Language Selection

தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள், தற்காலம் ஐகே நிர்வாக சபை முதலிய ஆதிக்கம் உள்ள பதவிகளிலும் மற்றும் அதிகாரம் உள்ள பதவிகளிலும் வக்கீல் முதலிய செல்வாக்குள்ள பதவிகளிலும் ஏகபோகமாய் அமர்ந்திருப்பதின் மமதையினாலும் பார்ப்பனரல்லாதாரில் சில பதர்கள், வயிற்றுக் கொடுமையாலும், பேராசையினாலும் சுயமரியாதையற்று பார்ப்பனர்கள் பாதம் வருடித் திரிவதினாலும் வேறு பல வழிகளிலும் பார்ப்பன மாய்கையில் பல உணர்ச்சியற்ற ஜமீன்தார் மிராஸ்தார் முதலிய செல்வந்த வாலிபர்கள் அவர்களுக்கு சர்வ சுவாதீனப்பட்டு கிடப்பதாலும், பொதுவாகப் பார்ப்பனரல்லாதார் அறிவீனத்தால் கட்சி, பிரதி கட்சி விவகார வில்லங்கங்கள் முதலியவைகளினால் பார்ப்பனர்களுக்கு அடிமைப் பட்டு கிடப்பதினாலும், பாமர மக்கள் உண்மை நிலையை அறியாதபடி பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சிப் பிரசாரங்களாலும் சமீப தேர்தல்களில் பார்ப்பனர்கள் தங்களுக்கு வெற்றி கிடைப்பதாய்ச் சொல்லிக் கொள்ளக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டு விட்டது என்பதை யாவரும் ஒப்புக் கொள்ளுவார்கள். இவ்வெற்றி நிலையைத் தாங்க முடியாமல் நமது பார்ப்பனர்கள் தலைக்கு கொழுப்பேறி தலை கால் தெரியாமல் ஆடுவதை நாம் வரிசையாகப் பார்த்து வருகிறோம்.

 

உதாரணமாக, இந்த ஒரு மாத காலத்திற்குள் எவ்வளவு அகந்தையும் ஆணவமும் கொண்ட செய்கைகள் பார்ப்பனர்களால் நடத்தப் பட்டிருக்கின்றன என்பதைக் கவனித்தவர்களுக்கு பார்ப்பனர்களின் தலை கொழுப்புத் தன்மை விளங்காமல் போகாது. கார்பொரேஷன் சென்னை கார்பொரேஷனில் கவுன்சிலர்கள் என்கிற பெயர் வைத்துக் கொண்டு கார்பொரேஷனில் நடத்தும் குறும்புத் தனத்திற்கு அளவே இல்லை. குழந்தை பாதுகாப்பு ஆஸ்பத்திரிக்குச் சென்று, அங்கு அவ்வாஸ்பத்திரியின் தலைவி இல்லை என்பதை அறிந்தும் அங்குள்ள மருத்துவப் பெண்களிடம் அடாபிடியாய் நடந்து கொண்டதும், அருவருக்கத் தகுந்த கேள்விகள் கேட்டு அப்பெண்களை அவமானப்படுத்தியதும் இவ்வளவும் செய்துவிட்டு பின்னும் அவ்வுதவியற்ற பெண்களை வேலையை விட்டு நீக்க வேண்டுமென்று கொடுமை செய்ததையும் பார்க்கிற போது சிறீமான் கோபதி நாராயணசாமி செட்டியார் என்கின்ற நாயுடு கார்பொரேஷன் பிரசிடெண்டாய் வந்து விட்டாரே என்கின்ற ஆத்திரத்தினாலும் தாங்கள் ஆட்டுகிறபடி ஆடக்கூடியவர் வரவில்லையே என்கின்ற ஆத்திரத் தினாலும் கார்பொரேஷனில் நடந்து கொள்ளும் யோக்கியதையும் மீன் கடை, கள்ளுக் கடை, குச்சுக்கார வீதி இதுகளில் நடப்பது போன்ற இழிவான வாக்கு வாதங்களும் மானங்கெட்ட வெளியேற்றங்களும் அதிகபிரசிங்கித்தனங்களும் அளவுக்கு மிஞ்சி நடப்பதும் பத்திரிகைகள் தங்கள் வசம் இருக்கின்றன என்கின்ற காரணத்தால் நடந்த விஷயங்களைத் திரித்தும் பொய்களைச் சேர்த்தும் ஜனங்கள் தப்பாய் நம்பும்படியாக பிரசுரித்து வருவதும் மற்றும் காங்கிரஸ் என்னும் பேரால் காலிகளையும், அன்னக் காவடிகளையும், பேராசைக்கார களிமண் தலைகளையும் சேர்த்துக்கொண்டு அவர்களை விட்டு ஈனத் தனமாய் பார்ப்பனரல்லாத தலைவர்களையும் தொண்டர்களையும் வையும்படி செய்வதும், அடிக்கும்படி செய்வதுமான காரியங்கள் செய்வதும் சகிக்க முடியாததாயுமிருப்பதும் பார்த்து வருகிறோம்.

