 6 - வேளை பூசை செய்து சோறு படைக்கிறாயே அது பகவானா தின்னுது? கடவுளா சோறு கேட்குது? பார்ப்பான் வயிறு தானே வெடிக்குது? உலகத்தையே பெரிதும் நாசம் செய்து விட்டான் பார்ப்பான்.

இந்தப் பார்ப்பானின் கொடுமையை எதிர்த்து புத்தர் ஒருவர் தான் 3000 -ஆண்டு காலத்தில் தோன்றினார். அவரையும் இந்தப் பார்ப்பனர்கள் ஒழித்துக் கட்டி விட்டனர். புத்தரை ஒழித்துக் கட்டி தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டனர். இந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள், சைவர்கள் எல்லாம் பார்ப்பனர்களின் தயவை நாடி அவர்களுக்கு ஆதரவாக இருந்து சென்றவர்கள் தான். புத்தருக்குப் பிறகு எங்களைத் தவீர ஒருவர் கூட இந்தப் பித்தலாட்டங்களை ஒழிக்கத் தோன்றவில்லை. அவர்களுடைய இழிவு பற்றி பேசக்கூட பயம். எங்கே பார்ப்பான் நம்மைக் கொன்று விடுவானோ? என்று!

காந்தியை எடுத்துக் கொள்ளுங்களேன். அவர் ஒரு சாதாரணமான அன்னக்காவடி. அவரைப் பயன் படுத்திக் கொண்டனர் பார்ப்பான். அவரும் பார்ப்பனருக்கு ஆதரவாகவே நடந்தார். உடனே பார்ப்பனர்கள் அவரை "மகாத்மா"வாக்கி நல்ல வண்ணம் விளம்பரப்படுத்தி விட்டனர். அவரும் சாதி இருக்க வேண்டும். விக்ரக ஆராதனை தேவை. நான் கடவுள் நம்பிக்கைக்காரன் என்றெல்லாம் பேசினார். நல்ல விளம்பரம் அதிலே மயங்கி அவரை எதிர்க்க ஆளே இல்லை. நாங்கள் தான் மகாத்மாவை "துர் ஆம்மா" என்றோம். மற்றும் பல காரியங்களை எல்லாம் செய்தோம். எப்படியோ அவருக்குப் புத்தி வந்தது. தான் முட்டாள்தனமாக பார்ப்பனருக்கு ஆதரவாக நடந்து இந்த மாதிரி நடந்து விட்டோமே என்றும், தான் பல தவறுகள் செய்து விட்டோம் என்பதையும் உணர்ந்தார். எல்லோரும் சமம், கீழ்ச்சாதி- மேல்சாதி என்பது கூடாது என்று பேச ஆரம்பித்தார். அவ்வளவு தான் பார்ப்பான் பார்த்தான். இனி இவரை விட்டால் ஆபத்து என்று கருதி எட்டே நாளில் சுட்டுக் கொன்று விட்டான். இந்த ஆள் கதியே இப்படி என்றால் பிறகு யார் வருவார்கள் பார்ப்பானை எதிர்த்து?ஆட்சி, சட்டம், கோர்ட், புராணம்- எல்லாம் அவன் கையிலே இருக்கிறது. யார் என்ன செய்ய முடியும்?

கோர்ட், கடவுள், மத, புராணம்- இவற்றை விளக்கணும். மோட்சம், நரகம் என்ற நம்பிக்கையை குப்பைத் தொட்டியில் போட வேண்டும். சிந்திக்க ஆரம்பிக்கணும். மக்கள் திருந்தி சிந்தித்துப் பார்த்து மாறினால் தான் முன்னேற முடியும். நாம் மாற்றம் அடைய வேண்டும். அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார்த்து நடக்க ஆரம்பித்தால் பார்ப்பான் ஓடி விடுவான்.


(14-06-1962 அன்று வல்லம் படுகையில் நடைப்பெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை" 23-06-1962 , 24-06-1962 , 25-06-1962)

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_05.html