 

சிறீமான் பக்கிரிசாமிப் பிள்ளை பொது ஜனங்கள் பனகால் ஆட்சியை மறுக்கிறார்களென்று கட்டி விடுவதற்காக பொது ஜனங்கள் பேரால் தங்களிலேயே சில காலிகளை விட்டு மீட்டிங்கு கூட்டச் செய்து அம் மீட்டிங்குகளில் தாங்களே போய் இருந்து கொண்டு இரணியனைப் போல் தன்னையே தலைவரென்று சொல்ல வேண்டுமென்று "சீனிவாசய்யங்காருக்கு ஜே" என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தினதும் அப்படிச் சொல்ல மறுத்ததும் சிறீமான் பக்கிரிசாமி என்கின்ற வாலிபரைப் பிடித்து போக்கிரிகளை விட்டு கடுமையாய் அடிக்கச் செய்ததும், அவர் தான் செத்தாலும் சரி யென்று சீனிவாசய்யங்காருக்கு ஜே! சொல்லாமல் அடிபட்டு ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகப் பட்டதும், தமிழ் மகாநாடு என்கின்ற பெயரால் கோகலே ஹாலில் நடத்தப்பட்ட ஐயங்கார் கூட்டத்திற்குச் சென்றிருந்த சிறீமான் தண்டபாணி பிள்ளை அவர்களை அடித்து உதைத்து அவமானப்படுத்தி விட்டால் தமிழ் நாட்டிலுள்ள மற்ற பார்ப்பனரல்லாத வாலிபர்களும் பயந்து பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்தை வெளியிலெடுத்துச் சொல்லாமலிருக்கச் செய்துவிடலாமென்கிற எண்ணத்தின் பேரில் அவரை இப் பார்ப்பனர்கள் கூலிகளை விட்டு உபத்திரவித்ததைப் பார்க்கும் போதும் சுத்தமான பார்ப்பனரல்லாதார் ரத்த ஓட்டமுள்ள எந்த மனிதனுடைய ரத்தமும் கொதிக்காமல் இருக்காது.

 

சிறீமான் தண்டபாணி பிள்ளை சிறீமான் தண்டபாணி பிள்ளை ஆகஸ்டு 23 - யிலேயே 4 - அணா சந்தா கொடுத்து காங்கிரஸ் மெம்பராகச் சேர்ந்து 15,223 நெம்பர் ரசீது வாங்கியிருக்கிறார். சிறீமான் தண்டபாணி பிள்ளை உண்மையான சுயராஜ்யத்திற்கு ஒரு நாளும் எதிரியல்ல. ஆனால் பார்ப்பனர் ஆதிக்கம்தான் சுயராஜ்யம் என்று சொல்லப்படும் சுயராஜ்யத்திற்குத் தான் எதிரியாயிருக்கிறார். பார்ப்பன ஆதிக்க சுயராஜ்யத்தின் சூழ்ச்சிகளை தாராளமாய் ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லுகிறார். இதற்காகத்தான் அவரைப் பார்ப்பனர்கள் ஒழிக்கப் பார்க்கிறார்கள். அதற்கு அவர் பயப்படுவதில்லை. ஆதலால் தமிழ்நாடு மகாநாட்டிற்கும் ஒரு பிரதிநிதியாய்ப் போக ஆசைப்பட்டார். பிரதிநிதிப் பத்திரம் பெற்றார். பிரதிநிதிக் கட்டணம் ரூ 2 - ம் செலுத்தினார். காங்கிரஸ் கமிட்டி குமாஸ்தாவிடம் 61 - நெ பிரதிநிதி டிக்கெட்டும் பெற்றார். இதன் பயனாய் தாராளமாய் உள்ளே விடப்பட்டார். உள்ளே போய் தனது சகாக்களிடம் உட்கார்ந்தார். இதைப் பார்த்த பார்ப்பனர்களுக்கு ஆத்திரம் வந்துவிட்டது.

 

ஏனெனில் காங்கிரஸ் என்பதும் கான்பரன்ஸ்கள் என்பதும், நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் தங்கள் தாய் தகப்பன்மார்கள் தங்களது ஆதிக்கத்திற்குத் தேடிவைத்த சொத்துக்களாக நினைத்துக் கொண்டிருப்பதால் தங்கள் குண்டியைத் தாங்கி பூட்ஸைத் துடைத்து காலைக் கழுவி சாப்பிட சம்மதித்த ஆள்களைத் தவிர மற்றவர்கள் உள்ளே வரக்கூடாது என்கின்ற ஆணவம் அவர்களுக்கு உண்டு. அதனால் சிறீமான் தண்டபாணி பிள்ளையைக் கண்டு ஆத்திரப்பட்டது ஆச்சரியமல்ல. வெளியாக்க சூழ்ச்சி ஆதலால் சிறீமான் பிள்ளையை வெளியாக்க எண்ணி சிறீமான் ரெங்கசாமி அய்யங்காரால் பாவலர் என்கின்ற ஒரு பார்ப்பனரல்லாதாரை ஏவி விடப்பட்டது. அவர் முதலாவதாக சட்டப்படி சிறீமான் பிள்ளை உள்ளே வந்தாரா? அல்லது சட்ட விரோதமாய் வந்தாரா? என்பதைக் கவனிப்பதற்காக பிரதிநிதி ரிஜிஸ்டரை பரிசோதித்தார்; அதில் 61 -வது நெம்பர் பிரதிநிதியாக பதிவு செய்யப்பட்டு கட்டணமும் வரவு வைக்கப்பட்டிருந்தது. அதின் மேல் ஒன்றும் செய்ய முடியாமல் சிறீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளை யோசனை கேட்டார்.

 

சிறீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் ஒரு யுக்தி செய்தார். அதென்னவென்றால் சிறீமான் தண்டபாணி பிள்ளைக்கு பிரதிநிதி சீட்டுப்பெற பிரதிநிதி சர்டிபிகேட் கொடுத்த தஞ்சை காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியான சிறீமான் வெங்கிடகிருஷ்ணப் பிள்ளை என்கிற ஒரு பார்ப்பனரல்லா தாரைப் பிடித்து அவ்வுரிமைச் சீட்டை எப்படியாவது ரத்து செய்வித்து சிறீமான் தண்டபாணி பிள்ளையின் டிக்கெட்டை மெல்ல ஏமாற்றி வாங்கிக் கொண்டு டிக்கெட்டில்லாமல் வந்தார் என்கிற பெயரை வைத்து வெளியிலனுப்பிவிட தோது சொல்லிக் கொடுத்தார். ஆனால் சிறீமான் வெங்கிடகிருஷ்ணப் பிள்ளை சிறீமான் தண்டபாணி பிள்ளையின் டிக்கெட்டைப் பெற பல வழிகளில் முயன்றும் முடியாததால் சிறீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார் முதலியவர்கள் வேறு வழியில் சிறீமான் பிள்ளையை வெளியாக்க யோசனை செய்ய வேண்டியதாய் விட்டது.

 

மறுநாள் சம்பவம் இந்த நிலையில் அன்றைய மகாநாட்டின் விஷயம் முடிந்து விட்டதால் மகாநாடு கலைக்கப்பட்டு விட்டது. சிறீமான் பிள்ளையவர்கள் அதே டிக்கெட்டைக் கொண்டு மறுநாள் மகா நாட்டிற்கும் சென்றிருக்கிறார். டிக்கெட் பரிசோதகர்கள், சிறீமான் பிள்ளையின் டிக்கெட்டை பரிசோதித்து மறுநாளும் உள்ளே விட்டிருக்கிறார்கள். அப்படி இருக்க மறுபடியும் முதலாவதாக ஒரு பார்ப்பன வாலண்டியர் சிறீமான் பிள்ளையின் பக்கத்தில் போய் அவரை வெளியில் போகும்படி சொல்லச் செய்தார்கள். பிள்ளை மறுத்தார். டிக்கெட்டைப் பிடுங்கிக் கொள்ளும் நோக்கத்துடன் டெலிகேட் டிக்கெட்டை காட்டும்படி கேட்டார்கள் . சிறீமான் பிள்ளை மடியில் வைத்துக் கொண்டு மற்றவர்களையும் பரிசோதித்தால் நானும் காட்டுவேன் என்றார். பிறகு அவரை மேடை மீது உட்காரக் கூடாது என்று சொன்னார்கள். பிள்ளை அலட்சியமாயிருக்கவே சிறீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார் ஆகியவர்கள் சிறீமான் குழந்தை என்கிற ஒரு பார்ப்பனரல்லாதாரைக் கூப்பிட்டு சிறீமான் பிள்ளையை வெளியாக்கக் கட்டளையிட்டார்கள். அவர் பல பார்ப்பனத் தொண்டர்களை அழைத்து வந்து சிறீமான் பிள்ளையை தூக்கச் சொன்னார். தொண்டர்கள் அடியோடு தூக்கவே சிறீமான் பிள்ளை மேல் கிளம்பிய நிலையில் சபையோர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். இந்த சமயத்தில் சிறீமான் எம்.கே. ஆச்சாரியார் தன் கைத்தடியால் குத்தினார். உடனே மற்ற பார்ப்பனர்களும் கிளம்பி இவரை வெளியாக்கும்படி சத்தம் போட்டிருக்கிறார்கள். இவ்வளவு பேரையும் உதறித் தள்ளிவிட்டு மறுபடியும் கொஞ்சம் முன்னேறி உட்கார்ந்து கொண்டார்.

 

இந்த சமயத்தில் சிறீமான் சத்தியமூர்த்தி அய்யர் எழுந்து அவனுக்கு இங்கு வேலையில்லை; வெளியில் பிடித்துத் தள்ளுங்கள் என்றும், சிறீமான் சீனிவாசய்யங்கார் எழுந்து என்னை வைதவனுக்கு இங்கு என்ன வேலை, வெளியில் தள்ளுங்கள்; முடியாவிட்டால் இவன் டெலிகேட் அல்லவென்று சொல்லி விடும் என்று சிறீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்காருக்கு உத்திரவு போடவும், சிறீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்கார் எழுந்து "சிறீமான் தண்டபாணி பிள்ளை காங்கிரஸ் மெம்பரும் அல்ல டெலிகேட்டும் அல்ல" என்று விளம்பரம் (டிக்ளேர் ) செய்யவும், கூட்டத்தில் இருந்த பார்ப்பனர்கள் "அவனுக்கு (சிறீமான் பிள்ளைக்கு) சிறீமான் என்று சொல்லக் கூடாது" என்று கத்தியும் கடைசியாக தங்களால் சிறீமான் பிள்ளையை வெளியேற்ற முடியாமல் போனதால் சிறீமான் எ. ரெங்கசாமி அய்யங்கார் எழுந்து "கீழே விழுந்தும் மீசையில் மண் படவில்லை" என்பது போல் "சிறீமான் தண்டபாணி பிள்ளை மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்" என்று சொல்லி தங்கள் பிகுவைக் காப்பாற்றிக் கொண்டார்கள். பின்னர் அக்கிராசனர் இதைக் கவனித்து சிறீமான் பிள்ளையைப் பக்கத்தில் அழைத்து விபரங்களைக் கேட்டு அவருக்கு அங்கிருக்க உரிமை உண்டென்று தனது பக்கத்தில் உட்காரச் செய்து கொண்டார். இவ்வளவையும் நடக்கும் போது பார்த்திருந்த பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாவற்றையும் மறைத்து விட்டு "தண்டபாணி பிள்ளை திருவிளையாடல்" என்று தலையங்கமிட்டு பொய்யும் புரட்டும் எழுதி இருக்கின்றன.

 

சிறீமான் குழந்தையினிடம் அபயம் மறுபடியும் சிறீமான் குழந்தை என்னும் ஒரு பார்ப்பனரல்லாத கிறிஸ்தவர் பேரால் பார்ப்பனப் பத்திரிகைகள் ஒரு கடிதம் பிரசுரித்திருக்கின்றன. இதை குழந்தைகள் நம்ப முடியாது. என்ன வென்றால் சிறீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார், சிறீமான் குழந்தையை அபயமடைந்து அவர் காலுக்குள் புகுந்து "எங்களப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல் பார்ப்பனர்கள் இச்சம்பவத்திற்குப் பொறுப்பாளிகள் அல்ல என்று அவர் பேரால் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாமலும் சிறீமான் தண்டபாணி பிள்ளை ஒழுங்கு முறைப்படி பிறப்பிக்கப்படாத டிக்கெட்டுடன் வந்தார் என்றும், தான் தான் அவரைத் தூக்கிச் செல்ல தொண்டர்களை ஏவினதாகவும் அவர் சரியானபடி டிக்கெட்டை வைத்துக் கொண்டிருந்ததாகவும் காங்கிரசுக்கு விரோதியானதாலும், மகாத்மா காந்தியை மோசக்காரர் என்று சொன்னதாலுமே பிள்ளை அங்கு இருக்கக் கூடாதென்று கருதி அம்மாதிரி செய்ததாகவும் வீரமாய் எழுதிவிட்டு இது போலவே மற்றவர்களுக்கும் நடக்கும் என்றும் ஒரு சிறீமான் குழந்தையின் பேரால் எழுதியிருக்கிறார்கள்.

 

இவைகளையெல்லாம் கவனிக்கும் போது பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தலை கொழுத்திருக்கிறது? பார்ப்பனரல்லாதவர்கள் எவ்வளவு சுயமரியாதையற்று இருக்கிறார்கள்? சீர்காழி சிறீமான் சாமிநாத செட்டியார் தவிர அக்கூட்டத்திலிருந்த பார்ப்பனரல்லாத அம்மாஞ்சிகள் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள் என்றால் இதற்கு எதை சமாதானமாகச் சொல்லுவது. மானம், வெட்கம், சுயமரியாதை என்பது சிலருக்கு தங்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளை கையைப் பிடித்து இழுப்பதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போல் தோன்றுகிறது. இச்சம்பவம் இதற்கு சமானம் அல்ல என்று நினைத்து விட்டார்கள் போல் இருக்கிறது. இப்படிப்பட்ட ஜனங்களுடைய சமூகம் சுயராஜ்யத்திற்கு லாயக்கா? என்று கேட்கிறோம். சுயமரியாதை இல்லாமல் சுயராஜ்யம் சம்பாதிப்பது சுயமரியாதை அற்றவன் கலியாணம் செய்து கொண்டால் அப் பெண்ணின் கதி என்னவோ அதுபோல்தான் முடியும். ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் முதல் முதல் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முயல வேண்டும் அதிலேயே சுயராஜ்யமிருக்கிறது. ஆதலால் பார்ப்பனர்களுக்கு குலாமாகவும் கால் வருடிகளாகவும் இருந்து வயிறு வளர்ப்பதை விட மானக் கேடானதும் சுயமரியாதையற்றதுமான காரியம் உலகில் வேறொன்றுமில்லை என்பதாக உணர்ந்து ஒவ்வொருவரும் பார்ப்பனரல்லாத சுயமரியாதைச் சங்கத்தை ஆதரித்து முதலில் சுயமரியாதையை அடைவார்களாக.

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_07.html